கடந்த 20 வருடங்களாக இப்படித்தான் என்றாலும் ஒவ்வொரு முறையும் எப்படி எப்படியோ தன்னை ஒப்பனைத்துக் கொள்ளும் மனதுக்கு ரெக்கை மட்டும் புதியது தான். தீரா வானத்தை அவளே செதுக்கிக் கொண்டது புதுமைதான்.

எல்லாமும் எல்லார்க்கும் தெரிய வேண்டியது என்றெல்லாம் இல்லை. தெரியாமலும் இருக்கலாம். தெரிந்தும் தெரியாமல் இருப்பதும்.. தெரிந்தவர்கள் தெரிந்தும் தெரிந்திருப்பதும் பொருட்டில்லை என்பதைத் தாண்டி தெரிய வேண்டியதை மறைக்கவும் வேண்டியதில்லை என்பது தான் தெரிவு. நர்மதா மற்ற நாட்களில் கண்ணாடி பார்ப்பதற்கும் சனிக்கிழமைகளில் கண்ணாடி பார்ப்பதற்கும் ஆறு வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆறு நாட்களின் வித்தியாசங்களை அவள் முகத்தில் காண முடியும். பொட்டழித்து பொட்டிடும் போது கண்கள் நீலம் பூக்கும். கம்மல் கழற்றி கம்மல் அணிகையில்.. கன்னம் பதுமை செய்யும். இதழ் சாயம் பூசுகையில்.. இலைமறை காயாய் புன்னகை கசியும். தாலி கழட்டுகையில்... தனித்துவம் மிளிரும். புடவையில் இருந்து சுடிதாருக்கு மாறுகையில்... மாற்றி யோசித்த உன்னதம்... மீண்டும் பருவம் சுமக்கும். அழகின் தவம் அநியாய வெட்கம் பூசி.. முதுகிலும் புன்னகைக்கும்.

பெரியவள்... கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்து விட்டாள். சின்னவன் பன்னிரெண்டாவது.

வழக்கம் போல.. என்றும் நம்பலாம். வாழ்வியலின் மகத்துவம்.. அவரவர் வாழ்வுக்கு தகுந்தாற் போல வரம் செய்யும். சின்னவன் 'பாய்மா....' என்று முணங்கி மீண்டும் இழுத்து போர்த்திக் கொண்டான். அவசரமாக கிளம்பிய பெரியவள்.... "அம்மா நைட் வர லேட்டாகும் " என்று சொல்ல சொல்லவே பாதி வாசலை தாண்டி இருந்தாள். கணவன்.. கண்ணன் கன்னம் கிள்ளி வாய்க்குள் போட்டபடி... "சரி....இன்னைக்கு எழுத்து வேலை கொஞ்சம் அதிகம்.. டேக் கேர்..நறு" என்று சொல்லி கண்கள் சிமிட்டியபடியே அவர் அறைக்குள் சென்று விட்டார்.

கண்கள் மிளிர "காற்று வெளியிடை கண்ணம்மா....... நின் காதலை எண்ணி களித்திருப்பேன்..." மனதுக்குள் மாண்புமிகு குரல்.

பேருந்தேறி அமர்கையில்... பல்லக்கு சுமக்கும் பாதையில்... பயணம் மிதக்கும். தானாக சிரித்துக் கொண்டாள். தானாக அழவும் தோன்றியது. காலம் முழுக்க சுமக்கும் சுமைகளை இந்த சனி ஞாயிறுகள்தான் சமன் படுத்துகின்றன.

தவறுக்கு நியாயம் சொல்லும் தர்க்கமெல்லாம் இல்லை. தவறுக்கு சரி செய்யும் சமன்பாடு மட்டும்தான். வாழ்வின் எல்லா எல்லைகளிலும் நீட்சியென சில அழகிய முரண்பட்ட குறுக்கு கிறுக்கு சந்துகள் காணக்கிடைக்கும். நெடுநல்வாடை நீளும் அப் பாதைகளில் நம்மை நாமே அழைத்து செல்லும்...நாம் என்ற நம்பிக்கை. வளைவில் தடக்கென்று காலத்தை பின்னோக்கி கடத்தியது பேருந்து.

