அத்தியாயம்-3

போர் என்ற சொல்லே பேரிரைச்சலாகக் கேட்க, போரைப் பழகிய மனித இனம் தலைதெறிக்க ஓடின. வழி எது? வரப்பு எது? வாய்க்கால் எது? எனத் தெரியாமல் குருட்டாம் போக்கில் ஓடிக்கொண்டே இருந்தன. மக்களின் தொகை ஆயிரமாயிரமாக குறைந்திருக்குமோ என்றவொரு அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது அந்த ஓட்டம்.

எங்கே ஓடுகிறார்கள்? நேரமாக நேரமாக, ஓட்டத்தை எங்கிருந்து தொடங்கினோம் என்று அவர்களாலேயே கண்டுபிடிக்க முடியாதிருந்தது. அவர்களது ஓட்டத்தின் தன்மையை உற்று நோக்கினால் பலநூறு ஆண்டுகளாக சளைக்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு நீர்வீழ்ச்சியானது ஆற்று அமைப்பிற்கு மாறின பின்பு, தன் ஓட்டத்தில் ஒரு சீரான நிதானம் தெரிய உணருமே, அதுபோல் இருந்தது. அந்த நீர் நிலைகளிலிருந்து வெப்பத்தினால் மேலெழும்பி மிதக்கும் மேகங்களாக... எப்போது உருமாறி, ஒவ்வொரு மாற்றத்தையும் எங்கே எப்போது தொடங்கி, எதை நோக்கிச் செல்கிறோம் என்பதறியாமல் ஓடிக்கொண்டே இருப்பவர்களாக இருக்கிறார்கள். ஓடிக்கொண்டே இருக்க அவர்களுக்கு பிடித்திருக்கிறதோ என்னவோ, ஓட்டத்தின் போது சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படும் மூச்சிரைப்பு அவர்களிடம் இல்லை. ஓடும்போது உடல் நரம்புகளெல்லாம் புடைத்துக்கொண்டு அசுரமாக அங்குமிங்கும் ஏறிஇறங்குவதுகூட அவர்களிடம் ஏற்படவில்லை. நடப்பவர்கள் ஓடுகிறார்கள் அவ்வளவுதான் என்பதாக இருந்தது, ஆச்சர்யம். அப்படியானல் ஓடுவது பயத்தின் காரணமில்லையா? ஓடுவது நடப்பதிலிருந்து ஏற்பட்ட ஒரு பயத்தின் பாய்ச்சல் என்று ஏற்றுக்கொள்ளலாமா? அதுவும் சரியானதாக இல்லை. முன்பு நடப்பதிலிருந்து அசதியைப் போக்கிக்கொள்ள உட்கார்ந்தார்கள். இப்போது ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டத்தின் போது அசதியைப் போக்கிக் கொள்ள நடப்பார்களா? அப்படி எதுவும் நடக்கவில்லை.

அவர்கள் நடக்கவேயில்லை ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். ஒருவேளை நடந்தபோது எங்கும் உட்கார்ந்திருக்க மாட்டார்களோ? அதிசயமாக இருந்தது இந்த மனிதப் பிறவிகளின் ஓட்டம். இவர்களின் இந்தச் செய்கையில் ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா? உற்றுத்தான் பார்க்கவேண்டும். மாற்றமில்லாததாது எதுவுமில்லை. மாறிக்கொண்டே இருக்க பணிக்கப்பட்டதுதான் புலன்களுக்கு புலப்படுகிறது. மாற்றமில்லாததை புலன்களால் அடையாளம் காணமுடியாது. அதனால் இங்கேயும் மாற்றம் ஏற்பட்டது. புலன்கள் அதை உற்றுநோக்கியோ அல்லது தன் இயல்பான படிப்பினையிலிருந்து விடுபட்டோ கண்டுகொண்டது.

அவர்களிடம் மாற்றம் இருந்தது. ஓட்டத்தின் போது உடலில் உள்ள அனைத்தையும் மெல்ல மெல்ல உதறிக்கொண்டே போய்க்கொண்டிருந்தார்கள். முதலில் தம் உடைகளை. அதற்கும் முன்பாக உடைகளிலிருந்து அழுக்குகளை. அதற்கும் முன்பாக உடைகளோடு தொடர்புடைய அனைத்தையும். பின், கொஞ்சம் கொஞ்சமாக உடையை நூல் நூலாக இழந்து இறுதியில் முற்றிலுமாக தோலைப் போர்த்தியிருந்த அனைத்தையும் இழந்தார்கள். பின் சதைகளை இழந்தார்கள். அதன்பின் எலும்புக்கூடுகளை என ஒவ்வொன்றாக உதறிவிட்டு காற்றோடு காற்றாக ஓடிக்கொண்டிருந்தவர்களை ‘அங்கே...., அங்கே ஓடுகிறார்கள்’ என்று அடையாளம் காட்டிக்கொண்டிருந்த அவர்களைப் பற்றியான எல்லா எண்ணங்களும் சடக்கென அறுபட்டதும், யார் கண்ணுக்கும் தெரியாமல் அணுக்களாகி, அவர்களுக்கு மட்டும் தெரிபவர்களாக ஓடினார்கள். ஓட்டம் நிற்கவில்லை. ஒட்டம் தொடர்கிறது.

அணுவணுகாக பிரிந்து அந்த ரிமிந்தக நாட்டின் காற்றுமண்டலம் முழுவதுமாக அடைத்துக்கொண்டு எல்லா உயிரினங்களின் அசைவையும் ஆட்டிப் படைத்தார்கள் தமது காற்றோட்டத்தினால். காற்றாக ஓடிக்கொண்டு.
பேய்க்காற்று, ஊதக்காற்று, அனல் காற்று என வகைவகையான காற்றுகளென அவதாரம் எடுத்து ரிமிந்தகத்தினைச் சுற்றி சுற்றி அடித்து அலங்கோலப்படுத்தினார்கள். அரண்மனைக்குள் கதவைத் தாளிட்டுக்கொண்டு சாவித் துவாரத்தின் வழியாக இந்த கூத்தைக் கவனித்துக் கொண்டிருந்த ரிமிந்தகன் தன் இருதயத்தை நகங்களால் வறுக் வறுக்கென கீறும் வரை.

