அத்தியாயம்-7

ரிமிந்தகன் செயலில் இறங்கிவிட்டான். மக்கள் அவனை நேருக்கு நேராகப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். அவனது புரியாத பகுதிகள் எல்லாம் இப்போது விந்தையான பல கதைகளாக அவர்களுக்கு அறிமுகமாகிறது. பதில், தெளிவாக இல்லாமல் போன சுபாஷ் சந்திரபோசு கதைகளும் அவற்றில் அடங்கும். பல கதைகள் அவர்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது.

வழியெல்லாம் இப்போது அவர்களுக்குô பெரிய பெரிய புத்தகங்களும், பக்கவாட்டில் பல கூத்துகளும் தொடர்ந்து நடக்கிறதை கவனிக்கிறார்கள். அவர்கள் யார்? எதற்காக தமக்கு இந்தச் செய்திகளைக் கொடுக்கிறார்கள் என்பதை அறிய அவர்களுக்கு நேரமில்லை. ஒவ்வொன்றையும் கடந்து போய்க்கொண்டே இருக்கிறது கூட்டம். முதலில் சந்தித்ததின் அனுபவத்தைக் கொண்டு அடுத்ததைப் பார்க்கிறார்கள். அடுத்ததின் கருத்தைக் கொண்டு அதற்கடுத்ததைப் பார்க்கிறார்கள். இப்படியாக படிப்படியாக தம் புத்தியை பல புதிய புதிய தகவல்களைச் சேகரித்து சேகரித்து அலசும் அற்புதமான ஆலைகளாக மாறிக்கொண்டிருந்தார்கள். இப்போது அவர்கள் புத்திக்குள்ளிருந்து புகைவரத் தொடங்கியிருக்கிறது. அப்படியானால் அவர்கள் அந்தத் தகவல்களை நன்றாக சமைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். ஆமாம் உண்மையில் அவர்களது புத்தி வேக வேகமாகவும் விவேகமாகவும் செயல்படுகின்றன. கிணற்றில் சிங்கத்திற்கு பயந்து விழுந்தவன் விழுந்து கொண்டிருக்கும் பாதி வழியில் வரும்போது தண்ணீரில் வாய்பிளந்து அவனை விழுங்கக் காத்திருக்கும் முதலையைக் கண்டவர்களாக அவர்கள் அவசர அவசரமாக தம் மரணத்திற்கு முன்பாக எடுக்கவேண்டிய தீர்மானங்களுக்காக யோசித்தார்கள்.

Army இந்த மாறுதல் எப்போதிருந்து தமக்குக் கிடைத்ததென்று ஒருவன் மெல்ல யோசிக்கிறான். அவனைப் புரிந்துகொண்ட அவனோடு நடந்துவரும் அவனது உறவினனும் புரிந்து கொள்கிறான். இருவருமாக மற்றவர்களைப் பார்க்கிறார்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு தினுசில் யோசிப்பதை உணர்க்கிறார்கள். பின் இருவரும் மெல்ல வாய்விட்டு,

“என்ன இருந்தாலும் நாமும் அவனும் மனித சென்மம் தான்.”

“எனக்கும் ‘நாம் மனித இனம்தான்’ என்பது, இப்போது புரியவருகிறது.”

“நல்லது.”

“ஆமாம் நல்லது.”

இருவரும் யோசனையில் சிறிது தூரம் நடக்கிறார்கள் எதுவும் பேசாமல், பின் ஏதோ புத்திக்குள் தோன்றியதாக உணர்ந்து அதை உடனே பகிர்ந்துகொள்கிறார்கள்.

“இருந்தாலும் அவன் இப்படி நம் விருப்பம் கேட்காமல் கட்டளையிட்டிருக்கக்கூடாது.”

“ஆமாம். அதை நானும் கேட்கலாம் என்று நினைத்தேன் ஆனால்...”

“ஏன் கேட்கவில்லை?”

“கேட்டிருந்தால் அவன் என்னைக் கொன்று போட்டிருப்பான்.”

“இதுபோல் நினைத்துத்தான் சில நல்லவர்களும் இப்போது வில்லன்களாகிவிட்டனர். தெரியுமா?”

“அப்படியா?”

“ஆமாம். ஒரு கதையைச் சொல்கிறேன் கேள்.”

“சொல் சொல்.”

