ஆள் அரவமற்ற காட்டுப் பாதையின் பேரமைதி அச்சமூட்டுவதாய் இருந்தது. ஆங்காங்கே முறிந்து கிடந்த மரக்கிளைகளும், யானை சாணங்களும் மேலும் திகிலுட்டியது. எங்களது கார் தன்னந்தனியாய் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. எதிரே உள்ள வளைவில் வெகு அருகில் யானையின் பிளிறல் ஓங்கி அடங்கியது. சீனி காரை நிறுத்தி வாயின் மேல் ஒரு விரலை வைத்து "ஷ்" என அடக்கிவிட்டு, சாலையை நோக்கி சைகை காட்டினான். செம்மண் பூசிய உடம்பை சிலிர்த்துக்கொண்டு, நீண்ட நெடிய மினுங்கும் தந்தங்களுடன் யானை ஒன்று சாலையை மறித்து ஆஜானுபாகுவாய் நின்றிருந்தது.

எனக்கு அடிவயிறு பகீரென்றது. லேசாக திரும்பிப் பார்க்கையில், கண்கள் அகல விரிய சீனியும், கிருபாவும் வைத்த கண் வாங்காமல் யானையைப் பார்த்தார்கள். அவர்கள் கண்ணில் பயமும், ஆர்வமும் கலவையாய்த் தெரிந்தது.

சட்டென ஒரு 'கேமரா பிளாஷ்'… முன் சீட்டில் இருந்த கிருபா கேமராவில் இருந்து மின்னியது. அந்த வெளிச்சம், அதைத் தொந்தரவு செய்திருக்க வேண்டும். வாலை முறுக்கி, தும்பிக்கையைத் தூக்கி பிளிறிக்கொண்டே காரை நோக்கி வேகமாக வந்தது. அது வரும் வேகத்தில் இருந்தே கோபத்தை உணர முடிந்தது. எங்களுக்கு திக்… திக்கென்று இதயம் துடிக்க ஆரம்பித்தது.

"டேய் பிளாஷ ஆப் பண்ணுடா"…

"ஏய் வண்டிய பின்னால எடு… சீக்கிரம்"…

"யான வருது… வேகமாக எடுத்து தொலடா… சீக்கிரம்"…

காருக்குள் மூவரும் மாறி, மாறி கத்தியதில் வண்டியை ஓட்டிய சீனி ரீவர்ஸ் கீர் போடுவதற்குப் பதிலாக, பயத்தில் முதல் கியரைப் போட்டு யானையை நோக்கி வண்டியை இயக்கினான். "ஐய்யோ" என எல்லோரும் அலற, சுதாரித்துக் கொண்ட சீனி "எல்லாரும் கொஞ்சம் வாய மூடுங்கடா" என சொல்லி ரிவர்ஸ் கியர் போட்டு வண்டியை வேகமாக பின்நோக்கி இயக்கினான். யானையும் எங்களை நோக்கி வேகமெடுத்தது. யானை வரும் வேகத்தைப் பார்த்து "இன்னிக்கு செத்தோம்" என்றிருந்தது. ஒரு வழியாக மேடு பள்ளமாக இருந்த மலைப் பாதையில் இருந்து வெகு தொலைவிற்குப் பின்னால் வந்து சேர்ந்து விட்டோம். சிறிது நேர ஆசுவாசத்திற்குப் பின், மீண்டும் வண்டியை சீனி இயக்கினான். எதிரில் யானை நிற்கிறதா என மூவரும் கண்களை சுழல விட்டோம். யானை வழியில் தென்படாததால் கார் வேகமெடுத்தது. யானை மறித்து நின்றிருந்த இடத்தின் இடப்புறம் ஒரு சரிவுப் பாதையில் பள்ளம் தென்பட்டது. அங்கிருந்த குட்டையில் யானை தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பதை பார்த்தபடி கடந்தோம்.

