தேதி நாலு ஆயடுச்சா....ஏழு ஆனாதான் வாரகூலி கிடைக்கும்...ம்ம்..காலண்டர்ல தேதிகிழிக்கும் போது படிச்ச "இன்று சுபிட்ச மழைவருசிக்கும் " வார்த்தைய திரும்ப திரும்ப சொல்லிபார்த்துகிட்டேன்...நல்லா இருக்கு மனசுக்கு.

இன்னிக்கும் வீடுபோய் சேரவும் தங்கம் பஸ் வார நேரமும் ஒன்னாய்டும். ஏழு மணிக்கு முன்னாடியே போனா காரவீட்டுக்காரக வீட்டுல ஒருமணி நேரம் புளி பிரிச்சா வாரக்கடைசில காசு கிடைக்கும். வேலை முடிச்சு திரும்பற வழி இப்ப கொஞ்சம் கொஞ்சமா தார் ரோடாயிடுச்சு. முன்னாடியல்லாம் பரமேசும் நானும் தென்னங்குரும்ப காய் பொறுக்கி மாத்தி மாத்தி அடிச்சுகிட்டும் மாம்பிஞ்சு கடிச்சு துப்பிக்கிட்டும் ஓடிப்புடிச்சுகிட்டே வந்துருவோம். இப்ப ஏதோ டவுனு மில்லுகாரகவ, மாந்தோப்பு ,காய் பிடிச்சு நிக்கிற தென்னந்தோப்பு இளநீரா இனிச்சுகிடக்கற கிணறுன்னு எல்லாத்தையும் பேசிமுடிச்சுட்டாங்க. அதனால இரண்டு வாரமா தோப்ப ஒட்டுனாப்ல இருக்கிற பாதையில தான். இப்ப அவளும் வரதில்ல.நாமட்டும்தான் போரேன். மனசுக்கு புடிக்கிலதான். என்னவிடவும் பாவம் பரமேசு. கிணத்து மேட்டுல முருங்கமரம் நல்லா தனிச்சு கிடைக்கும். ஒரு நா வுட்டு ஒரு நா படக் படக்குன்னு ஒடிச்சு ஒயர்கூடையில வைச்சுகிட்டு வீட்டிக்கு கொண்டாந்து ஆய்ஞ்சி அலசி, காலைக்கு பதமா வதக்கி எடுத்துட்டு வந்துருவா. அங்கிக்கும் ரொம்ப கஷ்டம்தான். ஆனாலும் எங்க சிரிப்புக்கும் ரசிப்புக்கும் குறை இருந்ததே இல்ல.

இன்னும் பத்து நாள் இருக்கு எம்மாமா பிறந்தநாளுக்கு. அவுக இங்க இல்ல. காலேஜ்லாம் போய் படிச்சு இப்ப டவுனல வேலை பார்க்குது. மூனுமாசத்துக்கு ஒரு முறை வரும். நாலு நாள் இருந்துட்டு கோயமுத்தூர்க்கு மொத பஸ் புடிச்சு போயிடும்.

