எண்ணெய் வளம் மிக்க ஒரு சமூகத்தின் தலைவனும் சாமியார் மடமும் சிறையில். ஒரே சிறையிலில்லை. வெவ்வேறு சிறையில். அதுவும் ஒரே நாட்டில் இல்லை, வெவ்வேறு நாட்டுச் சிறையில். கைதிகள் எல்லோராலும் கைக்கூப்பி மண்டியிட்டு வணங்கப்பட்டவர்கள். கைக்கூப்பப்படுபவர்களால் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பிறகொரு நாள், இவர்களைக் கைது செய்தவர்கள் கைதாவார்கள். இப்படியாக நிரபராதி கைதியாகி, கைதி நிரபராதியாகி, குற்றங்கள் மாறிமாறி கைதுமேல் கைதாக இடம்பெயர்ந்து உட்காரும் இந்நாட்களில், போர் என்ற சொல் பழமையாகிவிட்டது. ‘இதுபோன்ற செயற்பாடுகள்’, போர் என்ற சொல்லுக்கு மாற்றாக இந்த நவீன உலகில் புழக்கத்தில் இருக்கிறது. ‘சின்னப்போர்’, ‘பெரியபோர்’ என்று எதுவுமில்லை. தரவரிசை தரமுடியாதளவிற்கு போர் நடந்துகொண்டேயிருக்கிறது.

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின், ‘பின்’ என்ற சொல் இரண்டாம். அப்படிச் சொன்னால் உலக யுத்தம் முடிந்துவிட்டதாகவும் அதன் பின் வேறொரு நிலை நடைபெற்றுவருவதாகவும் ஆகிவிடும். அதனால் இப்படிச் சொல்லலாம் ‘இரண்டாம் உலக யுத்தம் இரண்டாம் உலகயுத்தம் என்று சொல்லப்பட்டதே அது முடிவடையாமல் தொடர்கிறது’, என்று. வியட்நாம் போர் முடியவில்லை. இஸ்ரேல் போர் முடியவில்லை, ஈரான் ஈராக் போர் முடியவில்லை.... என ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது போர் போன்ற தாக்குதல்களைத் தொடுப்பதிலிருந்து ஞாபகப்படுத்திக்கொண்டே போனால் நாட்டுக்குள் நடக்கும் போர்கள் பலவும் நம் ஞாபகத்திற்குள் சேரும். அவையும் முடியவில்லை. எல்லாம் தொடர்ந்து நடக்கிறது. அவ்வப்போது கேட்கும் வெடிச்சப்தங்கள் அதற்குச் சாட்சி.

தொடர்ந்து நடக்கும் இந்தப்போர் எப்போது முடியும் என்று யாருக்கும் தெரியாது. ஏனெனில் முன்பு போர் முடிந்ததாகச் சொல்லப்பட்ட காலத்தை மனதிற்கொண்டு இதைப் பார்த்தால், இதுவும் அந்தப் போரின் தொடர்ச்சியாகவே இருக்கிறது. இந்தப் போர், போர் என்னும் சொல்லைத் தவிர மற்ற முறைகளில் ஒரு முழுமையான போராகத்தான் இருக்கிறது. இந்தப் போரில் எதிரி யார் என்றுத் தெரியாமல், யார் குறி வைக்கிறார்கள் என்று தெரியாமல், காய்கறி வாங்கச் சென்றவர்களும், கல்யாணத்திற்குப் பட்டுப் புடவை எடுக்கச் சென்றவர்களும், வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ள திருப்பதி சென்றவர்களும் உயிரோடு மீண்டும் வீடு திரும்ப முடியாமல் மூச்சையற்று எங்கெங்கோ வெடிகுண்டுகளுக்கு இரையாகி சின்னாபின்னமாக சிதறக் கிடத்தும் இது, விநோதமான போர்.