Fighting people இருதயம் கீறப்பட அதன் குருதியானது கதவிடுக்கின் வழியாக வழிந்து வெளியே சிறுவோடையாக வெளியேற அதை முதலில் உணர்ந்ததும், அவனுக்கு அவனது அன்யோன்யமான நபர்களின் காற்றானது முதலில் அடிபணிந்தது. அது தன் ஆளுமையை தன்னோடு தொடர்புடைய காற்றுத் துகள்களுக்குச் செலுத்த, அவை ஒன்றபின் ஒன்றாக ரிமிந்தகனின் மீதான கரிசனத்தைப் பெறத் தொடங்கி உருகி, நீர் பூத்து, குளிர்ந்து இறுகி, மறுஉரு பெற்று, மீண்டும் தன் இயல்பான மனித உருவைப் பெற்ற தோல்வியால் மனக் கணம் அடைந்து, கண்மூடி தத்தமது அண்டுமிடம் நோக்கிச் செல்ல கால்களுக்கு கட்டளை பிறப்பித்து சவமாக நகர்ந்து கலைந்தன, அனைத்தும். இருள் சூழ்ந்தது நாட்டை. ரிமிந்தகன் கதவிற்குப்பின் கையில் இறுக்கி வைத்திருந்த ஆட்டின் இருதயத்தை வெளிக்காட்டாமல் கதவின் துவாரத்தை சுண்டுவிரலால் மூடியபடியே இரவு முழுவதையும் கழித்தான்.

உடல், காற்றாகி மீண்டும் உடலுக்குள் உறைவிடம் தேடி ஓடிவந்துவிட்ட அனைவரும் வீடு நோக்கிச் சென்ற பின்னும் காற்றில் உயிர் இருந்தது. அதிலுள்ள ஒவ்வொரு அணுவின் கண்களும் சிவப்பேறி கனன்று கொண்டிருக்க, ஒன்றோடு ஒன்று தோள் மேல் தோள் கைப்போட்டுக்கொண்டு,

“இன்றொரு நாளா நான் என்னை விட்டுப்போனேன்.
என்றென்றும் நான் எனது அழிவினைப் பார்க்கிறேனே!
எத்தனைக் காலம் இந்தக்கொடுமையை நீடிக்க
இப்படியொரு பிறப்பை நான் எடுத்திருக்கிறேன்?
யாரிடம் கேட்பது?
யாரிதற்குப் பதிலளிப்பது?
நானே இதற்கான கேள்வியா?
நானே இதற்கான பதிலா?
இந்த சோகத்தின் விளிம்பின் மையம் எது?
பரிமாணம் வளர்ச்சியடைந்தது என்வரைக்கும் என்றால்,
பரிமாணத்தை அழித்துவருகிறோம் எங்களிலிருந்து.
அடுத்து என்ன?
முன்புதான் என்ன?
முன்னே போனால் பின்னே எப்படி செல்வது?
பின்னே போனால் முன்னே எப்படி என்றுத் தெரிந்துகொள்வது?
தெரிவதால் என்ன ஆகும்?
தெரியாததால் என்ன ஆகும்?
யாரிடம் நான் கேள்வி கேட்கிறேன்?
பேசுகிறேனே. இந்தப்பேச்சு யாருக்கு?
யாரிடம் நான் யாசிக்கிறேன்?
யாரை நான் நம்புகிறேன்?
ஏன் என்னை நம்ப மறுக்கிறேன்?
என் குற்றம் என்னை பேசாதிருக்கச் செய்கிறதா?
என்ன குற்றம் செய்தேன்?
மனிதனாகப் பிறந்தா?
ஐயோ! வலிக்கிறதே!
இந்த யோசனை வலிக்கிறதே!
யோசனையை அற்றுவிட்டு இந்தக் காற்றில் அப்படியே அலைந்து கொண்டே இருக்கவா? என் மூதாதையரின் இறந்த ஆவிகளுடன்.”

இப்படியாக அணுக்கள் ஒன்றோடு ஒன்று கட்டியணைத்துக் கொண்டு ஒப்பாரி வைக்க, கதவிடுக்குகளில் இருந்து கவனித்துக் கொண்டிருக்கும் ரிமிந்தகனும் மனக்கணத்தால் சிலையானான்.

பிறப்பிலிருந்து இதுவரையிலான அனைத்து செயல்களும் போரினால் ஏற்படும் மாற்றங்களே என வாழ்ககையை போரோடு போராடும் நாட்களைத் தள்ளும் இயல்பு, என்பதை அனைவரும் அறிந்திருந்தாலும், அனைவருக்கும் இதுதான் இயல்பென்பது தெளிவாகத் தெரிந்திருந்தாலும், நடைமுறையில் அனுபவித்திருந்தாலும், ஒவ்வொருமுறை ஒவ்வொரு மாற்றத்தையும் அவர்கள் சந்திக்கும் போது ஏற்படும் மனவேதனையையும் பிறப்பைப் பற்றியான வெறுப்பும் அதிகரிக்கத்தான் செய்தது. ‘வாழ்க்கையின் மீது பிடிப்பற்றத் தன்மை ஏற்பட்டுவிடுமோ’, என்ற பயமும் அவர்களை தொடர்ந்து பின் தொடர்ந்துகொண்டே இருந்தது. இந்த முறை இந்த போர் அறிவிப்பானது அவர்களை மிகவும் சஞ்சலப்படுத்தி வேதனையை முன்கூட்டியே, அதாவது எதிரியின் வேலைப் பார்க்கும் முன்பே அது அவர்களின் மார்புகளைத் தைத்து முதுகில் நீளுவதற்கு முன்பே அனைவரும் அந்த வலியை முன்னுணர்ந்தார்கள். வீடுகளுக்குள் மறைந்துகொண்டவர்கள் பாதிபேர் என்றால் வீதியில் கும்பல் கும்பலாக கூடிநின்று பேசிக்கொண்டிருந்தவர்கள் பாதிபேர்.