நர்மதா திருமணம் அன்று - எல்லாரும் வந்தார்கள் - நித்ரனும் வந்திருந்தான்.

மேடையில்... நண்பர்களோடு வரிசையாக நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் போது விரிந்த புன்னகை நர்மதாவுக்கு ரெஸ்ட் ரூமில்.. ஒப்பாரியாக இருந்தது. அழுதழுது நிமிர முடியாத குனிவு....அவளைக் கழிவறை தரையில் கிடத்தியது. நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுவதை பார்த்திருக்கிறாள். முதன் முறையாக தானே அழுது பார்த்தது, அணுவெல்லாம் வலித்தது. சாகவும் முடியாத காலத்தடையை காதலென்னும் அற்புதம் நிகழ்த்தி விடுகிறது.

சாதி தான்... பிரச்னை.

"மத்தவங்க மாதிரி உங்கள விரட்டி விரட்டி கொல்லவெல்லாம் தைரியம் இல்ல நர்மதா... ஆனா கண்டிப்பா நானும் அம்மாவும் செத்துருவோம்....இந்த கல்யாணம் நடக்கலனா கண்டிப்பா குடும்பத்தோடு தீ வைத்து கொண்டு சாவோம்."

அப்பா சொன்னா செய்வார் என்று நர்மதாவுக்கு தெரியும். இரண்டு உயிர்களை பலி கொடுத்து.... தான் மட்டும் வாழ்வதென்பதை நினைத்து பார்க்க முடியவில்லை. இன்னமும் ஒன்று கூட அம்மாவின் அண்ணன்... அவளின் தாய்மாமன் செய்யலாம்.

நித்ரனை அவரின் தோட்டத்தில் கொன்றுகூட புதைக்கலாம். அவர் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் சிறையில் இருந்து காசு கொடுத்து வெளியே வந்தவர்தான். சுற்றி சுற்றி ஆணவமும்.. பணமும்... சாதியும் சாமியும்......போட்டி போட்டுக் கொண்டு இவர்கள் காதலை சூறையாடின. எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாதவர்கள் அழுவதைத் தவிர வேறென்ன செய்ய. அவள் அழுதாள். திருமண வரவேற்பில் இடைவேளையெல்லாம் ரெஸ்ட் ரூமில் தேம்பி தேம்பி அழுதாள். தன்னை தானே அறைந்து கொண்டு அழுதாள். தன்னையே உயிர் என்று நம்பினவனை இப்படி கை விட்டோமே என்று அழுதாள். அழுத முகத்தில் அன்பின் வடுக்கள். அவன் அறிவான். அறிந்தான். அதகளம் அவனுள் செய்வதறியாது நடுங்கியது. இனியும் இங்கிருக்க முடியாது என்று கிளம்ப எத்தனிக்கையில்... எது பற்றியும் கவலையில்லாமல் ஒரு நண்பன் இருப்பான் தானே அவன் நித்ரனை இழுத்து சென்று சாப்பிட அமர்த்தி விட்டான். நித்ரனுக்கும் பசி தான். சாப்பிட்டால் தேவலை போல தோன்றியது. ஒவ்வொரு வாய் சோற்றுக்கும் தலை குனிந்து ஒரு சிறுவனைப் போல அழுதான். விக்கி விக்கி அழுவதை வாழ்வில் முதன் முறையாக உணர்ந்தான். அவன் தலை நிமிரவே இல்லை. சோற்றில் அழுகை பிசைந்து காதல் தின்றது அவன் காலம்.

யாரென்றே தெரியாத மனிதருடன் காலையில் திருமணம். அந்த இரவே நிர்வாணம். இதுவே கொடுமை என்றால் பிடிக்காத திருமணத்தில்... நர்மதா என்ன செய்திருப்பாள். பாவம் அவரும்தான் என்ன செய்திருப்பார். எல்லாம் முடிந்த போது சீ என்று பட்ட நிர்வாணத்தை அந்த அறைக்குள் எங்கும் மறைத்து வைக்க முடியவில்லை.