முன்பு போர் நடக்கிறதென்றால் திருவிழாவைப் போல் இருக்கும். போரிடுவது விளையாட்டைப்போல் இருக்கும். எதிரியும் எதிரியின் எதிரியும் நேருக்கு நேராக நின்று “தொடங்கலாம்” என்று குறிப்பை கொடுத்துக் கொண்டு அடித்துக்கொள்வர், வெட்டிக்கொள்வர். “போதும் அந்தி சாய்ந்தாயிற்று இருட்டில் கண் தெரியாது, எதிரி யார்?, தோழன் யார்? என்ற குழப்பம் வரும், ஆகையினால் போரை நிறுத்திக்கொள்வோம்” என இருவரும் பிரகடனப்படுத்திவிட்டு தூங்கச் சென்றுவிடுவர். அப்போது போர்க் காலங்களிலேயே வீரர்களால் தூங்க முடிந்திருக்கிறது. ஆனால் இப்போது போருக்குச் சம்பந்தமில்லாவர்களால் கூட நிம்மதியாக இருக்க முடிவதில்லை. தனியொரு மனிதனைத் தேடுகிறேன் பேர்விழி என பெரிய பெரிய கால்களுடன் ஊருக்குள் புகும் எமன்களின் ஆணவ அடிகளில் மிதிப்பட்டு மரணமெய்தும் ஆயிரமாயிர அப்பாவிப் பெண்களும், குழந்தைகளும், வயோதிகர்களும் கனவில் உயிர் துறப்பவர்களாக இறந்துவிடுகின்றனர்.

ஆயுதபலம், பொருள் செல்வாக்கு இதையிரண்டை மட்டுமே கொண்டு இது இரண்டை மட்டுமே போருக்கான தகுதியாகவும் கருவியாகவும் கொண்டு, நிராயுதபாணிகள் அனைவரையும் எதிர்ப்பற்று கொன்று குவிக்கும் போக்கில், மதத் தலைவர்களும், வியாபாரச் செல்வந்தர்களும், சினிமா நட்சத்திரங்களும், அரசியல் பெரும்புள்ளிகளும் கடத்தப்பட்டு, சிறைவைக்கப்படுகிறார்கள். சிறையெடுத்தவர்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் சிறைவைக்கப்பட்டவர்களால், சீர்கெட்டவர்களென்பதால் போர் எப்போதோ முடிந்துவிட்டது என்று சொல்லப்பட்டதெல்லாம் வெறும் சப்பக்கட்டு. போர் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. முடிவடையாத இரண்டாம் உலக யுத்ததின் தொடர்ச்சி இப்போது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது முடியாது. மனித குலம் முற்றுலுமாக ஒரு பேரழிவிற்குள் சிக்கி மறையும் வரை. மனித குலமனைத்தும் ஒரு தீர்க்க முடியா தொற்றுநோய்க்கு ஆட்பட்டு மறையும் வரை.

தொடர்ச்சியான கவனிப்பில் உலகம் ஏற்கனவே மேற்சொல்லப்பட்ட அந்த தீர்க்க முடியாத நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. அது, பக்கத்தில் யார் அமர்ந்தாலும் அல்லது கடந்து போனாலும் அவரை விரோதக் கண்ணோடு பார்க்கும் நோய்க்குணம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுவதிலிருந்து தோன்றுகிறது.

நோயின் வக்கிரம் இப்போது கூடிவிட்டது. நகரின் முக்கிய வீதிகள் அனைத்தும், நினைவுச் சின்னங்கள், பண்பாட்டு நூலகங்கள், சந்தைகள் அடுக்குமாடிகள் என எல்லாம் வெடிகுண்டுக்கு இரையாகி சிதைந்துவிட்டது. அவையெல்லாம் இடிபட்ட போது பரபரப்பாக ஓடிச்சென்று இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்தவர்களை முடிந்தவரை மீட்டு குணப்படுத்தி மீண்டும் வாழ்வு கொடுத்ததும், அவர்கள் மீண்டும் மீண்டும் அதே இடிபாடுகளுக்குள் போய் சிக்கிக்கொண்டால், அதே காப்பாற்றும் நபர் பெரும்பாலும் அடுத்தமுறைக்கும் கிடைப்பதில்லை. அதனாலேயே பலர் இரண்டாவது, மூன்றாவது சிக்கல்வரை தாக்குப்பிடிக்க முடிந்து மேலும் முடியாமல் இறந்துவிடுகின்றர். அவர்களால் எதிர்காலத்தில் கூடப்போகும் மனித எண்ணிக்கையும் அறுபட்டுவிடுகிறது. இப்படியாக பல நாடுகளில் மக்களின் எண்ணிக்கைக் குறைந்துவருவதாக செய்திகள்.

