"எல்லாம் மாப்பிள்ளக்காரன் குடுத்த எடம்ப்பா..!"

"வார்த்த சொல்லிருவானோ..."

"அட நீ வேற... மொதல்ல பேசிவுடுவோம்!"

"எல்லா இந்த ஃபோனுதாம்ப்பா காரணம்! சரி நம்ம வூட்டுலேயும் கொமருவோ இருக்குதுவோல்ல.. பாத்து பேசி வுடுங்க!"

தூரத்திலிருந்தாலும், சஹாபுதீன் காக்கா வீட்டு பக்கம் போய்க் கொண்டிருக்கும் ஆம்பிளைங்க பேசுறது தங்கப்பொண்ணுக்கு மிக துல்லியமாவே கேட்டது.

இன்னைக்கு பசியாற எதுவும் அவளால் பண்ண முடியவில்லை. ராத்திரி பெய்த மழையில் கொடியில் போட்டிருந்த துப்பட்டி நன்றாக நனைந்து விட்டிருந்தது. பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைக்கு டிபன் வாங்க வேண்டும். அப்துர் ரகுமான் கடை ஒரு ஐம்பது அடிக்குள்ளேயே இருந்தாலும், வெறும் சீலையோடையா போக முடியும்? அதனால் யாரும் வருகிறார்களா போகிறார்களா என்று கதவை பாதி திறந்து வைத்துக் கொண்டபடி வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் பைக் சத்தம் ஒன்று கேட்கவே, நேரம் வேறு சென்றுக்கொண்டிருந்ததை கருதி, யாராவது தெரிஞ்ச ஆளா நல்லாருக்குமே என்று வாசற்படி வரை வந்து எட்டிப் பார்த்தாள். வந்துக்கொண்டிருந்தவன், அவளுக்கு நன்றாகவே பரிச்சயமானவன்தான் என்பதால் எந்த வித தயக்கமின்றி அவனை நிறுத்த சொன்னாள்.

"பாஸித்து.. நல்லா இருக்கியா.. எப்ப வந்தா.. வெளியூர்ல ளோ, கிட்டன்ஸ்ல பாக்கலயே.. அத்து ரவுமான் கடையில ரெண்டு ரொட்டி வாங்கி குடுவே.. தங்கச்சிக்கு ஸ்கூல் பஸ் வந்துரும் " என்று அவள் பரபரப்பிலும், அவனைப் பார்த்த சந்தோசத்திலும் படபடவென டிபன் பாக்ஸை நீட்டவே, சிரித்தபடி நலம் விசாரிப்பு பதில் சொல்லிவிட்டு,

"சரி ராத்தா, தாங்க"ன்னு மெலிதாய் புன்னகைத்தபடி வாங்கிக் கொண்டான்.

அவனுடைய அந்த 'தாங்க' அவளுக்கு புதிதாய்பட்டது, ஆனாலும் ஆச்சர்யமில்லை, உள்ளூர அவனது நாகரீக தோற்றத்தையும், மரியாதை கலந்த சுபாவத்தையும் கண்டு ரசித்தாள். சிறு வயதிலேர்ந்தே அவன் ரொம்ப பதுவுசானவன். தங்கப்பொண்ணை விட ஐந்து வயது இளையவன் என்றாலும் ஒரே தெரு என்பதால் பிராயத்தில் அவ்வப்போது அவளோடு விளையாட வந்துவிடுவான். அப்போதெல்லாம் வா..போன்னுதான் கூப்பிடுவான்.

அப்துர் ரகுமான் கடைக்கு சென்றவன் ஐந்தாறு நிமிடத்தேலேயே திரும்பி விட்டான்.

"மச்சா(ன்) நல்லாருக்காங்களா.!" என்று டிபன் பாக்ஸை கொடுத்தபடி கேட்டான்.

"நல்லா இருக்காக மா.."

"எங்க இருக்காங்க, துபாய்லயா?”

"இல்லமா சவுதில, நீங்க எங்க இருக்கிய.." அவளுக்கும் கூட அந்த 'நீங்க' தானாவே வந்துவிட்டது. பின்னே பூவோடு நாரும் சேர்ந்தால்..!

அவளும் பூதான். அவளைச் சுற்றியிருப்பவர்களில்தான் நாரும் உண்டு குரங்கும் உண்டு!

"நா(ன்).. இங்கதான் ராத்தா, மெட்றாஸ்ல ஒரு ஐடி கம்பெனில வேல பாக்குறேன். ஞாயித்து கெழம நம்ம ஜுபைருக்கு கல்யாணம்ல அதான் லீவு போட்டுட்டு முங்கூட்டியே வந்திருக்கேன். சரி ராத்தா, முக்கத்துல கொஞ்சம் வேல இருக்கு. வர்றேன்.." என்று அதே இளகும் புன்னகையோடு திரும்பி விட்டான்.