வீடுகளுக்குள் தம் பெண்டாட்டிப் பிள்ளைக்குட்டிகளை ஒன்றிணைத்து அணைத்துக்கொண்டு தம் இதுவரையிலான போர்களைப்பற்றி எல்லாம் சொல்லத் தொடங்குகிறார்கள். அவர்களது போரின் போது அவர்களது வாழ்க்கையின் தேவைக்குத் தகுந்தாற்போன்று எதிரிகளின் எண்ணிக்கையும் எதிரியின் கோபமும் இருந்ததை வெளிப்படுத்துகிறார்கள், போரையே இதுவரைப் பார்த்திராத குழந்தைகள் அவர்களை மாயமந்திரக்கதைகள் சொல்பவர்களாக உருண்ட விழிகளினூடாக உள்ளுக்குள் சந்தோசமாகக் கேட்டார்கள். மனைவிமார்கள் மூளிகளின் வாழ்க்கைத் துயரங்களையெல்லாம் ஒருமுறை ஞாபகப்படுத்திக்கொண்டு கண்ணீர் மல்க கதைசொல்லும் கணவன்மார்களை பரிதாபமாகப் பார்க்கிறார்கள். அங்கே இங்கே ஓடிக்கொண்டிருந்த எலிகளும் பூனைகளும் வாசல் சுவற்றில் முதுகைத் தேய்த்தபடி ஒண்டிக்கொண்டு கதைகேட்ட ஆடுகளும் மாடுகளும் கூட அந்த கதையினால் மிகவும் விசனமடைந்தன. கதைகேட்டுக்கொண்டிருந்த சிலர் கதையிலிருந்து விலகி அவர்கள் அந்தக் கதையிலிருந்து விடுவித்துக்கொண்டப் பகுதியிலிருந்து தம் எண்ணத்தில் உதித்தக் காட்சிகளைத் தொடர்ந்து அவற்றை அவர்களது கதைகளாக்கி அக்கதைக்காட்சிகளுள் சஞ்சாரிக்கத் தொடங்கினர்.

அப்படியான ஒரு கதையில்,

“ஒரு ராஜகுமரனை காப்பாற்றும் பொருட்டு அவனது தாயார் ராஜகுமாரனை ஒரு பெரிய காய்கறிக்கூடையில் போட்டு மூடி போர்த்துறைக்கு அனுப்புவதுபோல் அனுப்பி அங்கிருந்து வேறொரு திசைக்காக அந்த மூட்டையை களவாடிச்செல்வது போல் சிலரைக் களவாடச் செய்யச் சொல்லி அடர்ந்த ஒரு காட்டில் மூட்டையின் கழுத்தைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டு, கொண்டுசென்ற அனைவரும் அவனுடன் அந்த காட்டிலேயே சில காலம் வாழ ஏதுவாக எல்லாவற்றையும் செய்தாள். அங்கே அந்த ராஜகுமாரனுக்கு மீசை முளைத்து, தாடி வளர்ந்து கைகால்கள் பெருத்து மார்பும் விரிந்து ஒரு மாபெரும் வீரனாக, அதாவது மிருகங்களிடமிருந்து தப்பிப்பிக்கும் பொருட்டு அவற்றோடு அவன் போட்ட சண்டைகளில் வெற்றிகண்டு உயிரோடு வாழ்வதினால் ஏற்பட்ட பலத்தை, அவன் மீண்டும் தன் தாயைக் கண்டாலும் அவளால் அவனை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போகும்படி இருந்தது.

அப்படியொரு நிலையில் போர் நின்றுபோனதாக தவறான செய்திகள் எல்லா இடங்களுக்கும் பரவச்செய்த அந்த வீரனின் தந்தையை எதிர்த்தவன், தொடர்ந்து அவனது தந்தையை வேட்டையாடினான். தந்தையின் வீரர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. இதுதெரியாத அந்த வீரனோடு வந்த காவலர்கள் ‘போர்தான் முடிந்துவிட்டதே’ என அவனை அவனது தாயிடம் ஒப்படைக்க..., மீண்டும் அவனை பழைய மூட்டையிலேயே போட்டுக்கட்டிக்கொண்டு திரும்புகிறார்கள். அவர்கள் அவ்வாறு திரும்புபோது வழியில் போர் நடக்கும் ஓலம் கேட்டதும் பயந்தடித்துக்கொண்டு தத்தமது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மூட்டையை அங்கேயே விட்டுவிட்டு கொண்டுவந்தவர்கள் ஓடிவிட, அதைக் கவனித்த அவ்வீரனின் தந்தையின் எதிரியானவன், தன் எதிரியின் மகனைக் கொல்ல மூட்டையைத் திறந்தான். மூட்டைக்குள் மிக அழகாக பலம்பொருந்திய உடற்கட்டோடும் மின்னும் கண்களோடும் ஒரு இளைஞன் இருப்பதைக் கண்டதும், மனம் மாறி அவனைத் தன் மகளுக்குத் திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கிறான்.

எதிரியின் மகன் என்றும் பார்க்காமல், அதே சமயம் அந்த எதிரியுடன் போரிட்டுக்கொண்டே. ஒரு கணத்தில் அந்த எதிரியைச் சுற்றி வளைத்தப்பின் தன் மருமகனின் தந்தையான தன் முன் நிற்கும் எதிரியைக் கொல்ல மனம் வராமல் அவனோடு அந்தத் திருமணத்தைப் பற்றிப் பேசுகிறான். ஆத்திரமடைந்த அந்த எதிரியானவன், “மகனைக் கடத்திக்கொண்டு சென்றுவிட்டு அவனைத் தன் மகளோடு திருமணம் வேறு நடத்தத்திட்டமிட்டிருக்கிறானா?” என்ற கோபத்தால் அருகிலிருந்த வாளால் சட்டென அந்த எதிரியைக் கொன்றுவிடுகிறான். அதைக் கண்ட அந்தகொலையுண்ட எதிரியின் மருமகனான கொலைசெய்தவனின் மகன், தந்தையின் மீது கோபத்தை வீசுகிறான். இறந்தவன் சடலத்தின் மீது அவனும் இறந்தவனின் மகளும் ஏறியமர்ந்துகொண்டு தாலிகட்டிக்கொண்டு திருமணம் செய்துகொள்கிறார்கள், அப்பனுக்கு மேலும் கோபத்தை அதிரிக்கச் செய்யதபடி.