கல்யாணம் முடிந்த பத்தாவது நாள் ஒரு சனிக்கிழமை கதவு தட்டப்பட..... தாடி கொண்டு....... தலை கலைந்த....... குடித்து வீங்கிய முகத்தோடு....... குறுகிய உடலோடு கதவைத் திறந்தான் நித்ரன்.

கதவை சிரமத்தோடு திறந்தவனுக்கு கண்களில் பூக்கள் முளைத்தது. ஆகாய சுடரென எதிரே நின்றாள் நர்மதா.

'நித்.......ரா.....' என ஓடி வந்து கட்டிக் கொண்டு அழுதாள். கதவடைக்கவும் மறந்த அவர்கள் ஒருவரையொருவர் இறுக்கிக் கொண்டே மாறி மாறி முத்தமிட்டபடியே கன்னம் கடித்து....வழுக்கிக் கொண்டே கீழே வந்து.... கழுத்து கடித்து ..... இன்னும் இன்னும் இறுக்கி கீழே விழுந்து புரண்டு ஒரு சாத்தானும் ஒரு கடவுளும் இணைந்தது போல..... ஒருவரையொருவர் முட்டி முனகி ஒட்டி உருகி....உள் நுழைந்து வெளி வந்து.... வெளி வந்து உள் நுழைந்து....அசுர வேகத்தில் ஆத்திரம் தீர அழுது சிரித்து அடித்து மருகி......கைகள் கோர்த்து... முதுகு பிராண்டி....கால்களால் உதைத்துக் கொண்டு......முடி பற்றி இழுத்து மார்போடு போட்டுக் கொண்டு.... உடலை வளைத்து உயிரோடு சேர்த்துக் கொண்டு.......இடுப்பு பிசைந்து...... இசையும் விசைந்து..... மூச்சு விடும் போதெல்லாம் இரு உயிர் சேர்ந்து.... மூச்சிழுக்கும் போதெல்லாம் ஓருயிர் ஆகி........ஆ ஆவென அலறி.....கால்கள் விலகி கால்கள் இணைய... கைகள் விலகி கைகள் இணைய... உடல்கள் விலகி உடல்கள் இணைய...ஒருவரையொருவர் மாறி மாறி புணர்ந்தார்கள். காதலின் எல்லை புணர்வில் விரிகிறது.

கால் பிடித்து நெட்டை எடுத்தபடியே மடி சாய்கையில்... நிம்மதி பெருமூச்சு இருவருக்கும்.

வேகமாய் எழுந்து கொண்டையிட்டுக் கொண்டே சமையலறை சென்றாள். சாத்திரம் உடைத்த திருப்தியோடு சமைத்தாள். முதல் முறை சமைந்த உணர்வு. வயிறார ஊட்டி விட்டாள். தாடி சிரைத்து விட்டாள். தாகம் தீர குளிக்க வைத்தாள். அவளுக்கு பிடித்த நீல ஆடை அணிய வைத்தாள். இருவரும் மாற்றி மாற்றி செல்பி எடுத்தார்கள். அது அவர்களுக்கான கால சாட்சி. கையோடு வைத்திருந்த தாலியை நித்ரனிடம் கொடுத்து 'கட்டு' என்றாள்.

"என்ன பாக்கற......?"

"தப்பா....! எது தப்பு.."

"இது தப்புனா எல்லாமே தப்பு தான்... நான் அவ்ளோ சொல்லியும் எனக்கு பிடிக்காத கல்யாணத்தை பண்ணி வெச்ச என் அப்பா அம்மா குடும்பம் சொந்த பந்தம்.... ஊர் உறவு.....எல்லார் பண்ணினதும் தப்பு தான்..."

"என் காதல சொல்லி கால்ல விழுந்து அழுதப்பறமும்......" உன்ன பிடிச்சிருக்கு.. நான் உன்ன லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்னு சொல்லி என் கழுத்துல தாலி கட்டுன Mr. கண்ணன் பண்ணினதும் தப்பு தான். தப்புக்கு தப்பு சரியா போச்சு. "என் காதலி உங்க மனைவி ஆகலாம். உங்க மனைவி என் காதலி ஆக முடியாது..." என்பதெல்லாம் யாரோ போட்டுக் கொண்ட வேலியில் யாரோ மாட்டிக்கிட்ட கதை. அதுக்கு திரைக்கதை என் மேல எழுத நான் அனுமதிக்க மாட்டேன்.."