மேல்சட்டை இல்லா கிழவனைப் போல, தோல்கள் சுருங்கி எலும்புகள் தெரிய தனி மரம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அம்மரத்தின் நிர்வாணத்தை மறைக்க ஆங்காங்கே இருந்த இலைகளும், கோடையின் உக்கிரத்தில் உதிர்ந்தவாறு இருந்தன. அதற்கு கீழே ஒரு சிறு டீக்கடை. அங்கு பிஸ்கட் பாக்கெட்களும், மிட்டாய்களும், பாட்டில்களும் வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. கடைக்கு வெளியே சிறிய அடுப்பு வைத்து அதன்மீது டீ பாத்திரம் வைக்கப்பட்டு இருந்தது. கடைக்குள் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தாள். அவளின் எண்ணெய் பூசிய தலை முடியும், பழுப்பு நிறத்தில் வெளுத்த புடவையும், கருத்த தேகமும் அந்த காடே தனது உலகமாய் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடிப் பெண் என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து கொள்ள முடிந்தது. கடைக்கு முன்பாக வெயிலுக்காக போடப்பட்டு இருந்த நீலநிற தார் சீட்டிற்கு கீழே இருந்த ஒற்றைப் பெஞ்சில், 4 பேர் அமர்ந்திருந்தனர். "ஏய்… வள்ளி டீ கொடு" என அங்கிருந்த மீசைக்காரன் சொன்னான்.

கடைக்கு முன்பு குருவிகள் தலையை ஆட்டியபடி, சிதறிக் கிடந்த தானியங்களை ஒவ்வொன்றாய் கொத்தி, கொத்தி தின்பதும், பறப்பதுமாய் இருந்தது. வள்ளி எங்களுக்கும் சேர்த்து டீயை நுரை பொங்கக் கொண்டு வந்து தந்துவிட்டு, விறகுகளை அடுப்பிற்குள் தள்ளினாள். சூடான தேநீர் தொண்டைக்குள் இதமாக இறங்கியது. 'யானை தந்த மரண பயத்தின் படபடப்பு முகத்தில் தெரிந்ததைப் போல', டீக்கடை வள்ளி எங்களைப் பார்த்து "என்ன ஆச்சுப்பா… ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க??" என்றார்.

மூவரும் மாறி, மாறி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம். யானை வழி மறித்ததையும், தப்பிப் பிழைத்ததையும் சுருக்கமாக சொல்லி முடித்தேன். அவள் மெல்லிய புன்னகையுடன், "அந்த ஆனையா? தினமும் தண்ணி குடிக்க இப்படி தான் வரும், போகும். யாரையும் ஒன்னும் பண்ணாது" என்றார்.

"யானகளுக்கு வக்காலத்து வங்குறதே இவளுக்கு பொழப்பா போச்சு, வூட்ட உடச்ச யான இவ கடய உடச்சிருந்தா இப்படி பேசுவளா??" என்று மீசைக்காரன் கூறினான்.

"என்னாச்சு ணா?" என கேட்டேன்.

"காலையில யானக் கூட்டம் பக்கத்துத் தோட்டத்துல புகுந்து வாழ, தென்ன எல்லாம் நாசம் பண்ணிடுச்சு, பாரெஸ்ட்காரங்க வந்து வெடியப் போட்டு விரட்டுனாங்க. அதுல ஓடுன யானைக எதுக்க வந்த பொம்பளய அடிக்கப் போயிட்டுச்சு, நல்ல வேள சூதானமா வூட்டுக்குள்ள பூந்து தப்பிச்சுட்டா, ஆனா வூட்டு முன்னால இருந்ததா எல்லா உடச்சு எறிஞ்சிட்டு போயிடுச்சு" என்றார். சற்று தொலைவில் அந்த வீடு தெரிந்தது. கதவு உடைத்து எறியப்பட்டிருந்தது. வீட்டிற்கு முன்பிருந்த பொருட்களும், மரங்களும் சிதறிக் கிடந்தன. யானைகள் கூட்டமாக வந்து சென்றதற்கு அடையாளமாக, சாணங்கள் ஆங்காங்கே கண்ணில் பட்டது. யானை சாணத்தின் மீது பட்டாம் பூச்சிகள் மொய்த்து கொண்டிருந்தது. சாணத்தின் வாசம் இன்னும் காற்றில் கலந்திருந்தது.