தன் மகன் தன் எதிரியின் மகளைக் கல்யாணம் செய்துகொண்டானே என்பதுமட்டுமல்லாமல் தன் முன்பாகவே தனக்கெதிராக இந்தக் காரியத்தினை செய்கிறானே என்று ஆத்திரமடைந்து அவனை வெட்டுவதற்கு வாளை உயர்த்துவதற்குள் அவன் அவரைக் கொன்றுவிடுகிறான். இந்தச் செய்தி தாய்க்குக் கேட்க அவள் ஒரு குதிரையில் ஏறிக்கொண்டு கையில் தனது கணவனின் வாளோடு மகனையும் மகனை மணந்தவளையும் கொல்லும் நோக்கில் காற்றைக் கிழித்துக்கொண்டு வருகிறாள். அவளது ஆங்காரத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் புதுமணத் தம்பதியர்கள் ஓடுகிறார்கள். ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அந்தப் புதுமணத் தம்பதியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எல்லா தம்பியதியரும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் எங்கும் நிற்காமல். அந்த ஓட்டத்தின் போது அவர்களுக்கு எந்தவித அசதியும் ஏற்படவில்லை, இன்றுவரை. நேற்றுக்கூட எங்கள் கிராமத்தில் ஒரு ஜோடி ஓடிவிட்டதாக கேள்வி.”

கதையின் பாதியிலிருந்து விடுவித்துக்கொண்டவர்கள் மீண்டும் கதையின் ஓட்டத்திற்குள் புகுந்துகொள்கிறார்கள். தமது கிளைக்கதையை யாரிடமும் பகிர்ந்துகொள்ளமல் சொல்லப்படும் கதையை தாம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். கதையைச் சொன்னவர்களும், கதையிலிருந்து விடுவித்துக்கொண்டு கிளைக்கதைகள் கண்டவர்களும், கிளைக்கதை அறுபட்டதும் மீண்டும் கதைக்குத் திரும்பவர்கள் என அனைவரும் ரிமிந்தகன் சொன்ன போர் அறிவிப்பின் பயத்தால் உடல் நடுங்கக் காணப்பட்டார்கள். அவர்களது வீடு, அவர்கள் சந்தித்தப் போர்களை நினைவுபடுத்துவனவாக இருந்ததும் அவர்களின் தொடர்ச்சியான பயத்திற்குக் காரணமாக இருந்தது.

பல்லாயிரக்கணக்கான கேடயங்களிலான கூரை, இறந்த யானைகளின் காலெலும்பகளால் ஆன தூண்கள், போர்த்துறையில் பயன்படுத்திய தேர்களின் மரத்தைக் கொண்டு பூட்டப்பட்டக் கதவுகள், கத்திக் கரண்டி, தட்டுத் தாம்பாலம், சட்டிப்பானை, பாய், அலமாரி, மேசை நாற்காலி என அனைத்தும் போரில் பயன்படுத்தப்பட்ட வாள் வேல் கம்பு, கத்தி, கோடரி, துப்பாக்கி, பீரங்கி, வெடித்த ஏவுகணையின் சில்லுகள், தலை-மார்பு-கால்-வயிறு கவசங்கள், கூடாரங்கள் அமைக்கப் பயன்படுத்தியது, ஆற்றைக் கடக்க பயன்படுத்திய மரங்கள், இரும்புகள், விமானத்தின் சிதைந்த பாகங்கள் என அனைத்தும் அவர்களுக்கு இப்போது வீடாக உருமாறியிருந்ததுதான் தொடர்ச்சியான பயத்தின் இருப்புக்குக் காரணமாக அமைந்தது.

வெகு நேரம் கதைகளிலேயே நேரத்தையும் பயத்தையும் போக்கிக்கொண்டிருந்தவர்களுக்கு தம் பயத்தின் காரணமான அந்த வீடுகளின் மீதும், அதற்குள்ளிருக்கும் துருபிடித்து உடைந்த அந்தப் போர்ப் பொருட்களின் மீதும் ஒட்டுமொத்தமாக கண்ணும் எண்ணமும் சென்றதும் அதை அப்படியே அழித்துவிடப் பாய்ந்தார்கள். எல்லோருக்கும் அந்த எண்ணம் ஒன்றாகத் தோன்ற அனைவரும் அவரவர் வீடுகளில் வீதிகளில் இருக்கும் போரை நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஞாபகப்படுத்தும் அனைத்துப் பொருட்களையும் அவரவர் வீடுகளுக்கு பின்பாக பெரிய பெரிய பள்ளங்கள் தோண்டி புதைத்தார்கள். புதைத்தபின் வீடுகளையும் வீதியையும் மாற்றியமைத்தார்கள். இது ஒன்றிரண்டு மணித்துணிகளில் நிகழ்ந்தது. முதலில் அந்நகரத்திலிருந்த எல்லாப் போர்ப் பொருட்களையும் ஒரு மணிநேரத்தில் அப்புறப்படுத்தியதும் அதிசயத்தார்கள். பின் சிதைந்து சிதிலமடைந்த நிலையில் காணப்படும் வீடுகளையும் வீதியையும் அடுத்தொரு மணி நேரத்தில் சரிசெய்ததும் அவர்களை அவர்களே மெச்சிக்கொண்டார்கள். இந்த இரண்டு பணிகைளையும் ஒருசேர முடித்தபின் அந்நாட்டினர் அனைவரும் ஒரசேர விட்டப்பெருமூச்சானது வானை ஒரு கலக்கு கலக்கி அதன் வண்ணத்தை மாற்றியமைத்து, அதுவும் அவர்களை ஈர்க்கும்படியான விதத்தில்.

தாம் அனைவரும் ஒருவித அற்புதமான சிந்தனைக்குள் இப்போது இருப்பதால் இனி தம் வாழ்க்கை அற்புதத்தை மட்டுமே காணநேரும் என்ற நம்பிக்கைப் பெற்றவர்களாக அன்றைய தினத்தை ஒரு விழாவாகக் கொண்டாடினர். அடுத்துவரும் சம்பவத்திற்காக பயத்தை இறுகப் பிடித்துக்கொண்டு வெந்துபோகும் மனநிலையிலிருந்து மாறிவிட்டிருந்தனர். இனி தாம் சந்திக்கபோகும் எதுவும் துன்பத்தை நோக்கியானதே என்றாலும் அதில் இன்பத்தின் சாயலும் இருக்கலாம் என்ற நம்பிக்கையும் அவர்களில் தொக்கியிருந்தது வெளிப்பட்டது, இப்படியாக,
“போருக்குப் போவோம். ஆனால் போரில் நாம் மரணத்தைச் சந்திக்கவேண்டாம். நம்மை நோக்கி எந்த துப்பாக்கிக் குண்டோ அல்லது வானிலிருந்து நம் தலையைக் குறிவைத்து போடப்பட்ட அணுகுண்டோ விழுந்தாலும் மரணத்தை சந்திக்க நேராது. அதிலிருந்தான மீட்சிக்கு வழியை கண்டுபிடித்திருக்கிறோம். தெளிவாக எதையும் சந்திக்க வேண்டும் என்பதே அது. எதையும் தவிர்க்காமல் அதை நேருக்கு நேராகச் சந்திப்பதே. அப்போது பயம் நம்மை கீறாது நம்மை பயமுறுத்துவது அறுபடும். கூறுகூறாக கிழிந்து காற்றில் அலையும். நாம் அதைப்பார்க்கத்தான் போகிறோம்.”