“சதா கடவுளையே நினைத்து நினைத்து உருகி ‘வாழ்க்கை கடவுளுக்காகவே’ என்று, எல்லாவற்றையும் அர்ப்பணித்துவிட்டு பனிமலைக் குகைகளில் பன்னிரெண்டு ஆண்டுகாலம் தன் ராஜ்ஜியத்தைவிட்டு தவமிருந்த ஒருவனின் கதை. அடிக்கடி தன் நிலம் இயற்கையின் சீற்றத்தால் சீரழிந்து வருதைக் காணும் போதெல்லாம் அது தன் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றினால் நடக்கிறதென்றும், அதுதான் கடவுளென்றும் எண்ணி அந்தக் கடவுளை நேரில் கண்டு தன் மக்களின் துன்பத்தைப் போக்க வேண்டும் என்று தவமிருந்தான். மக்கள் நல்ல வாழ்வு வாழ ஏதுவானதைச் செய்ய வல்லவனே மன்னன் என்பதை உணர்ந்தவன். அதுவே வாழ்க்கையாகவும் எடுத்துக்கொண்டவன். அப்படியே வாழ்ந்தும் வந்தவன். ஆனால் அவர்கள் படும் வேதனைகளை தன் புத்திக்கும் சாதுர்யத்திற்கும் அப்பாற்பட்ட அந்த கடவுளென்னும் சக்தி ஆட்டிப் படைக்கிறது என்றெண்ணி, கடவுளை நேரில் கண்டு பிராது கொடுக்கவே இந்த தவத்தை மேற்கொண்டான். கடவுளுக்கும் புரிந்தது. ‘இனி இவனை ஒன்றும் செய்ய முடியாது அவன் கேட்பதைக் கொடுத்துவிடுவோம்’, என்று மலை உச்சியிலிருந்து காட்சி தருகிறார், கடவுள் தன் குடும்ப சகிதமாக, கணவனும் மனைவியுமாக.

“மரணம், தான் நினைத்தால் மட்டுமே வரவேண்டும்” என்ற வரத்தை வாங்கிக்கொண்டு நாடு திரும்புகிறான். மக்களை தான்பெற்ற வரத்தினால் பாதுகாக்கிறான். உலகின் அப்போதைய பல நாட்டு மன்னர்களும் தமது நாடுகளை ஒப்படைத்துவிட்டு அவர்களது மக்களின் நல்வாழ்வுக்கும் ஏதுசெய்யுமாறு அவனிடம் கொடுத்து விடுகின்றனர். இதனால் பனிமலை சூழ்ந்த நாட்டை ஆண்டு வந்த ஒருவனுக்கு (சொற்காமன் என்போம் இவனை) பொறாமை ஏற்படுகிறது. அதிபுத்திசாலியான தீவரசன் புகழோடு வாழ்வதை விரும்பாத பொறாமைக்கார சொற்காமன் அவனை அழிக்க திட்டம் வகுக்கிறான். கணக்கு போடுகிறான். கணக்கின் முடிவில் தன் மனைவி தகிதமோகினியை தீவரசன் தீவில் நவுரோலித் தோட்டத்தில் தந்திரமாக விட்டுவிடுகிறான். ரகித மோகினியும் சொற்காமனுக்குச் சளைத்தவளில்லை. சதா சந்தோசமாக ஆணும் பெண்ணும் கூடிக்குலாவி வாழும் அந்த தீவின் ரம்மியத்தை நேரில் கண்டதும் ரகிதாவுக்கு மேலும் மேலும் பொறாமை கூடுகிறது. தீட்டம் தீட்டுகிறாள்.

