அவளது விரல்கள் போனின் டிஸ்பிளேவில் பரத நாட்டியம், குச்சிப்பிடி, ரெக்கார்டு டேன்ஸ் எல்லாவற்றையும் ஆடிக் கொண்டிருந்தது. இன்னும் சில நிமிடங்களில் கார்த்திக் வெளியே வந்து விடுவான். அதற்குள் திறந்துவிட வேண்டும். திறந்திடு ஐபோனே. அவளுக்குத் தெரிந்த அனைத்து பாஸ் வேர்டுகளையும் பயன்படுத்தி விட்டாள், அண்டாகாகசம் உட்பட. ஆனால் திறக்கத்தான் முடியவில்லை. ஒரு வேளை அவனது வண்டி எண்ணை பாஸ்வேர்டாக வைத்திருப்பானோ? டி என் 41 பி 1604. வேகவேகமாக அடித்தாள்.

"ம்ஹூம்.”

கதவு திறக்க கார்த்திக் இடுப்பில் கட்டிய துண்டுடன் வெளியே வந்தான். கண்ணில் கோபம் கொப்பளிக்க கையில் தன்னுடைய போனை வைத்துக் கொண்டு டைப்பிங் பழகிக் கொண்டிருக்கும் அனிதாவைப் பார்த்தவுடன் அவனது வாயில் இசைந்து கொண்டிருந்த இளையராஜா சட்டென்று மௌனமானார்.

"இங்க பாரு கார்த்தி. எனக்கு நீ பண்றது கொஞ்சம் கூட பிடிக்கல. நீ எதுக்கு போன லாக் பண்ணி வெச்சிருக்க? அப்பிடி என்ன சீக்ரெட் இருக்கு இதுல. உன் ஆபீஸ்ல புதுசா அந்த சிறுக்கி வேலைக்கு சேர்ந்ததுல இருந்து தான் நீ இதெல்லாம் பண்ற. அதுக்கு முன்னாடி நீ அப்படி இல்ல. எனக்குத் தெரியும். நீங்க ரெண்டு பேரும் வாட்சாப்ல சாட் பண்ணிக்கிறீங்க. வீடியோ கால் கூட பண்ணுவீங்க. இப்ப எல்லாம் உங்களுக்கு நான் கசந்து போயிட்டேன் இல்ல. கல்யாணம் ஆகி 5 வருஷம் ஆச்சு, குழந்தையும் பெத்து அரக்கெழவி ஆயிட்டேன். அதனால என்ன விட்டுட்டு புதுசா தேடுற. நீ இப்ப பாஸ்வேர்ட சொல்லல, அப்புறம் நான் பாட்டுக்கு போயிட்டே இருப்பேன். நானும் கை நெறைய சம்பாதிக்கிறேன். என் குழந்தைய என்னால பாத்துக்க முடியும். நீ பண்ற அட்டகாசத்த எல்லாம் இனிமேலும் பாத்துட்டு இருக்க முடியாது."

படபடவென்று பொரிந்து கொண்டிருக்கும் அனிதாவை முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்த கார்த்தி எதுவும் பேசாதது அவளுக்கு இன்னும் ஆத்திரத்தைக் கிளப்பியது.

"இப்பிடி உம்மணாமூஞ்சியா இருந்தா என்ன அர்த்தம். கல்யாணம் ஆன புதுசுல உன் போன் என்கிட்ட தான் இருக்கும். எல்லா காலையும் நான் அட்டென்ட் பண்ணினதுக்கு அப்புறம் தான் நீயே பேசுவ. உன் வாட்சாப், ஃபேஸ்புக், மெசெஞ்சர் எல்லாத்தையும் நான் தான் ஃபர்ஸ்ட் பாப்பேன். ஆனா இப்ப. மொத்த போனையும் லாக் பண்ணி வெச்சிருக்க. நீ யாருக்கு மெஸேஜ் அனுப்பறன்னே தெரில. இதுக்கு ஒரு முடிவு பண்ணியே ஆகணும். பாஸ் வேர்டு சொல்ல போறீயா இல்லியா?"