"கான காட்ட அழிச்சிட்டே போன, காட்டுல வாழுற உசுருக எங்கன போகும்"?... வள்ளி ஆவேசமாகக் கேட்டாள்.

"யானைகளும் ருசியா திண்ணு பழகிடுச்சு, ரேசன் கடையை உடைச்சு அரிசி, பருப்பு எல்லாம் திண்ணுதுக, வீட்ட உடச்சு உள்ள புகுந்து அரிசி, உப்ப திண்ணுது, இதுக தொல்லை ஜாஸ்தியாட்டே போகுது" அடுக்கடுக்காய் புகார்களை பெஞ்சில் அமர்ந்திருவர்கள் அடுக்கினர்.

"காட்டுல தீவணம் இல்லான அதுக எங்க போகும்?, அதுக்கு தேவைக்கிறத அழிச்சிட்டு, காட்டோரமா வாழ, கரும்புனு போட்டா அதுக வரத்தானே செய்யும்?... அதுக வலச பாதை யெல்லாம் கரெண்ட் வேலியும், வெடியும் போட்டு விரட்டுனா, அதுக ஊருக்குள்ள தானே போகும்? மனுச ஒரு சாண் வயித்திக்கு ஊரயே அடிச்சுப் போடுறான், அம்மாம் பெரிய ஜீவன் தன் வயித்துக்கு என்ன பண்ணும்?" என சொல்லிவிட்டு போண்டாவுக்கு கடலை மாவை பிசைந்து நீர் கூட்டி வைத்தாள்.

"ஊருக்குல்ல வர யானைகள சுட்டுக் கொல்லனும். அப்ப தான் குடியானவனெல்லாம் பொழைக்க முடியும்" என்றார்கள். பதிலுக்கு வள்ளி அவர்களை நோக்கி ஒரு கோபப் பார்வை மட்டுமே பார்த்தாள், அதற்கு மேல் அவர்கள் வாய் திறக்கவில்லை.

மரத்தின் நிழல் கிழக்கு நோக்கி ஊர்ந்து சென்றது.

ஆளுக்கு சில பிஸ்கெட்களைத் தின்று, டீயைக் குடித்த பின், 500 ரூபாய் நோட்டினை அவளை நோக்கி நீட்டியபடி "அக்கா, எவ்வளவு ஆச்சு"? என்றேன்.

பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் கை கழுவியபடி, "64 ரூபாய் ஆச்சுப்பா, சில்லற இல்லையா?" எனக் கேட்டார்.

பர்சினை புரட்டிப் பார்த்தேன். யாரிடமும் சில்லறை இல்லை. எல்லோர் கையிலும் ஐநூறு ரூபாய் தாளே இருந்தது. அந்த பணத்தாளினை திரும்பக் கொடுத்தபடி "தம்பி சில்லற இல்லப்பா, வரப்போ கொடுங்கப்பா" என்றார்.

"500 ரூபாயையும் நீங்களே வச்சிருங்க, திரும்ப வரப்போ சில்லற வாங்கிக்றோம்" என்றேன்.

"மனுசனுங்கள நம்பணும்ப்பா, திரும்பி வரப்போ கொடுக்காமையா போயிடுவீங்க?, திரும்ப வரப்போ கொடுத்தா போதும். வூட்ட இடிச்ச யானை கடைய இடிச்சிருந்த என்னப்பா இருந்திருக்கும்?, போயிட்டு வாங்க" என எங்களை அனுப்பி வைத்தாள். அவரிடம் இருந்து விடை பெறுவதற்கும், நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த வேட்டை தடுப்புக் காவலர் ரங்கன் வருவதற்கும் நேரம் சரியாய் இருந்தது. கூத்தாமண்டி முகாம் குறித்து செய்தி எடுக்க ரேஞ்சரிடம் பேசி அனுமதி பெற்றிருந்தோம். அதன்படி எங்களை அந்நேரத்திற்கு வரச்சொல்லி ஏற்கனவே ரங்கன் சொல்லிருந்தார்.

