"காலம் போன கடைசில இன்னுமா இது பத்தி பேசிட்டிருக்க.."

"காலம் போகுதா இல்லையான்னே தெரியலயே... அதான்...பேசிட்டேருக்கேன்"

மாநிற முகத்தில் தேநீர் சிவப்பு தாண்டவமாடியது.

வேம்பு எதை மறக்க வேண்டும் என்று நினைக்கிறாளோ அதை யாராவது எப்படியாவது எங்கேயாவது நினைவூட்டி தொலைத்து விடுகிறார்கள். பிறகு எங்கு சுற்றினாலும் எல்லா கோபமும் அம்மாகாரியிடம் தான் வந்து விடிகிறது.

அவளும் தான் என்ன செய்வாள். தன் நினைவில் இருந்த எல்லா குப்பைகளையும் அகற்றி பார்த்து விட்டாள். என்னென்னமோல்லாம் நினைவுக்கு வருகிறது. ஆனால் அவளுக்கு வேம்புவின் பிறந்த தேதி மட்டும் நினைவுக்கு வருவதேயில்லை.

அரற்றி பார்த்து அழுது பார்த்து... ஆங்கரித்து ஓங்கரித்து... "எனக்கு தெரியாதுடி... உங்கப்பன் இருந்தப்பவே கேட்டு தொலைச்சிருக்கணும்... நானும் விட்டுட்டேன். நீயும் விட்டுட்ட.... இப்ப வந்து புலம்பி ஒப்பாரி வெச்சா... என்னதான் பண்ணி தொலைய...."

தலையில் அடுப்பை வைத்துக் கொண்டு சமையலறையில் சாமி கும்பிட ஆரம்பித்து விட்டாள் அம்மா.

வர்ற வழில... ரோட்டுல நின்னு ஒரு இளசு கூட்டம் கேக் வெட்டி மூஞ்சில பூசி.. "ஹே.....ப்பீ பர்த்த்த் ட்டேய்......." என ராகம் போட்டு ராத்திரியை விடியலுக்கு இழுக்கும் காட்சியைப் பார்த்த பிறகு தான் வயிறு பற்றிக் கொண்டு வந்தது வேம்புவுக்கு.

வேலை செய்யும் கம்பெனியில்... வேலைக்கு சேரும் போது கூட முதலில் தடுமாறி... பிறகு பொய்யான ஒரு தேதியை சொல்லியது முதல்.. எங்கெல்லாம்.. பிறந்த நாளுக்கான தேவையை சந்திக்கிறாளோ... அங்கெல்லாம் ஒரு வாயில்லா பூச்சியை போல ஊர்ந்து கொண்டிருப்பாள். அன்று முழுக்க சோறு இறங்காது. யாரிடம் சொன்னாலும்.. இது ஒரு மேட்டரா என்பார்கள். யாருக்கு பொறந்தோம்னே தெரியாத எத்தனையோ உயிர்கள் இங்க இருக்கு... பிறந்த தேதிதான தெரியல... விடு பாத்துக்கலாம் என்று யுத்தன் போன்ற நண்பர்கள் தத்துவம் பேசுகையில்... தக்காளி சோற்றை பிசைந்து மூஞ்சியில் அடிக்கத் தோன்றும்.

கரகரவென கண்ணீர் வந்தாலும்... கூடவே பரபரவென உள்ளே ஒரு பக்க வாத்தியம் பைத்தியம் தீர்க்க மருந்து இருக்கிறது என்றது.

எழுந்தாள். தலையை வாரி கொண்டையிட்டாள்.

"ஊருக்கே பெரிய மனுஷன் ராயப்பன் பெரிப்பா தான். சுதந்திர போராட்ட நினைப்பையெல்லாம் அப்பப்போ கிணத்து மேட்டுல போட்டு தாளிக்குமே. அதுக்கு கண்டிப்பா நினைப்பிருக்கும். இத்தனை நாள் இந்த யோசனை வராம போச்சே..."

நினைத்துக் கொண்டே வேகமாய் கிளம்பி அடுத்த ரெண்டாவது நிமிடத்தில் ராயப்ப பெரிப்பா வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தாள்.