மாமான்னு நெனப்பு வந்த பிறகுதான் ஒருவளத்தி கூடிருக்கேனாம் நானுன்னு அம்மாயிதான் சொல்லும் .எம்மாமா நடக்கிற அழகு இருக்கே ...இன்னிக்கு முழுக்க சொன்னாலும் தீராது. நான் அதுக்கு நேர்மாறு...படிப்பும் ஏறல..பத்தாப்பு முடிச்சும் நா உக்காரலன்னு அம்மாயிக்கு கவல கூடிப்போச்சி. அத்தை தான் பொழுதுக்கும் ரோசனை சொல்லிக்கிட்டே இருக்கும். எனக்கும் விளங்கி தொலைக்கில. எனக்கு நல்லா நியாபகம் இருக்கு...அன்னிக்கு ஊர்ல மாரியம்மனுக்கு கம்பம் நடற நோம்பு..காலைலயே ஆத்துக்கு போய் குளிச்சிடலாம்னு நானும் பரமேசும் துணிஎடுத்துகிட்டு கிளம்பியாச்சு. வெளியூர்காரக வந்திருந்தா கிளம்பகூடாது, உள்ளூர்காரங்களும் வெளிசேதிக்கு போக மாட்டாங்க காப்புகட்டிட்டா. கொட்டடிக்கிறவங்க பந்தல் அலங்காரம் போடறவங்களுக்குன்னு ஊர் பெரியதனக்காரங்க பள்ளிக்கூடத்துக்கு பக்கத்துல வீடு குடுத்திருந்தாங்க. நாங்க போக வர கிண்டலும் பேசுவாங்க. நாங்க பெரிசா கண்டுக்கிட மாட்டோம். அன்னிக்கு நேரமே குளிக்கபோனபோது அந்த பசங்கள அங்கனகுள்ள பார்த்தவுடன கொஞ்சம் படபடப்பாய்டுச்சு. படிக்கட்டு இரண்டா பிரிச்சு இருந்தாலும் எங்க ஊர் ஆளுக புள்ளைக குளிக்கிற பக்கத்துக்கு வர மாட்டாக. கொஞ்சம் சுத்திப்போய் பெரிய பாறை மேடு தாண்டி தான் இறங்குவாங்க. இன்னிக்குன்னு பார்த்து நேரமே வந்து தொலைச்சிட்டோமோன்னு மனசு அடிச்சுகிச்சு. தண்ணில இறங்குன புறவு தலைநனைக்காம வீடு போன அம்மாயிக்கும் சித்திக்கும் பதில் சொல்லி சடவாய்டும். பரமேசு பெரிசா கண்டுக்காம இறங்கிட்டா. நா முட்டி வரை நனைச்சுகிட்டு அவகிட்ட சாடைகாட்றேன். அவ கண்டுக்கிடவே இல்ல. அந்த பசங்க பாட்டு இப்ப சத்தமாயிடுச்சு. இப்ப வரியா இல்லயாடின்னு நா கேட்டகுரல் எனக்கே கேட்கல. ஆனா வேற குரல் வந்துச்சு...ஊர்ல நோம்பின்னு உங்கள விடறேன்...இனி ஒருத்தன்கூட இங்க வர பார்த்தேன்னா அவ்ளோதான்னு எங்கசின்ன மாமா குரலு....இப்பதான் மொதவாட்டி கேட்குறேன். ஏய்...அடியே உன்னத்தான்...குளிச்சிட்டியான்னு என்னய கேட்டுச்சு...கொஞ்சமா மீசை வளர்ந்து முடியல்லாம் இரண்டு கொத்தா புடிக்கிலாம்போல அவ்ளோ முடி...சட்டைபட்டன்ல கடைசி இரண்டும் தான் கூடி இருக்கு...அதுவும் குளிக்கத்தான் வந்திருக்குபோல. ஏய் பரமேசு இவள கூட்டிட்டு போய் வீட்ல விடல , அப்பறம் உனக்கு இருக்குனுச்சு....வாரிச்சுருட்டிக்கிட்டு என்னயையும் இழுத்துகிட்டு படியேறிய அன்னிக்குத்தான் நான் பெரிய மனுசி ஆனேன்.

சின்ன வயசில இருந்தே என்சின்ன மாமா கொஞ்சம் விலகித்தான் இருக்கும் சொந்தங்கள விட்டு. கவிதை எழுதும்.. கதை எழுதும்...பாட்டுகூட படிக்கும்...கோபம் வந்துச்சுன்னா சுத்திஇருக்குற வீட்டுகாரங்களும் சேர்ந்து கதவ சாத்திக்கனும்.. என்ன காரணமுன்னு தெரியாத போதும் நா மாமாக்கு தான் சப்போட்டு பன்னுவேன். எங்க அம்மாயி தான் அடிக்கடி சொல்லிடும் வாய்விட்டு...ஏன்டா மயிலா இந்த கருவாச்சிய கட்டிக்கிட்டு போய்டுன்னு.. எனக்கு திக்குங்கும், நிக்காம ஒரே மூச்சில ஓடியாந்துருவேன். உண்மைய சொன்னா நா பொருத்தமும் இல்ல மாமாக்கு. நல்லா இருக்கனும்னு மட்டும் வருசம் தவறாம மாவிளக்கு எடுப்பேன் கன்னீமார் கோயிலுக்கு.