மகள் ஸாஃப்ரினுக்கு ஸ்கூல் உடுப்பு உடுத்தி, தலைக்கு ஸ்கார்ப் இட்டு ஒரு முறை அவள் தோற்றத்தைப் பார்த்தாள், பெனாசிரின் ஞாபகம் வந்து போனது. நெற்றியில் முத்தமிட்டு "ராஜாத்தி..." என்று அவளைக் கட்டி முத்தமிட்டாள். அந்த உடுப்பு அவளது கனவு, ஆசை..! ஒரு காலத்தில் அவளுக்கு வாய்க்க பெறாத சீருடை!

ஸ்கூல் பஸ் வர மகளை ஏற்றி விட்டுவிட்டு ஃபோனைப் பார்த்தாள் ஸாஃப்ரின் வாப்பாவிடமிருந்து அழைப்பு ஏதும் வந்திருக்கவில்லை. வாட்சப்பை நோக்கினாள், ம்ஹூம்!

பெருமூச்சு விட்டவளாய் கொடியைப் பார்த்தாள், துப்பட்டி ஈரமாகத்தான் இருந்தது. இது சரிவர காயிறதுக்குள்ள லுஹருக்கே பாங்கு சொல்லிருவாங்களேன்னு, ஒரு முறை நன்றாக பிழிந்து, ஒரு விசிறு விசிறி, கொடி நெடுக ஒரே மடிப்பாக விரித்துப் போட்டாள்.

"என்ன தங்கப்பொண்ணு... றாலு வாங்குறியளா..." என சத்தம் கேக்க திரும்பினாள். ஓ..! கதவை சாத்த மறந்திருக்கிறாள். கலையரசி வந்ததும் கூட நல்லதாதான் போச்சி. இல்லையென்றால் அப்படியே கொல்லை பக்கம் போயிருப்பாள்.

"வா கலையரசி நல்லா இருக்கியா.. என்ன ஆள பாக்க முடியல! பொடி ஏதும் வச்சிருக்கியா?"

மீன்கூடையை படியில் இறக்கி வைத்துவிட்டு, உப்பும் வியர்வையுமாகப் படிந்திருந்த வாயில் புடவை முந்தானையை அவிழ்த்து உதறிவிட்டு மறுபடியும் இடுப்பில் சொருகியபடி, "வடக்கமடம் போயிருந்தே(ன்).. சித்தி மொவளுக்கு தண்ணி ஊத்துனாவோ... அதா ரெண்டு நாளா அங்குன தங்கிட்டே(ன்). அவ்வொளும் வலைக்கு இன்னிக்குதா போனாவோ, பொடியையும் கூனியையும் கொண்டுக்கிட்டு இங்கிட்டு வந்தே.. கீலிப்பொடி இருக்கு வேணுமா?"

"கீலிப்பொடியா..." என்று கேட்டவாறே கூடையைப் பார்த்தாள். ஸாஃப்ரின் வாப்பாவுக்கு இதுல மொளவு தண்ணி வச்சா ரொம்ப புடிக்கும்! 'புள்ளையும் முள்ளெடுத்து குடுத்தா வாப்பா போலவே நல்லா சாப்புடுவாள்' என்று வாங்க தீர்மானித்தாள்.

"ஓ.. இங்குட்டு வரலயே, அதா மேலுக்கு ஏதும் முடியலயோன்னு நெனச்சிட்டேன்". ஐம்பது ரூபாய்க்கு பொடியும் றாலும் போட சொல்ல, கொடுத்துவிட்டு தமிழரசி 'வாரேன்..' என்று அவளும் சென்றுவிட்டாள்.

தக்காளி இல்லை! 'கடைக்கு போகணுமா.. துப்பட்டி இன்னும் காயலயே.. வெள்ளைத்துப்பட்டி வேற இப்படியே போட்டுட்டு போனா சல்லடை போல தெரியும்! இங்குனதான் பழி பேச ஆயிரம் நாக்கு இருக்கே..' என்று தனக்குள் பேசிக்கொண்டவளாக வீட்டுக்குழிக்குள் சென்று ரெங்குப்பெட்டியைத் திறந்து தேய்த்து மடிக்கப்பட்ட புர்காவை எடுக்கிறாள்.

ரெங்குப்பெட்டி.. உம்மா கொடுத்ததுதான் சூட் கேஸ்லாம் வந்துவிட்ட பிறகும் உலக வழக்கம் என்று சொல்லி இதுலதான் சீர்துணிமணி குடுப்பேன் என்று அடம்பிடித்து இதில்தான் எல்லாவற்றையும் திணித்து புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தாள். இந்த வெள்ளைத் துப்பட்டி கூட உம்மாவோடதுதான். அந்த புர்கா கணவன் வாங்கி அனுப்பியது. வெளியூர் பயணங்களுக்கு புர்காவும், தெருவில் அவசரத்துக்கு துப்பட்டி என உடுத்துவது தங்கப்பொண்ணுடைய வழக்கம். அவளுடைய உடுப்புகளோடு கணவனின் ஒரு சட்டை கைலியும், மகளின் ஒரு சுடிதாரும் இருந்தது. ஆமாம் ஒரே ஒரு சுடிதார்! மகளுக்கென தனியா ஒரு கப்போர்டே வைத்திருந்தாள். அதில் விதவிதமான அழகழகான உடைகள் இருந்தாலும், இங்கே இவள் பெட்டியில் தனியாக ஒன்றை பிரியத்திற்கு வைத்திருக்கவும் காரணம் இல்லாமல் இல்லை.