இப்போது அரிதாகிவிட்ட மனிதகுலத்தை மீட்டெடுக்க மீண்டும் போர் தொடங்கிற்று. காமத்தினை அனைவர் மனதிலும் விதைத்து சதா சர்வகாலமும் காமக்கனவிலேயே உலாவர சுதந்ததிரமும் பல நாடுகளில் கொடுக்கப்பட, இச்சையில் இழைந்து இழைந்து தேய்ந்த தேகத்தோடு எய்ஸ்டு எனும் நோயாளிகாளாக, அந்நோயினை பலருக்கும் பரவிட்டு அழிப்பவர்களாக அந்தக் காமநில மக்களின் வாழ்க்கை அமைந்துவிட்டது. என் நாட்டிற்குள்ளும் அவர்களின் காலடி தடம் தென்படுகிறது. என் மக்களும் நோஞ்சான்களாகின்றனர். நோயினால் அவதியுற்று அழிகின்றனர். என் நாடும் தன் மக்கள் தொகையை இழந்துவருகிறது. உலக வரைபடத்தின் பெரும்பகுதி மனித நடமாட்டமற்ற இடங்களாக மாறிவிட்டது. வசதிபடைத்தவர்கள் என்று யாரும் இல்லை. ஆள்பலம் உள்ளவனே பலவானவனாக பேசப்படுகிறான். ஆட்களை சேர்த்துக்கொண்டு ஆட்களை அடிமைப்படுத்தி நாடுநாடாக அலைகிறார்கள் மன்னர்கள். பத்துபேர் கொண்ட அரசு, நூறுபேர் கொண்ட அரசு, ஆயிரம் பேர் கொண்ட அரசு என்னும் நிலையில் பல்லாயிரக்கணக்கான அரசர்கள் உலக நிலத்தை ஆண்டு வருகிறார்கள். ஒருவருக்கொருவர் போர் புரிகின்றனர். விநோதமான போர் முறைகள்.

அதில் சில.

1. என் நாட்டில் பணிபுரிபவர்களுக்கு என் மக்களுக்கு அளிக்கப்படும் செளகரியங்களை விட இங்கு வெளியிலிருந்து வருபவர்களுக்கு அதிகம் கொடுக்கப்படும் என்பது.

2. பழங்கள் யாவும் விதைகளோடு இருப்பதால் உண்பதற்கு ஏதுவாக இல்லை, விதைகளுள் உடலைக்கொல்லும் விஷப்பூச்சிகள் உட்புகுந்து பழத்தோடு வளர்வதால் நல்லதல்ல. எங்களது ஆராய்ச்சியாளர்கள் விதைகளற்ற சதைப்பற்றான பழங்களை மிகக் குறைந்த விலையில் விற்கிறோம். அதனை விளைவிக்கும் வித்தையையும் “ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும்” விதையையும் நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம் வாங்கிப் பயனடையுங்கள் என்று ஏழை நாடுகளையும் வளரும் நாடுகளையும் வளர்ந்த நாடுகள் நிர்பந்திப்பது.

3. நவீன வாழ்க்கைக்கு உதவாத பல உபகாரணங்களை, அதாவது அப்பொருட்களைப் பயன்படுத்தும் நாடுகளின் சூழல் கெட்டுப்போகும் பலவற்றை குறைந்த விலைக்குக்கொடுத்து கெடுப்பது...

4. மக்கள் மலடாகும் மருந்துகளையும், உணவு வகைகளையும் இலவசமாக, அந்தந்த நாடுகளில் எப்போதாவது ஏற்படும் பஞ்சம், வெள்ளம், சுனாமி போன்ற காலங்களில் விநியோகித்து சாதிப்பது.