"நான்தான் அவ்ளோ சொன்னேன்ல.... காதலிக்கிறேன் காதலிக்கறேன்னு..... நான் படிச்சவ.... அதும் மருத்துவம் படிச்சவ...மேஜர்.....விவரம் தெரிஞ்சவ. என்னை என் வாழ்க்கையை என் இஷ்டத்துக்கு வாழ விடாம பண்ணினத்துக்கு நான் காட்ற எதிர்வினை இது. இது இப்டித்தான்... இனி எல்லாம் இப்டித்தான்...."

"தாலி கூட ஒரு சந்தோஷத்துக்கு கட்டிக்கறதுதான். மத்தபடி அதுல ஒரு வெங்காயமும் இல்ல. உன் கையாள கட்டிக்கும்போது உள்ளுக்குள் ஒரு விஷயம் கசியும். எத்தனையோ முறை கனவுல உணர்ந்திருக்கேன். அது வேணும். அதுக்கு தான்.. நீ கட்டு..." என்று மீண்டும் அழுத்தமாக நீட்டினாள்.

அவள் கண்களையே கண்டவன் கண்களில் நீர் வழிந்தது. நடுக்கம் உருண்டது. தொண்டை அடைக்கும் அன்பை வேறெப்படி காட்டுவது. வாங்கி கட்டினான். இழுத்து அணைத்துக் கொண்டான். நெற்றியில் முத்தமிட்டான்.

"இனி எல்லா சனி ஞாயிறும் நான் இங்க தான் இருப்பேன்..."

அவன் கண்கள் குமைந்து.... 'எப்படி...?' என்பது போல பார்த்தான்.

"வீட்ல கேட்டா.... டியூட்டினு பொய் சொல்வேன்....ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த நடத்தலாம்தான... இப்போ தான் முதல் பொய்..."

விதி விட்டது... காதல் தொட்டது.... பெருமூச்செறிந்தான். பிறை நிலா நெற்றி கோடிட்டு வா என்றது.

வாரம் மாதமாகி வருடமாகியது. முதல் பிள்ளை பிறந்தது.. பிறகு பையன் பிறந்தான். எந்த குழந்தைக்கு இருவரில் யார் அப்பா என்று யாருக்கும் தெரியாது.

"எதற்கு தெரிய வேண்டும். இரண்டு பேருமே அப்பாவா இருந்துட்டு போகட்டும்....!" என்ற நர்மதா பூரணத்துவம் அடைந்திருந்தாள். அவள் கண்கள் நிம்மதியில் சிமிட்டின. நர்மதா கொஞ்சம் குண்டாகி விட்டிருந்தாள். காலம் கணவன் மீதும் அன்பு செலுத்த கற்றுக் கொடுத்திருந்தது. ரகசியம் என்று ஒன்றில்லை. காலப்போக்கில் எல்லாம் பழக்கமாகி விடும் என்பதுதான் மானுட சம்பிரதாயம். கண்ணனுக்கு தெரிந்தா தெரியாமலா தெரியவில்லை. அவன் ஒருபோதும் சனி ஞாயிறுகளைப் பற்றி கேட்கவில்லை. கண்ணன் கூட ஒரு வகையில் கடவுள் போல தானோ.... பெயருக்கு தகுந்தாற் போல தன்னை ஒரு வகையில் காப்பாற்றி இருக்கிறாரோ....என்று கூட அவளுக்குத் தோன்றியது.

பிள்ளைகளும்... அப்படியே. அவரவர்க்கு ஒரு தான் இருக்கிறது. அதன் போக்கில் அவரவர் எல்லைக்குள் இருந்தார்கள். சொந்த பந்தம் என்று ஒருவருக்கும் எதுவும் தெரியாது. காரில் கண்ணடைத்து செல்லும் வாழ்வாதாரம் யாவரிடமிருந்தும் அவளை உயர்த்தி விட்டிருந்தது. ஒரு பெண்ணின் அந்தரங்கத்துக்குள் செல்ல யாருக்கும் உரிமை இல்லை. அவள் எங்கோ தொலைத்த விடுதலையை இங்கே எடுத்துக் கொண்டாள்.