"சார்… போலாம் வாங்க". சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆத்துக்காடு நோக்கி பயணமானோம். ரங்கனுக்கு 30 வயதிருக்கும். கருத்த ஒல்லிய 6 அடி தேகம், அடர்ந்த சுருள் முடி, மெல்லிய தாடி, கருப்பு, பச்சை நிறங்கள் நேர்த்தியற்ற வடிவத்தில் இராணுவ வீரனின் உடையைப் போல டீசர்ட் மற்றும் பேண்ட்டில் இருந்தான்.

பவானி சாகர் நீர் பரப்புப் பகுதியில் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி பவானி நதி ஓடிக்கொண்டிருந்தது. மாலைப் பொழுதின் பொன்நிற ஒளியில் நதி நீர் மின்னியது. மின்னிய நீரில் மேல் மீன்கள் துள்ளி குதித்தன. துள்ளிய மீன்களை பரிசலில் இருந்து வீசப்பட்ட வலை வாரி சுருட்டியது. ஆற்றின் நாங்கள் நின்றிருந்த கரை விவசாய நிலமாகவும், மறுகரை மலைகளை ஒட்டிய வன நிலமாகவும் இருந்தது. ஆற்றின் மறுகரையில் கூட்டம் கூட்டமாய் யானைகள் தண்ணீர் பருக வருவதும், வனத்திற்கு திரும்புவதுமாய் இருந்தது. குட்டி யானைகள் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தன. கொஞ்சம் தள்ளி மான்களும் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது.

"ஆத்துல தண்ணி கரை புரண்டு ஓடணும்னு வேண்டுறாவங்களா பார்த்திருப்பீங்க. ஆனா ஆத்துல தண்ணி குறையும்னு ஒரு தரப்பும், தண்ணி அதிகமாகும்னு இன்னொரு தரப்பும் வேண்டிக்கறத இங்க தான் பாக்க முடியும்" என்றார், ரங்கன். புரியாமல் அவரையே பார்த்தோம். ஆற்றில் மேல் பரப்பிற்கு வரும் மீனைக் கொத்தி செல்ல குறி வைத்து காத்திருக்கும் பருந்தின் கண்களைப் போல, பல கண்கள் பார்த்தது.

"ஆத்துல தண்ணி இறங்குனா விவசாயம், ஏறுனா மீன் பிடிக்கிறது, இது தாங்க எங்க வாழ்க்க சார்" என்றான், அப்போது அங்கு வந்த சேர்ந்திருந்த ராமு. ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தேன். காற்றில் கலைந்த நரைத்த முடி, சட்டை இல்லாத உடல், மடித்து கட்டப்பட்ட லுங்கி, தோளில் தூண்டு சகிதம் நின்றிருந்தார்.

"டேம்ல பி.டவுல்யு.டி நெலத்துல குத்தகைக்கு வெவசாயம் செய்யுறவங்கள்ல நானும் ஒருத்தன். அணையில தண்ணிக் குறையக் குறைய எங்களுக்கான எடத்துல பயிர் போடத்துவங்கி, ஆத்து வரைக்கும் போவோம். ஒரு குடிசையைப் போட்டு குடும்பத்தோடு தங்கி பகல்ல நெலத்தில வேல, நைட்டுல யானை, காட்டுப்பன்னி கிட்ட இருந்து பயிரக் காப்பத்துற வேல சார்" என்ற ராமு, ஆற்றை திரும்பிப் பார்த்தபடி "ஆத்துல தண்ணீ அதிகமாகி பயிரு மூழ்கறதுக்குள்ள அறுவடை பண்ணிடனும். கொஞ்சம் விட்டாலும் மொத்தமும் போயிடும். பெருமழை காலத்துல குடிசைய காலி பண்ணிட்டு ஊருக்குள்ள போயிடும். அப்போ இந்த எடமெல்லாம் தண்ணிக்குள்ள போயிடும். தண்ணீ கொறையுற வரைக்கும் மீன் பிடிக்கிறது மூலமா பொழப்ப ஒட்டுவோம்" என்றார்.