இதுபோன்ற சூழ்ச்சிகளாலும் குறுக்கு வழிகளாலும் எல்லா அரசர்களையும் விலைக்கு வாங்கி உலகத்தின் மொத்த நிலத்தையும் ஆளும் குணத்திற்கு கொண்டு வந்து விடுகிறது ஒரு நாடு, ரிமிந்தகம் என்னும் பெயர் கொண்ட நாடு. அந்நாட்டின் அரசனை ரிமிந்தகன் என்பர். மக்களை, (தோல்வியுற்ற மற்றும் விலைபோன மன்னர்கள்) ரிமிந்தகர்கள் என்பர். ரிமிந்தகன் ஆளும் ரிமிந்தக நாட்டின் அனைத்து ரிமிந்தகர்களும் சூழ்ச்சி குணம் படைத்தவர்கள். மன்னனுக்கும் மக்களுக்கும் பெரிய அளவிலான இடைவெளி உண்டு. அதனால் யாரும் அவனை நெருங்க முடியாது. எந்த விமர்சனமும் அவனை பாதிக்காது, விமர்சனமும் வராது. வந்ததும் இல்லை.

ஒரு உலகம். ஒரு மன்னன். ஒரு நாடு. இல்லை, நாடு என்னும் சொல் அகராதியிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது. இனி உலகம் என்று தான் குறிப்பிடவேண்டும், இது மன்னன் ரிமிந்தகனின் விருப்பம். சற்றுமுன் தான் ரிமிந்தக நாடு உருவானது. கடைசியாக இருந்த எண்ணெய் வளமிக்க நாட்டின் அதிபரை சிறைக்குக்கொண்டு சென்றதும் அந்நாடும் ரிமிந்தகத்தோடு சேர்ந்தது. அந்த நாட்டையும் சேர்த்தபின் தான் உலகம் ரிமிந்தகம் ஆயிற்று. அதன் தலைவன் ரிமிந்தகன் ஆனான். பிரஜைகள் ரிமிந்தகர்கள் ஆனார்கள்.

வெற்றிவிழா கொண்டாடும் பொருட்டு அனைவரும் ஒரு மலைமீது கூடுகின்றனர். பெரிய பெரிய முகங்கள் பாறைகளில் பொறிக்கப்பெற்ற மலை. ரிமிந்தகனால் கொல்லப்பட்ட, மலைமுகங்கள் பழைய வீரதீரக் கதாப்பாத்திரங்களாகும். உக்கிரமாக இவனை எதிர்த்து சண்டைபோட்டு மாண்ட அந்த முகங்களுக்கு அருகாமையில் வெற்றி விழாவைக் கொண்டாடுவதை மிகவும் விரும்பினான் ரிமிந்தகன். ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்ட மலையில், விளக்குகள் பல வண்ணங்களில் மின்னின. மேளதாளங்கள் முழங்கின. ஆடவரும் பெண்டிரும், அதாவது தோற்ற விலைபோன மன்னர்களும் அவர்களுக்கு எஞ்சிய அசிங்கமான ராணிமார்களும் போதையில் தள்ளாடித் தள்ளாடி ஆடுகின்றனர். உடலில் துணிமனிகள் விலகுவது தெரியாமல், யார் யாரோடு இருக்கிறோம் என்ற பிரக்ஞையில்லாமல் ஆடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த உலகில், அந்த நேரத்தில் அந்த மலைமட்டும் ஒளிவெள்ளத்தில் கூச்சலும் கும்மாளமும் நிகழ்கின்ற ஒரு பகுதியாக இருந்தது. முன்பு இது போன்று பல இடங்களில் வீடுகளில் வீதிகளில் நகரங்களில் கேளிக்கை விடுதிகளில் பலர் சந்தோசமாக இருக்க இந்த நிலை இப்போது இந்த மக்களின் சுழலில் மட்டும் இருந்தது.