நா பத்தாவது பாஸானதும் அம்மாக்கு முடியாம போனதுக்கும் சரியாபோய்டுச்சு. பக்கத்து மில்லுக்கு வேலைக்கு போவேன். நடவு வேலை நடக்கறப்போ மொத நடவு நட்டுதரசொல்லுவாங்க. பெருங்காசு இல்லன்னாலும் பஞ்சமில்லாம இருக்கும்.

நாளைக்கு மறு நாள் பரமேசுக்கு பொண்ணு பாரக்க வாராகலாம் உடுமலைபேட்டைல இருந்து. வெத நெல்ல காய வைச்சுகிட்டே அம்மா சொல்ல சொல்ல கண்ணுக்குள்ள ஏதோ முட்டிக்கிட்டு வங்துச்சு...பின் வாசல்வழியா ஓடிப்போய் அவளுக்கு முத்தம் கொடுத்தா, ஓய் என்ன புள்ள ஈரம் அதிகமாஇருக்கு...இது எனக்கா உம்மாமாவுக்கான்னு கேட்கறா கிசுகிசுன்னு. கூடயே திரியுதுக இரண்டும் புறந்தாபுடிச்சு ...இருக்காதா பின்னனு சுமதியக்கா சொன்னதுக்கு தலையாட்டிக்கிட்டேன்.

விசேசம்லாம் முடிஞ்ச பிறகு பரமேசு சொன்னா...புள்ள சும்மா மனசுக்குள்ள போட்டு பாய் நெய்யாத ...நேரா போய் உங்கத்தைகாரிகிட்ட கேட்டுரு. புரவு பார்த்துக்கலாம்னு. விடிஞ்சதும் குளிச்சிகிட்டு அம்மா குடுக்கசொன்ன அகத்திகீரையையும் நாம்பிகிட்டு போய் நின்னேன். வாடியம்மா என்ன நேரமே குளிச்சுட்ட..கல்லுல தேங்காசட்னி அரைச்சு குடுத்துட்டு சாப்டுட்டு போன்னுச்சு. நெக்கு நெக்குன்னு ஆட்டி வழிச்சு கழுவி எடுத்தபோது அத்தையே வாய்விட்டுச்சு...அடுத்தவாரம் வருவான் புள்ள உங்க சின்னமாமா காரன். விட்டுட்டின்னா டவுனு காரிய கூட்டயாந்துருவான் பார்ததுக்க அப்பறம் நானும் பெரிய மாமனும் பொறுப்பில்லன்னு சொல்லி சிரிச்சிகிட்டு மருதாணி எப்ப வைச்சுக்கபோறன்னு கேட்டுச்சு... எங்காலு நிக்கில தரையில.. மொசு மொசுன்னு கண்ணுல தண்ணி. எனக்கு எப்பவுமே அப்பிடித்தான்..

ஊருக்கு வந்தவுடன் சொல்லனும் ...மாமா மாமா காணாம போன ஊதாகலர் சட்டைய நான் தான் வைச்சிருக்கேன்னு...அது மீசைய தொட்டு பார்க்கனும்னு. முத்தமல்லாம் கேட்டா தப்பா நினைச்சுக்குமோ. நா இன்னுங்கொஞ்சம் நிறமா இருந்துருக்கலாம்னு...நெனப்பு தறிகெட்டு ஓடுது. அப்போல்ல இருங்துதான் இந்த நெனப்பு, ஒரு சட்டை வாங்கி தரனும்னு. மாமா சட்டை அளவல்லாம் பார்த்து வைச்சிட்டேன். விலையெல்லாம் விசாரிச்சுட்டேன். எழுநூருபாய்காச்சும் வாங்கிடனும்னு இருக்கேன். மில்லுல இருந்து சீக்கிரம் போகனும் புளியடிக்க...

- இந்து

 

Pin It