"ம்மா... ம்மா..."

"என்னடி..!" பலகா கட்டையில் இருந்தபடி தேத்தண்ணியை வடிக்கட்டி கொண்டிருந்த அவளது தாய், எப்போதும் போல அவளை கடுகடுப்போடு பார்த்தாள்.

"நம்ம பெனாசிர் இல்ல, அவ்வொ உம்மா அதுக்கு சுடிதார் எடுத்து குடுத்திருக்குமா..! பெருநாளக்கி எனக்கும் எடுத்து தர்றியா?" கெஞ்சலாக கேட்டாள்.

"ஆமா உங்கப்பன் கொண்டு வந்து கொட்டுறான். டவுன்காரியாட்டம் இதெல்லாம் போட்டுக்கிட்டு திரிய பாக்குறியளோ, கால ஒடுச்சிருவேன்! தம்பிக்கு தேத்தண்ணிய குடுத்துட்டு, அப்பத்துக்கு தொட்டுக்கறிய அரடி வேச! சுர்தாராம்ல சுர்தாரு.!"

அவளுக்கு உம்மாவின் இந்த சிடுசிடுப்பும், ஏசல்களும் அறிந்ததுதான். அப்போது அவளது தம்பி எட்டாவது படித்துக்கொண்டிருந்தான். அவள் எட்டாவதோடு நிறுத்தப்பட்டாள். வாப்பாகிட்டயும் படிக்க வைக்க சொல்லி கேட்க பயமா இருந்தது அல்லது தயக்கமா இருந்தது. அவளுடைய சில தோழிகள் ராஜகிரி மதரஸாவில் படிப்பும் ஓதுதலுமா இருக்கிறார்கள். மாயவரத்தில் மளிகைக் கடை ஒன்றில் சம்பளத்திற்கு வேலை பார்க்கும் தன் தந்தையிடம் இதெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? அதுவும் மாசத்திற்கு ஒருமுறையோ அல்லது ரெண்டு மாசத்திற்கு ஒருமுறையோதான் ஆளு வூட்டுக்கு வரும்.

நம்ம வாப்பாவும் அரபு நாடு போயிருந்தால் நல்லா இருந்திருக்கும்ல என்று அவ்வப்போது அவளுக்கு தோணும். பள்ளி வாசல் குளத்தில் சில பெண்கள் அரபுநாட்டு மணசோப்பு வீச குளிக்கும்போதும், தேங்காப்பூ லேஞ்சால பிள்ளைகளுக்கு அவர்கள் துவட்டிவிடுவதை பார்க்கும்போதும் இவளுக்கு அவ்வளவு பரவசமாக இருக்கும்! எப்போதாவது யாருமில்லாத குளத்தில் பிரித்து வீசப்பட்ட அந்த சோப்புக் கூடை நுகர்ந்து பார்த்து, நுகர்ந்துப் பார்த்து, தன் நபுசியை (இச்சையை) தீர்த்துக் கொள்வாள்.

அதுபோலதான் இந்த படிப்பும், காலை மாலை நேரங்களில் கதையும் கேலியாக வாசலை கொள்ளெனக் கடந்து செல்லும் பிள்ளைகளைப் பார்க்கும்போது, அவர்களோடு ஏதாவது ஓரிரு வார்த்தைகள் பேசினால்தான், அவள் மனசுக்கு அப்போது ஒரு ராஹத்து! அதுவும் இந்த ஜெகதீஸ்வரா மெட்ரிகுலேசன் பஸ்ல போற பிள்ளைங்களை வாட்டையிலிருந்து பார்த்தா, அவளுக்கு ஏதோ எல்லோரும் ஏரோப்பிளேன்ல ஒய்யாரமா உக்கார்ந்து போற மாதிரில இருக்கும்! அப்படிதான் பெனாசிரும் பாஸித்தும் படிக்க போனதும்!

'அவ்வொ உம்மா ஊருக்கு காது குடுக்காம மக்களை நல்ல மாதிரியா ஓத, படிக்க வச்சிச்சி! இந்த ஊர்லதான் வயசுக்கு வந்துட்டா, பொம்பளப் புள்ளைங்க வெளியில போவக் கூடாதே! ஏன் ஒரு காலத்தில் ஆம்புள புள்ளைகளையே கூட படிக்க உடாம மீச மொளைக்குறதுக்குள்ள சம்பாரிக்க கடைகளுக்கு விரட்டி வுட்ட ஊருதான இது. என்னதான் சொல்லு, எவ்வளவுதான் வசதியுள்ள வாப்பாவா இருந்தாலும், உம்மாமாரு தொட்டுக்கறியை ஆம்புள பிள்ளைகளுக்கு வைக்குற மாதிரி வச்சாத்தான பொம்புள்ள புள்ளைங்களுக்கும் வவுறு நெறயும்!' என்று ஏங்கியபடி கொஞ்சம் தனது பால்ய காலத்திற்குள் சஞ்சரித்துவிட்டு வந்தாள்.