“இனி போரென்ற ஒன்று நடைபெறும் என நான் நினைக்கவில்லை. அப்படி நடக்க நேரிட, எதிரியும் நம்முன் இல்லை. மன்னன் சொல்கிறான் போருக்குக் கிளம்புங்கள் என்று. அவனது கட்டளைக்கு கீழ்படிவோம். ஒருவேளை அவனுக்கு எதிரி தெரியலாம், நமக்குத் தெரியாமல் இருக்கலாம். அதனால் நம்மை ஒன்றிணைத்து வாழ வழிவகுக்கும் அவனது வாக்குகளுக்கு செயல்வடிவம் கொடுப்போம்.”

“போர்! எப்படியாகப்பட்டப் போராக இருக்கும்? எங்காவது ஒளிந்துகொண்டு பொத்தானை அழுத்தி பூமியைப் புதையச் செய்யும் அறிவியலின் உச்சக்கட்ட யுத்தியா?”

“நாம்தான் போர்க் கருவிகளை புதைத்துவிட்டோமோ?”

“போருக்கு கருவி ஒரு அடையாளம். ஆனால் உண்மையான கருவியானது மனம். மனம்தான் எல்லாப் போரிலும் வெற்றி பெற்றது. தோல்வியும் கண்டது. எதிரிக்கு பயந்து ஓடியவனுக்கு குறிவைக்கப்படுவிதிலிருந்து தப்பிக்க வழி தெரியாது. நேருக்கு நேராக நின்று போரிட்டவனுக்கு வலுவில்லாமல் போனாலும் எதிரி வைக்கும் குறி அவனுக்குத் தெரியும். ஒருவேளை அவன் அந்த யுத்தத்தில் வெற்றியும் பெற வாய்ப்பிருந்திருக்கும். நான் அப்படித்தான் வென்றேன். நிராயுதனாக நின்றபோது அருகிலிருந்த பிணத்தில் சொருகியிருந்த ஈட்டி என்முன் முறைத்திருந்த எதிரியை வீழ்த்த உதவியது.”

“அப்பா என்னை யாராவது கொல்ல வந்தால்...?”

“கொல்வது போர்ச்செயல். வீரனின் தொழில் கொல்வது. அதைத்தான் போரிடுவது என்பார்கள். உன்னை யாராவது கொல்வது என்றால்... நீ யாராலும் கொல்லப்படலாம். நமக்கு எதிரி என தீர்மானிக்கப்பட்டவனின் ஆட்கள் உன்னைக் கொல்லலாம். அவன் தடுமாறி கீழே விழ நேர்ந்து அவனது வாள் துருத்திக்கொள்ளும் சமயம் நீ தடுமாறி அவன் மீது விழுந்தால் வாள் உன் வயிற்றுக்குள் புகும். நீ மரணமடையாலாம். அல்லது எங்காவது சற்று ஓய்வெடுக்கலாம் என ஏதாவது புதருக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் போது யாரோ யார் மீதோ எறிந்த ஈட்டியோ அல்லது பாய்ந்து வரும் தோட்டாவோ உன்னைக் கொல்லலாம். அல்லது நானே உன் போர்த் திறனைப் பாராட்டி உன்னை இறுக அணைக்கும் போது தவறுதலாக என் துப்பாக்கி இயங்கி அதன் தோட்டாவுக்கு நீ இறந்துபோகலாம். ஆகையால் போர்த்துறையில் மரணம் எப்படியும் நிகழும். எல்லாம் முடிந்து வீடு திரும்பும் மக்களில் நீ இருந்தால் மட்டுமே நீ பிழைத்திருக்கிறாய் என்பதற்கான சாட்சி. மற்றபடி... தொலைந்து போயிருந்தாலும் இறந்துபோனதாகவே கருதப்படுவாய்.”

“போரில் நாம் இறந்துபோனால்...”

“இறந்துபோனதுதான்.”

“பிறகு”

“செய்த பாவ புண்ணியத்திற்கேற்ப. அதாவது உண்டு வளர்ந்த இந்த உடலில் இருக்கும் ரசாயனப் பொருட்களுக்கேற்ப பூமியின் அப்போதைய தேவைப்படுபவனுக்கு உணவாக வேண்டியதுதான்.”

“புரியவில்லையே”

“எனக்கேப் புரியவில்லை. இருந்தாலும் பார்த்து அனுபவித்ததைக் கொண்டு சொல்ல முடிகிறது. சொல்கிறேன். கேள். இந்த உலகில் இறந்தவர்களை என்ன செய்வோம்?”

“புதைப்போம் அல்லது எரிப்போம்”

புதைக்கப்பட்டவர்களின் உடல் நாள் கணக்கில் ஆனபின் என்னவாகும்?”

“அழுகி உருகும்.”

“உருகி?”

“உருகி. எல்லா இடங்களுக்கும் பரவும். இடம் கிடைத்த வழியில் சென்று. செல்ல முடிந்த வழியில் வழிந்து சென்று....”

“அப்புறம்?”

“அப்புறம் என்ன, வழியில் தொட்டுத் தொட்டுச் செல்லும் எல்லாவற்றிலும் அதன் அணுக்கள் ஒட்டிக்கொள்ளும். ஏதாவது அதை சாப்பிடும் பக்குவதில் இருந்து வாய்திறந்து உறிஞ்சினால் அவற்றின் வயிற்றுக்குள் சென்று செரிமாணத்திற்காகும்.”

“அப்புறம்?”

