ஒருவரோடு ஒருவர் புரியும் போர்களுக்கு ஆபரேசன் என்று எதற்குப் பெயர் சூட்டுகின்றார்களோ தெரியாது. எனக்கும் நேற்று ஒரு ஆபரேசன் நடந்தது. வாழ்வில் முன்னெப்போதும் எனக்கு அந்த அனுபவமில்லை. அந்த வைத்தியசாலை வாசலில் என் சுகாதார அட்டையை பதிவு செய்த போது உள்ளிருக்கும் கணனி இயந்திரத்தை அறிமுகப்படுத்தவென மற்றுமொரு சீன இளம்கணனிப் பெண் நின்று கொண்டிருந்தாள். சுகாதார அட்டையை உள்ளிடு என்றாள் அந்த மானிடக் கணனி. என் அத்தனை அடையாளங்களும் கணனித் திரையில் வந்தன. அண்மையில் எங்காவது வெளிநாடு போய் வந்தாயா என்றது கணனி. இல்லை என்றேன் நான். கொரோனா ஊசிகள் மூன்றும் போட்டாயா? ஆம் என்றேன் நான். சந்தோசப்பட்டது கணனி. ஆபரேசன் முடிந்தபின் வீடு செல்ல பொறுப்புள்ள வாகனச் சாரதி உன்னிடம் உண்டா? ஆம் என்றேன் அயலில் நின்ற மனைவியைக் காட்டி.

சரி இரண்டாம் மாடிக்குப் போ என்றாள் அவள். நான் லிப்ட் ஏறினேன். பயம் தொற்றிக் கொண்டது.

மேலே மற்றுமொரு அறை. அதில் இருந்த மானிடக் கணனி கையை நீட்டென்றது. என் வலது கையில் என் பெயர் மற்றும் வயது ஒட்டப்பட்டது. மற்றுமொரு நேர்ஸிடம் நான் கையளிக்கப்பட்ட போது நான் பாவிக்கின்ற மருந்துகளிலிருந்து என் குடும்ப நோய், வாழ்க்கை முறை அனைத்தையும் கேட்டறிந்து எழுதினாள். எனது எடையையும், என் உயரத்தையும் அளவிட்டாள். காய்ச்சல் உண்டா என்பதையும், பிறசர் உண்டா என்பதையும் உறுதிப் படுத்தினாள். எல்லாம் சரியாக உள்ளது என்ற போது அறுவைச் சிகிச்சைக்குத் தயாரான உடம்பு என மிகச் சந்தோசமாக இருந்தது.

ஒரு பிளாஸ்ரிக் பாக் தந்து ஒட்டுத் துணியுமற்று களைந்து விட்டு அவள் தந்த கவுணை அணியுமாறு ஓர் சிறு அறையைக் காட்டினாள். எல்லா உடுப்பையுமா என்றேன் நான் பரிதாபமாக.. அனைத்தையும் தான் ஆபரணங்கள் எதுவிருந்தாலும் அவற்றையும்… கைத்தொலைபேசியுட்பட அனைத்தையும்… அந்தப் பாக்கில் போடு என்று கண்டிப்பாக உத்தரவிட்டது அவள் குரல்.

அனைத்தும் களைந்து கவுணோடு வந்த என்னிடம் மிகுந்த சங்கோசம் இருந்தது.

ஆபரேசனுக்கு பிறகு அறிவிக்கவென என் மனைவியின் தொலைபேசி நம்பரை அவளிடம் வாங்கிவிட்டு அவளை வெளியே போகச் சொன்னாள். கண்ணீரோடு அவள் விடை பெற்றாகி விட்டாள்.

அத்தோடு எனக்கான அனைத்து வெளித்தொடர்புகளும் அறுந்தது போலிருந்தது. நேற்றிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை. வேண்டுமானால் ஒரு மிடறு தெளிந்த நீர் உட்கொள்ளலாம் என்றிருந்தார்கள். பசி வயிற்றைக் கிள்ளியது. அதைவிடப் பயம் பாத்ரூம் போக வைத்தது. ஆனால் எதுவும் வரவில்லை.