தக்காளி வாங்க தங்கப்பொண்ணு புர்காவை போட்டுக் கொண்டு கைஜம்பு கடைப் பக்கம் புறப்படலானாள். அதுவரை அந்த பக்கம் நின்றுக்கொண்டிருந்த ஆம்பிளைக கூட்டம் கலைந்துப் போயிருந்தது. எப்போதும்போலவே சஹாபுதீன்- மம்மது சாலிகு-அயிசாக்கா வூட்டு முக்கத்துல வீச்சம்ன்னா வீச்சம் அவ்வளவு வீச்சம்!

சில சமயம் சில ஊர்வழக்குகளும், புழங்கிய(கழிவு)நீரை வேறு வழியில்லாமல் வாட்டையில் விடுவது போன்றதுதான். தேக்கியா வைக்க முடியும்? வசதிகள் இல்லாத வீடுகளிருந்து கழிவுகள் தெருவுக்கு வருவது இயல்பானதுதானே. யாரை சொல்லியும் குற்றமில்லை. வந்த கழிவின் வீச்சத்தை போவோர் வருவோர் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மற்றவர்களின் முகச் சுழிப்பிற்கும் ஏச்சுப்பேச்சுகளுக்கும் ஆளாகித்தான் ஆக வேண்டும்!

அந்த ஜமீலா அப்படி என்ன செய்துவிட்டாள்? ஏன் அவளுக்கு இவ்வளவு நெருக்கடி, இந்த பஞ்சாயத்து எல்லாம்? ஆரம்பத்தில் பட்டன் ஃபோன் மட்டும்தான் உபயோகித்து வந்திருந்தாள். ஒரு நாள் வெளி நாட்டிலிருக்கும் அவளுடைய கணவனுக்கு அவசரமாக இந்தியா டிரைவிங் லைசென்ஸ் காப்பியோ, ஃபோட்டோவோ வேண்டியிருந்தது. படம் புடிச்சி அனுப்ப வேண்டும். அதற்கு அவளுடைய ஃபோனில் வசதி இல்லை. அவளது கணவனே உறவினர் மகன் ஒருவனை தொடர்பு கொண்டு, அவனுடைய செல்லிலிருந்து விரைவாக வாட்சப் செய்யும்படி மிகவும் வேண்டிக் கொண்டான். வந்தவன் லைசென்ஸை படம் எடுத்து அனுப்பிவிட்டு,

"மச்சி அண்னண்ட்ட ஏதும் பேசுறியளா..."

"அல்லாஹ்வே, ஒனக்கு காசு போவுமே சத்தாரு..!"

"இல்ல மச்சி இதுல ரெக்கார்டு செஞ்சி அனுப்பலாம்"

தயங்கி அதெல்லாம் வேணாம் என்றாள். உண்மையில் அவளுக்கு கணவனோடு பேச வேண்டுமெனத்தான் நினைத்தாள். ஆனால் சொந்தக்காரன் என்றாலும் இன்னொரு ஆண் முன் பேச வெட்கப்பட்டாள்.

சட்டென வாய்ஸ் மெஸ்ஸேஜ் கணவனே அனுப்பியிருந்தான். அவனுக்கு ஸலாம் சொல்லியும், நன்றியை தெரிவித்தும் பேசி அனுப்பியிருந்தான்.

கணவனுடைய குரலை குறுஞ்செய்தி வழி கேட்டதில் ஜமீலாவிற்கும் வாநீர் வடிஞ்சது. அவளது குறிப்பை அறிந்தவனாக சத்தார் திரும்பவும் அந்த மெஸ்ஸேஜை ஓடவிட்டான்.

"என்ன சத்தாரு திரும்பவும் கேக்கலாமா..."

"ஆமா மச்சி... நீங்க எதுவும் பேசி அனுப்புறியளா..."

மறுபடியும் வெக்கம். பேச வாயெடுத்தவள், "வேணா சத்தாரு" துப்பட்டியால் தன் வெக்கத்தை மறைக்க முயன்றாள்.

"இப்புடி வெக்குறியளே..." அவனும் சிரித்துக் கொண்டு போய்விட்டான். ஆனால் இவளுக்கு கணவனோடு பேச ஆசை ஆசையாக இருந்தது. அதுவும் அவ்வப்போது பேசிக் கொண்டால் எவ்வளவு நல்லாருக்கும்! வெள்ளி கிழமை மட்டும்தான் பேச முடியுது. நெனப்பு வச்சு ஒவ்வொரு சேதியையும் சொல்ல முடியல. சில நேரம் ஃபோன் வர்ற நேரத்துல அக்கம்பக்கத்துலேர்ந்து, இல்ல விருந்தாடிக யாரும் வந்துட்டா பட்டுன்னு பேசிட்டு வைக்கிற மாதிரி ஆயிடுது. சில சமயம் கூட பேச முயன்றால், கணவனிடமிருந்து 'காசு போவுது'ங்கிற அதட்டலையும் வாங்கி கொள்ள வேண்டியிருக்கு. உள்ளூருல பிழைக்க முடியாம ஏந்தான் இவ்வொ எல்லா வெளி நாடு போறாகளோ..என்று முணங்குவாள்.

