எப்பதான் இந்த பஸ் வரும்னு தெரியலை என்று பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தாள் மல்லிகா. அவளுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள். ஒருத்தன் மூணாவது, ஒருத்தன் ஆறாவது படிக்கிறான். அவள் புருசன் இப்பொழுதெல்லாம் வீட்டுக்கு அடிக்கடி வருவதில்லை. ஏதாவது வேலையா எப்பொழுதும் வெளியில இருப்பான். மாசத்துக்கு நாலு நாள் வந்து தங்கிவிட்டுப் போவதோடு சரி. லாரி ஆபிசல வேலை அவனுக்கு. லாரி டிரைவர் கூட ஒத்தாசையா அனைத்து மாநிலத்திற்கும் செல்வான். வீட்டுக்கு வந்து தங்கியிருக்கிற நான்கு நாளும் நல்லா குடிப்பான். எடுத்து வந்த பணத்தில் இரண்டாயிரம் அவனே காலிபன்னிட்டு மூவாயிரத்தைக் கொடுத்துவிட்டு அதிலிருந்தே ஒரு ஐநூறு கொடு என்று வாங்கிக் கொண்டு சென்று விடுவான்.

இரண்டு மாசமா அவன் வீட்டுப் பக்கமே வராமல் போனது என்னமோ போல் இருந்தது மல்லிகாவிற்கு. வீட்டுக்கு வாடகை கொடுக்கனும். மெத்தை வீட்டின் தளத்தில் கீற்றினால் ஆன கொட்டகை வீடு தான் மல்லிகாவின் வீடு. அதற்கு மாச வாடகை ஆயிரம் ரூபாய், கரெண்ட பில் ஒரு இருநூறு ரூபாய். மொத்தத்தில் ஆயிரத்தி இருநூறு ரூபாய் இதுக்கே சரியாகப் போய்விடும். வளர்கின்ற பிள்ளைங்க வேற என யோசித்துக் கொண்டே நின்றிருந்தாள். அந்த நேரம் பார்த்து பஸ் ஒன்று வந்தது. அரை மணிநேரத்திற்கு ஒரு பஸ் வரும். அந்த ஊரிலிருந்து கிழக்குப் பக்கமாகப் போனால் பாண்டிச்சேரி, வடக்கு பக்கம் போனால் விழுப்புரம். வடக்கால் இருந்து ஒரு பஸ் வந்து நின்றது. பாண்டிக்கு போகிறவர்களெல்லாம் ஏறுங்க என்று கண்டெக்டர் கத்தினார்.

பஸ்ஸில் ஏறி அமர்ந்தாள் மல்லிகா. அந்த அளவிற்கு கூட்டம் இல்லை. ஒரு பெண் மல்லிகைப் பூவை தலை நிறைய வைத்துகொண்டு கழுத்துல ஒரு சின்ன சணல் கயிறு சைசில தங்கச் சங்கிலி ஒன்னு போட்டிருந்தா. அதை வைச்ச கண்ணு வாங்காம பார்த்துக் கொண்டே இருந்தாள் மல்லிகா. கொஞ்சம் தூரத்து சீட்ல ஒரு கிழவர், ஜிப்மர் ஆஸ்பித்திரி போகனும், இந்திரா காந்தி சிலை ஒன்னு கொடுங்க என்று டிக்கட் எடுத்தார். ஒரு சிலரே பஸ்ஸில் அமர்ந்து இருந்தார்கள். கண்டெக்டர் இவளிடம் வந்த போது 'பாண்டி பஸ்டேன்டு ஒன்னு' என்று இரண்டு ஐந்து ரூபாய் வில்லைகளைக் கொடுத்து டிக்கட் வாங்கினாள். இடையில் நிறைய நிறுத்தங்களில் பஸ் நின்று நின்று போய்க் கொண்டே இருந்தது. பக்கத்திலிருந்த கிழவி ஒருவள் அப்படியே அரைப்பார்வையோடு தூங்கித் தூங்கி விழுந்தாள். வில்லியனூர் இறங்குங்க என்றார் கண்டெக்டர். திடுக்கிட்டு எழுந்தவள் திருதிருவென விழித்தாள். தூக்க கலக்கத்தில் ஒன்றும் புரியவில்லை. பஸ் புறப்பட்டது.

ஜன்னல் வழியாகப் பார்த்தாள். வானுயர்ந்த கட்டிடங்கள், நிறைய கடைகள். மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதும் வருவதுமாக களையாக இருந்தது சாலை முழுவதும். அவளுக்கு எப்பொழுதும் நினைவுக்கு வரும் பல் மருத்துவமனை ஒன்று சட்டென்று வந்து நின்றது. ஜிப்மர் போகிறெவங்க எல்லாம் இறங்குக என்றார். இன்னும் கொஞ்சம் தொலைவில்தான் பஸ்டேன்டு என மனதிற்குள் நினைத்தாள். ஐந்து நிமிடத்தில் அவள் இறங்கும் இடம் வந்தது. பஸ்ஸில் இருந்து கீழே இறங்கினாள். கொஞ்சம் அருகிலேயே அவ புருசன் வேலை செய்கிற லாரி ஆபிஸ். நடந்து சென்று ஆபிஸை நெருங்கினாள். எக்கா எப்படி இருக்கிற என்று அங்கு வேலை செய்யும் ஆபிஸ் பையன் முருகன் கேட்டான். நல்ல இருக்கன்டா என்றாள்.

