காற்றின் வேகத்தை ஜலித்து மெல்லிய தென்மேற்கு பருவக்காற்றை வாங்கிக் கொண்டிருந்த ஜன்னலின் கம்பிகளை லாவகமாக தன் பிஞ்சுக் கைகளில் பிடித்து நின்று கொண்டிருந்தாள் தீக்ஷா. இரண்டு வயதுக்கு ஒரு மாதம் காத்திருந்த நிலையில், ஆங்காங்கே முளைத்த அரிசி பற்களைக் காட்டிக் கொண்டு தலையை ஆட்டிக் கொண்டு மழலை மொழியில் சுத்த தன்யாசி ராகத்தை உமிழ்ந்து கொண்டிருந்தாள். அவள் அசைவிற்கும் ஆலாபணைக்கும் தன் கிளைகளை அசைத்து அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தது, அவள் ஜன்னல் வழி தெரிந்த ஓற்றைப் புளிய மரம்.

சுமார் முப்பது வயதை அடைந்திருந்த புளிய மரம் கருப்பண்ண கவுண்டர் தோட்டத்தின் நடுவில் விஸ்தாரமாக தன் கிளைகளை விரித்துக் கொண்டு நின்றிருந்தது. தீக்ஷா தன் ஆறு மாதத்தில் இருந்து தன் அம்மா இந்த புளியமரத்தைக் காட்டி தான் சோறு ஊட்டுவாள்.

“பாப்பா…… புளிமா……. பாரு ……. ” என்று செல்லமாக அவளுக்கு அழைத்துக் காட்டியது நினைவில் கொண்டு, அதை புளிமா என்றே தன் பருவ மொழியில் அழைத்து ஆனந்தம் கொள்வாள்.

தீக்ஷா காலை எழுந்தவுடன் ஜன்னல் பக்கத்தில் ஒட்டியுள்ள கட்டிலில் ஏறி ஜன்னலை அடைந்து புளிமாவைப் பார்த்து ரசிப்பாள்.

ஞாயிறின் ஒளிக்கீற்றில் தன் உச்சியில் ஒரு வண்ணமும், மத்தியில் ஒரு வண்ணமுமாய் பசுமை நிறத்தை காற்றில் தீட்டிக் கொண்டிருந்த புளிமா தனக்காக காத்திருந்த குழந்தையை அள்ளிக் கொள்ள அணைத்து ஒப்பனைககளையும் முடித்தவாறு ரம்மியமாய் தன் கிளைகளை விரித்துக் காத்திருந்தது.

“தீக்ஷா... ஆ... வாங்கிக்கோ.. ”

என்று ஒலிவந்த திசையில் தன் வாயை மட்டும் கொடுத்துவிட்டு கண்களை அந்த புளிய மரத்தில் பதித்த வண்ணம் நின்றிருந்தாள். அவள் எப்போதும் சாப்பிடவும், குளிக்கவும் அடம் பிடிப்பதில்லை, அதனால் அந்த வீட்டில் அவளைப் பற்றி யாரும் கவலை கொள்வதில்லை.

மரத்திற்கும் மனிதனிற்குமான வேதியல், மிகவும் உன்னதமான ஒன்று. தனக்கான குமுறலை தன் மெல்லிய அசைவாலும், காற்றில் ஒருவித ஒலியெழுப்புவது மூலமாகவும் நமக்கு காட்டும் சமிக்ஞை புரிந்து கொள்ளாமல் நிழலை மட்டும் வாங்கிக் கொண்டு நகரும் மனிதர்களின் பூமியல்லவா இது.

பச்சை நிறத்தை ஏந்திக் கொண்டிருக்கும் இந்தத் தூரிகையின் தீட்டப்படாத ஓவியத்தைக் கண்டுகொள்ளாத இந்த மானுடம் எதை தேடி அலைந்து கொண்டிருக்கிறது. சிறிய விதைக்குள் அடைபட்டு யாரும் நீட்டாத கரங்களின்றி தன்னைத் தானே புறந்தள்ளி பிரசவித்து விண்ணை முட்டி நிமிர்ந்து நின்று பிணித்தாங்கி, பணி செய்யும் இந்த மரமிடம் பயிலாத மானுட சாஸ்திரம், எவன் பார்வையில் நிகழ்ந்திருக்கக் கூடும்.

மனித புத்தி, பத்து வயதில் பிரவேசித்துக் கொள்கிறது. அதுவரை தன் திரையில் அகப்படும் அழகு உள்ளங்களை அணைத்துக் கொள்கிறது அந்த ஒற்றைப் புளிய மரம்.