அவளது முகத்தையே வெறித்துப் பார்த்த கார்த்தியின் உதடுகள் அசைந்தன.

"லூஸாடி நீ?"

"ஆமாமா. நான் லூஸுதான், என் பின்னாடி நாய் மாதிரி அலஞ்சவனெல்லாம் இன்னைக்கு லச்ச லச்சமா சம்பாதிச்சு செட்டில் ஆயிட்டான். அவன எல்லாம் ஒதுக்கிட்டு அப்பா அம்மா சொன்னாங்களேன்னு உன்ன கல்யாணம் பண்ணினேன் பாரு.. நான் லூஸு தான். அதான் நீ கண்டவகிட்ட வாட்சாப்ல பேசிட்டு இருக்க.”

"சும்மா வாய்க்கு வந்தத பேசாத அனிதா. கொஞ்சமாச்சும் சென்ஸோட பேசு. ஒரே ஆபீஸ்ல வேலை செய்யறோம்ங்கறத தவிர எனக்கும் அந்த பொண்ணுக்கும் வேற எந்த சம்பந்தமும் இல்ல.”

"அப்பிடின்னா பாஸ்வேர்டு சொல்லு. ஏன் எப்ப கேட்டாலும் லூஸாடி நீன்னு வாய அடைக்கிற? மடில கனம் இல்லாட்டி எதுக்கு பயந்துக்கனும்? இப்பிடியே பண்ணிட்டு இருந்தா நாம சேர்ந்து வாழ எல்லாம் முடியாது. எங்க வீட்ல சொல்லி டைவர்ஸ்கு அப்ளை பண்ணிட்டு நான் போயிடுறேன். நீ இந்த கெரகத்த வெச்சுகிட்டு எவகூட வேணாலும் சந்தோசமா இரு”. போனை தெளிவாக பெட்டில் விசிறி அடித்தாள்.

கார்த்தி "லூஸாடி நீ", என்றவாறு மொபைலை அள்ளிக் கொண்டு பக்கத்து அறைக்குச் சென்று கதவைச் சாத்திக் கொண்டான்.

அனிதாவுக்கு ஆற்றாமையாக இருந்தது. என்ன ஜென்மம் இவன்? இவனைக் கல்யாணம் செய்த ஒரே காரணத்துக்காக இவன் செய்யும் அயோக்கியத்தனம் அனைத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டுமா? கட்டின பொண்டாட்டியிடம் சொல்லக் கூடாத அளவுக்கு அப்படி என்ன சீக்ரெட் வேண்டிக் கிடக்கிறது? ஏதோ தவறு செய்கிறான் என்பது மட்டும் தெரிகிறது.

இப்போது கொஞ்ச நாட்களாக மட்டும் தான் கார்த்தியின் போக்கில் மாற்றம் தெரிகிறது. அவனது அக்கவுண்டில் இருந்து 2 லட்ச ரூபாய் எடுத்திருக்கிறான். ஆனால் அதில் ஒரு பைசாவைக் கூட வீட்டுக்காக செலவு செய்யவில்லை. எங்கே என்று கேட்டால் கடன் அது இது என்று மழுப்பலான பதில்கள். கொஞ்ச நாட்களாகத் தான் அவன் இப்படி நடந்து கொள்கிறான். அதுவும் அந்த கடங்காரி அவனது அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்த பிறகு.

அன்றைக்கு பேரண்ட்ஸ் டீச்சர் மீட்டிங்குக்கு பையனின் ஸ்கூலுக்கு போக வேண்டும் என்பதற்காக அவனது அலுவலகத்திற்கு சென்ற போது தான் அந்த கன்றாவியைப் பார்த்தாள். என்னதான் சக ஊழியை என்றாலும் டேபிளில் சாய்ந்து கொண்டு அவள் வருவது கூடத் தெரியாமல் அப்படியா அரட்டை அடிப்பது? அது குறித்து கேட்டதற்கு 'லூஸாடி நீ' என்ற ரெகுலர் பதிலை மட்டும் தான் சொன்னான். என்னவோ தப்பு நடக்கிறது. ஆனால் என்ன? ஆதாரம் இல்லாமல் எதையும் சொல்லிவிடக் கூடாது தான். அந்த போனை மட்டும் அன்லாக் செய்துவிட்டால் போதும். அவனது வண்டவாளங்கள் எல்லாம் தண்டவாளம் ஏறிவிடும். ஆனால் எப்படி?

