எனக்கு மீசை நன்றாக முளைக்கத் தொடங்கிய பதினேழு வயதில் யாரைப் போல மீசை வைக்க வேண்டும் என்று மற்ற சகாக்களைவிட நான் முதலிலேயே முடிவு செய்து விட்டேன். எனது நண்பர்களில் பெரும்பாலானோர் மீசையை வழித்து விட்டார்கள். பல்கலைக்கழகத்துக்கு போகும்போது ஒரு படித்த, கவுரவமான, வசதியுள்ள இன்னும் பற்பல உயர்குடிமக்களுக்கு உரித்தான நல்ல பல ஊகங்களுக்கு வழி வகுக்கக்கூடிய தோற்றம் வரும் என்பது அவர்களின் எண்ணம். அதைவிட மீசை வளர்ந்து விட்டால் இளந்தாரி ஆகி விட்டதாக அர்த்தம். வயசான பிள்ளைகளை வீட்டில் வைத்திருப்பது அந்தக் காலங்களில் பயமல்லவா? அதனால் மீசை வளர்க்க விரும்பியவர்களும் தாய் தகப்பன் அழுது குளறியதால் மீசை வைக்க முடியவில்லை. கொஞ்சம் தோற்றம் குறைந்த வயசு கூடின பெடியன்கள் எல்லோருக்கும் தாய் தகப்பன் கழுசான் (சிறிய காற்சட்டை) மாட்டித்தான் வீட்டுக்கு வெளியால போக விடுவினும். ஆனால் நானோ மீசைக்கு தினமும் நல்லெண்ணெய் தேய்த்து சீவி விட்டுக் கொண்டிருந்தேன். மீசை நன்கு வளர்ந்ததும் ஹிட்லர் மீசை வைக்க வேண்டும்.

எனது வீட்டில் ஒரு பழைய புகைப்படம் ஒன்று இருந்தது. தாத்தாவும், பாட்டியும் பிள்ளைகளும் சேர்ந்து எடுத்த குழுப் புகைப்படம் அது. எங்கள் வீட்டில் அந்த புகைப்படத்துக்கு இருந்த மதிப்பே தனி. மலேசியாவில் எடுத்த புகைப்படம் அது. அந்தக் காலத்தில் எங்கள் தாத்தா மலேசியாவில் மிகப்பெரிய தொழிலதிபராம். அத்துடன் அரசாங்கத்தில் மிகப்பெரிய புள்ளியாம். அவருக்கு சொந்தமாக இரண்டு பருத்தி ஆலைகள் இருந்தன. அவரது நிர்வாகத்தின் கீழ் அரசுக்கு சொந்தமான மிகப் பெரிய ரப்பர் எஸ்டேட் இருந்தது. அந்த எஸ்டேட்டின் பெரும்பாலான பகுதிகள் பிரித்தானிய ஆளுகைக்குக்கீழ் இருந்தன. மிச்சப் பகுதிகள் மீது மகாராணியின் அரசாட்சி முழுமையாக இன்னும் படரவில்லை. அந்தளவுக்கு விசாலமானது. ஒரு பகுதிக்குள்ளாக புகையிரத தடம் சென்று கொண்டிருந்தது. மீதிப்பகுதிக்கு அரசு இன்னும் தடம் போடவில்லை. அந்த விசாலமான நிலப்பகுதிக்கு தாத்தா ஒரு குறுநில மன்னராக வலம் வந்து கொண்டிருந்தார். அங்கே வேலை செய்வதற்க்காக ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்தார்கள். ஒரு வகையில் அது மிக பெரிய சாம்ராஜ்யம். இவையெல்லாம் எனது குடும்பத்தார் சொன்னதுதான். இதிலே எவ்வளவு சதவீதம் உண்மை என்று தெரியவில்லை.

அவர்களுக்கு பினாங்கில் மிகப்பெரிய மாளிகை போன்ற வீடும் இருந்தது. பல வேலைக்காரர்களும், மூன்று கார்களும், சாரதிகளும், சமையல்காரர்களுமாக எப்போதும் வீடு களை கட்டியபடியேதான் இருக்குமாம்.