"என்ன சாமி திடுதிப்புனு... கம்பேனில வேல கொறைஞ்சிடுச்சா... ஒரு சிப்ட்லயே வந்துட்ட மாரிருக்கு..." - மீசையை முறுக்கிக் கொண்டு சந்திரிகா பீடியை இழுத்தபடியே தொடை வரை தூக்கி இறுக்கி கட்டிய... அழுக்கேறிய வேட்டியோடு அப்படியே சுவரோரம் சரிந்து குத்த வைத்து அமர்ந்தார் பெரிப்பா.

எங்கோ வெறித்திருந்த வேம்பு நேராக விஷயத்துக்கு வந்தாள்.

"பெரிப்பா... என் பொறந்த தேதி உனக்கு நினைப்பிருக்கா...."

தேங்காய் மட்டையை உரித்துக் கொண்டிருந்த பெரியம்மா...சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பி பார்த்துவிட்டு.... தனக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பது போல திரும்பி கொண்டாள்.

கடலக் காட்டுல வெச்சு.... கேட்டு... பதில் தெரியாம... பேந்த பேந்த முழிச்ச பெரியம்மாவை.... "நான் காண பொறந்தவ....நான் காண குத்த வெச்சவ... நான் காண கொழந்த பெத்தவன்னு வாய் கிழிய பேச தெரியுதுல.. என் பொறந்த தேதியை நினைப்பு வெச்சுக்க தெரியலயா.... நீ எல்லாம் பெரிய மனுசி.... த்தூ..."

கொடூர பின் மதிய ஒத்த பனை சாட்சி... அந்த காட்சி மீண்டும் மண்டைக்குள் துப்பியிருக்க வேண்டும். திரும்பிய பெரியம்மா... கழுத்தில் விழுந்த எறும்பு கடிக்கு கூட மீண்டும் இந்த பக்கம் திரும்பவே இல்லை.

"அது கண்ணு... நீ பொறந்தன்னைக்கு அப்பிடி ஒரு மலை... இந்தூர்ல அந்த மாரி ஒரு மலைய நான் பாத்ததுல்ல. உங்கப்பன் குன்னத்தூர்க்கு ஒரு சோலியா போய்ட்டான்... உங்க ஆத்தாளுக்கு திடுதிப்புனு வயித்த வலி வந்துருச்சு.. அந்த நிமிசமே வண்டி புடிச்சு...."

"பெரிப்பா.. இந்த கதை எல்லாம் எனக்கு தெரியும்... அந்த பெரிய மழைல... நீங்க வண்டி புடிச்சு எங்கம்மாவை தூக்கிட்டு போனீங்க. கோபி ஆஸ்பத்திரில சேர்த்தீங்க... அடுத்த அரை மணி நேரத்துல நான் பொறந்தேன். எங்கம்மாவே சொல்லி இருக்கு. அதெல்லாம் சரி... நான் கேக்குறது... நான் பொறந்த அந்த தேதி என்னன்னு சொல்லு... அவளோ தான்..."- வேம்புவின் கண்களில் பிரசவ வேதனை.

அடுத்து வேகமாய் சென்று அமர்ந்த இடம் கருப்பசாமி மாமா வீட்டு திண்ணை. அருக்காணி அத்தைக்கு விஷயம் தெரியும். எப்பவாவது எவனாவது ரோட்ல... பஸ் ஸ்டேண்ட்ல.... சினிமா கொட்டாய்ல... கூட வேலை செய்யற சேக்காளிங்க... இப்பிடி பொறந்த நாள் கொண்டாட்டம்.... அது இதுனு வெறி ஏத்தி விட்ருவானுங்க. இவ வீட்டுக்கு வந்து சாமியாட்டம் ஆடுவா. வம்பு வேண்டாம் சாமி...

உள்ள படுத்திருந்தவ அப்படியே கண்ண மூடி தூங்கிட்டா.

"என்ன.... பொண்ணு... இப்ப வேலை திருப்புருலயா.....இல்ல அவிநாசிலயா... திருப்பூர்ல அடிக்கடி வேலை இல்லாம போயிடுதுல்லயா..... ஜனங்க என்ன தான் பண்ணுங்க...இப்பிடி ஆனா..."

குறுக்கிட்ட வேம்பு... சூரிய காம்பாய் கக்கினாள்.

"ஜனங்களாம் இருக்கட்டும்... நான் அக்டோபர் மாசம் பொறந்தேன்னு நீ தான சொல்லி இருக்க..."

