கண்கள் பிதுக்கி சுண்டு விரலில் மை கொண்டு கோடிட்டாள். விரலுக்கு உதடிருந்தால் அதுவும் பிதுக்கிக் கொண்டு நீள்வது போலத்தான் இருக்கும். கலங்கிய இரண்டு கோலி குண்டுகள் காட்சி ததும்பும் மது குவளையென மீன் வண்ண ஜாடையானது போல இருந்தன மை தீட்டிய விழிகள். 
 
உதடு நகர்த்தி செவ்வண்ணம் பூசினாள். 
 
உதட்டால் உதட்டையே உரசியதில் நிலைக்கண்ணாடிக்குள் பொறி தட்டியிருக்கும். பொறுக்க முடியாத மார்புகள் கொஞ்சம் எட்டி பார்த்தன. அடங்கு என்பது போன்ற இறுமாப்பு பார்வை........கணம் ஒன்றில் கீழேறங்கி மேல் ஏறியது. பட்டும் படாமல் சப்பாத்தி தட்டுவது போல கைகளில் இருந்த பவுடர் கழுத்துக்கும் கன்னத்துக்கும் இடம் மாறியது. அக்குள் மணக்கும் சொய்ங் என்று ஏதோ அடித்தாள். இன்னும் ஈரமானது அரை வட்ட நிழல்.  
 
கவரிங் தான் என்றாலும் திகு திகுவென மின்னும் தனக்கு பிடித்த சங்கிலியை எடுத்து தாலி போல பவ்யமாக மாட்டிக் கொண்டாள்.
 
நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டை இடுப்புக்குள் அடங்கி இருக்க சற்று இறக்கி இழுத்து சரிசமம் செய்து கொண்டாள். நின்றபடியே கொஞ்சம் எக்கி திரும்பி கழுத்தில் தாடை முட்டி மடங்க கண்ணாடியில் முதுகு பார்த்தாள். வளையும் அம்பென புருவம் நெளிந்து கீழ் இறங்க பூப்போட்ட உள்ளாடையின் கழுத்து பேண்ட் தாண்டி எட்டி பார்த்தது. இதை ஒன்றுமே செய்ய முடியாது. ஜீன்ஸ் பேண்ட் போடும் போதெல்லாம் உள்ளாடைக்கு கீழே பேண்ட் நகர்ந்து விடுவது ஜீன்ஸ் பேண்டின் உலகப் பிரச்னை. சிரித்துக் கொண்டாள். நீல நிற பூப்போட்ட உள்ளாடை... கிளர்ச்சிகளால் வடிவமைக்கப்பட்டவை என நினைத்துக் கொண்டாள். பூக்கள் மலருவது போல இருந்தது.
 
மஞ்சள் நிற டி ஷர்ட் ஷார்ப்பாக இருந்தது. தன் அழகே தனக்கு பெருமை என்று முன்னழகு சொல்ல... கிள்ளி வாயில் போட்டுக் கொண்டாள். மலை உச்சி நடனமென. மலை  எழுத்துப் பிழை என்றாலும் தகும்.
 
"இதெல்லாம் ஓவரு....பாண்டியராசு.... எதுக்கு இப்டி மினுக்கிகிட்டு நிக்கற.... நைட் தான... வேலை.... நாய்க்கு....."
 
குரல் வந்த திசையில் குத்த வைத்து அமர்ந்திருந்தாள் மானசா.
 
"வாயிலேயே மிதிச்சேனு வை......... அப்புறம்...பொழப்பு நாறிடும்..." என வாயையும் கைக்கையும் சேர்த்து ஏதோ காற்றில் கூறியவள்......." இன்னொருவாட்டி பாண்டியராசு.... .........ம்ம்ம்ம்.....ஹேரு.....ராசுன்னு கூப்டு அப்புறம் இருக்கு...." என்றாள் ரோஸ்மேரி மிடுக்கான மிரட்டல் பாவனையில். 
 
"சரிடி ரோஸ்மேரி....கோச்சுக்காத" என்றாள் மானசா கரகரத்த குரலில்.
 