நவுரோலித் தோட்டத்தில் பகல் புலர்கிறது. ரகிதா தன் தலையைக் கலைத்து உடைகளை அலங்கோலமாக்கிக் கொண்டு ஒப்பாரி வைக்கத் தொடங்குகிறாள். தீவு மக்களின் பகல் அவளது அழுகுரலால் அபசகுணமாக விடிகிறது. தீவரசனுக்கும் அவளது குரல் கேட்கிறது. உடனே தன் பணியாட்களை அனுப்பி ‘என்ன? ஏது?’ என்று விசாரித்துவிட்டு வரும்படி பணிக்கிறான். வந்தவர்கள் ‘ஒரு பெண் நவுரொலித் தோட்டத்தில் தலைவிரி கோலமாக அழுது கொண்டிருக்கிறாள்’ என்று சொல்கிறார்கள். தம் ராஜ்ஜியத்தில் எல்லோரும் சந்தோசமாக இருக்கும் இந்த தருணத்தில் பெண்ணொருத்தி அழுது கொண்டிருக்கிறாள் என்று கேட்டதும் பணிப்பெண்களை அனுப்பி ‘என்ன? ஏது?’ என்று அவளுடன் பேசி கேட்டு வர அனுப்புகிறான், தன் மனைவியல்லாதவரை எந்தப் பெண்ணையும் நேரில் கண்டு பேசிறாத தீவரசன், கற்புக்கரசன்.

விசாரிக்கச் சென்றப் பெண்கள்,

“மன்னா அவளது பெயர் ‘ரகித மோகினி. பனிமலைகள் சூழ்ந்த நாட்டைச் சேர்ந்தவள். அங்கே பிரம்மச்சாரிகள் அதிகமாகிவிட்டதால் வாழ்க்கை சுரத்தையற்றுப் போய்விட்டதாகக் கூறுகிறாள். இங்கே இந்தத் தீவு அவளது கனவில் அடிக்கடி வருவதாகவும், இங்கிருக்கும் முதலைகளின் கண்கள் அவளை மிகவும் வசீகரிப்பதாகவும் சொல்கிறாள். அதனால் தன் கனவின் ஊடாகவே பயணித்து நம் தீவிற்குள் வந்ததாகவும், விடிந்துவிட்டதால் மீண்டும் செல்ல முடியாமல் தவிப்பதாகவும் அழுகிறாள்.”

அதற்கு அவன், “சரி சரி. இரவு வந்ததும் அவள் சென்றுவிடட்டும்” என்றுச் சொல்லியவன் அவளுக்கு நல்ல உடைகளையும், உணவு கொடுத்து அன்போடு உபசரிக்கச் சொல்லிவிட்டு அன்றைய பணிக்குச் சென்றுவிட்டான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் தீவரசனை நோக்கி அவனது பணிப்பெண் ஒருத்தி போன்றவள் ஓடிவருகிறாள்.

“மன்னா இன்றிரவு அவள் நாடு திரும்பினாலும் மீண்டும் முதலைக் கண்ணீர் வந்தால் என்ன செய்வது? என்று கேட்கிறாள்” என்றதும்,

அவன், “அப்படியா! இந்தத்தீவில் உள்ள அனைத்து முதலைகளையும் கொன்றுவிடுங்கள்” எனக் கட்டளையிடுகிறான். இட்டக் கட்டளையின் எதிரொலி அடங்கும் முன் மக்கள் அனைவரும் முதலைக் கறிகளை உண்டு கொண்டு முதலைத் தோள்களில் பொருட்களைச் செய்யத் தொடங்கி விடுகின்றனர். அன்றிரவு அவள் சென்றுவிடுவாள் என்றெண்ணி தீவிரசனும் மக்களும் உறங்கச் சென்றுவிடுகின்றனர்.

மறுநாள் விடிந்தது. அன்றும் ரகிதமோகினியின் அழுகுரலால் தான் தீவு விழித்தெழுந்தது. தீவரசன் தன் தமக்கையிடம் “என்ன ஏது என்று விசாரித்து வா” என்று அனுப்புகிறான்.

“நம் மக்களின் காமப் பெருமூச்சினால் இன்றுநாடு திரும்பமுடியாமல் தவிப்பதாகச் சொல்கிறாள்.” என்றதும்,

“ஒரு பெண் அழும் நிலைக்கு நமது இச்சை படுமோசமாக இருக்கிறதோ” என்று எண்ணி, அரசவையைக் கூட்டி மக்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் இதர வசதிகளையும் குறைக்கிறான். மக்கள் உணவுத் தட்டுப்பாட்டுக்கு ஆளாகின்றனர். சொற்ப உணவை உண்கின்றனர். சக்தியற்ற உணவை உண்கின்றனர். அதனால் அனைவரும் ஒரே நாளில் நோயுறுகின்றனர்.