"ஆமா அதுலென்ன...."

"அதுல ஒண்ணுமில்ல.. ஆனா அதுல... நான் பொறந்த தேதிய... நினைப்பு வரும் போது சொல்றேன்னு சொன்னீல.."

"ஆம்மா.... சொன்னேன்...."

"நினைப்பு வந்துச்சா...?"

குடித்த கால் வாசி பிராந்தி.... கன்னத்தில் வியர்வையாய் வழிய ஆரம்பித்து விட்டது. நன்றாக முகம் பார்க்க எங்கிருந்தோ வந்து அப்பியது... இனம் புரியாத தடுமாற்றம். பின் மண்டை வழுக்கையை அனிச்சையாய் தடவிக் கொண்டே...." அது சாமி... பத்தாம் தேதியா.. பதினஞ்சா.....ன்னு ஒரு சந்தேகம். இன்னொன்னு.... அது செப்டம்பரானு கூட ஒரு சந்தேகம் இருக்கு.. அதான் கொஞ்சம் குலப்பம்....." - அவர் தெளிவதற்கே என்னென்னவோ குழப்பம் தேவைப்பட்டது.

எதிரே இருந்த மண் பானையைத் தூக்கி தலையில் அடிக்கலாம் போல தோன்றியது.

"ஊரு நியாயம் சொல்றதுன்னா மொத ஆளா போயி நின்னுக்கறது... பஞ்சாயத்துனா ட்ரவுசர் தெரியற மாதிரி வேட்டிய மடிச்சு கட்டிட்டு மொக்க போடறது.. ஆனா சொந்த மருமக புள்ளையோட பொறந்த தேதியை நினைவு வச்சு சொல்ல தெரியல.. நீல்லாம் பெரிய மனுசன்னு... சீக்கிரம் செத்து தொலை..."

கத்தி விட்டு நகர்ந்தவள்... இருப்பதிலேயே.... நரை கூடிய ஊர் பெருசு.. கிழவி ரத்னம் வீட்டு வாசலில் நிற்கவும் முடியாமல் அமரவும் முடியாமல்.... வந்த கண்ணீரை வழிய விட்டு... வானம் பார்த்து சரிந்து திண்ணையில் சாய்ந்து நின்றாள்.

"திரும்பற பக்கமெல்லாம் தினம் தினம் பொறந்த நாள் தான். யாரோ யாருக்கோ வாழ்த்து சொல்லிட்டே தான இருக்காங்க. நான் என்ன பாவம் பண்ணேன். எந்த நாள்ல பொறந்தேன்னு கூட தெரியாமருக்கறது எவ்ளோ பெரிய அவமானம் தெரியுமா. என் அக்கா ரெண்டு பேரோட பொறந்தநாளும் தெரிஞ்சிருக்கு. தம்பி பொறந்தநாளு தெரிஞ்சிருக்கு. இடைல என்ன மட்டும் ஏன் விட்டாங்க. ரெண்டாங்கிளாஸ் தாண்டி படிக்கவும் வைக்கல. பேர் கூட எழுத தெரிய மாட்டேங்குது. எவ்ளோ தற்குறியா இருக்கேன்.. மானம் போகுது. வரிசையா புள்ளைய பெத்துக்க மறந்தாங்களா... அதெல்லாம் கரெக்டா செய்ய தெரியுதுல. பெத்த புள்ள பொறந்தநாள ஞாபகம் வெச்சுக்க தெரியலயா... அப்டியே அருவா எடுத்து ஒவ்வருத்ரயா வெட்டி போடணும்...."

வேம்பு அழ ஆரம்பித்து விட்டாள். ஆற்றாமைக்காரிகளின் ஆயுதம் அழுகையைத் தவிர வேறென்ன.