இவ்வாறாக எனது வீட்டில் உள்ள பெரியவர்கள் தாத்தாவைப் பற்றி நினைவில் வைத்திருந்ததும், நினைவில் இருப்பதாக நினைத்துக் கொண்டதுமாக சொல்லும் வருணனைகள், வதந்திகள், புகழுரைகள், மற்றும் பெருமைகள் பற்றி எனக்கு துளியளவும் ஆர்வம் இல்லை. வீட்டில் உள்ளவர்கள் இப்பிடி தாத்தாவின் மலேசிய வாழ்க்கை பற்றி 'பெரிய புராணம்' பாடும்போது நான் வைக்கம் முகம்மது பஷீரின் குஞ்சுப்பாத்தும்மாவையும் அவளின் தாத்தாவின் யானையையும்தான் நினைத்துக் கொள்வேன்.

ஆனால் தாத்தாவின் அந்தப் புகைப்படத்தில எனக்கு சரியான ஆசை. எங்கட வம்சத்தை ரகசியமாக மனசுக்குள் பார்த்து சந்தோசப்படவேணும் எண்டுற பெரிய ஆசையொன்றும் கிடையாது. ஆனால் அந்த போட்டோவில் இருக்கும் ஒரு மனிதர் மீதுதான் எனக்கு எப்பவுமே ஒரு கண். தாத்தாவின் குடும்பத்துக்கு பின்னால் ஒரு நடுத்தர உயரமுள்ள மனிதர். அவர் அந்த வீட்டின் வேலைக்காரராம். உண்மையில் குடும்பப் படத்தில இடம் பெறுகிற அளவுக்கு அவருக்கு தாத்தாவின் குடும்பத்துடன் அசாதாரணமான பந்தமோ அல்லது குடும்பத்தின்மீது அதீதமான விசுவாசமோ இருந்திருக்க வேண்டும். அல்லது எதோ ஒரு பெயரிட்டு அழைக்கமுடியாத உறவோ இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்தப்புகைப்படம் யாருக்கு கவுரவம் என்று எனக்கு உண்மையில் விளங்கவில்லை. தாத்தாவுக்கா அல்லது அவர்களின் வேலைக்காரருக்கா? வீட்டில் கேட்டால் அதுக்கொரு 'பெரிய புராணத்தை' தாத்தாவுக்குப் பாடி விடுவார்கள் என்பதில் எனக்கு கொஞ்சமும் ஐயமில்லை.

அவருக்கு சற்று ஓரலான முகம். அந்த மிகப்பழமையான கருப்பு-வெள்ளை புகைப்படத்தில் மிகவும் துலக்கமாக முகத்தில் தெரிகிறது ஹிட்லர் மீசை. எனது ஹிட்லர் மீசைக்கான தூண்டுதல் யார் என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். யாழ் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் படிக்கும்போது நானும் நண்பர்கள் சிலரும் சேர்ந்து சார்லி சாப்ளின் நடித்த "The Great Dictator" படத்தைப் பார்த்தோம். அதிலே சார்லி சாப்ளின் ஹிட்லரின் வேடத்தில் அவரின் மீசையை வைத்து நடித்திருப்பார். எனக்கு சாப்ளின் படத்தை விட அவரின் ஹிட்லர் மீசைதான் மிகவும் பிடித்திருந்தது. பின்னாளில் சாப்ளின் ஹிட்லர் மீசையை வைக்கவில்லை என்றும், சாப்ளின் படத்திலிருந்துதான் ஹிட்லர் அந்த மீசையை கொப்பி பண்ணிக்கொண்டார் என்றும், ஹிட்லர் சாப்ளினின் தீவிர ரசிகர் என்றும் சொன்னார்கள். எனக்கு அது உண்மை போலத்தான் பட்டது. ஹிட்லரை ஒரு பைத்தியக்காரனாக சித்தரித்து கேலி செய்த அந்தப்படத்தின் கேலியையும், நகைச்சுவையையும் எல்லா சர்வாதிகாரிகளையும் போலவே ஹிட்லரும் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். எது எப்பிடியோ எனது மீசையை இனிமேல் நீங்கள் சாப்ளின் மீசை என்றே அழைக்கலாம்.