திரும்பி ஒரு முறை.... திரும்ப கழுத்தை ஒரு வெட்டு வெட்டி விட்டு  திரும்பி பாத்ரூம்க்குள் சென்றாள் ரோஸ்மேரி.
 
"சரி...மேடம் எங்க கிளம்பிட்டாங்கனு கேட்டேன்...." கத்தரிக்காய் வெட்டிக் கொண்டே மனசா கேட்டாள். அவள் கண்கள் பாத்ரூம் கதவையே தட்டுவது போல பார்த்தது.
 
"கொஞ்ச........ம் வேலை இருக்கு...." செய்து கொண்டிருந்த வேலையை பாதியில் நிறுத்தி விட்டு பேசுவது போல வந்தது எக்கோ குரல்.
 
ஒரு கத்தரிக்காயை கத்தியில் வைத்து தலையில் இருந்து பாதம் வரை உடலோடு சர்ரேன இழுத்து இரண்டாக்கி விட்டு....."ரோஸ்மேரி.... இதெல்லாம் சரியா வராது.... நமக்கு பொழப்பே முலைய காட்றதும்...பிச்சை எடுக்கறதும்தான்... இதுல காதல் கீதல்னு மாட்டிகிட்டு சாக போற பாரு...."  என்றாள் மானசா. மனசுக்குள் பல வித கணக்குகள் ஓடின,.
 
தண்ணீர் ஊற்றும் சத்தம் குபுக்கென்று எதையோ மூடி மறைப்பது போல இருந்தது.
 
"அதும் அவன் பார்க்க ரவ்டி மாதிரி இருந்தாலும் அழகா வேற இருக்கான்........உன்னையெல்லாம் எப்படிடி லவ் பண்ணுவான்..... என்ன தைரியத்துல இப்டி லவ் பண்ணிட்டு இருக்கனு சத்தியமா எனக்கு புரியல..."என்றாள் மானசா. அடுத்த கத்தரிக்காய் தன் ஊதா நிறத்தில் பல்லிளித்து செத்தது.
 
உடையை சரி செய்தபடியே வெளியே வந்தாள் ரோஸ்மேரி.
 
"ஏன் நான் லவ் பண்ண கூடாதா!.... உடம்பால ஆம்ளையா பொறந்தாலும்......நாமெல்லாம் மனசால பொண்ணுங்கதான்டி..... பார்த்தேன்......பட்டுன்னு பிடிச்சுருச்சு. என் தொழில் வேணா...ஒரு காலத்துல வேற மாதிரி இருக்கலாம்.. ஆனா மனசு எப்பவுமே சுத்தமாத்தான இருக்கு... அதுல அவனுக்கு மட்டும்தான் இடம்.. நான் லவ் சொல்ல போறேன்.. அவன் ஓகே.. சொன்னா ஓகே. இல்லனாலும் ஓகே... பொண்ணுங்களோட காதலுக்கு எந்த விதத்துலயும் குறைஞ்சதில்ல இந்த இந்த ரோஸ்மேரி காதல். இன்னும் சொல்ல போனா ஒரு படி மேல தான்...."
 
உள்ளங்கை பாதி வட்டமடித்து காற்றினில் இருந்து தலைக்கு சென்று முன் நெற்றியை தானாக சரி செய்து கொண்டது. 
 
அடுத்த கத்தரிக்காரி சாக தயாராக இருந்தாள். அறுக்க மறந்து ரோஸ்மேரியையே பார்த்துக் கொண்டிருந்தாள் மானசா. எச்சில் விழுங்க மறுத்திருந்தது தொண்டை. ஏதோ வறண்ட நினைவு அவளுள்.
 
"உயிருக்குள்ள அவனை சுமக்கறேண்டி....அவனுக்காக என்ன வேணாலும் பண்ணுவேன்...... பசங்களுக்கு மட்டும்தான் பார்த்ததும் பல்பு எரியுமா.. ம்ம்ம்... அவன் பைக் ஓட்ற ஸ்டைலே போதும்... ஆயிரம் பல்பு எரியும். எப்போ அவனை நினைக்க ஆரம்பிச்சனோ அப்பவே நைட் தொழிலுக்கு நான் வர்றது இல்லல... 1500 ரூபாய் குடுத்து கூட ஒரு சொட்ட அன்னைக்கு கூப்ட்டான்ல..... நான் போனனா..... ம்ம்ம்...  வயித்து பொழப்பு........பிச்சை தான் எடுக்க முடியும்.. எங்க வேலைக்கு போனாலும்... சைஸ் தான் முதல்ல பாக்கறானுங்க......பார்த்தாலும் பரவால்ல.... கேட்டர்றானுங்க.... என்ன தான் பண்ண... அதுக்காக காதலை விடமுடியுமா.... காதல்டி.... அது வேற மாதிரி. மனசால பண்ணி பாரு... அப்போ தான் அது புரியும்...."
 