"சாகற நாள் தெரிய கூடாது. ஆனா பொறந்த நாள் தெரியணும் தானே ஆத்தா... இந்த ப்பேஸ்புக்குகாரன் கூட என் பொறந்த நாளை தெரியலங்கறான்... என்ன பண்ண. நானே வெச்சுக்கிட்ட பொறந்த நாளை எனக்கே புடிக்கல. அதை மத்தவங்ககிட்ட சொல்லும் போதெல்லாம் உள்ள என்னவோ குத்துது. இதை எப்பிடி சொல்லி புரிய வைக்கறது. உங்க எல்லாருக்கும் இது போற போக்குல வந்து போற ஒரு விஷயம். ஆனா எனக்கு இது என் மனசோட ஒட்டிக்கிட்டுருக்கற சொமை. ஒரு பொறந்த நாளை நினைப்பு வெச்சுக்க பெத்தவங்களுக்கும் தெரியல. சொந்தக்காரங்களுக்கும் துப்பில்ல. இதுல வீர வசனம் எல்லாம் பேசறீங்க... நேரு பொறந்த நாளல்லாம் நினைவு வெச்சிருக்கீங்க... என் பொறந்த நாளை மறந்துட்டீங்க..."

எந்த கேள்விக்கும் எந்த அரட்டலுக்கும் எந்த புலம்பலுக்கும் கிழவியிடம் பதில் இல்லை. இருந்தாலும் அது இல்லை தான். சாகும் நாளுக்கான காத்திருப்பில்... வாழும் நாளே மறந்து போன கிழவி விதி அது. அமர்ந்து மயிர் கோதி கொண்டு வெள்ளை அருவி என கொட்டி கிடக்கும் தலை மயிரை சிக்கெடுத்து கொண்டிருந்தது.

விடியல் தன் கடமையைச் செய்தது.

ஓய்ந்த நிலவொளியைப் போல.. அந்த விடிகாலை நேரம் அவசரமாய் தன்னை பிரசவித்து கொண்டிருந்தது. முழு இரவும் ஊரெல்லாம் அலைந்து திரிந்தது தான் மிச்சம். துளி தூக்கமில்லை. அது தான் துக்கத்துக்கு தேவை.

போன மாதம்.... படித்த பள்ளிக்கு சென்று டிசி கேட்டு பார்த்து... "நடந்த திருட்டில்... ஒரு டிசி கட்டே காணாமல் போனதில் உன்னுதும் சேத்து தான்...!" என்று கிடைத்த பதில்... ஐயோவென தலையில் அடித்துக் கொண்டு அழ வைத்தது. நினைத்தாலே அழுகை மூட்டும் நினைவு.

கால் போன போக்கில் நடந்தவள்.. ஊர்க்கோடிக்கு வந்துவிட்டிருந்தாள்.

கல்லா குழி அதிகாலை சிலு சிலுப்பில் அமைதியாய் மினுங்கிக் கொண்டிருந்தது. எப்போதெல்லாம் தனிமை தேவையோ.. எப்போதெல்லாம் அழுகை வேண்டாமோ... அப்போதெல்லாம் இங்கு அந்த அய்யனாருக்கு அடியே இருக்கும் மர நிழலில் அமர்ந்து விடுவது வழக்கம். அமர்ந்துவிட்டாள். குத்த வைத்து மரத்தோடு முதுகொட்டி சரிந்தவள் முன்.... அதிகாலை பறவை பட்சிகள் பறந்தோடுவதும்... நீல வானம் நித்திரை களைந்து சோம்பல் முறிப்பது போல மேகத்தை அசைத்து மேக்கப் போடுவதுமாக... பார்க்கவே.... என்னவோ சுமை இறங்கியது போல. காணும் கண்கள் வழியே பரவும் குளுமைக்குள் தலையை முக்கும் நினைப்பு நன்றாக இருந்தது.

கல்லா குழி என்பது பாறை உடைத்து உடைத்து தேங்கிய குழியில் நீர் சூடி குளமாகும் சூட்சுமம்.

நீச்சலும் பழக்கும். நீச்சல் மறந்தவர்களுக்கு மரணிக்கவும் பழக்கும்.

உள்ளே விழுந்த வேம்புவுக்கு பேச்செல்லாம் மூச்சு தான். குடிக்க குடிக்க தீர்வேனா என்கிறது கல் சூழ்ந்த குளத்து நீர். சுழன்று தத்தளித்ததில் மண்டை முட்டிக் கொண்ட பக்கவாட்டில் முதுகு பெயர்ந்த பாறையும்... பாசம் பிடித்த பச்சையும். தபக் தபக் என முங்கி முங்கி.... எழுந்து எழுந்து.... முங்கி எழுந்து... முங்கி எழுந்து....இதோ இனி முங்குவது தான் சரி என்று இயலாத உடல் ஒரு முடிவுக்கு வருகையில்... கொத்து மயிரைப் பற்றி... கொத்தாக தூக்கிய முருகேசன்... ஒரு சின்ன வயசு அய்யனார் என்றால் சரி தான்.