“அப்புறம் என்ன அப்புறம். நானே இறந்து போனாலும் அதன் வயிற்றுக்குள் செரிமாணமாவேன். என்னுடைய ஒரு பகுதி அதன் சக்தியாகவும் மற்றது சக்கையாகவும் மாறும். இப்படியாக மாறின நான் அதன் உருவத்தோடு ஏதாவது ஒரு பகுதியாகவோ அல்லது அது ஈனும் பிள்ளையாகவோ கூட மாறுவேன்” என சொன்னவன், சட்டென நிதானத்திற்குத் திரும்பியவனாக தன்னையே மெச்சிக்கொண்டவனாக சப்தமாக சிரிக்கிறான். பின் அவனே தொடர்ந்து பதில் சொல்ல வேண்டியவனுக்கு பதிலைத் தொடர்கிறான், கேள்விகேட்டு பதிலை உற்பத்தி செய்தவன். “இப்படியாக இறந்தவர்கள் வேறெதாவதாகவோ மாறுகிறார்கள். அப்படித்தான் நாமும் மாறுவோம். நமக்கு இறப்பென்பதே இல்லை.”

“அதனால் போர் புரிவதால் எந்தத் துக்கமும் இல்லை. நாம் அழிவதே இல்லை. தொடர்ந்து வாழ்பவர்களல்லவா நாம்?. அதனால் சொல்கிறேன். இந்தப் போர் நம்மை ஒன்றும் செய்யாது அதனால் போருக்கு சந்தேசமாகப் போவோம். யாருக்காகப் போரிடப் போகிறோம். மன்னனுக்காகத்தானே. அவன் தானே நமக்கு எல்லாம். அவன் பார்த்துக்கொள்வான். நாம் கிளம்புவோம்.”

நாடு முழுக்க மனிதக் குரல் நிரம்பி வழிகிறது, இப்படியாக. கடந்து வந்த வாழ்க்கையில் சந்தித்தப் போர்களின் விளைவுகளையும், “போர்” என்று அறிவித்துவிட்டுச் சென்ற ரிமிந்தகனின் கட்டளையை எதிர்க்கொள்ளப்போவதையும் அவர்கள் பிரித்து பிரித்து யோசிக்கிறார்கள். வாசிக்கிறார்கள். சப்தமாக எல்லோருக்கும் அவற்றை மாற்றி மாற்றி ஒலிக்கச் செய்து வெவ்வேறு தினுசில் யோசிக்க வைக்கிறார்கள், யோசிக்கிறார்கள். இந்த யோசனையை அவர்கள் தொடங்கிய நிமிடம் முதல் அவர்கள் ரிமிந்தகனுக்கு முன்பான வாழ்க்கையிலிருந்து வாழ்க்கையைப் பற்றியான எல்லாவற்றையும் யோசிக்கத் துவங்கிவிட்டர்கள். அங்கே அந்த வாழ்க்கையில் அந்த நாட்டில் அவர்களுக்கு இருந்த எல்லாவற்றையும், பின் அங்கே சந்தித்தப் போர்களில் பெற்ற வெற்றிகளையும் தோல்விகளையும் கூட்டிக் கழித்துப் பார்க்கிறார்கள். இறுதியாக பத்து வெற்றியும் ஒன்பது தோல்வியும் பெற்றவன், குழம்பிப்போய் யோசிக்கிறான், “பத்து வெற்றிகளில் ஒன்று மிச்சமிருக்கும்பட்சத்தில், அதுவும் மிச்சமிருப்பது வெற்றி என்பதால் இப்போது நான் ஒரு நாட்டை ஆண்டு கொண்டல்லவா இருக்க வேண்டும்? எப்படி இந்த ரிமிந்தகனின் நாட்டில் அடிமைபோல இருக்கிறேன்?” என்று யோசித்தான்.

மற்றொருவன் “நான் இதுவரை வெற்றியே பெற்றதில்லை. தோல்வியைத்தானே இதுவரை அடைந்திருக்கிறேன், ஆனால் எப்படி என்னால் தொடர்ந்த என் நாட்டை ஆளமுடிந்திருந்தது? ரிமிந்தகன் கைவிரல் அசைத்து “வா என்னோடு” என்றதும் என் நாட்டை அப்படியே விட்டுவிட்டு எப்படி அவனோடு இங்கே குடியேற முடிந்தது?” இதுபோன்ற ஒருவரின் சிந்தனை மற்றவர்க்குக்கேட்க, இப்படியாக எல்லோரைப் பற்றியும் எல்லோருக்கும் தெரிய நேர்ந்த அந்த யோசனைக் காலத்தில் அனைவரும் அனைவரைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்துகொண்டனர். ஆனால் அந்தக் கணத்தில், மற்றவரைப் பற்றி எல்லா விசயங்களும் தெரிந்திருந்தபோது, அவர்கள் தம்மைப்பற்றி தெரிந்து வைத்திருந்ததை மறந்துபோனார்கள். தம் விருப்பு வெறுப்புகளை மட்டும் ஞாபகம் வைத்திருந்தார்களே அன்றி, தம்மால் இயன்றதும் இயலாததையும் மறந்து விட்டிருந்தார்கள்.

இந்த சூழலின் தொடர்ச்சியில் அனைவரும் ஒருவித செரிமானத்திற்கு வந்தவர்களாக அவரது வீடுகளில் இருந்தபடியே, வானை நோக்கி, வானின் ஒரு புள்ளியை நோக்கி, சப்தமாக “இதுபோன்ற காலகட்டங்களில், குழப்பத்தின் முனையை பிடித்து வைத்துக்கொண்டிருந்தால் அதிலிருந்து எந்தவித முடிவும் ஏற்படாது. ஆரம்பமும் முடிவும் தெளிவாகத் தெரிய வராது. அதனால் நாம் பிடித்திருக்கும் முனைகளை.... அது ஆரம்பமாகவோ முடிவாகவோ எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும், அதை முதலில் விடுவித்து விடுவோம். பின் அதன் போக்கைக் கவனித்து ஒரு முடிவுக்கு வருவோம்.” என்பதாக அனைவரும் கண்களை மூடி மனதினை ஒருநிலைப்படுத்தி உள்ளங்கைளை இறுக்கக்கட்டிக்கொண்டு பின் மெல்ல தளர்த்துகிறார்கள் அந்த மையப்புள்ளியை நோக்கி. ஒவ்வொருவரிடமிருந்து ஒருவித ஒளி விடுபட்டு அந்த மையப்புள்ளியை அடைகிறது. அப்படியாக அடைந்த அந்த நொடியில் அந்த ஒளியின் ஒட்டுமொத்த உருவமாக; ரிமிந்தகன், கனவினைக் கண்டுவிட்டு அரண்மனை வாசலில் எல்லோரையும் உறையவைத்தபோது வந்த கழுகின் உருவம் தென்பட்டது. அனைவரும் அதை ஆச்சர்யமாகவும் அதே சமயம் தக்கசமயத்தில் அவர்களது குறையைத் தீர்க்க வந்திருக்கும் ஆபத்பாந்தவனாகவும் அதைப்பார்த்தார்கள். அதைக் கைக்கூப்பி வணங்கினார்கள். ஒளியால் மிகப் பிரகாசமாக வானை நிரப்பி எல்லோருக்கும் அதிசயமாகத் தோன்றிய கழுகு மெல்ல தன் இறகை அசைத்து தாம் எதையோ அவர்களுக்குச் சொல்ல நினைப்பதை குறிப்புணர்த்துவதாக செய்ய அனைவரும் அது சொல்லப்போவதைக் கேட்பவர்களாக உற்று கவனிக்கின்றனர்.