மன்னன் ஒரு உயர்ந்த மேடையில், கண்ணாடிப்பேழைக்குள் பத்திரமாக இருந்துகொண்டு நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். வெகுநேரம் தன் முன், இதற்குமுன் பல நாடுகளை ஆண்டு வந்தவர்கள் அனைவரும் தன் அரசாட்சிக்குட்பட்ட மக்களாக மாறி, அவர்களை மேய்கும் ஆயனாக தன்னை உணர்ந்து அவ்வப்போது உள்ளுக்ளுள் சிரித்துக்கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் ஏதோ ஒரு எண்ணம் அவனுக்குள் அவ்வப்போது வந்து வந்து மறைந்துகொண்டிருந்தது. அது என்னதான் என்று ஆராய முயற்சிக்கும்முன் மறைந்துவிடுவதால், அதைப் புரிந்துகொள்ள முடியாமல், ஆரம்பத்தில் பெரிதுபடுத்தாமல் மறந்துவிட்டு அடுத்தடுத்து நடந்தவற்றின் மீது கவனத்தை செலுத்திக்கொண்டிருந்தான். ஆனால் நேரம் ஆக ஆக அந்த எண்ணமானது அடிக்கடிவருவதும் தொடர்ந்து மனசுக்குள்ளேயே இருப்பதும் பயமுறுத்துவதுமாக இருக்கிறது. இதுபோன்றிருக்கும் போது கண்முன் தோன்றும் காட்சிகளும், உண்மையில் அங்கே நடப்பதற்குப் புறம்பாக அவனுக்குத் தோற்றுவித்தது.

தாம் பார்ப்பது நிஜம்தானா என அடிக்கடி தன் உதவியாளனிடம் கேட்டு சரி பார்த்துக்கொண்டவன் ஒரு கட்டத்திற்கு மேல் தன் உதவியாளன் தான் கேட்கும் கேள்விகளுக்குத் தாறுமாறான பதில்களைச் சொல்வதாக உணர்ந்ததும் தான் காணும் காட்சியின் மீது அவனுக்கு அவநம்பிக்கை ஏற்பட எதுவும் பேசாமால் ஆடாமல் அசையாமல் உறைந்துபோய் பொறுமையை அனுஷ்டிப்பவனாக சிலையாக உட்கார்ந்துவிட்டான். அப்போது அவனைச் சுற்றியுள்ள கண்ணாடியில் அவனது உருவம் தென்பட்டது. அவனது சிறுவயது, அதாவது இளைஞனாக இருந்தபோதிருந்த தோற்றம் தென்பட்டது. கண்ணாடியில் தோன்றும் தன் இளைய பருவத்தினன் சிரித்துக்கொண்டே வாளை வீசியபடி முடிவற்று காய்ந்து வறண்ட நிலப்பகுதியில், போர்த்துறைக்குப் பயன்படுத்தப்பட்ட உயிரினங்கள் அனைத்தின் எலும்புக்கூடுகளும் இறைந்துகிடக்க, அவற்றின் மீது ஓடிக்கொண்டிருந்தான். அவ்வப்போது எலும்புக்கூடுகள் எழுந்து அவனது ஓட்டத்தை தடை செய்யும் விதத்தில் அவனது காலைப் பிடித்து இழுத்து தடுக்கின்றன. அவற்றையெல்லாம் உதறிக்கொண்டு ஓடும் அவன், தான் அடிக்கடிப் பெருமையாகப் பேசும் அந்த போர் நடந்த நகரத்தை அடைகிறான்.

அங்கே கட்டிடங்கள் இடிந்துகிடக்க, பாலங்கள் உடைப்பட்டிருக்க, முன்பு வாழ்ந்த மனிதர்களின் போக்குவரத்துச் சாதனங்களும், வீட்டுப் பொருட்களெல்லாம் வீதிகளிலும் வீடுகளின் மீதும் இறைந்து கிடக்கின்றன, உடைந்து சிதைந்து. இது வானை முட்டும் ஆஜானுபகுவான யாரோ ஒரு ராட்சதனால் அங்கு வாழ்ந்த மனிதர்களையும் அவர்களது பொருட்களையும் அதனதன் இருப்பிடத்திலிருந்து அள்ளி எடுத்து வீசியெறிந்ததுபோல் கிடந்ததைக் கடக்கிறான், சிரித்தபடி. வேகமாக சிரிக்கிறான். சிரிப்பின் சப்தத்தால் மலை அதிர்கிறது. அங்கு ஆடிப் பாடிக் கொண்டிருந்த மக்களான ரிமிந்தகனிடம் தோற்று இப்போது அடிமையாக இருக்கும் மன்னர்கள் பயத்தால் நடுங்கியபடி பாறைகளுக்கிடையில் ஒளிந்துகொண்டு அவனையே பயத்துடன் பார்க்கின்றனர். அப்போது சிரிப்பின் அதிர்வை கண்ணாடி தாங்காமல் பேரிடியான ஒரு சப்தத்தினைக் கொடுத்து உடைந்துச் சிதறியது.