அடுத்த முறை கணவனோடு பேசியபோது, அவனுடைய குரலை தான் வாட்சப்பில் கேட்டு பூரித்ததை சொல்ல, மனைவியின் காதல் பரவசத்தில் தள்ளாடிப் போனவன், சீக்கிரமே ஆன்ட்றாயிட் ஃபோன் ஒன்றை வாங்கி அனுப்பினான். அதை உபயோகிக்கும் அளவிற்கு படிப்போ பழக்கமோ இல்லை என்பதால், செட் செய்ததிலிருந்து, உபயோகப்படுத்தும் முறைகளை எல்லாம் சொல்லி கொடுத்தது எல்லாம் சத்தார்தான். ஜமீலாவிற்கு தான் உபயோகிக்கும்போது ஏற்பட்ட ஆரம்ப கால சந்தேகங்களுக்கு அவனை அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது. அதுவே அவளை அவனுடான நெருக்கத்திற்கு ஆளாக்கியது.

அவன் கணவன் மனைவியின் அந்தரங்களை தெரிந்து கொள்ளும் அளவிற்கு அந்த பழக்கம் வளர்ந்து சென்றது. கண்கொத்தி பாம்புகளாய் சுற்றி சொந்த பந்தங்கள் இருந்ததால் அவர்களுக்குள் பெரிய தவறேதும் நடந்துவிடவில்லையென்றாலும், ஒரு நாள் இந்த பிலாய் பேச்செல்லாம் அரசல் புரசலாக அக்கம் பக்கத்தில் புகைய தொடங்க, வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு வாக்கப்பட்ட ஜமீலாதான் ஏச்சுப்பேச்சுக்கு அதிகமாக பலியாகிப் போனாள். இந்த ரெண்டு மூணு நாளா பொம்பளக் கரை முழுக்க அவள் பேச்சுதான் ஓடிக்கொண்டிருக்கிறது. சுபாவத்தில் அவளொரு அப்பாவி என்பதெல்லாம் இந்த முஸீபத்து புடிச்ச மொபைலுக்கு வேணும்னா தெரியாமல் இருக்கலாம். சற்று புத்தி தடுமாறி விழப் பார்த்தவளை தாங்கும் மறைப்பாய் யார்தான் அவளுக்காக நிற்க போறாகளோ..!

முந்தாநாள் இரவு இது பற்றி பேசித்தான் தங்கப்பொண்ணுக்கும் அவளுடைய கணவனுக்கு சிறு பிணக்கம் வர தொடங்கியிருந்தது. அவன் ஆண்களுக்கே தொடர்ந்து ஏத்துக்கிட்டு பேச, இவளுக்கும் தன் பங்கிற்கு பொத்துக் கொண்டு வந்தது. பொருள் தேட சென்றிருக்கும் கணவனைமார்களை பிரிந்து, தனி மனுஷிகளாய் ஊரோடும் உறவுகளோடும் தினசரி தேவைகளுக்கு அல்லல்படும் பெண்களின் நிலைமையை உண்மையிலேயே இவர்கள் யோசித்துதான் பேசுகிறார்களா? சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தனியே இருக்கும் பெண்கள் மீதான பிறரின் சந்தேகப்பார்வைகளுக்கும் விமர்சனங்களுக்கும் நியாயம் கற்பிப்பது போலவே அவனது சில பதில்களும் இருந்தது, அவளை மேலும் அச்சத்திலும் கவலையிலும் ஆழ்த்தியது. யார்தான் இவர்களை தேசங்கடந்து சம்பாதிக்க சொன்னார்களோ. ஜமீலா போல இவள் உலகமறியாதவளோ அப்பாவியோ அல்ல. அவளது தோழியான பெனாசிரின் தைரியத்தையும் நாகரீக பழக்க வழக்கங்களையும் பார்த்து பார்த்து, படித்தவளுக்கு நிகராக செயல்களிலும் சிந்தனைகளிலும் பார்த்துப் பார்த்து தன்னை தானே பட்டைத்தீட்டிக்கொண்டவள். அதுதான் அவளுடைய கணவனுக்கு அவளிடம் மற்ற நேரங்களில் பிடித்ததும், இது போன்ற நேரங்களில் பிடிக்காமல் போவதும்!

பெரியவர்கள் இல்லாத குடும்பப் பெண்கள் ஒவ்வொரு தேவைக்கும் அண்டை மனிதர்களையேதானே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. கடைத்தெருவில் சாமான் வாங்குவது முதல் மருத்துவம் போன்ற தேவைகளுக்காக அறந்தாங்கி, பட்டுக்கோட்டையென செல்லும் வெளியூர் பயணங்கள் வரை ஒருவருக்கொருவர் தேவையுள்ளவர்களாய் இருப்பதால், எத்தனை போட்டி, பொறாமை, மனக்கசப்புகள் இருந்தாலும் வேறு வழியில்லாமல் எல்லோரும் ஒரு வகையில் ஒருவரோடு இன்னொருவர் பிணைந்தேதான் வாழ வேண்டியிருக்கிறது. அப்படிதான் வாழ்கிறார்கள்.