‘இன்று இரவு நிச்சயம் அவள் தீவினை விட்டுச் சென்றுவிடுவாள். பிறகு நமது மக்களைக் காப்பாற்றிவிடலாம்’ என்று உறங்கச் சென்று விடுகிறான் தீவரசன். ஆனால் அன்றும் போகவில்லை. ‘அடுத்த நாள் போவாள்’ என்று எதிர்பார்த்தான். போகவில்லை. மீண்டும் தன் தமக்கையை அவளிடம் சென்று விசாரிக்கச் சொல்கிறான்.
விசாரித்தவள், “அடிக்கடி தங்களது போர் வீரர்களும் தளபதிகளும் தமது புஜங்களை அவளது கனவில் முறுக்கிக் காட்டுவதாக சொல்கிறாள்” என்கிறாள்.

“சரி ஒருநாள் தானே பார்த்துக்கொள்ளலாம்” என்று, தன் போர்வீரர்களையும் தளபதிகளையும் ஓய்வெடுக்க கட்டளையிட்டுவிட்டு விடுமுறை அளித்துவிட்டான். விடுமுறை கிடைத்த களிப்பில் பயிற்சி மறந்து, போர் மூர்க்கம் இழந்து, அவர்கள் போதையிலும் காமத்திலும் அந்த நொடியிலிருந்து செலவழிக்கத் தொடங்கிவிட்டனர்.
இது நடந்தும் அவள் போகவில்லை.

அப்போது அவளது கணவன் சொற்காமன், தன் பனிமலை நாட்டிலிருந்து இந்த தீவுநோக்கி வந்ததும், ‘தீவிற்குச் செல்ல, இடையிலுள்ள கடற்பகுதியை எப்படிக் கடப்பது’ என்று கரையிலிருந்தவாறு திட்டம் தீட்டினான். அங்கிருந்த இளகிய மனம் கொண்டவர்களிடம் சாதுர்யமாகப் பேசி அவர்களை வேலைவாங்கி தீவிற்கு வந்துகொண்டிருந்தான். அவன் தீவில் காலடி வைத்ததும், ரகிதமோகினிக்கு தூக்கிவாரிப்போட்டது. உள்ளத்தில் ஏதோ பெரிய ஒரு இடி விழுந்தது போல் உணர்ந்தாள். “சொற்காமன் தன் கணவனாக இருந்தாலும் இந்த தீவரசனின் அன்பிற்கு முன் சொற்காமன் கொடியவன். அவனால் இந்த உலகம் நிம்மதியடையப் போவதில்லை. அதனால் தீவரசனிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டியதுதான்” என்று முடிவு செய்து தீவரசனை அவனது அரசவையில் சந்திக்கிறாள், முதல் முறையாக.

அங்கே அவன் தன் மந்திரி பெருமக்கள் முன் கவலையோடு அமர்ந்திருக்கிறான். அவள் வருவதைக் கண்டதும் எழுந்து,

“அம்மா நீதான் நவுரோலித்தோட்டத்திற்கு வந்த விருந்தினரோ?” என்ற கேட்க, அதற்கு அவள்,

“நான் செய்ததெல்லாம் தவறுதான். தங்களின் இளகிய மனதினைப் புரிந்துகொள்ளாமல் என் கணவரின் சூழ்ச்சிகர திட்டத்திற்கு உட்பட்டு தங்களின் நாட்டையும், மக்களையும், தங்களையும் இந்த சோக நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறேன். என்னை முதலில் மன்னியுங்கள். மேலும். என் கணவன் தீவுக்குள் காலடி வைத்திருக்கிறான்.”

அதற்கு தீவரசன் உடனே, “ஆமாம் விநோதமான வாடை வீசுகிறது. பிணவாடை தான் அது. நாடு அழிவை நோக்கிப் போகிறது என்று இப்போதுதான் பேசிக்கொண்டிருந்தோம்.”

“உடனே அவனைக் கொன்றுவிட்டு நாட்டை மீட்டுவிடுங்கள்.”

“எதற்காக அவனைக் கொல்ல வேண்டும். அவன் நாட்டிற்குள் வந்திருக்கிறான். வந்தவன் விருந்தினன் தானே? எதற்காக கொல்லவேண்டும்.?”