ரிமிந்தகன் பதறியடித்துக்கொண்டு எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தான். அமைதி, உறைந்துபோயிருந்த அந்த மலையில் அவனைத் தவிர மற்றதெல்லாம் அதிர்வற்று அவனையே பார்த்துக்கொண்டிருந்தது. அப்போது ஒரு கழுகு வெகுதூரத்திலிருந்து மன்னனையே உற்றுப் பார்க்கிறது. அதற்குத் தெரியும் உண்மை எது பொய் எதுவென்று. அதுதான் தன்னை பயமுறுத்துகிறதோ என்றுகூட நினைத்தான் மன்னன். வெகுநேரத்திற்குப்பின் மன்னன் தன்னை சுதாரித்துக்கொண்டு அவ்விடத்தைவிட்டு அகல்கிறான். பின் அவனைத் தொடர்ந்து நடுங்கியபடி மற்ற எல்லோரும் வெளியேறுகின்றனர், பயத்துடனும்.

எல்லோரும் சென்றதும் கழுகு, மலைக்கு வந்து மன்னன் அமர்ந்திருந்த நாற்காலியின் கையில் அமர்ந்து மலையை சுற்றிச் சற்றிப் பார்த்துக்கொண்டிருந்து. அது இவ்வாறு வெகுநேரம் பார்த்துக்கொண்டிருப்பதிலிருந்து அது எதையோ மனசுக்குள் வைத்துக்கொண்டு சொல்ல வருவதாக காணப்பட்டது. அப்போது திடீரென கறுத்துக்கொண்டிருந்த மேகத்தைப்பார்த்து கடகடவென கழுகு,

“ஏய். இப்போது கறுத்துவரும் நீ அப்போ என்ன செய்துகொண்டிருந்தாய்?” என்று கோபமாகக் கேட்டது.

அதற்கு மேகம், “எப்போ?” என்று பதில் கேள்வி கேட்டதும், கழுகு அதற்கு,

“அப்போ. யாருக்கும் உரிமையில்லாத உயிரை இவன் பறித்துக்கொண்டிருந்தபோது”

“யார் யார் உயிரைப் பறித்தது?”

“யாரும் பறிக்கவில்லையா?”

“எல்லோரும் அவரவர் விருப்பப்படிதான் இறந்தார்கள். இதில் யாரும் யாருடைய உயிரையும் வலியச்சென்று எடுக்கவில்லையே!”

“ஐயோ! உன்னிடம் போய் கேட்டேனே! நீ நியாயமற்றவன். நீ ஒரு கொலைகாரன்.”

“மழையைக் கொலைகாரன் என்று சொன்ன முதல் உயிர் நீ தான்.”

“உலக நாடுகள் எல்லாம் அழிந்து இப்போது எல்லா இடங்களும் சுடுகாடுபோல் கிடக்கிறதே இது நியாயமா?”

“என்ன நீ நியாயத்தைப் பேசுகிறாய். உன் நியாயம் என் நியாயம் இல்லை. உன் சரி என் சரியல்ல. அதைப் புரிந்துகொள். அவன் எல்லோரையும் கொல்லவில்லை. யாரோ ஒரு அரசனை வசப்படுத்தினான். அதற்கு மயங்கின அரசனால் மயங்கினவனின் அரசு இவனது கைக்கு வந்தது.”

“அரசு வந்தது என்று சொல்லாதே. மக்கள் வந்தார்கள் என்று சொல்.”