தீக்ஷா தாடையை ஜன்னல் கம்பிகளில் பொருத்திக் கொண்டு புளிமாவிடம் பேசிக் கொண்டே தூங்கிய நாட்கள் பல.

தன் கைகளை ஜன்னலுக்கு வெளியே நீட்டிக் கொண்டு அவள் பேசும் செப்பு மொழி புளிமாவுக்கு மட்டுமே புரிந்த மாதிரி இருந்தது அவர்களது சம்பாஷணை.

இரவில் கருமை நிறத்தோடு கலந்திருந்த புளியமரம் தீக்ஷா கண்களுக்கு திவ்ய கடாட்சமாய் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும். இரவின் காற்றை தன் இலைகளில் வாரி மெல்லிய தென்றலாக ஜன்னலை வருடிக் கொண்டிருந்தது அந்த ஒற்றைப் புளிய மரம்.

ஒரு நாள் தீக்ஷா அந்த ஜன்னல் வழியில் காணப்படாமல் இருந்தாள்…

ஜன்னல் அருகில் இருந்த படுக்கையில் படுத்திருந்த தீக்ஷாவின் நெற்றியில் அம்மா பத்து போட்டுக் கொண்டிருந்தாள். அரைக்கண்களை மூடியபடி கட்டிலில் சோர்வுடன் படுத்திருந்தாள் தீக்ஷா.

ஜன்னலை பார்த்தபடியே புளிய மரம் தன் மௌனத்தின் ஆழ்ந்த நிசப்தத்தை அகோரமாய் உள்நிறுத்திக் கொண்டிருந்தது.

காலை மெதுவாக தேய்ந்து மதியம் வந்தது, ஜன்னலை எதிர்பார்த்த புளிய மரத்திற்கு ஏமாற்றம்.

மதியம் ஓய்ந்து மாலை தலைகாட்டியது மறுபடியும் ஏமாற்றத்தைத் தழுவியது புளிய மரம்.

இரவு கனத்த இறுமாப்புடன் நின்றிருந்தது அந்த ஒற்றைப் புளியமரம்.

அடுத்த நாள் காலை பல்லை இளித்து பகல் சூரியனை வாங்கிக் கொண்டிருந்த புளியமரத்திக்கு தீக்ஷா தெரிந்தபாடில்லை.

நாட்கள் நகர்ந்தன…

புளிய மரம் முன்பு போல இல்லமால், தன் இலைகளை உதிர்த்து, பொழிவிழந்து காணப்பட்டது.

தீக்ஷா விற்காக விரித்திருந்த கிளைகளை குறுக்கிக்கொண்டு கேட்டது கிடைக்காமல் முறுக்கிக் கொண்டு நிற்கும் ஒரு குழந்தையை போல நின்றது அந்த ஒற்றை புளிய மரம்…

நேற்று பெய்த மழையில் காற்று ஈரமாகி. அந்த நிலத்தை வியாபித்து இருந்தது.

காலை வேளையில் தீக்ஷா சற்று உற்சாகத்துடன் கட்டிலில் ஏறி ஜன்னலை அடைந்து கம்பிகளைப் பற்றியவாறு அவள் கண்கள் நாலாபுறமும் சுழன்றது.

சற்று நேரத்தில் பொழிவிழந்த முகம் ஜன்னல் வெளியைப் பார்த்து

“அம்மா…புளிமா… என்று மூச்சடைக்கக் கதறியது…"

ஆம், ‘புளிமா’ அந்த ஒற்றைப் புளிய மரம் வெட்டப்பட்டிருந்தது.

ஒற்றை புளிய மரம்,

ஒற்றனைப் போல நின்ற மரம்,

காற்றை சுமந்த மரம்,

நிழலை விரித்த மரம்……… இன்று நிலம் மறந்து மயானத்தின் ஒட்டுமொத்த ஓங்காரத்தையும் புதைத்து விட்டுச் சென்றிருந்தது.

விவரிக்க முடியாத இனம் புரியாத அந்த விசும்பல் தீக்ஷாவின் மொழி கொண்டு விசும்பியது.

ஒரு ஓரமாக தன் கிளைகளை முடக்கிக் கொண்டு ஜன்னலை பார்த்து கண்களை மூடியதும், நேற்று பெய்த மழை தங்கிய இலையில் தண்ணீர் வடித்தது அந்த ஒற்றை புளிய மரம்…

- மதி

Pin It