இந்த வாட்ஸாப் பிலாய் வந்ததிலிருந்து, விழிப்புணர்வு என்ற பெயரில் கண்ட கண்ட விசயங்களையும் வீடியோக்களையும் உடனுக்குடன் பகிர்ந்துவிடுகிறார்கள். தவறிழைத்திருந்தாலும் சம்பந்தப்பட்ட ஆண் / பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை என்னவாகும் என்ற யோசனை யாருக்கும் இருக்கிறதா என்ன?

ஜமீலா விசயம் கொஞ்சம் கசிய தொடங்கியதிலிருந்து, தங்கப்பொண்ணுடைய கணவனின் பேச்சுத் தோரணையும் சற்று மாறியிருந்ததை அவளும் மாறியிருந்ததையொட்டி அவளும் கவலைப்படத் தொடங்கியிருந்தாள்.

அதுவும் பக்கத்து ஊரில் நடந்த ஒரு சம்பவம் அளவிற்கு விஷயங்களை தீவிரமாக அவன் கொண்டு சென்றதுதான் அவளை இன்னும் வேகமாக்கியது. அந்த சம்பந்தப்பட்ட வீடியோவில் கையும் களவுமாக இருவரையும் பிடித்திருந்தார்கள் அங்குள்ள மார்க்க காவலாளிகள். அந்த பெண் தன்னை வீடியோ எடுக்க வேண்டாமென 'அண்ணே.. அண்ணே..என்று ஒவ்வொருவரிடமும் அவ்வளவு தடுத்து மன்றாடியும், அவள் கண்ணீர் விட்டதையும், கூனி குறுகியதையும் கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் சுற்றி வளைத்து படம் பிடித்துக் கொண்டிருந்த அந்த கூட்டத்தை என்னதான் சொல்வது? அவளைப் போன்று தங்களது சகோதரிகள், மகள்கள் செய்திருந்தாலும் இப்படித்தான் கையாள்வார்களோ? இவர்களின் இந்த உளவு வேலையும் விழிப்புணர்வு பிரச்சாரமும் இவ்வளவு வெளிச்சம் போட்டு காட்டி பிறரை இந்த அளவிற்கு இழிவுபடுத்த மார்க்கத்தில் அனுமதிக்கபட்டிருக்கிறதா? அது என்னவோ தெரியவில்லை பிரச்சினை என்று வந்துவிட்டால் தாய், சகோதரிகள் அளவிற்கு மனைவியை மட்டும் இந்த ஆண்கள் நம்புவதில்லை, ஒழுக்கங்கெட்டவர்களாக நொடி பொழுதில் சித்தரிக்க துணிந்துவிடுகிறார்கள் அல்லது சந்தேகத்தோடேயே வாழ்ந்து, செத்தும் போகிறார்கள்.

நேராக அவளை சொல்லாவிடிலும், தன் கணவன் எதார்த்தமாக விட்ட சில வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவள் நெஞ்சில் முள்ளாய் குத்திக் கொண்டியிருந்தன. காய்ந்த பால் பொங்குவதை போல நினைக்க நினைக்க மனம் முழுவதும் அவ்வளவு வெம்மையும் தாளாமையும் எழுந்து எழுந்து அடங்கியது! இவ்வளவுதானா இவர்களின் நம்பகம்? ஒவ்வொரு நொடியிலும் தன் கணவனுக்காக பிரார்த்திப்பவள், தன்பிள்ளையையும் பிரார்த்திக்க தூண்டுபவள். தொழுகைகளில் இவன் நலனுக்காக இறைஞ்சுவதெல்லாம் வீண்தானோ என்று ஒரு கணம் திகைத்தாலும், "ச்ச அல்லாஹ் நம்மள ஏமாத்த மாட்டான். இதெல்லாம் சைத்தானோட ஊசலாட்டம். பிரியமானவர்களை பிரிப்பதுதானே சைத்தானுடைய வேலையே.." என உடனே உளுவும் செய்து கொள்வாள்.

"பாருவே(ன்).. இந்த குட்டி இப்புடி பண்ணிப்புட்டாளே..." என்று அதுவரை குதப்பிக்கிட்டு இருந்த வெத்தலையை 'ப்ச்'ன்னு துப்பிவிட்டு ஆசியமரியம் பேச ஆரம்பித்தபோதுதான் தங்கப்பொண்ணு இந்த உலகத்துக்கு மீண்டும் வந்தாள், கடையும் வந்துவிட்டிருந்தது.

"கைஜம்பு... கா(ல்) கிலோ தக்காளி குடுவெ.."

"என்னடி.. கேட்டும் கேக்காத மாரி நிக்கிறியே..." அதட்டியது ஆசிய மரியத்தின் குரல்தான்.

"என்னத்த சொல்ல சொல்றா... அதா நீங்களுவ முடிவே பண்ணிட்டியளே.."

"அந்த ஹராம்ல பொறந்தவளுக்கு ஏத்துக்கிட்டு பேசுறியோ!"

"ஜமீலாவ பத்தி ஒனக்கு தெரியாதா பெரியம்மா.. ஏ(ன்) நீயும் இப்புடி பேசுறா..! வாயில்லா பூச்சி அவ.. ஏ(ன்) அந்த பய சத்தார யாரும் எதுவும் சொல்ல மாட்டியளோ.. அவனும் அவ(ன்) மூஞ்சியும்.." என்று காறி துப்ப வந்தவள், மெதுவாக துப்பினாள்.