பேச்சு மூச்சில்லாமல் கிடந்த வேம்புவை பாறையில் போட்டு வயிற்றை அழுத்தி... நெஞ்சை குத்தி... அதற்குள் அந்த பக்கம் துணி துவைத்துக் கொண்டிருந்த அண்ணன்மார்கள் அக்காமார்கள் ஓடி வந்து மாட்டு வண்டி சக்கரத்தில் படுக்க வைத்து சுத்தி...

நீருக்குள் நீண்ட நேரம் போராடி... மூச்சு விட கிடைத்த இடைவெளியில்.. ஆவ் ஆவ் என ஒரு பிசாசை போல மூச்சை குடித்த வேம்புவுக்கு நீருக்கு மேல் இருக்கும் உலகம் எத்தனை ஆதுர்யமானது என்று அப்போதே புரிந்தது.

அதே போல தான் இப்போதும் மூச்சு விட்டாள்.

காலம் எத்தனை ஓடினாலும்... இப்போது நடந்த மாதிரி இருக்கிறது.

அந்த குளம் எதுவும் தெரியாது போலவும் எல்லாம் தெரியும் போலவும் சலனமற்று கிடந்தது. எல்லாவற்றுக்கும் அது தான் சாட்சி போல எங்கிருந்தும் வந்த நாரை ஒன்று அந்த குளக்கரையில்.. நின்று... நிதானித்து டபக் டபக் என நடப்பது அத்தனை அழகு. அது வேம்புவுக்கு எதையோ நினைவூட்டியது. கண்களில் ஒரு பளிச். காதுகளில் ஒரு படபடப்பு. இருந்த கிறுக்குத்தனங்கள் எல்லாம் நொடியில் வெண்மையாகி காற்றில் பறப்பது போல ஓர் எண்ணம். நினைப்பில் ஒரு தெளிவு.

மூழ்கிக்கொண்டிருந்த குளத்துக்குள்ளிருந்து எழும்பி விட அவளுக்கு.... கையில் ஒரு நாரையின் இறகு முளைத்தது போல ஒரு நம்பிக்கை.

பட்டென எழுந்து நின்று... திரும்பி அய்யனாரை கூர்ந்து பார்த்தாள். இன்று அய்யனாரும் கூர்ந்து பார்ப்பது போல இருந்தது. அவளுக்கு விளங்கி விட்டது. அவள் விடுகதைக்கு விடை கிடைத்து விட்டது.

குளத்தில் மூழ்கி.... தான் தப்பி பிழைத்ததற்கு.... அய்யனார் கையில் இருக்கும் கத்தியை அப்பா இனாமாக கோவிலுக்கு படைத்தது நினைவில் நாக்கு துருத்தியது. ஆனால் அது முக்கியம் அல்ல. அதில் உபாயம் என்று அப்பா பேர் எழுதி.... தேதியும் எழுதி இருந்தது தான் இப்போது முக்கியம். மனக்கண் முன் வந்து போனது பெயரும் நாளும். இதோ இப்போதும் கண்கூடாக சிறு எழுத்தில் சித்திரம் போல தெரிகிறது.

கண் கலங்க புண் முறுவல் அவள் முகத்தில் அனிச்சையாய் வழிந்தது. உள்ளே ஒரு சுழற்சி. அல்லது புரட்சி. என்னவோ ஒரு உற்சாகம். அவள் முடிவெடுத்து விட்டாள். சாவின் விளிம்பு வரை சென்று பிழைத்த அந்த தேதி தான் இனி தன் பிறந்த நாள்.

அய்யனார் ஆமோதித்தது போல தான் தெரிந்தது. அவர் கையில் வீரமாய் வீற்றிருந்த அருவாவும் கழுத்து வளைந்து ஆம் என்பதாகத்தான் இருந்தது.

அய்யனாரை கை எடுத்து கும்பிட்டு கண்ணீர் மல்க பார்த்தாள்.

"ஆமாம்.... இனி... தன் பிறந்த நாள் 20.10.1985 தான்..."

கணவன் முருகேசன் கல்லா குழி ஒற்றையடியில் வேம்புவைத் தேடிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறான்.

- கவிஜி

Pin It