“சரி, மக்கள் வந்தார்கள். ஆனால் இவனுக்கும் அந்த மக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்த மக்களுக்கும் அவர்களது மன்னனுக்கும் மட்டும்தான் தொடர்பு. இவனுக்கும் அந்த மன்னனுக்கும் தான் தொடர்பு. இது ஒரு சங்கிலியைப் போன்ற அமைப்பு. முதல் வளையத்திற்கும் மூன்றாவது வளையத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் முதல் வளையத்திற்கும் இரண்டாவது வளையத்திற்கும் தொடர்பு உண்டு. இரண்டாவது வளையத்திற்கும் மூன்றாவது வளையத்திற்கும் தொடர்பு உண்டு. ஆனால் மூன்றும் சேர்ந்ததுதான் சங்கிலி. அதைப் புரிந்துகொள்.”

“புரிந்து கொள்வதால் ஏற்பட்டதுதான் இந்த உலக மரணம்.”

“உலகம் இறக்கவில்லை. உலகில் யாரும் மரணமடையவில்லை. ஆனால் நீ எதையோ எதிர்பார்த்து இப்படியெல்லாம் பேசுகிறாய். என்னைப்போல் இரு. நான் எதையும் எதிர்ப்பார்க்கவில்லை, மழைபொழிகிறேன். ஆனால் பிணத்தை எதிர்ப்பார்க்கும் நீ, பிணத்தைக் கண்டு பயந்து மரணத்திற்கு எதிராகப் பேசுகிறாய்.”

“மரணம் இயல்பு. அதற்கு எதிராக நான் பேசவில்லை. நான் பிணந்திண்ணியாக இருந்தாலும் உலகமே இப்போது ஒரு மிகப்பெரிய சுடுகாடாகத் தோன்றுவதால் .... நான் ரிமிந்தகனின் போர் முடிவு அறிவிக்கப்பட்ட பின் எல்லா நாடுகளையும் ஒரு சுற்றுப் பார்த்துவிட்டு வரலாம் என கிளம்பி, சுற்றிவிட்டுத் திரும்பியிருக்கிறேன். உலகின் தற்போதைய கோர முகத்தை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவ்வளவு கொடூரமாகக் காட்சியளிக்கிறது. நந்தவனமும், அருவியும், காடும் மலையும் ஆடுகளும் மாடுகளும், சிங்கமும், சிறுத்தையும் கொக்கும் கோழியும் என உயிர்திரளாக பசுமையாக, பாலையாக, சில்லிடும் மலைத் தொடர்களாக தளதளவென்று இருந்த உலகம் இப்போது சுட்டுப் பொசுங்கி நாறிக்கிடக்கிறது. உடைந்து சில்லுசில்லாக சிதறிக்கிடக்கிறது.

ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு நிமிடம் கூட என்னால் ஒரு இடத்திலும் நிற்க முடியவில்லை. கால் வைக்க பயமாக இருக்கிறது, பூமியில். இப்போது கறுத்துத் திரண்டிருக்கிறாய். மழையைப் பொழியப் போகிறாய். உன்னால் எல்லாம் சுத்தமாகப் போகிறது. எல்லாம் கழுவப்பட்டு புல்பூண்டு முளைக்கப்போகிறது. அந்த குளிர்ச்சியான பொழுதை சீக்கிரம் தா. இனி இதுபோன்ற பேச்சுகளை நாம் பேசவேண்டாம். போ. உன் வேளையைக் கவனி.” என சொல்லிவிட்டு கழுகு தன் இறகுகளால் கண்களையும் காதுகளையும் மூடிக்கொள்கிறது. மழைபொழிகிறது. மழையில் கழுகு மட்டுமே நனைகிறது. யோகியைப்போல் பாவங்களையெல்லாம் கழுவிவிடப்பட்ட கழுகு தன் அமைதியான சாந்தரூபக் கண்களால் மீண்டும் உலகைப் பார்க்கிறது. உலகம் அதன் பனித்திரையில் வெள்ளைப்புகையாய் தெரிய, சட்டென ஈர இறகுகளை விரித்து படபடவென அடித்துக்கொண்டு வேகவேகமாகப் பறந்து மேகத்தினுள் சென்று மறைந்தது, தன் உடலையும் மனதையும் உலர்த்திக்கொண்டே.

-அரியநாச்சி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It