“புரியாமல் பேசாதீர்கள். உங்களை நான் இந்த நிலைக்குக் கொண்டுவந்ததே அவனால் தான். அவன் என் புத்தியை இப்படியாக பணிபுரிய திருப்பிவிட்டவன்.” என அவள் சொன்னவிதத்திலிருந்து பெண்ணொருத்தி உண்மையைப் பேசிவிட்டால் அதன் செயல்தன்மை எவ்வளவு வீரியமாக இருக்கும் என்பதை அப்போது தீவரசனைப் பார்த்தால் தெரிந்திருக்கும். அவள் எதிர்பார்க்கும் உணர்வெழுச்சியை தீவரசனுக்குள் தெளிவாகப் பதிவு செய்துவிட்டாள்.

உடனே தீவரசன் அவள் முகத்துக்கு நேராகப் பார்த்து, “என் மக்களையும், வீரர்களையும் எல்லோரையும் இந்த சிதைவுக்குக் கொண்டு வந்துவிட்டாய். செய்தது தவறு என்று ஒரே வார்த்தையால் சொல்லி மன்னிப்பையும் கேட்கிறாய். ஆனால் நான் எப்படி என் மக்களிடம் மன்னிப்பு கேட்பது. உன் கணவன் கிடக்கிறான் விடு. என் நாட்டை.....!” தீவரசனின் நா தழுதழுக்கிறது. நெஞ்சு படபடக்கிறது. கண்கள் கலங்குகிறது. உடல் படபடக்கிறது.

“இப்படியொரு பழிச்செயலை என்னைச் செய்ய வைத்துவிட்டாயே. உன் பேச்சைக் கேட்டு இப்படியொரு பழியைச் செய்திருக்கிறேனே. நான் எந்த சென்மத்திலும் திருப்தியான வாழ்க்கையை இனி வாழமுடியாதே” என புலம்புகிறான். “நான் குற்றவாளி. நான் செய்தது தவறுதான். என் நாட்டில் யாரும் கலங்கக் கூடாது. சந்தோசமாக இருக்கவேண்டும் என்று நினைப்பேன். அப்படியாகப்பட்ட என் நாடு பெண்ணொருத்தி அழுது விடிகிறது என்றால்....அப்படி நான் யோசித்தது தவறுதான். நான் செய்தது மா பாவம்.” எனப் பேசிக்கொண்டே இருந்தவன் சட்டென தன் வாளை உருவி கூரையை நோக்கி எறிகிறான். அது அவனை நோக்கி மீண்டும் கீழே இறங்கிவர, மார்புக் கவசத்தைக் கழட்டி எறிந்துவிட்டு தன்னை நோக்கி இறங்கும் வாளை நோக்கி மார்பைக் காட்டுகிறான். அப்போது வாள் அவனது உடலுக்குள் இறங்குவதற்குள் ஒரு வில் அவனது மார்பைத் தைக்கிறது. எல்லோரும் அதிர்ந்து போகின்றனர். கீழே சாய்கிறான் தீவரசன். அவனது வாள் நேரம் தாழ்த்தி மார்பில் பதிகிறது. வில் எய்தவனின் முகத்தை உறைந்த கண்களோடு பார்த்து உறைந்து போகிறான். இந்த சோக சம்பவத்தினால் உடைந்துபோன மக்களின் அழுகுரலால் அந்தத் தீவே பற்றியெரிந்து சாம்பலானது.

“இதுதான் அந்த சம்பவம். இதில் நல்லவனான தீவரசன் எப்படிக் கெட்டவனாகிறான் பார்த்தாயா?”

“அவன் கெட்டவனில்லையே.”

“ஆங். ஒருபெண்ணுக்காக மக்களை இழக்கிறான். பாதுகாவலர்களை இழக்கிறான். கெட்டவனில்லையா? குறைந்தபட்சம் உயிரழந்தவர்களுக்கு அவன் கெட்டவனில்லையா?”

“இப்படிப் பார்த்தால் கெட்டவன்தான்.”

2

கூட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அவரவர் மனத் தளத்தில் நடந்துகொண்டிருக்கிறது. மனதில் பதிவாகியிருந்த ஒவ்வொரு தளத்திலும் அவர்கள் எடுத்து எடுத்து வாசித்த அந்த தளச் சம்பவங்கள் அவர்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் நகர்கிறார்கள். கால்கள் மட்டும் பயணிக்கத் தொடங்கிய திசையை நோக்கி போய்க்கொண்டே இருக்க. உள்ளுக்குள் அலையடிக்கிறது. ஓவென பத்துப் பதினைந்து அடிகள் உயர்ந்து மேலெழுந்து கரையோக்கி வருவதும் பின் மண்ணை வாரிக்கொண்டு மீண்டும் உள்ளுக்குள் சென்று மறைவதுமாக, அலையடிக்கிறது. எல்லோரது தளங்களிலும் உப்புக் காற்று.