கையில் முன்னேற்பாடாக சேலைன் (Saline) ஏற நரம்பு கண்டு பிடித்துப் பெரிய ஊசியை என்னோடு இணைத்தாள் நேர்ஸ். அவள் தன் பெயரை எறின் என்றாள். உன் பெயர் என்றாள். என் கையை நீட்டினேன். அத்துணை நீண்ட பெயரை அவள் வாழ்க்கையில் பார்த்திருக்க மாட்டாள். நீ சீலைலங்காவோ என்றாள் சிரித்துக்கொண்டே.. அவள் வாயில் சிறிலங்கா என்பது நுழையவில்லை. சீலைலங்கா என்பதும் அந்நாட்டிற்குச் சரிபோலவே பட்டது எனக்கு. இப்படி நீண்ட பெயர்கள் அவர்களுக்குத் தான் இருக்கும். ஆனால் உன் பெயர் எல்லாவற்றையும் விட நீளம் என்றாள் பலரது பெயர் கண்ட அனுபவத்தில். நான் ஆம் என்றேன் வெட்கத்தோடு..உனக்கு 26 ஆங்கில எழுத்துகளும் பொருந்தி வரப் பெயர் வைத்த உன் தாய் தந்தைக்கு வாழ்த்துகள் என்றாள். இவள் வாழ்த்துகின்றாளா? தூற்றுகின்றாளா??

என்னைப் படுக்கையில் கிடத்தியாயிற்று. இன்னும் சிறு நிமிடங்களில் உன்னை ஆபரேசன் தியேட்டருக்குள் கொண்டு சென்று விடுவார்கள். குட்லக் என்ற படி அவள் போய் விட்டாள்.

கண்ணை மூடினால் கன நினைவுகள் வருகின்றன. குட் லக்கா அல்லது இது பாட் லக்கா??

ஒருவேளை இந்த ஆபரேசனில் இறந்து போய் விட்டால்….இதே வைத்திய சாலையில்தான் குணமடையலாம் என்று நம்பிக்கையோடு வந்த பல நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்றும், சிகிச்சை பலனின்றிக் கடந்த ஒரு வருடம் முன் பரிதாபகரமாக இறந்து போனார்கள். நம் உடலில், உணவில், தண்ணீர், வீடு என எல்லா இடத்திலும் உள்ள நமக்கு வேண்டிய நுண்ணிய பக்ரீரியா ஒரு சக்திவாய்ந்த கொலையாளியாக நம்மிடையே வந்து , நமது நிலையான வளர்ச்சி, நமது ஆரோக்கியம், நம் குழந்தைகள் மற்றும் நமது எதிர்காலத்தை அச்சுறுத்தியபடி சீரழித்துச் சிதைத்துப் போட்டபடி இன்னமும் இருக்கிறது என்பது எத்துணை அவலம்.

அவை நம்முடன் வாழ்கின்றன, நம்முடன் பயணிக்கின்றன. இன்னும், நமக்கு அவர்கள் தேவை, அவர்கள் இல்லாமல் நாம் வாழவும் முடியாது. பூமியில் பாக்டீரியாக்கள் நமக்கு முன்பே இருந்தன. அவை நம் உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு அவசியமானவை, ஆனால் அனைத்து பாக்டீரியாக்களும் நன்மை பயக்காது என்றெண்ணிய நாம் தான் முதன் முதலாக அதற்கெதிரான ஆபரேசனை, போரை அறிவித்தோம், நாங்கள் ஆண்டிபயாட்டிக் என்ற பெயரில் அதனைப் பெருமையுடன் கண்டுபிடித்தோம், ஆனால் எந்த ஆண்டிபயோடிக்கிற்கும் அடங்காமல் திமிறியது கொரோனாவால் உலகம். 2050 ஆம் ஆண்டளவில் மில்லியன்கணக்கான மக்கள் பாக்டீரியா எதிர்ப்பால் மேலும் இறக்கக்கூடும் என்றும், டிரில்லியன் கணக்கான பணம் அதற்காகச் செலவிடப்படும் என்றும் சொல்லி வருகின்றார்கள்.