“இந்த ரிமிந்தகனின் போர்க் குணம் ஏற்கனவே அனைவருக்கும் என்னால் வெளிப்படுத்தப்பட்டது தான். ஆனால் அதை யாராலும் தடுக்க முடியாது. ஏனெனில் அவன் மன்னனாக இருக்கும் பட்சத்தில் அவன் சொல்வதை கட்டளைகளாக ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டியவர்களாக நீங்கள் அனைவரும் இருப்பதால். அதனால் என்னுடை முதல் எச்சரிக்கையின் போது அதற்கான வழிகளை உங்களுக்கு நான் சொல்ல முடியவில்லை. அவனது குறுக்குப் புத்தியிலிருந்து விடுதலை பெறும் வழியை என்னால் தங்களுக்குச் சொல்ல முடியவில்லை. தெரிந்திருந்தாலும், உங்களுக்கு அதை விளக்கிச் சொல்லும் வழி எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் போர் அறிவிப்பு வந்திருக்கும் இந்த தருணத்தில் தங்களுக்கு சில அறிவுரைகளைச் சொல்ல முடிகின்ற நிலை இருக்கிறது. அதாவது, உங்களது பயணித்தின் போது மன்னன் உங்களது சொல் கேட்டு நடக்கும் சாத்தியம் ஏற்படும்.

உங்களுடைய உதவியை நாடி அவன் மண்டியிடவும் நேரலாம். அதனால் நீங்கள் உங்களது மனம் எந்த விதத்திலும் தரம் தாழாமல் இருப்பதை நீங்களே அனுபவிக்கப்போகிறீர்கள். ஆனால் ஆனால்... ஒன்று மட்டும் நிச்சயம் நீங்கள் செல்லும் போரில் பல விநோதமான நிகழ்வுகளைச் சந்திக்க நேரிடும். அவற்றினை நீங்கள் அணுகும்போது புதுவித அனுபவங்கள் உங்களுக்குக் கிடைக்கும். ஒரு நேரம் பயம் வரலாம். ஒரு ரம் சந்தோசம் வரலாம். ஆனால் இரண்டையும் சந்திக்கும் நீங்கள் அதிகம் சந்திக்கப்போவது துக்கத்தைத்தான் என்பது நிச்சயம். போருக்குச் செல்லும் நீங்கள் என்னவிதமான ஆயுதங்களை எடுத்துப் போகப்போகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கவேண்டும் என்றாலும் அந்தத் தீர்மானத்தின் போது ஏற்படும் குழப்ப காலத்தில் போரைப்பற்றியான பல குறிப்புகள் உங்களை வந்து சேரும்” என சொல்லிவிட்டு ஒளி மெல்ல வானோடு கரைந்து கரைந்து மறைந்தது.

பொதுவாக கழுகு வந்து போனதும் அதன் நிழல் சில மணித்துளிகள் அந்நிலத்தில் இருக்கும். ஆனால் இந்த முறை அங்கே நிழல்படவில்லை. அதனால் மக்களுக்கு, வந்துபோனது கழுகுதானா என்ற சந்தேகம் நெடுநேரம் இருந்தது. ஆனால் அந்த சந்தேகம் தொடரவில்லை. காரணம், அவர்களுக்காக அக்கறை கொண்டு சொல்லும் ஒரே உயிரினம் அந்தக் கழுகுதான், அதனால் இந்த முறை வந்ததும் கழுகுதான் என்ற நம்பிக்கை மீண்டும் துளிர்த்தது. கழுகுதான் தம்மை நல்வழிக்குக் காட்ட வல்லது என்பதை உறுதிபடுத்திக் கொண்டார்கள். கழுகின் வழிகாட்டுதலில் நடப்போம் என்பதையும் சத்தியம் செய்துகொண்டனர். அந்த சத்தியமும் நம்பிக்கையும் ஒவ்வொருவர் மனதிலும் இருந்ததே அன்றி அதை யாரும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. கழுகு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பேசினதாக உணர்ந்தார்கள். அதனால் தம் ரகசியம் வேறுயாருக்கும் தெரியக்கூடாது என்ற மனப்பான்மையில் தாம் உணர்ந்தவற்றை மற்றவரோடு பகிர்ந்துகொள்ளவில்லை. அவரவர் அவரவர் பாதுகாப்பினைப்பற்றி மட்டுமே யோசிக்கலாயினர். அந்த யோசனைகள் அனைத்தும் அனைவரும் எடுத்த யோசனைகளே.

அனைவருக்கும் ஒரே யோசனை. “நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். அதற்காக மேற்கொண்டு யாரையும் அழித்து அதன்படி நம் சந்தோசங்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டியதில்லை” என்பதுதான். ஆனால் போருக்குப் போயாகவேண்டுமே. போரில் எதிரியை வெட்டிச் சாய்க்க வேண்டுமே என்பதும் அவர்களுள் தொக்கிக்கொண்டிருந்தது. அதை அவர்கள் மிகச்சாதாரணமாக எடுத்துக்கொண்டனர்.

“போர்!
போர்!
அவ்வளவு தான்.
எதிரியைக் கொல்லணும்
நாட்டைக் காப்பாற்றணும்!
அவ்வளவுதான்!” என்பதானது அது.