கப்பல் கப்பலாக வியாபாரிகள். ஒதுங்க இடம் கிடைக்காமல் இங்கே ஒதுங்கலாம் என முடிவெடுக்கின்றனர். அன்று முதல் கரையை நெருங்க முடியாமல் கப்பலின் மேற்தளத்திலேயே நின்றுகொண்டு பைனாக்குலர் மூலமாக கரையில் விளையாடும் சிறார்களையும், கொஞ்சிக்குலாவும் தம்பதியரையும், பழையனப் பேசியபடி நடந்துகொண்டிருக்கும் முதியோர்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்கள் கடந்துகொண்டே இருக்கிறது. கப்பலில் உள்ள உணவுப் பண்டங்கள் தீருகிறது. கப்பல் ஆட்டம் காண்கிறது. இறங்கியே ஆகவேண்டும் என்றொரு நிலை வந்ததும், ‘எது வந்தாலும் சந்தித்தேதான் ஆகவேண்டும்’ என்று முடிவு கட்டிக்கொண்டு சிறுசிறு படகுகளில் சிறுசிறுகுழுவாக கரைநோக்கி வருகிறார்கள். அப்போது கரையிலிருந்தவர்கள் அவர்களின் வருகையை கவனிக்கிறார்கள். அப்போதைய அரசு அதிகாரிகளும் காவலர்களோடு கரைக்கு வந்து வருபவர்களைக் கவனிக்கிறார்கள்.

படகுகள் வந்துகொண்டிருக்கிறது. அப்போது திடீரென பெருமழை அடிக்க, பேய்க்காற்று வீச படகில் வந்தவர்கள் உயிர்க்கு பயந்து கதறுவதை கறையிலிருந்து வேடிக்கைப் பார்த்தவர்கள்,

“வருபவர்கள் யாராயிருந்தாலும் பாவம், உயிருக்குப் போராடுகிறார்கள். அதனால் அவருக்கு உதவுவோம்” என்று சொல்லியபடி எந்த அரசாணையையும் எதிர்பார்க்காமல் எந்த அதிகாரத்தின் கட்டளைக்கும் காத்திருக்காமல் உதவுவதற்காகப் போகிறார்கள், படகினை நோக்கி.

கரையிலிருந்து நீளமான பல கயிறுகள் பலரது கைகளிலிருந்தும் கட்டைகளிலிருந்தும், சிலைகளிலிருந்தும், தூண்களிலிருந்தும் படகுநோக்கிச் செல்பவர்கள் நீண்டு போய்க்கொண்டே இருக்கிறது. படகில் இருந்தவர்களை அடைந்ததும் படகில் இருந்தவர்களைக் காப்பாற்ற, அவர்களைத் தாம் கொண்டுவந்த கயிறுகளைப் பிடித்துக் கொண்டு நீந்தி வருமாறு போனவாகள் தம் மொழியில் கேட்டதை, என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, படகிலிருந்த பரதேசிகள் அவர்களை கயிறுகளின் பிடியிலிருந்து நீக்கிவிட்டு கயிற்றைப் பிடித்து நீந்திக்கொண்டு கரையை அடைகிறார்கள்.

பரதேசிகள் தத்தளிக்க வேண்டிய சூழலில் காப்பாற்றச் சென்றவர்கள் மாட்டிக்கொண்டு மாண்டுபோகிறார்கள்.
வெறும் வெளிநாட்டினர் மட்டும் கரையை அடைந்திருப்பதைக் கண்டதும் காத்திருந்தவர்கள் நெஞ்சில் பயம் கவ்வுகிறது. பயந்த கண்களோடு வந்தேறிகளைப் பார்க்கிறார்கள். வந்தேரிகள் வந்திறங்கிய இடம் தமது இடம்போல மிகச் சாதாரணமாக எல்லோரையும் திமிரான பார்வைப் பார்த்துவிட்டு, நேரே நகருக்குள் புகுகின்றனர்.