எனது வாழ்க்கையில் நான் செய்த சாதனைகளில் முதன்மையானது எனது பல்கலைக்கழகப் படிப்பு, தொழில் நேர்முகத் தேர்வுகள், அம்மாவின் ஏச்சுக்கள், உறவினர்களின் கேலிப் பேச்சுக்கள், எனது திருமணம் என்று எல்லா சந்தர்ப்பங்களையும் தாண்டி எனது சாப்ளின் மீசையை மிகப் பத்திரமாக பாதுகாத்ததுதான்.

02

சுகுமாரன் பினாங்கில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதிக்கு வந்து சேர்ந்தபோது இரவாகி விட்டிருந்தது. உண்மையில் கொழும்பிலிருந்து வந்த விமானம் தாமதமாகி விட்டது. சுகுமாரனுக்கு மலேசியாவில் கொழும்பைவிட வெக்கை அதிகமாக இருப்பது போல பட்டது.

இவன் மலேசியாவில் கலந்து கொள்ளும் முதலாவது மாநாடு இது. பருவநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ளும் விதமாக புதிய எரிசக்திவளங்களின் வர்த்தக வாய்ப்புகளை கண்டறியும் வழிமுறைகள் பற்றி மாநாட்டில் தீர்மானங்களை எடுக்க வேண்டும். இவன் கொழும்பை பிரதிநிதித்துவம் செய்ய வந்திருக்கிறான்.

இவ்வாறான பன்னாட்டு கருத்தரங்குகளில் நீண்ட வருடங்களாக பங்குபற்றி இவனுக்கு ஒருவித சோர்வு தட்டிவிட்டது. முதல் மூன்று நாட்களுக்கு அரட்டைகள், மாலைவேளைகளில் விருந்துகள், இறுதி நாளில் அவசரமாக நிறைவேற்றப்படும் ஏற்கனவே நாடுகளின் உயர்மட்ட தரகர்களிடையே முடிவாகிவிட்ட தீர்மானங்கள் என்று நாலாம்தரமான நாடாளுமன்றங்கள் போலவே இப்போது பல சர்வதேச மாநாடுகள் மாறி விட்டன.

ஆனால் பினாங்கில் நடைபெறப் போகும் மாநாட்டுக்குச் சென்று இலங்கையை பிரதிநித்துவம் செய்ய முடியுமா என்று கேட்டு இவனது மேலதிகாரி மெயில் அனுப்பியபோது உடனடியாக மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டான். அதற்கு காரணம் இருந்தது. இவனது தாத்தா பினாங்கில் நீண்டகாலம் தொழில் செய்தவராம். பிரிட்டிஷ் காலத்தில் அவர் அங்கே ஒரு பெரிய புள்ளி. இலவசமாக ஊர் சுற்றும் வாய்ப்பு கிடைக்கும்போது தாத்தாவின் ஊரையும் அவர் முன்பு வாழ்ந்த இடங்களையும் பார்க்கலாமே. கடந்த காலத்துக்குள் சென்று வாழ்வது போன்ற சுகம் வேறெதிலும் கிடையாது. அதுவும் இது சுகுமாரனின் சொந்த வம்சத்தின் கடந்த காலம். நினைக்கும்போதே அவனுக்கு மலேசியப் பயணம் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