நித்ரனோடு கொள்ளும் ஒவ்வொரு விவாதத்திலும்..." நான் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று என் சாதியே தீர்மானித்தது. என் பெற்றோர்களே தீர்மானித்தார்கள். என் சொந்த பந்தங்களே தீர்மானித்தார்கள். வலுக்கட்டாயமாக என்னை சுற்றி இருந்தவர்களே தீர்மானித்தார்கள். நான் எடுத்த ஆயுதம் இந்த தலைமறைவு வாழ்க்கை. உன்னோடு திருமணம் செய்து வைத்திருந்தால்.....அல்லது செய்ய விட்டிருந்தால்.... இந்த சனி ஞாயிறுக்கு வேலையில்லாமல் போயிருக்கும். ஆனால் நடந்தது என்ன... அவர்கள் குளறுபடி செய்தார்கள். நான் அறுவடை செய்து கொண்டேன். கால போக்கில் அவர்களுமே இந்த உறவை கண்டும் காணாமல் தான் போனார்கள். காலத்தின் பிடியில்... முதுமையின் இறுக்கம் எல்லாவற்றையும் தளர செய்யும். திருமணத்தன்று பயங்கரமாக கத்தி கூப்பாடு போட்டு....குழந்தை பிறந்த பிறகு மெல்ல எட்டிப் பார்த்து....ஐயோ என் பேரன்.. ஐயோ என் பேத்தி...என்று கொஞ்சும் பெற்றோர்களை செருப்பால் அடிப்பதைத் தவிர என்னிடம் வேறு பதில் இல்லை...சொந்த பொண்ணோட விருப்பத்தை விட சாதி சமயம் ஊர் உறவு தான் பெருசுன்னு கொலை பண்ணவும் தயங்காத பெற்றோர்களை அதே செருப்பால் அடிப்பதைத் தவிர மீண்டும் வேறு வழி இல்லை...." என்றாள்.

அவள் அப்படிதான்.

தன் சுயத்தை காவு வாங்கியதற்கான எதிர்வினை அதே காதலோடு வாழ்ந்து காட்டுவதுதான். அவள் ஆழ்மனதில் நெருப்பு துண்டு இன்னமும் கனன்று கொண்டிருக்கிறது.

"புள்ள நல்லா இருக்கணும்னு அவுங்க செய்யற முட்டாள்தனத்துக்கு காலம் காலமா பலி ஆகிட்டிருக்கற பொண்ணுங்களுக்கு நான் முன்னுதாரணம் தான். ஊர் என்ன தேவிடியான்னு சொன்னா சொல்லிட்டு போகட்டும். எல்லாருக்குள்ளும் ஒரு தேவிடியா இருக்காங்கறது ஒரு டாக்டரா எனக்குத் தெரியும்..."

"கண்ணனை ஏமாற்றுகிறேனா.. ஏன் கண்ணனும் தான் எல்லாம் தெரிந்தும்...எனக்கு தாலி கட்டி என்னை ஏமாற்றினார். அதுக்கு இது சரியா போச்சு.. போ...." என்றபடியே கழுத்து கட்டிக் கொண்டு கிடப்பாள்.

"காதல்னா சமயத்துக்கு கூட இருந்துட்டு சமயத்துக்கு வசனம் பேசி விட்டுட்டு போறதா...ம்ஹும்... அது அர்ப்பணிப்பு. காதல்னா நம்பிக்கை. வாழ்விலும் தாழ்விலும் உடன் இருக்கும் தோழமை..காதல் ஒரு பிடிவாதம்..."

"மனசார உன்ன லவ் பண்ணிட்டு... ஊர் உலகத்துக்காக உன்ன தனியா விட்டு நான் மட்டும் சந்தோஷமா எப்படி இருக்க முடியும்.. அழகா..." என்பாள் அடிக்கடி.

கோணம் மாணல் விதியை சதி செய்த நர்மதா சரி செய்து கொண்டாள். தன் வாழ்வை தான் தான் வடிவமைக்க வேண்டும் என்று எப்போதும் பேசிக் கொண்டிருப்பவள்..... அதை செய்தும் காட்டினாள்.

