அன்புள்ள நித்ராவுக்கு...

நலம் நலம் அறிய ஆவல். இது நான் உனக்கெழுதும் கடிதம். அல்லது நீ எனக்கெழுதும் லட்டர். அல்லது நாம் நமக்கெழுதும் மடல்.

நீண்ட நாட்களுக்குப் பின் வார்த்தைகளாய் வடிவமெடுக்கிறேன். வசதியாய் மனப்பாடம் செய்து கொள். வாழ்வின் பெரும் அசைவுகளுக்கு வெற்றிடம் என பொருள்பட்ட போதெல்லாம்.. ஆசையோடு அசைய......விழுது தரும் காதல் எனக்குள் இருக்கிறது. உனக்குள் இருக்கும்... ஆசுவாசத்தில் சிறகசைக்க வழி விடும் உன் சைடு நேர் வகிடுக்கு முல்லை பூக்கள் நுனிகள் இருக்கின்றன.

கவனி.

அன்பின் சுவாசம் கரகரக்கும் தூரத்து கால ஒலியில் உன் உச்சரிப்பு. கைக் கொள்ளா பாலைவனத்தில் யாருமறியா சிறு ஊற்றை கொப்பளிக்கும் உன் குடத்து நீர் அறியும். மெய்ப்பொருள் காணும் மெல்லிய கானலில் என் மென் நடை அறிவாயோ. மேக ஊர்வலத்தில் நம்பிக்கை அற்ற போது என் மொட்டை மாடிக்கு உன் சதுர மழை வாய்த்தது. உன் அரை நெற்றியை பிறையாக்கிய என் தனித்த நகைப்பை யாருமறியா அலைபேசிக்குள் நீ சிறுக சிறுக சேர்த்துக் கொண்டிருப்பது நானும் அறிந்த ரகசியம் தான். நமக்குள் நாமே ரகசியம் என்பது தான் ரகசியத்தின் ரகசிய காஸிப்.

நடுக்கம் வாய்ந்த சொற்றொடர்களை வேண்டுமென்றே வசதி செய்து கொள்கிறாய். நான் வாக்கியத்தில் வீணை செய்ய வேண்டும் உனக்கு. பேராசை ஒன்று சொல்கிறேன். உன் வீட்டு மதிலில் பூனை நடை வேண்டும் எனக்கு. சொல்ல ஏராளம் இருக்க.... கேட்க தாராளம் இருக்கிறதா. சொல் ஒன்றுக்கு ஏங்கும் உன் ஒற்றை மூக்குத்தி பேரமைதிக்கு முதல் புள்ளி. நட்சத்திரம் பாய்ச்சும் உன் சிரிப்பொலிகளில் நமநமக்கும் அலங்கார பரிசுத்தத்தை ஒத்தி எடுக்கிறேன்.

நானொரு விடியல். நம்பு. நானுன் படையல். உண். நாகஸ்வர கண் கொண்டவளே... உன் நளினத்தை நங்கூரமிட்டு காட்டும் எனதன்பு. தேக்கு மர வண்டு நான். தேகம் துளைக்க வலிக்காது கேள். வானவில்லின் கூட்டணிக்கு உன் ஆடை பொருத்தம். பால்வெளியின் கற்பனைக்கு உன் உள்ளங்கை சூடு முத்தம்.

நிற்க.

நீல வான ஓடைக்கு இனி நின் ஊதா நிறம். பாடும் வானம்பாடிக்கு இனி நம் சிறகு வரம்.

நீ அச்சச்சோ என்கையில்... நான் அத்திப்பழம் தின்கிறேன். ஆத்தங்கரை கனவுகளில் உனக்கு அத்தை மகள் அலங்காரம்.

மெய்மறந்த பொழுதெல்லாம்.. மெத்தையிட்டு மேகம் பூக்கிறேன். மெட்டாக்காட்டு சித்திரத்தில்.....நீ வீசிய கூழாங்கற்கள் ஆகிறேன். நடுராத்திரிக்கு நங்கையுன் கூந்தல் முதுகு. நாள்பட்ட தவிப்பை புதுப் பெயரிட்டு அழைக்கிறேன். உன் வீட்டு முற்ற துளசி செடியில் சிறு பூச்சி நான். சிலந்தி வலை கண்டால் கண் சிமிட்டு. உள்ளிருக்கும் சிலந்தி பூச்சியும் நான். இடைவேளை தாங்கா துயரம் வளர்க்கிறேன். உன் பூ முகம் காணா என் உயரம் குறைக்கிறேன்.

இன்னும் சொற்கள் உண்டு. இன்னும் பூக்கள் உண்டு போல. இன்னும் கோர்க்க வேண்டும்... இன்னும்... உன்னிடம் சேர்க்க வேண்டும் போல.

"அன்பே ஆரமுதே... அன்பே ஆருயிரே..." பழைய சொற்களில் பருத்தி வெடிக்கும் நூதனமிருக்கிறது. பட்டம் விட்டு வால் ஆட்டும் சோளக்காடு காத்து நிற்கிறது.

கடிதம் மடக்கி எங்கு வைப்பாயோ...கால்கள் மடக்கி அங்கு நிற்பேன்.

பதில் போடு அன்பே. நானறிந்த உன் எழுத்தெல்லாம் தேன் கூடு தின்பேன்.

இப்படிக்கு

ஆத்தங்கரைப் பாறையில் அடிச்சிடிச்சு எழுதின உன் பேர்.

- கவிஜி

Pin It