அவளது பெயர், இஷ்ட தெய்வம், பிறந்த நாள், அந்தக் கடங்காரியின் பெயர், குழந்தையின் பெயர், எல்லார் பெயரையும் அனிதா உபயோகித்துப் பார்த்து விட்டாள். 12345, 109876, abcde, edcba, vwxyz, zyxwv, அவனுக்குப் பிடித்த அஜித், டெண்டுல்கர், அன்புமணி ராமதாஸ், எல்லா கருமத்தையும் போட்டாகி விட்டது. அவனது அம்மா, பாட்டி பெயர்கள், சில்க் ஸ்மிதா என்று ஒன்றும் பாக்கியில்லை. திறந்து தொலைய மாட்டேன் என்கிறது.

இன்றைக்கு வேலைக்குப் போகும் மனநிலையில் அவள் இல்லை. யாரிடம் கேட்டால் பாஸ்வேர்டை கண்டுபிடிக்க முடியும்? ஹ்ம்ம்ம்ம்? டக்கென்று அவளது நினைவுக்கு வந்தது முகிலன் தான். அவளது பள்ளித் தோழன். ஐஐடியில் கணிணிப் பொறியியல் முடித்து அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் பணிபுரிகிறான். கம்ப்யூட்டரில் புலி. ஹேக்கிங் செய்வதில் மன்னன். அவனிடம் பேசிவிட வேண்டியது தான்.

டக்கென்று கதவு திறக்க உள்ளிருந்து வெளியே வந்தான் கார்த்திக். அடர் நீல நிற பேண்ட், வெளிர் நீல சட்டை அவனுக்கு கச்சிதமாகப் பொருந்தி இருந்தது. ஏன் இவனுக்கு மட்டும் தொப்பையே வர மாட்டேன் என்கிறது. அனிதாவின் கண்கள் அவளை அறியாமல் அவளது வயிற்றை நோக்கியது. கல்யாணத்துக்கு முன்னாடி சிக்குன்னு இருந்த உடம்பா இது? பிரசவத் தொப்பை. குறைவேனா என்கிறது. இடுப்பில் அதிகப்படியான தசை வழிய ஆரம்பித் துவிட்டது. ஜாக்கெட்டுகளின் கைப்பகுதித் தையலை பிரிக்காமல் போட முடிவதில்லை. அதனால் தான் இவனுக்குத் தன்னை பிடிக்காமல் போய் விட்டதா? இவனுக்காகவும் பையனுக்காகவும் தானே வேலைக்கும் சென்று சம்பாதித்து, வீட்டு வேலையும் செய்து, தன்னை கவனிக்க நேரமில்லாமல் இப்படி ஊதிப் போய் இருக்கிறோம். மற்ற பெண்களைப் போல ஜிம்முக்கும் பியூட்டி பார்லருக்கும் தன்னால் மட்டும் போக முடியாதா என்ன?

இருக்கட்டும். அந்த போனை மட்டும் அன்லாக் செய்து விட்டால் போதும். அதற்குப் பிறகு இருக்கு கச்சேரி.

"ஆபீஸ் போகலியா?”

"இல்ல.. நான் இன்னிக்கு லீவு.”

"ஏன் உடம்பு சரி இல்லியா?”

"இல்ல. மனசு சரி இல்ல.”

அதன் பிறகு கார்த்திக் பேசவில்லை. ஷூவை மாட்டிக் கொண்டு பைக்கில் ஏறி அலுவலகம் கிளம்பி விட்டான்.