பின் கிடுகிடுவென்று வியாபாரம் செய்கிறார்கள். பெரிய மனிதர்களை விலைக்கு வாங்குகின்றனர். மதத்தைப் பரப்புகின்றனர். வீடுகட்டுகின்றனர். அரண்மனையையும் வாங்கிவிட்டு பூர்வகுடி மன்னனை பிளாட்பாரத்தில் உறங்கவைத்துவிட்டு வாயிற் கதவை மூடிக்கொண்டு வெகுநாட்கள் குடியும் கும்மாளமுமாக கழிக்கின்றனர்.
மக்களுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அரசாங்கம் அற்றுப்போய். தலைதெறிக்க என்னன்னமோ செய்து கொலையையும் கொள்ளையையும் எல்லோரும் செய்ய முற்படுகின்றனர். இதனால் மக்களில் பலவான்கள் அனைவரும் எதிர் பலவனால் அழிக்கப்பட்டு வந்தேறிகளை எதிர்க்க இப்போது மக்களில், முன்பிருந்தவர்களில் பாதிபேர்தான் என்ற நிலை உண்டானது. யாரும் வந்தேறிகளை எதிர்க்க முடியாத சூழல் ஏற்படுகிறது.

வந்தேறிகள் எதிர்பார்த்த சூழல் வந்ததும் மீண்டும் வாயிற்கதவைத் திறந்து குதிரையில் ஏறிக்கொண்டு நகர்வலம் வருகிறார்கள். வழியெங்கும் பிணக்குவியலும், இடிந்த வீடுகளும், சீரழிந்த வியாபாரத் தளங்களும் இருக்கக் கண்டு சந்தோசமாக மீண்டும் தம் அரண்மனைக்குச் சென்று முதன் முதலில் காகிதத்தில் தம் கட்டளையை பதிவு செய்து ஊரெங்கும் ஒட்டுகின்றனர்.

“இனி இது எங்களது நாடு. நான் “திஸ்டபிஷ்டா”. நான் தான் இனி உங்களது எசமானன். ஆனால் நான் உங்களது மன்னனல்ல. என்னை இங்கே அனுப்பி இந்நாட்டை மிகவும் வளமிக்க நாடாக மாற்ற உத்திரவு பிறப்பித்த எங்களது தலைவர் கொடிகோல் என்பவர் இருக்கிறார். அவரது குடையின் கீழ் நாங்கள் உங்களுக்கு நல்ல ஆட்சியைத் தருவோம். யாருக்கு? எங்களை வணங்கி எங்கள் சொற்படி நடப்போருக்கு. எதிர்ப்போருக்கு....”

அடுத்தடுத்த விளம்பரங்களும், அறிவிப்புகளும் சட்டங்களாக மாறின. மக்களின் வெள்ளிப்பணமும் தங்கக்காசுகளும் தகடுகளில் விநியோகிப்பட்டன, தங்கமும் வெள்ளியும் கப்பலேறியதால். இதே அறிவிப்புகளும், விளம்பரங்களும் நாளடைவில் மக்கள் மத்தியிலிருந்து அவர்களுக்கு சென்று சேர்ந்தது. விளைவு சில நூறு ஆண்டுகளிலேயே துண்டுதுண்டாக சிறுசிறு அரசர்களிடம் இருந்த நாட்டை ஒன்று படுத்தி திஸ்டபிஷ்டாவே, கொடிகோல் ஆணையை எம்மக்களிடம் கொடுத்து விட்டுப் போனதுதான் மிச்சம். வந்தேறிகளுக்கு இது ஒரு வேடந்தாங்கலானது அத்தனை ஆண்டுகாலமும். ஆனால் பூர்வ குடியினர் இன்னமும் அவர்களின் கல்வித் திட்டத்திலேயே காலத்தினை ஓட்டிக்கொண்டு பரதேசிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியாக போர் பயணத்திலிருக்கும் மக்களின் மனப்பதிவுகள் வெளியேறி வண்ணமாக இருந்தது, தம்மைப் பற்றியான பிரக்ஞையைப் பெற்றதும் தற்போதைய தம் வாழ்க்கையைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார்கள். தம்மைப் பற்றியான பகுதிக்குள் தாமாகவே வந்ததும் அவர்களது உடலும் மனமும் வெப்பத்தை உணர்ந்தது.

-அரியநாச்சி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It