மானசாவின் கைகள் எதையோ தேடுவது போல.......அனிச்சையாய் வெட்டிய கத்தரிக்காயை குண்டா தண்ணீரில் அலசிக் கொண்டிருந்தது. 
 
"அதும் அவன் இப்ப இருக்க நிலைமைக்கு என் காதல் மருந்தா தான் இருக்கும்....அவனை இப்டி பாக்கறதுக்கு கஷ்டமா இருக்குடி... அவன் நல்லா இருந்தப்ப நான் என் காதலை மறைச்சு தான் வெச்சிருந்தேன் .... ஆனா இப்போ அவனை பார்த்தாவே பாவமா இருக்கு.... இப்போ அவனுக்கு தேவை.. ஆறுதல். அதை என்னால தர முடியும்னு தோணுது..... அப்டி இப்டினு அவனை நான் பாக்கறது அவனுக்கும் தெரியும் மானு......புரிஞ்சுக்குவான்..." என்றபடியே மானசாவின் உதடு இழுத்து மெல்ல முத்தமிட்டபடி கண்களால் நிறைந்தாள்.
 
தானாகவே சற்று ஏறி நின்று கொண்ட டி சர்ட்டை கீழே இழுத்து விட்டுக் கொண்டாள்
 
 
"அப்போ இன்னைக்கு சொல்ல போறியா...." நைட்டியில் ஈரக் கைகளை துடைத்துக் கொண்டே மானசா கேட்டாள். அவள் முகத்தில் சுவாரஷ்யம் ஊதா நிறத்தில் அப்பி இருந்தது சற்று முன் அப்பிய முத்தம் போல.
 
"ம்ம்ம்ம்ம்....சொல்லணும். அதுக்கு முன்னால ஒரு சின்ன வேலை இருக்கு...."
 
*
 
கண்களில் மீன்கள் நீந்த.... மாநிற முகத்தில் சிவப்பு கொஞ்சம் படர..... வெட்கம் தாளாமல் இடை நெளிந்தது. கூந்தல் பறக்கும் அலையினூடாக அவளின் கனவுகளை காற்றுப் புரவியில் ஏற்றி விட்டு பின்னால் அமர்ந்து கொண்டவளைப் போல கிளம்பினாள். கொரிய மூக்கில் ஒற்றை மூக்குத்தி சூரியனை உள் வாங்கி பளிச்சிட்டது. அத்தனை பிரகாசம் முகத்தில். அத்தனையும் பிரகாசம் தக தகக்கும் தேகத்தில்.
 
யாருமற்ற சாலை.... தானுமற்று நிற்பது போல இருந்தது ரோஸ்மேரிக்கு.
 
தேடும் கண் பார்வை.... தவிக்க.... மனத்துக்குள் காதலன் மோகனாய் கழுத்தாட்டிக் கொண்டே தேடுவது போல இருந்தது. காதலில் காத்திருத்தல் மட்டுமல்ல காதலில்.... பூத்திருத்தலும் சுகம். 
 
மனதுக்குள் திக்கு திக்கு ..... கண்களில் பக்கு பக்கு ..... தேகத்தில் சிக்கு புக்கு....
 
கைகள் பிசைந்து கொண்டிருக்க..... கண்கள் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே இருக்க....தூரத்தில் கரும்புள்ளி சூனியத்தில் இருந்து மேலெழும்... நடு ராத்திரி சந்திரனைப் போல... அந்த பைக் வந்து கொண்டிருந்தது. 
 