கொஞ்சம் குண்டாகி விட்டோம் என்பதைத் தவிர தன்னிடத்தில் என்ன குறை? சம்பாதிச்சுக் குடுக்கறோம். சோறாக்கிப் போடுறோம். அவன் நெனச்சப்ப எல்லாம் சந்தோஷமா வெச்சுக்கறோம். எந்த கஷ்டமும் அவனுக்குத் தெரியாத அளவுக்கு குடும்பத்த நடத்தறோம். இத விட ஒரு பொண்டாட்டி என்ன பண்ணுவா? ஏன் தான் இந்த ஆம்பளைங்க எல்லாம் இப்பிடித் திரியறானுகளோ. என்ன.. கொஞ்சம் அதிகமா செலவு பண்ணுவேன். கையில கொஞ்சம் காசு சேர்ந்துட்டா நகையா வாங்கி வெச்சுடுவேன். அதுகூட நான் போடறதுக்கா? இப்போல்லாம் நகை வெலையும் பெட்ரோல் வெலையும் தான் ஏறிக்கிட்டே போகுது. பெட்ரோல் வாங்கி சேமிக்க முடியாதுங்கறதால நகை வாங்கறேன்.

அவருக்கு பிராண்டட் போட்டா தான் கெத்தா இருக்கும். பாட்டால கூட ஷூ வாங்கலாம். ஆனா உட்லேண்ட்ஸ்ல இருக்குற கெத்து வருமா? அதுக்கு கொஞ்சம் காசு செலவு பண்ணத்தான் வேணும். வீட்டுல எல்லாமே கொஞ்சம் ஆடம்பர பொருளாத்தான் வாங்கிப் போட்டிருக்கேன். சொந்த பந்தம்லாம் வரப்போ வீட்டுல பழசும் பட்டையுமா கெடந்தா நல்லாவா இருக்கும்? இவனுக்கு அதெல்லாம் பிடிக்காது. 'லூஸாடி நீ .. ஊதாரித்தனமா செலவு வெட்டி செலவு'ம்பான். சம்பாதிக்கற காசுல கொஞ்சம் கெத்தா வாழுறது அவ்ளோ பெரிய தப்பா என்ன? அதுக்கு பேரு ஊதாரித்தனம்னா இருந்துட்டுப் போகட்டும்.

அனிதாவுக்கு சாப்பிடக் கூடத் தோன்றவில்லை. தன்னுடைய மொபைலை எடுத்து வாட்சாப்பை திறந்தாள். முகிலன் என்றிருந்ததை கிளிக் செய்தான். அவனது டிபியில் மார்க் ஜூகர்பெர்க் சிரித்துக் கொண்டிருந்தார். என்ன ஜென்மமோ? அவள் அழைத்த இரண்டாவது நொடியில் அழைப்பை ஏற்றான் விமலன்.

"ஹேய்.. அனீட்டா"

"என் பேர ஒழுங்கா சொல்லுடா முண்டம்"

"எப்பிடி இருக்க, வீட்டுக்கார், பையன் எல்லாம் நல்லா இருக்காங்களா?

"அதெல்லாம் இருக்காங்க. ஒரு முக்கியமான டவுட்டு. கிளியர் பண்ணு"

"என்ன?

"என் புருஷனோட போன் பாஸ்வேர்ட கண்டு பிடிக்கணும்,”

மறுமுனையில் முகிலன் வெடித்துச் சிரிக்க ஆரம்பித்தான்.

"நோ வே.. ஒரு பாவப்பட்ட ஆண் குட்டியோட சாபத்துக்கு நான் ஆளாக விரும்பல.”

"டேய். கொன்றுவேன். இங்க நான் இருக்கற டென்சன்ல உன்னையே டைவர்ஸ் பண்ணிடுவேன். ஒழுங்கா சொல்லித் தொல.”

"கூல் கூல் buddy, டென்சன் ஆவாத. என்ன போனு வெச்சிருக்காரு உன்னோட லைப் டைம் அடிமை?”

"செருப்பு பிஞ்சுடும். ஐ போன் 11 pro”

"கிழிஞ்சுது போ. வேற போன்னா கூட ஏதாச்சும் பண்ணலாம். ஐபோன் சான்சே இல்ல.”

"அப்போ என்ன தான் வழி?"