நாங்கள் நின்றிருந்த இடத்தை நோக்கி மோட்டர் படகு ஒன்று வந்து சேர்ந்தது. ராமுவிடம் இருந்து விடை பெற்று, கரையை மோதி நின்ற படகில் ஏறி அமர்ந்து கொண்டோம். படகின் முன் பகுதியில் ஒருவர் நின்றபடி சுற்றும், முற்றும் பார்த்து வந்தார். வனவிலங்கு நடமாட்டம், வேட்டை தடுப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்க அணைக்குள் அமைக்கப்பட்ட கூத்தாமண்டி முகாமிற்கு நீரை கிழித்தப்படி சென்றது. ஆற்றில் நீர் அதிகமானால் வனத்துறையினரும் அந்த முகாமிற்கு படகில் தான் செல்ல முடியும் என்பதை ஏற்கனவே ரங்கன் சொல்லிருந்தார். பரிசலில் ஆங்காங்கே மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்க்க முடிந்தது.

"இங்க மீன் பிடிக்கறவங்க எல்லாம் ராமு மாதிரி தானா ணா?" என கிருபா கேட்டான்.

"இல்ல சார். மீன் பிடிக்கறத மட்டும் செய்யுறவங்களும் இருக்காங்க. யாருனாலும் இங்க பிடிக்கற மீனை குத்தகைதாரர் கிட்ட தான் கொடுக்கணும். மீனையும், கிலோவையும் பொறுத்து வாரத்துக்கு ஒருக்கா காசு கொடுப்பார். இந்த மீனை சந்தையில ரெண்டு மடங்கு வெலைக்கு விக்குறது, இவங்களுக்கும் தெரியும். அதனால குத்தகைதாரரைத் தாண்டி 'திருட்டு மீன்' வெளிய போகாத அளவுக்கு எப்பவும் கண்காணிப்பு இருந்திட்டே இருக்கும்" என்றார், ரங்கன்.

படகில் இருந்து இறங்கி நடந்து கூத்தமாண்டி சென்றோம். ஒரு பக்கம் மலையும், வனமும், மறுபுறம் ஆறும், அணையுமாய் காட்சியளித்தது. அங்கு நான்கு வேட்டை தடுப்பு காவலர்கள் பணியில் இருந்தனர். ஒரு வேட்டை தடுப்புக் காவலர் அம்முகாமிற்கு சென்றால் 3 பகல், 4 இரவுகள் பணியில் இருக்க வேண்டும், மற்ற நாட்களில் யானைகள் சாலையை கடந்து ஊருக்குள் செல்லாமல் தடுக்கும் வேலையைச் செய்ய வேண்டுமென ரங்கன் சொன்னார்.

நெருப்பு மூட்டப்பட்ட விறகு அடுப்பில் மீன்கள் வெந்து கொண்டிருந்தன. "மியாவ், மியாவ்…." என பத்துக்கும் மேலான பூனைகள் காலைச் சுற்றி வந்தன. "எதுக்கு இவ்வளவு பூனைக??" என கேட்டு முடிப்பதற்குள், "இங்க எங்க பாதுகாப்புக்கு தான் சார். நாய்கள வளக்க முடியாது. நாய் குரைச்சு யானையக் கூப்பிட்டு வந்திடும். அப்புறம் பூச்சிககிட்ட இருந்து பூனைப்பட தான் பாதுகாப்பு தருது", என்று சொல்லி சிரித்தார், சமைத்து கொண்டிருந்த மணி. தலையில் பாதிக்கு மேல் நரைத்துவிட்டது. முகத்தில் கன்னங்கள் ஒட்டிப்போயிருந்தது.