ஒரு கண்ணிற்குத் தெரியாத பக்ரீரியாவிற்காக அத்தனை நாடுகளும் பதறியடித்து அத்தனை கடவுள்கள், மற்றும் நாம் நம்பிய அனைத்து நம்பிக்கைகளையும் கைவிட்டு வாழ வழியற்றிருந்த காலத்தில் நான் வாழ்ந்தேன் என்பதும் ஒரு கொடிய சரித்திரம் தான். நுண்ணுயிரிக்கு ஒழித்தோடிய மனிதர் இன்றைக்கு மறுபடியும் தானே பெரியவன் என்பதாக தலை நிமிரத் துடிக்கிறது.

இந்த அறைக்குள் எனைச் சூழப் பெரிதும், சிறுதுமான வயதுகளில் பல பேர் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் அறுவைச் சிகிச்சைக்காக காத்திருப்பவர்கள் தான். அவர்களைப் பார்க்கத் தெம்பு வருகிறது. எனக்கு நேர்எதிரே நான்கு அல்லது ஐந்து வயதுள்ள ஓர் அழகான சிறுமி கூட ஆபரேசனுக்கு வந்திருந்தாள். அவளுக்குத் தெரியாது தான் எதற்கு வந்திருக்கின்றாள் என.. அவள் நலமோடு திரும்ப வேண்டும் என் மனம் அவளிற்காக கடவுளை மன்றாடியது.

மானிட வாழ்க்கை மிக வில்லங்கமானது. எதுவும் எப்போதும் நடக்கலாம்.

இப்போது என்முறை…. கட்டிலோடு என்னை இழுத்துச் செல்கின்றார்கள். பல அறைகளைத் தாண்டி ஒரு மூலையறை. எனக்குப் பயம் பிடித்துக் கொள்கிறது. அங்கு நான்கு பேர் நின்றிருந்தார்கள். கொண்டு வந்த கட்டிலில் இருந்து சிறிய கட்டிலுக்கு மாற்றப் படுகின்றேன். மேலே ஆயிரம் விளக்குகள் பொருத்திய அழகான பெரிய பெரிய விளக்குகள். இந்த விளக்குகளின் கீழ் எத்தனை விளக்குகள் அணைந்தது, எத்தனை ஒளி பெற்றது என யாரறிவார் ?

என் கைகளை பிடித்துக் கட்டினார்கள். சிலுவையில் பிணைத்த யேசுவின் ஞாபகம் வந்தது.

உன் சேலைன் ஏற்றிய ஊசி நரம்புகளில் நன்றாக வேலை செய்யவில்லை. அதை இடம் மாற்றி வேறு நரம்பு கண்டுபிடித்து ஏற்ற வேண்டும் என்றார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் எதையும் கேட்பார்கள். நாம் இல்லையென்றால் விடவா போகின்றார்கள்? உனக்கு இரண்டு ஒப்சன் உண்டு. ஒன்று உன்னை முற்றிலுமாக மயக்கி இந்த சத்திர சிகிச்சை செய்வது. மற்றையது பாதி மயக்க நிலையில் நீ பார்க்கக் கூடியதாக அதனைச் செய்வது என்றாள். ஆனாலும் உன்னை முற்றிலும் மயக்கமாக anesthesia வைத்தலே சிறந்ததென்றாள் அங்கு நின்றிருந்த நேர்ஸ்.

