பகலின் அடர்த்தி அன்றைய பொழுதை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது.

“இன்னைக்கு… அந்த மாங்காய் தொக்கை மறந்தராதே… அலமேலு” என்று இன்னும் ஓரிரு நாளில் கந்தலாகி விடும் சட்டையை மாற்றிக் கொண்டே பேசினார் வீராசாமி.

நேற்றைய நீச்சுத் தண்ணியை உர்…. புர்…. என உறிந்த படியே தலையாட்டி பதில் சொன்னாள், அலமேலம்மாள்.

இருவருக்கும் அகவை அறுபதைக் கடந்திருந்த போதும், நெருக்கமான பிணைப்பு அகவையைக் கடந்திருந்தது.

அவர்களது ஒரே மகள் தென்காசியில் வாக்கப்பட்டுப் போனாள்.

வீராசாமியின் சொற்ப வருமானத்தில் உருண்டு ஓடிக் கொண்டிருந்தது அழகான அவர்களது வாழ்க்கை. இங்கே இருவரின் வாழ்வாதாரம் வெறிச்சோடிப் போயிருந்த நிலையிலும், இருவரின் அந்த நிஜ வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் புதுப்பித்திருந்தது.

கோயம்பத்தூரிலிருந்து சுமார் ஒரு பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த தாளியூரில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைத்திருந்தது அவர்களது வீடு. அதிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் காவலாளியாக இருந்தார் வீராசாமி.

காலையில் நடந்து போகும் வழியில் புளியமரத்து அடியில் புளியம்பழத்தை நோட்டமிட்டவாறே கடந்து போவதுண்டு. வாரத்தில் இருமுறை புளியம் பழம் தென்பட்டுவிடும். அன்று இரவு புளிரசம் கரைப்பாள் அலமேலம்மாள். புளியங்கொட்டை அடுத்த நாள் உணவாகும்.

வாட்டிய வெயில் பகல் முழுதும் உடலில் உள்ள சாற்றை உரித்துக் கொண்டு இருந்தது..

இடைவெளி சமயத்தில் ‘தேநீர்’ கூட அருந்துவதில்லை வீராசாமி. சட்டைப்பையில் இருக்கும் சில்லறைக் காசுகள் ‘பீடி’க்குக் கூட போவதில்லை. தன் குழிவிழுந்த கண்களில் எப்போதும் ஒரு நிதானத் தேடல் இருந்து கொண்டே இருக்கும். எதற்காக அந்த தேடல்? அந்த முதிர் நிலை தான் விளக்கம் தரும்..

அந்திப் பொழுது தனக்கான வண்ணப் பொழுதாய் சோம்பல் முறித்த உற்சாகம், வீராசாமி நடையில் ஒளிர்ந்தது. பருவ நிலைகளில் எப்போதும் காலம் நின்று கடப்பதில்லை, வீரசாமியின் கால பருவத்தைத் தவிர.

ஆறு மணிக்கு முன்னால் வீட்டை அடைந்து விடுவது உண்டு…

அலமேலம்மாளைப் பார்த்த சந்தோஷத்தில் இன்னும் ஒரு முறை வாழ்ந்து விடலாம் என்ற வாஞ்சையோடு வீட்டுக்குள் நுழைவார் வீராசாமி. வீட்டை அடைந்தவுடன் வீட்டின் சோற்றுச் சட்டியை திறந்து பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார் வீராசாமி. மதிய வேலை உணவை அலமேலம்மாள் எடுத்துக் கொண்டாளா என்பதற்கான விசாரணை தான் இது.

“அலமேலு…. இந்தா …. உனக்கு பிடித்த மனோரஞ்சிதம்..” என்றதும் அந்த கருப்பு வெள்ளை கூந்தலில் அழகாக அமர்ந்து கொள்கிறது அந்த பூ. ஆயிரம் கவலைகளை நொறுக்கிப் போடுகிறது இதுபோன்ற மணித்துளிகள்.

அந்த வீடு முழுவதும் அவர்களது நேசத்தின் வாசம் நிறைந்து இருந்தது…

மணி ஆறைக் கடந்திருந்தது.

ஆறு ஏழு பாத்திரங்கள், சீமை எண்ணை அடுப்பு, பழைய பத்தமடைப் பாய், சுண்ணாம்புக் கற்களால் ஆன புடைத்து நிற்கும் சுவர், அதில் நெற்றியை திருநீற்றுப் பட்டையில் மறைத்து தொங்கும் கருப்பண்ண சாமி, கூரையில் மேயப்பட்ட சீமை ஓடு - இதுதான் அந்த வீட்டின் கட்டமைப்பு.