எல்லா நாசமும் ஹிட்லரால் வந்தது என்று முன்பு பாட்டி அடிக்கடி திட்டுவதுண்டு. அவர்தானே இரண்டாம் உலகப்போரை தொடங்கியது. பர்மா, மலேசியா என்று யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் யப்பானிய படைகள் குண்டு வீசியதோடு தாத்தாவின் மலேசிய வாழ்வும், அதன் பெருமையும் முடிவுக்கு வந்தன. உலகில் வாழ்ந்து கெடுவதைப் போன்ற துயரம் வேறெதுவுமில்லை. ஆனால் தாத்தா ஒன்றும் வாழ்ந்து கெட்டவரில்லை. கொழும்பிலும் அவருக்கு மிகச் சிறப்பான வாழ்க்கைதான் வாய்த்தது. உண்மையில் தாத்தா ஒன்றும் யுத்தத்துக்கு பயந்து கொழும்புக்கு வரவில்லை. யுத்தத்தின் இறுதியில் ஒரு நிர்வாக மாற்றலாகத்தான் இங்கே வந்தார் என்பது தனது கடைசிக் காலத்தில் பாட்டி சொல்லி இவனுக்குத் தெரிந்து விட்டது.

மாநாடு தொடங்கியபோது அதற்கு தலைமை வகித்தது மலேசியாவை சேர்ந்த ஒரு பெண்மணி. நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு தோற்றம். நிச்சயம் ஐம்பது வயதாவது இருக்கும் என்றுதான் ஊகித்திருந்தான். ஆனால் பார்ப்பவர்கள் உடனடியாக மிகவும் குறைத்தே மதிப்பிடுவார்கள். அவளின் தோற்றம் இவனுக்கு அவள் இந்திய வம்சாவழியாக இருப்பாளோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. மிகவும் நேர்த்தியாக பிசினஸ் சூட்ஸ் அணிந்து மிகவும் விலையுயர்ந்த கண்ணாடியை அணிந்திருந்தாள். உண்மையில் அவளுக்கு கண்ணாடி ஒரு தேஜஸைக் கொடுத்தது.

இவனுக்கு கண்ணாடி அணிந்த பெண்களை மிகவும் பிடிக்கும். பெரும்பாலும் கல்வித்தகுதி மூலம் அடைந்த முதிர்ச்சியும், அழகும் அவர்களிடம் இருக்கும். ஒரு புத்திஜீவித்தனமான தோற்றம் அவர்களிடம் துருத்திக் கொண்டிருக்கும் என்பது இவன் உணர்ந்தறிந்தது. இவனும் வேலைக்குப்போன காலத்திலிருந்து கண்ணாடி அணிந்து வருகிறான். ஆனால் அது உண்மையில் அவனுக்குப் பயன்படுவதற்கு அவன் பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இவனைப் பொறுத்தவரை கண்ணாடி என்பது தன்னம்பிக்கை கொடுக்கிற ஒரு சாதனம். சபைக்கூச்சதை போக்கும் அற்புதமான ஒரு கருவி. நெருக்கடியான தருணங்களில் கை கொடுக்கும் ஒரு கருவி. மிக முக்கிய ஆலோசனைக் கூட்டங்களில் தடுமாற்றம் ஏற்பட்டால் கண்ணாடிக்கூடாக கூர்ந்து நோக்கி கணினியில் தேடுவதுபோல பாவனை செய்யலாம். அந்த சிறிய இடைவெளியில் சற்று சிந்திப்பதற்கும், ஏனையோர் பதில் அளித்து இவனை சங்கடத்தில் இருந்து காப்பாற்றுவதற்கும் வழி பிறந்துவிடும். முக்கியமான தருணங்களில் நம்பிக்கை இழந்து சபை நடுவில் உடல் தளரும்போது கண்ணடியை கழற்றி வைத்து சற்று கைமாற்றி மீண்டும் அணியலாம். கிட்டத்தட்ட ஒரு கைத்தடி போல அதைப் பாவிக்க முடியும். சுகுமாரனை பொறுத்தவரை இவனது அறிவுத்திறனுக்கும், செயற்பாட்டுத் திறனுக்கும் காரணம் இவனது மூளையோ, தொடர்பாடல் திறனோ அல்லது அறிவாற்றலோ இல்லை. கொழும்பு பெற்றா (Petta) பகுதியில் மலிவுவிலை நடைபாதை சந்தையில் நூறு ரூபாவுக்கு வாங்கிய எந்தவித 'பவரும்' இல்லாத அந்தக் கண்ணாடிதான்.