கண்கள் மினுமினுங்க அந்த பைக்கை நோக்கி மெல்ல நடக்கத் துவங்கினாள் ரோஸ்மேரி.
 
 
*****
 
இடைவெளிகளால் நிரம்பியவை கதைகள். இங்கே தடம் மாறும் கிளைக் கதையில்....
 
ஓவியா கண்ணாடி முன் நின்று தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள்.
 
"அப்டி என்னதான் கண்ணாடிக்குள்ள இருக்கோ.... எப்பப்பாரு... போயி முன்னால நின்னுக்கறது.....திருப்பி திருப்பி பாக்கறது..... டியூசனுக்குத்தான போற.... பேஷன் ஷோவுக்கா போற....?"
 
வழக்கம் போல ஒரு கையில் கரண்டியுடன் தோசை வார்த்துக் கொண்டு......வாயை மற்றொரு கரண்டியாக மாற்றி சொய்ங் சொய்ங்..... செய்து கொண்டிருந்த அம்மாவை திரும்பி ஒரு பார்வை பார்த்தாள் ஓவியா. கண்கள் நிரம்பிய ஓவியப்பார்வை அது.
 
"ஏம்மா சின்ன வயசுல நீ கண்ணாடி பார்த்ததே இல்லையா.....? என்னைவிட அதிக நேரம் பாப்பன்னு பாட்டி சொல்லிருக்கு. சும்மா.... வயசாகிட்ட பொறாமைல கத்தாத... ஒரு ரோஸ்ட் போட்டு குடு... போ.... ம்மா...." என்று சொல்லி விட்டு அக்குள் மணக்கும் சரி புர் அடித்துக் கொண்டாள்.
 
"பார்த்து போடி....நாய் மாதிரி பின்னாலயே சுத்தவானுங்க...." அம்மாவின் குரல் வாசலில் தேங்கி விட்டது.
 
வீதி முக்கு திரும்பியதும்... மயூரன் தன் எருமை பைக்கை பிடித்துக் கொண்டு காத்திருந்தான். 
 
"எவ்ளோ நேரம் வைட் பண்றது குண்டம்மா....." கத்தினான் மயூரன். 
 
"உனக்கென்ன .... ஈஸியா வந்து நின்றுவ......நான் வீட்ல எத்தனை பொய் சொல்லிட்டு வர வேண்டி இருக்கு..... " அவள் கண்கள் அவனைத் தாண்டி அவன் எருமை மீது விழ... "ஆமா.. என்னடா பைக் மாத்திட்ட !" என்றாள் அதன் காது திருகிக் கொண்டே....
 
"எஸ் டி... இதுல நீ வந்தா தான் கெத்தா இருக்கும்... என் கண்ணம்மா...." அவன் கைகள் அவளின் கன்னம் தொட்டும் வழுக்கியது. 
 
"ம்கும்... இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல தாடிக்காரா...." அவளின் கையும் அவனின் தாடி பிடித்து இழுத்தது.
 
அவர்களின் கண்கள் நா சொட்ட பார்த்துக் கொண்டன. பட்டென்று இழுத்து முத்தமிட்டான். பீர் வாசத்தில் ஒவ்வே என்று தள்ளி விட்டாள்.
 
"சொன்னா கேட்கவே மாட்டியா....குடிக்கறதே தப்பு.. அதும் குடிச்சிட்டு கிஸ் குடுக்கறது மகா தப்பு.. அவனவன் பொண்ணு கிடைக்காம சாகரான்டா.. லட்டு மாறி நான் கிடைச்சிருக்கேன்......உனக்கு... பேசாத..."  என்று திரும்பிக் கொண்டாள். முதுகில் கூட முகம் இருக்கும். பார்த்தது.
 
வழக்கம் போல காலில் விழுந்து சமாதானம் ஆக.. அடுத்து நொடி வண்டி பறக்கத் துவங்கியது. 
 
"வாழ வைக்கும் காதலுக்கும் ஜெ.... வாலிபத்தில் காதலுக்கும் ஜெ..." முணு முணுத்தாள். முத்தமிட்ட முதுகில் வேர்வை இனித்தது. 
 