"கால்ல விழுந்து கதறு. ஒருவேள அவரே பரிதாபப்பட்டு பாஸ்வேர்டு கொடுக்கலாம்.”

"செத்துப்போ நாயே.”

அழைப்பைத் துண்டித்தாள் அனிதா. அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சாதா போன் வாங்கித் தராமல் ஐ போன் வாங்கித் தந்த தன்னுடைய தயாள குணத்தை நொந்து கொள்வதைத் தவிர, அவளுக்கு வேறு வழி எதுவும் தெரியவில்லை. அப்பவே அவன் சொன்னான். இவ்ளோ வெலை கொடுத்து போன் வாங்கணுமான்னு. இதான் கெத்து எனச் சொல்லி வாங்கிக் கொடுத்ததற்கான பலனை அனுபவிக்கிறோம் என ஆற்றாமையாக இருந்தது அனிதாவுக்கு. சாயங்காலம் வரட்டும். இன்றைக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என முடிவெடுத்தவள் முன்கதவை சாத்திவிட்டு படுக்கையில் விழுந்து சில நிமிடங்களில் உறங்கிப் போனாள்.

'ஹைர ஹைர ஹைரோப்பா..' எனப் பின்னணியில் பாடல் ஒலிக்க கார்த்தியும் அந்த கடங்காரியும் ஸ்விட்சர்லாந்தின் புல்வெளிகளில் மாஸ்க்கோடு நடனம் ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்து 'என்னாங்க' என்று அனிதா கதறிய போது தான் அவளது மண்டைக்குள் மணியடித்தது. திடுக்கிட்டு விழித்த அவளது நைட்டி வியர்வையில் தொப்பலாக நனைந்திருந்தது. ச்சைக்.. கனவு. காலிங்பெல் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்தது. கடிகாரம் மணி 4.30 என்றது. கவின் தான். இவ்வளவு நேரமா தூங்கிவிட்டோம்?.

கதவைத் திறந்தவுடன் "அம்மா, நீ சீக்கிரம் வந்துட்டியா" என சொல்லிக் கொண்டே கவின் உள்ளே நுழைந்தான்.

”நான் இன்னிக்கு ஆபீஸ் போகலடா", என்றவாறு மீண்டும் படுக்கையறைக்குள் நுழைந்து படுக்கையில் தொப்பென்று விழுந்தாள். காலையிலிருந்து சாப்பிடாதது தலையை வலித்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் கார்த்திக் வந்து விடுவான். வரட்டும். ஹாலில் கவின் ஏதோ கார்ட்டூன் சேனலை பார்த்துக் கொண்டிருந்தான்.

”பிரிட்ஜ்ல ஃப்ரூட் சாலட் இருக்கு, எடுத்து சாப்பிடு" என்றவாறு கண்களை மூடிக் கொண்டாள்.

வீட்டுக்குள் நுழைந்த கார்த்திக் சாக்ஸைக்கூட கழட்டாமல் டிவி பார்த்துக் கொண்டிருந்த கவினை முறைத்தான். டீப்பாயில் இருந்த கிண்ணத்தில் மிச்சமிருந்த திராட்சைக் கொட்டைகளை ஈ மொய்த்துக் கொண்டிருந்தது.

"படிக்காம டிவி பாக்குறியாடா?"

"அப்பா இப்ப தான் போட்டேன்.”

"அம்மா எங்க"

"பெட் ரூம்ல"

"பால் குடிச்சியா?"

"இல்ல.”

கார்த்தி பெட்ரூமுக்குள் நுழைந்து லைட்டைப் போட்டான்.

"தூங்குறியா?"

"ஆமா...”

"செரி தூங்கு" என்றவன் மீண்டும் லைட்டை அணைத்து விட்டு கிச்சனுக்குள் நுழைந்தான்.