அதன்படி அனைவரும் தம் வீட்டுத்தோட்டங்களில் முன்பு புதைத்த தளவாடங்களை மீண்டும் தோண்டியெடுத்தனர். அதற்குள்ளாகவே அனைத்தும் மட்கிப்போய், உடைந்து. கூர்மங்கி இருந்தது. மேற்கொண்டு புதிய போர்க்கருவிகளைச் செய்துகொண்டு போக வேண்டியதில்லை என்பதை அவர்கள் ஏற்கனவே முடிவெடுத்திருந்தனர். உலகம் முழுவதையும் ஒரே குடைக்குக்கீழ் கொண்டு வந்த பின் எதிரியானவன் ஒருவனோ அல்லது ஒன்றிரண்டு பேராகச் சேர்ந்த மிகச் சிறிய குழுவாகத்தான் இருக்கமுடியும் என்றும், அவர்களாக இந்த மாபெரும் கூட்டத்தோடு வெகுநேரம் போரிட முடியாதென்றும் கற்பனை செய்திருந்தனர். அதனால் தோண்டியெடுக்கப்பட்ட தளவாடங்களை மறுநாள் காலை மன்னனோடு செல்லும்போது எடுத்துச் செல்ல தூசுதட்டி ஒடுக்கெடுத்து தயார்படுத்திக்கொண்டனர்.

உடை விசயத்திலும் அதுபோலவே அவ்வளவாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. உடுத்தியிருந்த உடையையே சற்று இறுக்கிக் கட்டிக்கொண்டு போனால் போதும் என்று விட்டுவிட்டார்கள். உணவு விசயத்திலும் அப்படியே. ‘உலகமே தம்முடையது’ அப்படியிருக்கும் போது எங்கு வேண்டுமானாலும் உணவெடுத்துக் கொள்ளலாம். அதற்காக கட்டுச்சோறெல்லாம் கட்டிக்கொண்டு செல்லவேண்டியதில்லை என்பதும் அவர்களது தயாரிப்புகளில் எடுக்கப்பட்ட முடிவுகளில் ஒன்று.

தெளிவாகிவிட்டார்கள். போருக்குத் தயாராகிவிட்டார்கள். போர் பற்றிய கனவுகளோடு காத்திருக்கிறார்கள். ஆனால் போர்த்துறைக்குச் செல்லும் வழியை அறிய ரிமிந்தகனின் கட்டளையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இப்படியாக காத்திருந்தவர்களுக்கு ஒரு ஆசை, இறுதியாக ஒருமுறை நன்றாக ஒரு தூக்கத்தைப் போட்டுவிடவேண்டும் என்பது. அதனால் யாரும் யாருடனும் பேசாமல் தூக்கத்தை வரழைத்துக்கொண்டிருக்கிறார்கள் அந்த அமைதியான இரவில்.
வெகுநேரம் கழித்து தூங்கிக்கொண்டிருந்தவர்களில் ஒருவன் திடீரென எழுந்து தெருவில் ஓடுகிறான், வீதிகள் ஆளரவமற்று அமைதியாக இருக்க.

“ஏய்.... போர் வந்துடுச்சுடா.....” என சப்தம் போட்டுக்கொண்டே ஓடுகிறான். சுற்றுமுற்றும் பார்க்கிறான், உறக்கத்திலிருந்து எழுந்து நடக்கும் பழக்கத்தை உடையவன்.

“ஏய்.... போர் வந்துடுச்சிடா.... போர். போர். எழுந்திரிங்க. போர் வந்திடுச்சு” என ஓடிக்கொண்டே அலறுகிறான். அவனைத்தொடர்ந்து தூக்கத்தில் எழுந்து நடக்கும் பழக்கமுடைய இன்னொருவன். அவனைப்பின் தொடர்ந்து “வாள் வேல் கம்பெடுத்து வாங்கடோய்.... போர். போர்....” என அலறுகிறான். முன்னவனுக்கு தன்பின் இன்னொருவன் வந்து கத்துகிறான் என்று தெரியவில்லை. மற்றவனுக்கோ தனக்கு முன் இப்படித் தூக்கத்தில் எழுந்து ஒருவன் போர் பற்றி சத்தம்போட்டுக்கொண்டே செல்வதை அறியவில்லை.

இவர்களைத் தொடர்ந்து பலர் போர் பற்றிய கனவின் தொடர்ச்சியாக வெளியே எழுந்து வந்து,

“போர்... போர் ஆரம்பிச்சுடுச்சி... எல்லாரும் ஓடியாங்க”

“அங்க அங்க பார் விமானம் பறக்குது. குண்ட வீசப்போறானுவோ... ஓடியாருங்க. ஒடியாருங்க. ஒளிஞ்சிக்குங்க.....”

“ஆகா... அதோ அதோ பார் எதிரியை. கொல் கொல்லுடா அவன... யோசிக்காத கொன்னுடு”

“ஐயோ என் வயித்துல துப்பாக்கிக்குண்டு பாஞ்சிடுச்சே. நான் செத்துக்கிட்டிருக்கேனே... ஐயோ...!”

“குனி... குனிடா நாயே... ஈட்டி வருதுபார்.”

எனும்படியாக அவர்கள் அனைவரும் தூக்கத்திலேயே தெருவில் அலைந்துகொண்டிருக்கிறார்கள். போர் புரிகிறார்கள். வெறுங்கையால் சண்டைபோடுகிறார்கள். யாருமற்ற அந்த இருள்வெளியில் யாரையோ கொல்வதைப்போலவும் இழுத்துத் தூக்கி எறிவதுபோலவும் அவர்கள் பொருதுகிறார்கள். சிலர் குண்டடிப்பட்டு, கழுத்து அறுபட்டு துடித்துக்கொண்டிருப்பதாகவும், சிலர் ஒளிந்துகொண்டு எதிரியைக் குறிவைப்பதுபோலவும் அந்த சுழலில் நடப்பது ஒரு சினிமாக்காட்சிபோல், பித்தமனிதர்களின் கனவினை நிகழ்த்திக்காட்டும் காட்சியைப்போலவும் நடக்கிறது. வெகுநேரம் இப்படியாக நடந்துகொண்டிருந்த கனவுப்போரானது அனைவரும் அசதியுற்றதும் அடங்குகிறது. அனைவரும் அவரவர் உறங்கிய இடத்திலிருந்து இடம் பெயர்ந்து தெருக்களில் சிதறிக்கிடக்கிறார்கள், உயிரோடு ஆனால் கனவில் இறந்துபோய்.

-அரியநாச்சி
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It