அந்தப் பெண்மணி தன்னை சாந்தா என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள். வேறு வேறு அமர்வுகளில் கலந்து கொண்டு அவளின் ஆழமான கேள்விகளாலும் உரைகளாலும் மாநாட்டின் பேச்சாளர்களை அசர வைத்தாள். நிச்சயமாக இவள் பிரித்தானியாவின் அல்லது அமெரிக்காவின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களில் ஐந்து வருடங்களுக்கு மேல் இருக்கைகளை தேய்த்திருக்க வேண்டும். ஆங்கிலம், தமிழ், மலாய், பிரெஞ்சு என்று பல மொழிகள் அவள் நாவுக்கூடாக பயணம் செய்து கொண்டிருந்தன.

இரவு விருந்துகளின் போதும் அவள் எந்தக் குறையும் வைக்கவில்லை. இத்தாலியின் மிக விலையுயர்ந்த சிவப்பு வைனுடன் கூடிய Five Course இரவு விருந்தின் போதும் அவள்தான் எல்லோரையும் விட சற்றுத் துலக்கமாகத் தெரிந்தாள். இரவு விருந்துகளுக்கே உரிய கருமைநிறமான மினுமினுப்பான உடையில் அவளுக்கு பத்து வயது குறைந்துவிட்டது போலத் தோன்றியது. இப்போதெல்லாம் நாகரிகமான, படித்த பெண்களுக்கு வயதே போவதில்லை. இரவு விருந்துகளின்போது இவனுக்கும் அவளுக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது. இருவரும் வைன் அருந்துவதில்லை. மாறாக Champagne மட்டுமே அருந்தினார்கள்.

மாநாட்டின் இறுதி நாளின் கடைசி இரவு விருந்து. கொழும்பு திரும்புவதற்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன. நாளை பினாங்கை சுற்றிப் பார்க்க வேண்டும். Champagne கிண்ணத்தை மிகவும் ஸ்டைலாக ஏந்தியபடி இவனை நோக்கி வந்தாள் சாந்தா.

"மிஸ்டர் சுகுமாரன் நீங்கள் தமிழ்நாடா?"

"இல்லை, கொழும்பு" இருவரும் மதுக்கிண்ணங்களை உரசிக் கொண்டனர்.

"எனக்கு என்னவோ முதல் நாளே உம்மை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது; ஆனால் இன்றுதான் சந்திக்க முடிந்தது; உண்மையை சொன்னால் உம்மை பார்த்த உடனேயே எனக்கு உடனே அறிமுகமாக வேண்டும் வேண்டும் என்று தோன்றி விட்டது" நளினமான ஆங்கிலத்தில் மென்மையாக கூறினாள். ஒவ்வொரு முறையும் மிக நீண்ட வசனம் பேசியதன் பின்னர் உதடுகளால் மெதுவாக Champagne ஐ உறிஞ்சினாள்.

இவனுக்கு ஒரு கெட்ட பழக்கம். எப்போதும் புதியவர்களை அறிமுகம் செய்து கொள்ளும்போது தன்னை அறிமுகப்படுத்தியவுடன் உடனடியாக அம்மா அப்பா என்ன செய்கிறார்கள் என்று கேட்டு விடுவான். பழக்கதோஷம் இப்போதும் அதையே கேட்டுத் தொலைத்தான்.

அவள் இவனை கூர்ந்து பார்த்துவிட்டு சொன்னாள்.

"இங்கே அமருவோம். இசை ஆரம்பிக்க இன்னமும் நேரமிருக்கிறது”.