"அவ(ன்) சின்ன பய டீ.. இப்ப யாருக்கு நட்டம்.." மிச்சமிருந்ததை அவளும் துப்பினாள்.

"அல்லாதான் லேசாக்கணும்" என்று திரும்பியவளை,

"இங்கிருவே, ஆமா.. செத்த நேரத்துக்கு முன்னாடி வூட்டு வாசல்ல யாரோ மோட்டார்ல வந்து நின்னானே.. அதுவும் ரெண்டு மொற வந்து வந்து போனானே.." என்று ஆசிய மரியம் அவள் முடிப்பதற்குள் தங்கப்பொண்ணுக்கு கோவம் தலைக்கேறியது.

"அல்லாவே…! ஏ(ன்) பெரியம்மா.. ஒனக்கு இப்படி ஊரு பிலாய எல்லா பாக்குறதும் பேசுறதுந்தான் வேலையாக்கும்.. அது நம்ம பெனாசிரோட தம்பி பாஸித்து, முக்கத்துக்கு பொய்ட்டு இருந்தவன புள்ளைக்கு லேட்டாச்சுன்னு நாந்தான் அத்துரமாங்கடையில ப்ராட்டா வாங்கிட்டு வர சொன்னே(ன்).. நீ பாட்டுக்கு சோடிச்சி விட்றாத தாயி.. நல்லாருப்பா!" என்று முகத்தை திருப்பிக்கொண்டு ஊரையும் உறவையும் நொந்தபடி விறுவிறுன்னு நடக்க தொடங்கினாள். ‘ச்ச!’ என்று சலித்துக் கொண்டாள்!

வீட்டை நெருங்க நெருங்க வாசலில் நின்றுக் கொண்டிருந்த உருவத்தை கண்டு உற்சாகமாக துள்ளல் நடைப்போட்டாள். ஆம் அது அவளுடைய உம்மா! இப்போது வடக்கூரில் தம்பி குடும்பத்தோடு இருக்கிறாள். ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும், இவளின் வருகை ஆச்சர்யம் தர ஏதுமில்லை. நேற்று காலையிலிருந்து வந்த தன் கணவனது ஒரு அழைப்பையும் எடுக்கவில்லை. எல்லாம் ஜமீலா-சத்தார் விவகாரம் பற்றிய பேச்சால் விளைந்த விளைந்த ஊடல்தான். அவனை அவ்வளவு நேசிப்பவள். அவனும்தான். ஆனால் மற்றவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு தனது பிரியமான மனைவியையே சந்தேகக் கண்ணோடு பார்க்க நினைத்தால் அவள் பொறுப்பாளா? அவனும் தொலைவில் இருப்பவன் அல்லவா? வழக்கமான மற்ற சிறுசிறு ஊடல்களுக்கே சில நேரங்களில் பதறி, மாமியாருக்கு ஃபோன் செய்து இவள் நிலையை பற்றி ஒரு முறையேனும் விசாரித்துக் கொள்பவன். நேற்று காலையிலிருந்து இவள் போனை எடுக்கவே இல்லை. அவன் பேசிய பேச்சு அப்படி. இரவில் இவள் எதிர்பார்த்தாள் அவன் அழைக்கவில்லை. அவளாக அழைப்பாள் என எதிர்பார்ப்பில் கூட அவன் இருந்திருக்கலாம்.

உம்மாக்காரி பிதுங்கிய பட்டுக்கோட்டை பூம்புகார் ஜவுளிக்கடை பையோடு சிரிச்சி மவுந்தபடி நின்றுக் கொண்டிருந்தாள். இந்த உம்மா முன்னாடியெல்லாம் இப்படியா சிரிக்கிட்டு இருந்திச்சி! இவளுக்கு அழகான மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சதுலேர்ந்தும், தம்பி படிச்சி வெளிநாடு போனதிலிருந்தும்தான் உம்மா முகத்தில் இந்த பொலிவு, தெளிவு எல்லாம். இப்போ கொஞ்சம் சதையெல்லாம் கூட போட்டு கையெல்லாம் உப்பி, இன்னொரு ஸாஃப்ரின் போலத்தான் அவள் கண்ணுக்கு தெரிந்தாள். மகளுக்காக சிறுக சிறுக சேர்த்த நகைகளோடு, தன்னிடமிருந்த மிச்ச சொச்ச நகைகளையும் தாரை வார்த்து இவளைக் கட்டிக் கொடுத்த மகராசியை வெறும் கழுத்தோடு பார்க்க பிடிக்காமல், சமீபத்தில்தான் மகன்காரன் அஞ்சு பவுனில் சங்கிலி ஒண்ணு வாங்கி போட்டு பெத்தவளை சந்தோசப்படுத்தினான். இப்போது மக்களின் நிறைவான வாழ்க்கையில் தங்கப்பல் கட்டி சிரிக்காத குறை ஒண்ணுதான் உம்மாவுக்காரிக்கு.