என்ன நெஞ்சழுத்தம். தான் ஒருத்தி காலையில் இருந்து பட்டினியா கிடப்பதைக் கூட கண்டு கொள்ளாமல் ஒரே வார்த்தையில் 'தூங்கு' என அலட்சியமாகச் சொல்லிச் செல்கிறான். ஆம்பளத் திமிரு. ஆம்பளையா இருந்தா என்ன அட்டகாசம் வேணாலும் பண்ணலாமா? பொட்டச்சி நான் என்ன செஞ்சிருவேன்னு தெனாவெட்டு. மேல் சாவனிசம். இவன்கூட ஒரு நிமிஷம் கூட இனி இருக்க முடியாது. இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு பாத்துற வேண்டியது தான்னு றெக்கைய சிலுப்புற சேவல் மாதிரி கொண்டையை முடிந்து கொண்டு அவள் படுக்கையை விட்டு எழுந்த போது தான் கிச்சனிலிருந்து அவனது அலறல் கேட்டது.

இரண்டே எட்டில் அவள் கிச்சனை அடைந்த போது அவனது கைகள் இரண்டிலும் சுடுபால் கொட்டி இருந்தது. கொதிக்கும் பால் தரை முழுவதும் சிந்தி இருந்தது. பால் பாத்திரம் கீழே உருண்டு கிடந்தது.

"உனக்கு ஏன் இந்த வேல. என்ன கூப்பிட வேண்டியது தானே.. அச்சச்சோ கொப்புளம் வந்துறப் போகுது" என்றவாறு அவனை சிங்க்குக்கு இழுத்துச் சென்று பைப்பைத் திறந்து தண்ணீருக்கடியில் அவனது கைகளை வைத்தாள்.

"கவினுக்கு ஹார்லிக்ஸ் போட்டு கொடுக்கலாம்னு பார்த்தேன். பால இறக்கும் போது கை நழுவிருச்சு" என்றான் கார்த்தி.

அவனது கைகள் சிவந்து போய் இருந்தது. எரிச்சலில் அனத்த ஆரம்பித்தான். இரண்டு கைகளிலும் கொப்புளங்கள் வருவதற்கான அறிகுறி தெரிந்தது.

"வா ஹாஸ்பிடல் போலாம்.”

"அதெல்லாம் வேண்டாம்.”

"கொப்புளம் வருது வெளையாடாத வா..”

"நீ பிரசாந்த கூப்பிடு"

பிரசாந்த் கார்த்தியின் நண்பன். டாக்டர். பத்து வீடு தள்ளி குடியிருக்கிறான்.

"அவன் நம்பர் என்கிட்ட இல்லியே.”

சட்டென்று கார்த்தியின் கை அனிதாவுக்கு மறந்து போனது. இதை விட்ட வேற நல்ல வாய்ப்பு வராது என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். இதை உபயோகப் படுத்திவிட வேண்டும்.

ஹாலுக்குள் பாய்ந்தவள், அவனது மொபைலைத் தூக்கி வந்தாள்.

"பாஸ் வேர்டு சொல்லு..”

கார்த்தி முழுவதுமாக வேர்த்து விட்டிருந்தான். கையில் சிறு சிறு கொப்புளங்கள் தெரிந்தன. உள்ளங்கையை மடக்க முடியாமல் நீட்டியே வைத்திருந்தான். அவனால் இப்போது கண்டிப்பாக மொபைலை இயக்க முடியாது.

"சீக்கிரம் சொல்லு.. கொப்புளம் பெருசாகுது பாரு..”

அனிதாவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த கார்த்தி முனகினான்

"லூஸாடி நீ”

அனிதாவுக்கு ஆத்திரம் பீறிட்டது. "இதுக்கு மேல உனக்கு மரியாத கெடையாது. நான் ஒண்ணும் உன் போன வேவு பார்க்க கேட்கல. பாவமா இருக்கியே, மருந்து போடாட்டி கொப்புளம் வந்துருமேன்னு ஒரு நல்ல எண்ணத்துல கேக்குறேன். இதுக்கு அப்புறமும் சொல்லாட்டி நீ எப்பிடியோ ஒழிஞ்சு போ , நான் என் பையன கூட்டிட்டுப் போறேன் " என்ற போது கார்த்தி மீண்டும் சொன்னான்.