 
*
 
அம்மா.....இன்னைக்கு டியூசன்ல டெஸ்ட் இருக்கு... வர்ற.. கொஞ்சம் லேட் ஆகும்...." என்று கண்ணாடி பார்த்துக் கொண்டே கூறினாள் ஓவியா. கை தானாக செயினை சரி பார்த்துக் கொண்டது. ஓவியம் பார்த்தது போல இருந்திருக்கும் கண்ணாடிக்கு. 
 
அவளையே கண்ணாடி போல பார்த்து விட்டு......" சரி.. பார்த்து போ... டியூசனுக்கே மாசம் 2000 ஆகுது.... மார்க்கு வராம போகட்டும்.... தோசை ஊத்த விடறேன்..." அம்மா வழக்கம் போல பாதி வாசலில் சுழல... வீதி தாண்டி இருந்தாள் ஓவியா.
 
*
 
வண்டி ரோஸ் மேரியின் அருகில் வந்து விட்டது. 
 
ரோஸ்மேரி தயாராகி விட்டிருந்தாள். சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டாள். வந்த வண்டி வேற வண்டி. ஆனால் அவள் அவள் எதிர்பார்த்தது தான்...
 
யாருமற்ற சாலையில்.... அவள் அருகே வந்த வண்டி கொஞ்சம் நிதானமாக மெதுவாக ஊர்ந்தது. அருகில் இருந்த மரத்தில் சற்று முன் விழுந்திருந்த பழுத்த இலை காற்றில் அங்கும் இங்கும் காரணமற்று அலைந்தது. காலத்தின் சப்தம் இதயத் துடிப்பென அடித்துக் கொண்டிருந்தது.
 
வெளியைக் கலைத்தது போல பட்டென பின்னால் அமர்ந்திருந்தவனின் இடது கை ரோஸ்மேரியின் கழுத்தில் மின்னிய செயினை பற்றி பறித்து இழுத்தது. கண்களை சிமிட்டாத ரோஸ்மேரி எல்லாவற்றுக்கும் தயாராக......... இந்த தருணத்துக்காகவே காத்திருந்த அவளின் கழுத்து பலமாக பின்னோக்கி இழுத்து கழுத்தில் இருந்த அவனின் இடது கையை தனது இடது கையில் பலமாக கச்சிதமாக கொக்கி போட்டு பிடித்தாள். எத்தனை நாள் பயிற்சி இது. என்ன நடக்கிறது என்று செயின் பறிக்க முற்பட்டவன் உணரும் முன்  தனது இடுப்பின் பின்புறம் மறைத்து வைத்திருந்த கசாப்பு கத்தியை வலது கை கொண்டு லாவகமாக உருவி.....கண நேரத்துக்கும் குறைவான திக் திக்கில் கச்ச..........க் என்று வெட்டி இடது கையை துண்டாக்கினாள். பொளேரென நாளா பக்கமும் கொப்பளித்த குருதியில் காலத்தின் சூடு கம கமத்தது.
 
நிலை குலைந்த பைக் ஓட்டுபவன் அங்கும் இங்கும் தடுமாறி கீழே விழ... கொஞ்சமும் தாமதிக்காமல்...... ஒரு கை அற்று மறு கையால் வெட்டப்பட்ட இடத்தை பற்றிக்  துடித்து தடுமாறிக் கொண்டிருந்த அவனின் வலது கையை இன்னும் பலமாக பிடித்திழுத்து இன்னொரு கச்சக். இரு கைகளும் கையோடு வந்து விட தெறித்த குருதியில்.... வழியும் காதலின் சுவாசத்தை பகல் வாடை கொண்டு துடைக்க முடியுமெனினும் இது காத்திருந்து கனவறுக்கும் காதலின் கொடுமை என ஜல் ஜல் நடை போடும் ரோஸ்மேரிக்கு முகமெல்லாம் கடவுள் சாடை. உடலெல்லாம் காதலின் நெடி.
 
பைக் ஓட்டியவன் கீழே விழுந்த வண்டியை விட்டு விட்டு உருண்டு சுழன்று எழுந்து ஓடி காற்றினில் மறைந்தான். பின்னால் இருந்தது சங்கிலி இழுத்தவன்......இரு கைகளுமற்று ரத்த வெள்ளத்தில் துடித்து, கத்தி, அழுது தலையை சாலையில் முட்டி முட்டி.....உடல் நடுங்கி.... உள்ளம் வெதும்பி....மயங்கி சரிந்தான்.
 