அலமேலம்மாள் சுவற்றோரம் சென்று அமர்ந்து விட்டாள். அவளுக்கு மாலைக்கண் நோய் கண்டறிந்த நாட்களிலிருந்து இதைத் தான் செய்கிறாள்.

நாள் முழுவதும் வெடித்த வெயிலில் கறுத்த உடல், அதில் தசையிழந்து சுருங்கிப் போன தோல்களில் படிந்த உப்பு வெண்ணிறமாகப் படிந்திருந்தது. தன்னைப் பற்றிய சிந்தனை அற்றவனாய் இருந்தார் வீராசாமி.

வீராசாமி அடுப்பை பற்ற வைத்து இரவு வேளைக்கு கஞ்சி காய்ச்சினார்.

தன் வயிறு ஒட்டும் அளவுக்கு வெளிக்காற்றை உள்வாங்கி அந்த சுடுகஞ்சியை ஆற்றிக் கொண்டிருந்தார். எப்போதும் வயிறு நிறைந்தவளாய் அலமேலு பாவனை செய்தாலும் குத்துக்காலிட்டு மனசு நிறையும் வரை ஊட்டிக் கொண்டிருப்பார்.

“அலமேலு கருவாட்டுக் கொழம்பு ஒருநாளைக்கு வையேன். நாக்கு செத்து போச்சு புள்ள..” என்று உட்கார்ந்து அலமேலுக்கு கஞ்சி ஊட்டியவாறு தன் எண்ணங்களைப் பரிவர்த்தனை செய்திருந்தார்.

“அடுத்த மாசம் சம்பளத்துல கொஞ்சம் கருவாடு வாங்கியாங்க….. நல்ல ருசியா செஞ்சு தரேன்’’ என்று எங்கோ பார்த்த வண்ணம் பதிலளித்தாள்..

மிச்சமிருந்த கஞ்சியை சுவைத்தவாறே வீராசாமி அன்றைய வயிற்றை நிறைத்தார்.

எல்லோருடைய வாழ்விலும் இப்படி ஒரு வசந்த காலம் பூத்துக் குலுங்குவதில்லை. வீரசாமியின் வறுமை ரேகை குருதியற்றுப் போயிருந்தது. மகிழ்ச்சியின் கணம் அந்த வீட்டை மொழுகியிருந்தது.

அலமேலம்மாள் தூங்கியவுடன் தன் கண்களை முடிக்கொள்வது வீரசாமியின் வழக்கம். அன்று இரவின் மயக்கம் அவர்களிடத்தில் தஞ்சம் கேட்டு நின்றிருந்தது.

அன்று ஞாயிறின் கதிர் பாய்ச்சல் வீட்டின் நுழைவாயிலில் முகாமிட்டிருந்தது

அதில் மஞ்சள் குளியல் எடுத்துக் கொண்ட குருவிகளுக்கு குருணை அரிசிகளைப் போட்டு, அந்த காலை வேளையை ஆரவாரப்படுத்திக் கொண்டிருந்தாள் அலமேலம்மாள்.

அன்று என்றும் போல இல்லாமல் சற்று அதிகமான மகிழ்ச்சியின் அலைவரிசை அந்த வீட்டில் மிதந்திருந்தது.

தூசி வாங்கி மங்கிப் போன மரக்கதவை துடைத்துக் கொண்டிருந்தாள்.

அந்த வீட்டின் பாதுகாவலனாய், நிறைந்து வழிந்த சந்தோசத்தை அணைக்கட்டி கொண்டிருந்த மரக்கதவுக்கு மகுடம் சூட்டியது போல அதை அழகு பார்த்தாள்.

காற்றின் துகில்களில் பரப்பி இருந்தது அந்த நெத்திலிக் கருவாடு மணம்…..

மாலை வேளைக்காக காத்திருந்தாள் அலமேலம்மாள்.

அந்தி சாய்ந்திருந்தது…..

அலமேலம்மாள் விழிகளில் ஒளி குன்றினாலும் தேடலின் பார்வை விரிந்திருந்தது.

இருளின் அடர்த்தி அதிகரித்தது.

சுவரோரம் அமர்ந்த அலமேலம்மாள் காதுகளை மட்டும் கதவுகளில் வைத்திருந்தாள்.

வெளிக்காற்றின் ஓசை கேட்டவளாய் காலத்தைக் கணித்திருந்தாள்.

கதவு அசையும் சத்தம் கேட்டது..

“வாங்க……. ஏன்….. இவ்வளவு நேரம்…. ”

மெதுவாய் அசைந்த கதவு, இன்று வீராசாமி சாலை விபத்தில் இறந்த இரங்கல் செய்தியைக் கொண்டு வந்த காற்றைக் கூட நுழைய விடாமல் பலத்த சத்தத்துடன் அடைத்துக் கொண்டது.

- மதி

Pin It