சரி என்றேன் நான். இது உன்னை ஆழ்ந்த தூக்கத்தில் வைக்கும் , எனவே அறுவை சிகிச்சையின் போது உனக்கு வலி ஏற்படாது. உன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது உனக்குத் தெரியாது. இந்த மருந்தின் காரணமாக நீ அசைய மாட்டாய், வலியை உணர மாட்டாய் இந்த செயல்முறையின் நினைவாற்றல் எதுவும் உனக்குத் தெரியாது என்று அடுக்கிக் கொண்டே போனாள். . உண்மைதான் முள்ளிவாய்க்காலில் எத்தனை பேருக்கு இந்த மயக்கமருந்தேயில்லாமல் வெறும் காட்டு மணலில் துடிக்கத் துடிக்க ஆபரேசன்கள் நடந்து முடிந்தன. அவர்களில் பலர் கண்முன்னாலேயே பதைபதைத்து இறந்தார்கள். சிலர் இன்னமும் தப்பித்து வாழ்கின்றார்கள்.

நேர்ஸ் அயலில் நின்றவனைப் பார்த்து என் முகத்தினில் அந்த முக கவசத்தை அமுக்கு என்றாள். நன்றாக மூச்சை வாயினால் இழுத்து விடு என்கின்றாள் அவள். நான் மூச்சை இழுத்து விடுகின்றேன்.

அமுக்கிப் பிடித்தவனிடம் உனக்கு இதில் அனுபவம் உண்டா என்றாள். என்வாயில் அந்த முக கவசத்தை அமுக்கியபடியே இது இரண்டாம் தடவை என்றான் அவன். படிக்க வந்த மாணவன் எனப் பயந்தேன் நான். அது நீடிக்கவில்லை. என் மூச்சு அடங்குகிறது. அதற்குப் பிறகு நான் எதையும் கேட்கவில்லை.

“சித்தி வினாயகம் பிள்ளை” என்று ஆலமாவனம் சூழ்ந்த பிள்ளையார்கோவில் படியில் என்னைக் கிடத்தி என் பெயரை முன்னின்று வைத்த தாத்தா இராமநாதர் தான் என் மனதுள் நிற்கின்றார். இது ஆப்ரேசன் முடிந்த பிறகான மயக்கமா அல்லது ஆபரேசன் நடக்கும் போதானதா என்பது எனக்குத் தெரியாது. தாத்தாவைப் போல் எனக்குப் கடவுள் பக்தியும் இல்லை. அவர் பிள்ளையார் ஊர்வலம் போவதை வானத்தில் நிஜமாகவே கண்டதாக எனக்குக் கதை சொல்வதையும் நான் நம்பவில்லை. எனக்குத் தேவாரங்கள் பாடிப் பழக்கிய அவரின் முயற்சியும் தோற்றுப் போனது. வானத்தில் சந்திரனுக்காக ஓர் வாய் சோறு என்று அம்மா அன்போடு சோறூட்ட எனக்குச் சொல்வதைக் கூட நான் கேட்பவனல்ல.

நான் பிறந்த ஊர், வளர்ந்து பழகிய மனிதர்கள், படித்த நண்பர்கள், எனக்குச் சொந்தமென்றிருந்த சகோதரர்கள் கண்முன் வந்து போகின்றார்கள். எம் சொந்த நிலங்களின் ஒங்வொரு வளவிற்கும் ஒவ்வொரு பெயர். மொத்திப் பாலை, பாலையடித் தோம்பு, கொத்தன்தறை, நரியமுன்னி, முருக்கன்ஆலடி, வில்லூன்றி அத்தனை தோப்புகளுள்ளும் தென்னையும், பனையுமாய் நிறைந்து குடை விரிக்கும். ஊரிலுள்ள பல பேருக்கும் அந்தக் காணிகளில் பங்கிருக்கும். ஒவ்வொருவரும் சிறு கடகங்களோடு காலையில் கூடுவார்கள். விழுந்து கிடக்கும் பனங்காய்களை தங்கள் பங்கிற்கேற்ப பிரித்துக் கொள்வார்கள். ஊர் இப்படித்தான் உறவோடிருந்தது. மாடு சூப்பிய பனம் விதைகளையும் பிரிப்பார்கள். பாடசாலை வாசனையே அறியாத தாத்தா பனங்காய்களை பனை மரத்திலேயே வைத்து மதிப்பிடுவதில் வல்லவர்: படித்தவர்களான கணக்கிலே வல்லவர்களான ஐன்ஸ்டீனும் (Einstein), ஓபன்ஹெய்மரும் (Oppenheimer) அணுகுண்டை கண்டுபிடித்து அதைக் காவிச்சென்று ஹிரோசிமாவிலும், நாகசாகியிலும் போட்டுப் பேரழிவை விதைக்கச் செய்தவர்கள். ஆனால் எங்களூர் படிக்காத தாத்தாக்கள் உலகெங்கும் பனை, தென்னை விதைத்துப் பசுமையாக்கத் துடித்தவர்கள்.