03

எனது பெற்றோருக்கு பூர்வீகம் புதுக்கோட்டை மாவட்டம். தொடர்ந்த வரட்சியாலும், பஞ்சங்களாலும் தாத்தாவுக்கு விவசாயம் நொடிந்து போயிருந்தது. அவரின் பூர்விக நிலங்கள் எல்லாம் அடைமானத்துக்கு போய்விட்டன. அப்பா இங்கே வந்தபோது அவருக்கு திருமணமாகி ஒரு வாரம்தான் ஆகியிருந்தது. அதற்கு முன்னரே தாத்தா வாங்கியிருந்த கடனுக்கு தவணை முடிந்து ஆறு மாதம் முடிந்துவிட்டது. மலேசியாவுக்கு வர வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அப்பாவுக்கு எப்போதுமே இருந்ததில்லை. தாத்தாதான் சொன்னாராம் மலேசியாவில் ஒரு கொம்பனிக்கு வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள் என்று. அப்பாவும் வெளிநாடு போய் உழைத்ததாகிவிடும். தாத்தாவின் கடனும் தீர்ந்துவிடும். உடனே அம்மாவுடன் கப்பலேறி விட்டார்.

சற்று நிறுத்தி சிறிது Champagneனை உறிஞ்சிவிட்டு தொடர்ந்தாள்.

இங்கே வந்த பின்னர்தான் அப்பாவுக்கு புரிந்தது தான் வந்தது ஒரு கம்பெனி வேலைக்கு அல்ல என்று. வீட்டு வேலைக்கென்றே அமர்த்தியிருக்கிறார்கள். முதலாளி பினாங்கில் மிகப்பெரிய புள்ளி. வீடு என்றால் சாதாரண வீடல்ல. மிகப்பெரியவளாகம் அது. முதலாளி பிரித்தானிய அரசில் தென் கிழக்காசியாவுக்கான நிர்வாகப் பிரிவில் மிகப்பெரிய பதவியில் இருந்தார். அவர் உண்மையில் ஒரு ஜெண்டில்மேன். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அதே வளாகத்தில் ஒரு விடுதி ஒதுக்கப்பட்டது.

முதலாளி அப்பாவை மிகவும் கவுரவமாக நடத்துவாராம். மூன்றுவேளை உணவும் முதலாளி வீட்டில் இருந்தே கிடைத்துவிடுமாம். உடைகளுக்கும் குறைவில்லை. ஆறு மாதங்கள் எல்லாம் சரிவர நடந்துகொண்டிருந்தது. அப்போதுதான் அப்பா ஒரு விடயத்தை கவனித்தார். அவருக்கு கடந்த ஆறு மாதங்களும் சம்பளம் கிடைக்கவில்லை. அவர் மலேசியாவுக்கு வந்ததே உழைப்பதற்கும் தாத்தாவின் கடனை அடைப்பதற்கும் அல்லவா?

அப்பாவின் சம்பளத்தை தான் ஒன்று சேர்த்து வங்கியில் இட்டிருக்கிறேன். வருட இறுதியில் கிடைத்துவிடும் என்று சொன்னாராம் முதலாளி. இந்த விடயம் தாத்தாவின் கடன்காரருக்கு தெரியாது. தாத்தாவின் கடனுக்கு வட்டி ஏறிக் கொண்டிருந்தது. மறுபுறத்தில் ஆழம் தெரியாமல் காலை விட்ட கதையாக பிரித்தானிய அரசுக்கு யுத்தச்செலவும் ஏறிக் கொண்டிருந்தது. மூன்றரை வருடங்கள் கழித்து இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவுக்கு வந்ததும் முதலாளி தன் குடும்பத்துடன் மலேசியாவை விட்டு வெளியேறினார்.

ஆனால் போகும்போது ஒரு வாக்குறுதி கொடுத்திருந்தார். மொத்த சம்பளப் பாக்கியையும் ஊருக்குச் சென்றபின் வட்டியுடன் சேர்த்து மலேசியாவுக்கு அனுப்பி விடுவதாக. முதலாளி நல்லவர். பொய் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் 1990இல் அப்பா மரணமடையும் வரை அவருக்கு சம்பளப் பாக்கி வந்து சேரவில்லை. ஒருவேளை 1945இல் முதலாளி அனுப்பிய செக் தபால்த் துறையில் இன்னமும் தேங்கிக் கிடக்கிறதோ என்னவோ?