"எங்க மேனேஜர் இல்லையா" என்றாள்.

"தோ உள்ளதான் ஓக்காந்தினு இருக்கறாரு" என்றான்.

"மேனேஜர் சார் நம்ம மாயன் ஊட்டம்மா வந்துகிறாங்க" என்றான்.

"என்ன மல்லிகா" என்றார் மேனேஜர்

"ரெண்டு மாசமா அவரு வீட்டுக்கு வரவில்லை. வீட்டு வாடகை கொடுக்கனும் சார். ஏன் வரல்லைனு தெரிஞ்சுகினு போகலாம்னு வந்தேன் சார்" என்றாள்.

"ஒன்னும் இல்லைமா. இந்த வாட்டி பூனே போனாங்க. அங்கிருந்து வந்துட்டாங்க. திடீர்னு சென்னை துறைமுகத்தில ஒரு காண்ரெக்ட்ல வண்டி ஓடுது. நிக்காம ஓடுது. அடுத்த மாசம்தான் அது முடியும் வந்துவிடுவாங்கமா" என்றார்.

"சார் கொஞ்சம் அட்வான்சா ஒரு மூவாயிரம் கொடுங்க. அவரு வந்தா சம்பளத்தில புடிச்சிகினு மீதி கொடுத்தனுப்புங்க" என்றாள்.

"அவன் ஏற்கனவே நிறைய வாங்கி வச்சிருக்காம்மா. வேணும்னா ஒரு ஆயிரம் ரூபாய் தரேன். அதுக்கே ஓனர் ஏதாவது சொல்லுவாரு" என்றார்.

"சார் பாவம் சார் கொஞ்சம் கொடுத்தனுப்புங்க" என்றான் முருகன்.

"டேய் போய் டீ வாங்கினு வா" என்று அவனை அனுப்புவிட்டார் மேனேஜர் கதிரசேன்.

அப்படியே கண்கலங்கி நின்றாள். அவள் தேகம் வறண்டுபோய் வறுமையாக நின்றாள். "அழாத மல்லிகா இந்தா இதை வச்சிக்கோ" என அவள் கையைப் பிடித்து ஒரு ஐநூறு ரூபாய் தாள் ஒன்றைக் கொடுத்தார். அவளுக்கு ஏதோ ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால் அவள் வாங்கிக் கொண்டாள். அதுக்குள்ளே "சார் இந்தாங்க டீ" என்றான் முருகன்.

அனைவரும் டீயைக் குடித்தார்கள்.

அட்வான்ஸ் கொடுக்கும் முன்பு நோட்டில் அவன் வாங்கி வைத்திருந்த கணக்கு அனைத்தையும் திருப்பித் திருப்பி காண்பித்தார். "சரிமா இந்தா ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ்" என்று நோட்டில் எழுதிக் கொண்டு கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு, "சார் நான் கெளம்பறேன்" என்றாள். "எப்ப வேண்டுமானலும் வா என்னால் ஆன உதவிகளை நான் செய்கிறேன்" என்றார் கதிரேசன்.

"அக்கா பாத்து போ அண்ணே வந்தா நான் சொல்றேன்" என்றான் முருகன்.

ஒரு டயரை தள்ளிக் கொண்டு பஞ்சர் ஒட்ட புறப்பட்டான்.

அங்கிருந்து அரை மனதுடன் புறப்பட்ட மல்லிகா வீடு வந்து சேர்ந்தாள்.

அவளுடைய வீட்டு ஓனர், "எங்கம்மா போன? மாச வாடகை இதோ அதோனு சொல்லி அடுத்த மாசமே வந்துபோச்சி" என்று திட்டினார்கள். உடனே இருங்கக்கா என்று வீட்டுக்குள் சென்று ஆயிரத்தை எடுத்து வந்து கொடுத்தாள்.

மறு நாள் விடிந்தது, ஒரு டிரெக்டர் வந்து நின்றது அவள் வீட்டு எதிரில். வழக்கமாக காலை நான்கு மணிக்கெல்லாம் வந்து அவளை அழைத்துக் கொண்டு சூளையில் கற்களை ஏற்றுவது வழக்கம். ஆனால் இன்னைக்கு கொஞ்சம் தாமதமாகி விட்டது. அவளுக்கு வேலை இருந்தால் ஒரு நடைக்கு நூறு ரூபாய் கிடைக்கும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நடை ஏற்றுவாள். அந்தப் பணத்தை சீட்டு ஒன்று கட்டிவந்தாள். கசுறு போக மாதம் ஆயிரத்தி எட்டு நூறு அல்லது ரெண்டாயிரம் வரும். மெல்ல அந்த சீட்டினை எடுத்து எப்படியாவது ஒரு சொந்த மண்ணை வாங்கிவிட வேண்டும் என்று நினைப்பாள். பாண்டிச்சேரியில மனை ரொம்ப விலை அதிகம், ஆனால் தமிழகத்தை ஒட்டியே அமைந்திருந்தது ஏம்பலம் கிராமம். அதற்குப் பக்கத்திலேயே அமைந்திருந்த நல்லாத்தூரில் ஒரு மனையை வாங்கிப் போடுவது என முடிவெடுத்து ஓடாய் உழைத்தாள்.