"இங்க என்ன எல்லா வரும்ணா?" என சீனி கேட்க, "இதுதான்னு இல்ல, சாயந்திரமாச்சுணா எல்லா மிருகமும் தண்ணி குடிக்க வரும், ராத்திரி நேரத்துல டார்ச் அடிச்சா ஆயிரக்கணக்குல கண்ணு மின்னும். அவ்வளவும் மானுங்க, கூட்டங்கூட்டமாக படுத்துக் கிடக்கும். யானை, காட்டெருமைனு நிறைய வந்திட்டுப் போகும், எப்பாது புலி கண்ணுல தட்டுப்படுறது உண்டு. விடியறப்போ எல்லாம் காட்டுக்குள்ள போயிடும், பகல்ல ஏதோ ஒன்னு ரெண்டு தண்ணி குடிக்க வரும்" என்றார், மணி.

அதற்குள் மீன்கள் நிரம்பிய தட்டுகள் எங்கள் கைகளுக்கு வந்திருந்தன. ஒவ்வொன்றாய் எடுத்து சுவைத்தபடி அவர்கள் பேசுவதைக் கேட்டோம். பழகிய கொஞ்ச நேரத்திலேயே எங்களைப் பற்றி புரிந்து கொண்டது அவர்களின் பேச்சின் தொனியில் தெரிந்தது. எதோ ஒரு விதத்தில் அவர்களின் நம்பிக்கையாளர்களாக மாறியதை என்னால் உணர முடிந்தது. அப்போது, நீர் எப்போது வற்றும், மணல் எப்போது திருடலாமென ஒரு கூட்டம் எப்போதும் காத்திருப்பதையும், மணல் கொஞ்சமாய் கண்ணில் பட்டால் போதும். ஜேசிபி இயந்திரங்களும், லாரிகளும் விடிய, விடிய ஓடிக்கொண்டு இருப்பதையும், சில நேரங்களில் அதிகாரிகள் ஒத்துழைப்புடனும், சில நேரங்களில் அரசியல்வாதிகள் துணையோடு நடப்பதையும் சொல்லிக்கொண்டே இருந்த மணி, "அண நிறைஞ்சு இருக்கறது தான் எங்களுக்கு நிம்மதி. ஏனா பல பிரச்சனைக்கும் அது தான் தீர்வு" என்றார்.

பேச்சின் ஊடாக "நாங்க வூட்ட விட்டுட்டு காட்டுலயே கெடந்து சாவுறோம். ரொம்ப ரிஸ்க்காணா வேலைனாலும் சம்பளம் கொறைவு தான். அதுவும் ரெண்டு, மூணு மாசத்துக்கு ஒருக்கா தான் கைக்கு வரும்" என வருத்தத்துடன் கூறிய மணி, சிறு இடைவெளி விட்டு "மனுசங்களும், காட்டுயிரும் நல்ல இருக்கனும்கிறது தான் எங்க ஆச, அதுக்காக தான் பாடுபடுறோம்" என்றார்.

மீன் கூடுகள் நிரம்பிய தட்டுகளை வைத்து கை கழுவியபடி, "ஆபிசர்ஸ் யாரும் சாப்போர்ட் பண்ண மாட்டங்களாணா?" எனக் கேட்டேன்.