"வாம்மா.. எப்ப வந்தா!"

"செத்த நேரந்தான் ஆவுது தங்கச்சி.." மகன் மகள்களை தம்பி தங்கச்சின்னு வாய் நெறய அழைக்கிறதே இந்த உம்மாமாரு வாப்பாமாருக்கெல்லாம் எவ்வளவு நெரப்பம்!

"என்ன பையெல்லாம் கனக்குது.."

"பொற பொறக்க போவுதுல அதான் ஓந்தமயன் தல பொறைக்கு காசு அனுப்பி வுட்டான். ஒனக்கு புள்ளைக்குல்லாம் உடுப்பு வாங்கி குடுக்க சொன்னா(ன்). முந்தா நேத்து நம்ம அனீசுக்கு புள்ள பொறந்திச்சில்ல.. அதா நானும் ஓம்மச்சியும் பட்டுக்கோட்ட நீலாஸ்ப்பத்திரிக்கி போனோ(ம்).. அப்புடியே உடுப்பும் எடுத்துக்கிட்டு வந்துட்டோம். நேத்து காலைலேயே வரலாம்னுதான் பாத்தே(ன்).. ஓ மச்சிக்காரி அவ்வொ வூட்டுக்கு கொஞ்சம் பொய்ட்டு வரேன்னு போனா பொழுதாவும் போயிருச்சி..! ஜாப்ரினு வாப்பா வேற ராத்திரி போன் பண்ணியிருந்தாகளா..."

இதைதான் இவளும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள்.

"என்ன சொன்னாக?" குறுகுறுப்போடு கேட்டாள்.

"ஒனக்கு மேலுக்கு சரியில்லையாம்ல..."

அவளுக்கு சிரிப்பு நெஞ்சை முட்டிக்கு கொண்டு நின்றது. அடக்கிக் கொண்டாள். 'களவாணி, களவாணி' என்று கணவனை கொஞ்சலாய் மனசுக்குள் திட்டித் தீர்த்தாள். மேகம் விலகிய நிலவு போல சற்றுமுன்பு வரை மனதிலிருந்த கனமெல்லாம் குறைந்து, தனது தாயை வாநீர் வடிந்தபடி, அவளது கன்னங்களை கிள்ளி இழுத்து கொஞ்சும் அளவிற்கு ரசித்துக் கொண்டிருந்தாள்.

"மேலுக்கு என்ன பண்ணுது ஒனக்கு.. கட்ட டாக்டர்கிட்ட பார்த்துட்டு வருவொமா?"

"அதெல்லாம் எனக்கு ஒண்ணுல்லம்மா.. வாப்பா, மச்சி எல்லா நல்லாருக்காகளா.. ஓம் பேரம் பேத்தியெல்லாம் என்ன சொல்றாக.." என்று கொண்டு வந்த துணிமணிகளை பார்க்கத் தொடங்கினாள். இவளுக்கு வாங்கியது எல்லாம் பகட்டாகவும், பிள்ளைக்கு வாங்கியது எல்லாம் நவநாகரீக உடுப்புகளாவும் இருந்தன.

பிள்ளைக்கு வாங்கிட்டு வந்த ப்ராகை காட்டி, "என்னமா இது? கையில்லாம எடுத்துக்கா..!"

"அப்புடித்தான... புள்ளைலுவோ போடுதுவோ.."

"ஏம்மா அன்னிக்கு நா ஒரு சுடிதாரு எடுத்து கேட்டப்ப என்னென்ன பேச்சு பேசுனா.. இப்ப பேத்திக்கு மட்டும் கை வைக்காத சட்டயா?"

"பேத்தின்னு சொன்னதுதான் ஞாபகம் வருது.. நேத்து உங்க வாப்பாட்ட மருமொவ(ன்) ஏதேதோ சொல்லிக்கிட்டு இருந்திச்சி, நம்மளுவொல்ல படிச்சவொ ரொம்ப கம்மியாம்; கவர்மெண்ட்டு வேலயா வெளிய தெருவ போனா கூட மத்த சனங்களைதா(ன்) அதிகமா பாக்க முடியுதாம்; அதுனால அவ்வொ மகள எப்படியும் டாக்டருக்கு வர படிக்க வச்சிருவாகளாம்." என்று அவள்பாட்டிற்கு அவன் சொன்னதை ஒவ்வொன்றாய் அடுக்கிக் கொண்டே போக.. தங்கப்பொண்ணு மகிழ்ச்சியின் உச்சத்தில் கிட்டத்தட்ட கண்கள் கலங்கி, வெடித்து கலகலவென சிரிக்கத் தொடங்கினாள்.

"ஏம்மா நா எவ்வளவு படிக்க ஆசைப்பட்டே(ன்), அனுப்புனியா?"

"(பெருமூச்சு விட்டவளாய்) ஹூம்... இப்ப உள்ள ஊரா அப்ப! கீலிப்பொடி வாங்குனியோ..." என்று அருகே கிடந்த பலகா கட்டையையும் அருவாமனையையும் இழுத்துப் போட்டு ஆய உட்கார்ந்தாள்.

- இத்ரீஸ் யாக்கூப்

Pin It