அப்பா அம்மா தற்கொலை செய்து கொள்வோம் என்றதை காலப்போக்கில் மறந்து போனார்கள். எமோஷனல் ப்ளேக் மெயில் ஒரு கட்டத்தில் இன்ஸ்டண்டல் லீக் ஆகி ஒன்றுமில்லாமல் போகும். போனது. அவர்களுக்கு...... தங்கள் பொறுப்பை மடை மாற்றி விட ஒரு மாப்பிள்ளை தேவைப்பட்டார். மகளின் ஆசை...... அபிலாசை......தேவை... தேக ஆசை.....ஆழ் மன பிடிப்பு.... எது பற்றியும் அறியாத ஜடங்கள் அப்பா அம்மாவாகி போன வாழ்வில் அவளே... அவளுக்கான தீர்வை தெரிந்து கொண்டாள். ஏன் ரெண்டு பொண்டாட்டி கட்டிட்டு வாழ்பவர்களை இந்த நாடும் சமூகமும் என்ன செய்தது. அதே மாதிரிதான். ரெண்டு புருசனைக் கட்டிக் கொண்டு வாழும் முறை. மெல்ல மெல்ல பழகி விடும்.. என்றபோது புன்முறுவல் தானாக வந்தது.

நித்ரன் வீடிருக்கும் தெரு வழியே நடப்பது கூட பூக்கள் நடுவது போலத்தான். அத்தனை மென்மையாக இருக்கும். அவன் மூச்சுக்காற்று அந்த தெருவில்... எங்கிருந்து வேண்டுமானாலும் வரும். அத்தனை காதலால் அரும்பியவன் அவன். அவன் மீசையில் தன் புருவத்தை தைத்து விட ஆசைப்படும் அவளை அவன் எப்போதும் உப்பு மூட்டை சுமப்பான். உள்ளே சர்க்கரை மூட்டை அவள்.

வாசலில் பக்கத்து வீ ட்டு மா மரத்தின் இலைகள் மிதந்து கிடந்தன. வாசலில் வைத்திருக்கும் தோட்டத்து பூக்கள் கூட வாரத்தை சுமந்து கொண்டு கிடந்தன. அந்த வீடே ஒரு கோவிலை கலைத்து போட்டு மாடர்ன் ஆர்ட் போலத்தான் இருக்கும். காதலின் கிரகத்தின் கதவுகளைத் திறப்பது போல அந்த வீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள். சலிக்காத பாதங்களை புது மணப்பெண் போலவே தான் இப்போதும் வைத்தாள். தூய ஆன்மாவென உள்ளே சென்றவள்.... ஆணியில் மாட்டியிருந்த தாலியை எடுத்து தன் கழுத்தில் மாட்டிக் கொண்டாள்.

எதிரே இருந்த புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்த நித்ரன் இறந்து இரண்டு வருடங்கள் ஆகி இருந்தன.

அதற்காக அவனோடு 18 வருடம் இருந்த..... வாழ்ந்த....... வீட்டுக்கு வராமல் இருக்க முடியுமா...? அவன் நினைவுகள் இருக்கும் இவ்வீட்டில் இருக்கும் இந்த இரண்டு நாட்களும் அவள் ஒரு தேவதையைப் போல தன்னை உணர்வாள். விரல்களுக்கு சொடுக்கெடுக்கும் சீனி போட்ட தருணங்களை அவள் இப்போதும் உணர்கிறாள். அவன் அந்த வீட்டில் ஒவ்வொரு இடத்திலும் அவளோடு இருக்கிறான். தாலாட்டும் வாழ்வின் நிதானங்கள் வண்ணம் பூக்கும் புன்னகையை அவன் அவளுக்கு தருவதை நிறுத்துவதே இல்லை. வாழ்வதென்பது வாழும் போது மட்டுமா....?

"நித்ரன் உன் அழகி வந்தாச்சு..." என்று தானாகப் பேச ஆரம்பித்து விட்டாள்.

இனி ஒரு நந்தவனம் தன் எல்லா கதவுகளையும் திறந்து கொண்டு அந்த வீட்டில் பூக்கத் தொடங்கும். 

- கவிஜி

Pin It