"லூஸாடி நீ"

"நீயெல்லாம் மனுசனே இல்லடா" என்றவாறு எழ முயன்றவளை நோக்கி கார்த்தி கத்தினான்.

"அடியேய். பைத்தியம். லூஸாடி நீ. அதாண்டி பாஸ்வேர்டு" என்றவுடன் திடுக்கிட்டு நின்ற அனிதா பகபகவென சிரிக்க ஆரம்பித்தாள். அவளது கண்களிலிருந்து நீராக ஒழுகியது.

"சீக்கிரம் கூப்பிடுடி, எனக்கு எரிச்சல் உயிரு போகுது.”

அனிதா நிதானமாக அவனது மொபைலை அன்லாக் செய்தாள். வாட்சாப்பைத் திறந்தாள். அந்தக் கடங்காரியின் பெயர் இருந்தது. பதைபதைப்புடன் அதைத் திறந்தாள். அலுவலம் தொடர்பான பைல்கள் பரிமாறப் பட்டிருந்தது. வேறு ஒன்றும் இல்லை. சில குருப்புகளில் டமிழனாக இருந்தால் சேர் செய், பெஞ்சு செய், டேபிள் செய் என்று சில வெட்டி மெசேஜ்கள் இருந்தன. அக்கவுண்ட் என்று எழுதப்பட்டு ஒரு ஃபைல் இருந்தது. அதைத் திறந்தாள். ஒரு லட்ச ரூபாயை தன் பெயரிலும், இன்னொரு லட்ச ரூபாயை கவின் பேரிலும் டெபாஸிட் செய்ததற்கான எலக்ட்ரானிக் ரசீதுகள் இருந்தன. ஓஒ இதைப் பார்த்தால் அந்தப் பணத்தை எடுத்து வீண் செலவு செய்து விடுவேன் என்பதற்காகத் தான் போனை லாக் பண்ணி இருக்கானா? அவளுக்கு கண்ணீர் வந்தது, சிரிப்பு வந்தது, ஆனந்தம் வந்தது.

"ஏண்டி நான் இங்க வலில துடிச்சுட்டு இருக்கேன். நீ கெக்கே பிக்கேன்னு சிரிக்கற?"

"ஒண்ணும் ஆகாது மிஸ்டர் புருஷ். நானெல்லாம் சமைக்கும் போது டெய்லி ஏதாச்சும் கொட்டிக்கிறேன்... நானென்ன உன்ன மாதிரி அலறிகிட்டா கெடக்கறேன். எந்திருச்சு வா. பர்னால் போட்டு விடறேன்" என்றவாறு தூக்கி விட்டாள்.

இருவரும் ஹாலுக்கு வந்த போது கவின் டாம் அன்டு ஜெர்ரி பார்த்துக் கொண்டிருந்தான். அதில் டாம் அடிப்பது போல அடித்துக் கொண்டிருந்தது. ஜெர்ரி அழுவது போல அழுது கொண்டிருந்தது. உலக நடிப்புடா சாமீ.

பொறுப்புத் துறப்பு:

இதனால் சகலமான தோழிகளுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் யாரும் loosaadi nee என்ற பாஸ்வேர்டை உபயோகித்து கணவரின் மொபைலைத் திறக்க முயற்சிக்க வேண்டாம். அதைப் பொறுத்து கார்த்திக் காப்பிரைட் வாங்கியுள்ளார். அப்படி திறந்தாலும் டெபாஸிட் ரசீதுகள் மட்டுமே இருக்கும் என்று உத்தரவாதம் தர இயலாது. வேறு சில கண்றாவிகளும் இருக்கலாம்.

இதனால் சகலமான தோழர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், இனிமேல் 'உன்ன கட்டுனதுக்கு', 'நீயெல்லாம் பொண்ணே இல்ல' போன்ற பாஸ்வேர்டுகளை உபயோகப்படுத்த வேண்டாம். சுலபமாகக் கண்டுபிடித்து விடும் வாய்ப்பு உள்ளது. மீறினால் ஏற்படும் விபரீதங்களுக்கு கம்பெனி பொறுப்பாகாது.

- காலச்சித்தன்

Pin It