அவர்களும் பூமியில் இன்றில்லை. பூமி நல்லவர்களை இழந்து கொண்டிருக்கின்றது. சிங்களப் படைகள் தமிழினத்தை நசுக்கவென போர் தொடுத்த போதெல்லாம் தமிழினம் இன உணர்வோடு அந்தச் சிங்களப் படைகளோடு மோதிய ஆபரேசன்களில் பலர் உயிரிழந்தார்கள். பலர் தங்களைத் தாங்களே கொன்றார்கள். சிலர் அரச ஒத்தூதியானார்கள். மீதிப்பேர் கண்காணாத் தேசமெங்கும் எங்கெங்கோ தொலைந்தோம்.

எம் முன்னோர் எமக்காய் சேர்த்த நிலங்களும் எமக்கு இனி இல்லை. எதையும் கேட்காது இளைஞனாக இருந்த பொழுதில் அகதியாய் தப்பி ஓடியோடிக் களைத்த என் கால்களில் இனியும் ஓட வலுவில்லை. நான் முதியவனாகிய பிறகும் அதே அகதிப் பெயரோடு அகதியான நாட்டு ஆஸ்பத்திரிக் கட்டிலில் விழுந்து கிடக்கின்றேன். இந்த ஆபரேசனுக்குத் தப்பினாலும் நாளை இன்னொரு ஆபரேசன் என்னைத் தின்று தீர்க்கும். என்னோடு எந்தச் சம்பந்தமுமில்லாத இந்தப் பனித் தரையுள் என் பாழுமுடல் அழிந்து படும். நேற்று முழு நாளும் கனடாவில் அரிதாக காணும் காகம் என் வீட்டில் இருந்து நெடு நேரம் கரைந்து கொண்டிருந்தது. ஒருவேளை என்னை மீட்கப் போராடும் மூதாதையர்களின் குரலா அது.

நேர்ஸ் என்னை உலுப்புகின்றாள். இலேசாக நான் கண்விழிக்கின்றேன். உனக்கு உடல் வெப்ப நிலை மிக குறைந்திருந்தது. எங்களைப் பயப்படுத்தி விட்டாய். இப்போ அனைத்தும் சீராகி விட்டது என்றாள் அவள் மகிழ்வோடு. என் தலையைத் தடவியபடியே கவனமாக உடம்பைப் பார்த்துக்கொள் என்று என் அருகில் ஒரு பெரிய மருந்து லிஸ்டை வைத்தாள். உன் மனைவியை அழைத்துள்ளோம். வந்தவுடன் வீடு போகலாம் என்றாள். நன்றி என்றேன் நான். நாம் உன் உயிரைக் காப்பாற்றவில்லை, நாம் அதை நீடித்துள்ளோம் . அறுவை சிகிச்சை நிபுணர்கள் அதைத்தான் செய்கிறார்கள் என்று சொல்லாமல் சொல்லிப் போனாள் நேர்ஸ். எனக்குப் பாதி ஏக்கமும், பாதி மகிழ்வும்…

நான் மறுபடியும் பிழைத்து விட்டேன்.

தாத்தாவின் கடவுளுக்குத் தோத்திரம்!

- மா.சித்திவினாயகம்

Pin It