மணி ஒன்னே முக்கால் இருக்கும். யாரோ கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. சின்ன தட்டியால ஆன கதவு. கதவைத் திறந்தாள் மல்லிகா. மாயன் நல்ல குடியில் நின்றான்.

"யோவ் மணி இன்னா ஆவுது, எப்படியா வந்த இந்த நேரத்தில்" என்றாள்.

"கடைசி பஸ் வந்தது அதில வந்திட்டேன்" என்றான், அந்த ஊருக்கு கடைசி பஸ் இரவு ஒன்றைக்கு வரும். அதோடு காலையில் தான்.

"மேனேஜர் சொன்னாரு நீ வந்து ஆயிரம் வாங்கினு போனாயாமே.."

இந்தா மீதினு ஒரு நாலாயிரம் கொடுத்தான்.

"யோவ் ஏன்யா இப்படி பணத்தையெல்லாம் குடியில அழிக்கிற... ரெண்டுமாசமா இதானா கொடுத்தாங்க" என்றாள்.

"அதெல்லாம் விடு ஏற்கனவே கொஞ்சம் அப்படி இப்படினு வாங்கியாச்சு" என்றான்.

"நாம எப்படியாது ஒரு மண்ணை வாங்கி நம்ம புள்ளைங்கல அந்த மண்ணுல வாழ வைக்கனும்னு ஆசையா இருக்குது. நீ இன்னாடானா இப்படி பொறுப்பு இல்லாம இருக்கிறயேய்யா" என்றாள்.

"அப்படி இல்லை நீ போய் கதவை சாத்திக்கினு படுபோ, நான் இப்படி வெளியிலே படுத்துகிறேன்" என்று ஓரமாக கீற்று வீட்டுக்கு வெளியிலே இருந்த காலி இடத்தில் படுத்துக் கொண்டான்.

"யோவ் பசிக்கலையா" என்றாள்.

"எனக்கு வேணாம் நான் சாப்பிட்டுதான் வந்தேன்" என்றான்.

"யோவ் எனக்கு பசிக்குது வா" என்று உள்ளே அழைத்து கதவை கயிறு ஒன்றால் உட்புறமாகக் கட்டினாள்.

காலை ஐந்து மணிக்கு கோழி கூவியது. சாமன்களை எல்லாம் கழுவி வைத்துவிட்டு தண்ணீர் பிடித்து வைத்தாள். கீழே ஹாரன் சப்தம் கேட்டது. "யோவ் ரெண்டு நட கல்லி ஏத்தனும். நான் பத்துமணிக்கு வந்துடறேன்யா, பசங்கள பாத்துக்கோ" என்றாள். ம்.. ம்... என்றான் மாயன் அசதியில்.

சூளைக்குப் போக வண்டி வந்து நிக்குது என்று பேசியவாறே அவசர அவசரமாகக் கிளம்பினாள். ஒரு லோடு கற்களை ஏற்றிக்கொண்டு டிரெக்டர் வந்து நின்றது பக்கத்து ஊரான நல்லாத்தூரில். எத்தனையோ வீடுகளுக்கு செங்கற்களை இறக்கி இருந்தாலும் இந்த முறை ஒரு மாதிரியாகவே இருந்தது அவளுக்கு. அன்று தான் கடகால் நாள்கொண்டு படைத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது அவளுக்கு. எவ்வளவு இந்த மனை என்று விசாரித்தாள். அவர்கள் சொன்னதைக் கேட்டவுடன் சொந்த வீடு, சொந்த மனையெல்லாம் வெறும் கனவாகிப் போனது அவளுக்கு.

பேசிக்கொண்டே கற்களை இறக்கினாள். அவர்கள் இங்கு படுக்கை அறை, இங்கு பூசை அறை, இங்கு பாத்ரூம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். டிரெக்டர் அடுத்த நடை அடித்துவர சூளையை நோக்கிச் சென்றது. அவள் வீதியெங்கும் இருபுறமும் உள்ள வீடுகளைப் பார்த்துக் கொண்டே அங்கிருந்த கம்பியின் மேல் தலை சாய்த்துக் கொண்டு ஒரு பெருமூச்சை இழுத்து விட்டாள். ஏதோ ஓர் உணர்வு அவளை இறுகப் பற்றிக் கொண்டது. அன்று வானம் ஒரே இருளாக இருந்தது. அன்று சூரிய கிரகணம் என்று பேசிக் கொண்டார்கள்.

- ப.தனஞ்ஜெயன்

Pin It