நான் அம்மாவுக்கு நடுத்தர வயது தாண்டிய பிறகுதான் பிறந்தேன். மிகுந்த சிரமத்துடன் என்னைப் படிப்பிக்க அப்பா இரவு பகலாக கூலி வேலை செய்தார். வெளிநாட்டில் கல்வி கற்று பினாங்கிற்கு திரும்பி வரும்போது அப்பா மரணப் படுக்கையில் இருந்தார். நான் முதல் வகுப்பில் சித்தியடைந்து வந்தது பற்றி சந்தோசமாக வாழ்த்துவார் என்று நினைத்தேன். என்னை அருகில் அழைத்தார். எனது கைகளை மிகுந்த பரிவுடன் தடவினார்.

"சாந்தா! உன்ர வாழ்க்கையில ஒருபோதும் பெரிய மனுஷர்களின் நல்லெண்ணத்தை நம்பவே நம்பாத!" இதுதான் அவர் கடைசியாப் பேசினது. அப்போது அவரின் கண்களில் தெரிந்தது ஆற்றாமையா, ஏக்கமா, தோல்வியா என்று என்னால் இப்போதும் கூற முடியவில்லை. ஒரு கையாலாகாத மனிதனின் கடைசிப் பார்வை அது.

சாந்தா சற்று உணர்ச்சி வசப்பட்டாள். என்னை சற்றுநேரம் வெறித்துப் பார்த்துவிட்டு கிளாசில் மிச்சமிருந்த முழு Champagneயும் ஒரே மூச்சில் குடித்தாள். நான் சற்றே கலவரப்பட்டு;

"Madam! It is enough!" என்றேன்.

"Hey Boy, I like you" என்றபடியே தனது கைப்பையை திறந்து சிறிய அட்டை ஒன்றை எடுத்தாள்.

“என்னோட அப்பாவை பார்க்கோணுமா? இஞ்ச பார்!”

அந்த மிகச் சிறிய, பழைய, கருப்பு-வெள்ளை புகைப்படத்தில் மிக அழகான சாப்ளின் மீசையுடன் நின்றிருந்தார் அந்த மனிதர். நான் இவ்வளவு காலமும் ரசித்த மீசை. அவரது முகத்தைச்சுற்றி சிவப்பு மையால் வட்டமிடப்பட்டிருந்தது. அவருக்கு முன்னால் கம்பீரமாக உட்கார்ந்த நிலையில் எனது தாத்தா குடும்பம்.

ராஜகளையுடன் கூடிய தாத்தாவின் நெடிய உருவம் எனக்கு இப்போது சிறுத்துப் போயிருந்தது. எனது கையிலிருந்த Champagne glass திடீரென்று நழுவியது. சுற்றும் முற்றும் கூடியிருந்தவர்கள் திடுக்கிட்டு மண்டபத்தின் மூலையில் இருந்த எங்களையே உற்றுப் பார்த்தனர்.

நான் மிக வேகமாக கதிரையை பின்னுக்குத் தள்ளிவிட்டு சாந்தாவின் முகத்தைப் பார்க்காமல் வேகமாக அங்கிருந்து விலகி நடந்தேன். அருந்தியிருந்த Champagne கண்களை கிறங்கச் செய்தது.

“Bloody fool" என்று அவள் கோபத்துடன் இரைவது கேட்கிறது. எழுபத்தைந்தாண்டு கால பழிச்சொல் விடாமல் என் பின்னால் துரத்திக் கொண்டு வருவதாக உணர்ந்தேன். அதனிடமிருந்து தப்புவதற்காக மிக வேகமாக ஓடி மண்டபத்தின் வராந்தாவிலிருந்த குளியலறைக்குள் புகுந்து, வாழ்க்கையில் முன்னெப்போதும் அனுபவித்திராத ஒரு அச்சத்துடன் கதவைப் பூட்டிக் கொண்டேன்.

- அலைமகன்

Pin It