"முன்ன மாரி இல்லங்க சார், எங்க ஆளுகளுல நெறைய பேருக்கு தொட்டு வைக்கிற பொட்டு மண்ணு கூட இல்லாம போச்சு, கொஞ்ச பேத்திட்ட நெலம் இருந்தாலும், வெவசாயம் பெருசா இல்ல. அதப் பண்ணாத, இதப் பண்னாதனு ஆபிசர்ஸ் கெடுபிடி. வேல தேடி வெளிய போற ஜனம் அதிகமாகிடுச்சு, காலங்காலமா காட்டுக்குள்ளேயே இருந்து பழகிட்டதால, வெளிய போக மனசில்லாம இங்கயே கெடக்கோம். ஆனா நாங்க வெளிய போகனும்னு அரசாங்கம் விரும்புது" என்றார் ரங்கன். அதில் மெல்லிய வருத்தம் கலந்திருந்தது. "இந்த காட்டுக்குள்ளேயே நாங்க இருக்கணும்னா பாரெஸ்ட் ஆபிசர்களுக்கு அடிமை மாதிரி வேலை செய்யணும், ஒரு வாய் சோறு கூட நிம்மதியா உக்காந்து திங்க முடியாது, அங்க ஓடு, இங்க ஓடுனு விரட்டிட்டே இருப்பாங்க, அவங்க வேலையும் சேர்த்து செஞ்சாதான் எங்களுக்கு மருவாத" என்ற போது, காலங்காலமாக காடே உலகமென வாழும் அம்மக்களின் தற்போதைய இயலாமையை உணர முடிந்தது.

படிகளில் ஏறி கண்காணிப்பு கோபுரத்தில் நின்று சுற்றிப் பார்த்தோம். காட்டுயிர்கள் ஆங்காங்கே நின்று கொண்டிருக்க, நாங்கள் கடந்து வந்த ஆற்றின் ஓசை காடு முழுக்கக் கேட்டது.

"காட்டோட அழகே, இந்த ஆறு தான்யா" என்றேன்.

கோபுரத்தின் கம்பிகளில் கைகளை ஊன்றியபடி நின்றிருந்த ரங்கன், "அத ஏன் சார் கேக்குறீங்க?, இந்த ஆறு விஸ்கோஸ் ஆலை கழிவுகளால என்னைக்கோ கெட்டு நசமாப் போயிருச்சு, தண்ணி விஷமாயி, அத குடிச்ச ஜீவனெல்லா செத்து விழுந்துச்சு. ஆட்களுக்கும் சீக்கு வந்துச்சு. இதப் பாத்து தாங்க முடியாமா ஜனங்க போராடி ஆலய மூட வைச்சதுனாலா இன்னும் இந்த ஆறு மிச்சமிருக்கு" என்றார்.

சாப்பிடதற்கான ஏப்பம் ரங்கனுக்கு "கிர்ர்ர்ர்ர்" என வந்தது. "நல்லா சாப்பிட்டு நிம்மதியா உக்காற சுகம் இருக்கே சார், அதுக்கு கொடுத்து வைக்கணும்" என்ற ரங்கனின் முகத்தில் களைப்பு தெரிந்தது.

"நிம்மதியா தூங்கி மூணு நாளு ஆச்சு சார், வூருக்குள்ள யானை புகுந்திடுச்சுனு விடிய, விடிய விரட்டினோம். காலைல தான் காட்டுக்குள்ள போச்சு, அத வெரட்டுறதுக்குள்ள போதும், போதும்னு ஆயிடுச்சு. இன்னிக்கு ஒரு நாலு மணி நேரம் நல்லா தூங்குனும் சார். நாய் பொழைப்பு இது" என்றபடி, கோபுர அறையின் மூலையில் கிடந்த பாயை எடுத்து விரித்து அப்பாடா என தலையணையில் சாய்ந்தான்.

"ஏய்… ரெங்கா… கரட்டு மேட்டுல யானைக வந்திடுச்சு, ரேஞ்சு ஆபிசர் போக சொன்னாரு" கீழிருந்து மணி கத்தினான்.

தூக்கத்திற்காக கண்ணை கசக்கியபடி அவசர அவசரமாய் ரங்கன் இறங்கிக் கொண்டிருந்தான். அவனின் புலம்பல் காடெங்கும் எதிரொலிக்கும் ஆற்றின் ஓசையில் காணாமல் போனது.

- பிரசாந்த்.வே

(நன்றி: இளைஞர் முழக்கம் அக்டோபர் 2018 இதழ்)

Pin It