இந்தக் கைகளே... தன் காதலுக்கு தரப்போகும் பரிசு. இதை அவனிடம் கொடுத்து உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய கைகளை வெட்டி எடுத்து விட்டேன் என அவன் காலடியில் இந்த அற்பங்களை பரிசாக்க வேண்டும்.
 
வெற்றிக் களிப்பில்.. ஒரு காளியைப் போல... ரத்தம் தோய்ந்த உடலோடு இரு கைகளையும் வாரி அணைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினாள் ரோஸ்மேரி. காற்று வழி விடும் நிரம்புதலின் வசம் தானும் தன் காதலும் மெல்லிடை குலுங்க... பூத்தூவும் நிறத்தின் நகல் வழியே ஒரு யுகத்தின் அன்பை பூட்டிக் கொண்டு நடப்பது போன்று இருந்தது. 
 
ராணி நடை அது.
 
*****
 
 
அவள் நடக்க நடக்க கதையின் இன்னொரு கிளை மெல்ல முளைப்பதை காண முடிந்தது.
 
ஓவியா.... டியூசன் முடிந்து குறுக்கு வழியில்... வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள். 
 
வெளிச்சம் குறைவான வீதி அது. அந்த வழியே வர கூடாது என்று எத்தனையோ முறை அம்மா கத்தி இருக்கிறாள். "அம்மாவுக்கு சொல்லாமல் விட்டால் போச்சு...." என்று அந்த வழியே சென்று கொண்டிருந்தவளுக்கு 7.30 மணிக்கு போடும் சீரியலின் நினைப்பு ஜிவ்வென்றிருந்தது. அதற்காகத்தான் இந்த வழி.
 
திரையை கிழித்துக் கொண்டு சம்பவங்கள் நிகழும் என்பது போல.... எங்கிருந்தோ காற்றை கிழித்துக் கொண்டு மின்னலென வந்த பைக்... அவளருகே வர.... ஹெல்மெட் அணிந்த ஒருவன் பைக்கை ஓட்ட.....ஹெல்மெட் அணிந்தே பின்னால் அமர்ந்திருந்தவன்....அவன் காதுக்குள் கூறினான்.
 
"மச்சா பள பள மாட்டிக்கிச்சு.... பேலன்ஸ் பண்ணி ஓட்டு.... இந்தா முடிச்சர்றேன்..." என்று சொல்லிக் கொண்டே கையை நீட்டி இரவைத்தாண்டி ஓவியாவின் கழுத்தில்  மின்னிய சங்கிலியை பலம் கொண்டு இழுக்க... நிலை தடுமாறிய ஓவியா,... அங்கும் இங்கும் இழுக்கப்பட்டு.... ஒரு கட்டத்தில் காற்றில் மிதந்து பின் தரையில் சரிந்து..... உராய்ந்து கொண்டே பைக் பின்னாலேயே பரபரவென சென்றாள். அந்த சம்பவம் நொடியில் எதை எதையோ மாற்ற துடிக்கும் கோர பிடி கொண்டு கல்லிலும் மண்ணிலும்... முகம் மார்பு தொடை எல்லாம் குத்தி கிழித்து... ஆடை கிழிந்து சதை பிய்ந்து உடல் மண்ணில் மம்பட்டி கொண்டு வெட்டிய நீச்சலைப் போல அள்ளாட ஒரு கட்டத்தில் கையோடு வந்து விட்ட சங்கிலியோடு பைக் பறந்து விட்டது. அதன் கடைசி எம்பலில் நிலை தடுமாறிய ஓவியா.....தோண்டி மூடாமல் விட்ட பக்கத்தில் இருந்த சாக்கடைக்குள் தலைகீழாய் விழுந்து சிக்கி துடித்தாள். தலை சாக்கடைக்குள் மாட்டிக் கொள்ள...கால்கள் காற்றில் பிரிந்து மடங்கி..... நெளிந்து நடுங்கின. போராட்டம் உடலை தூக்கி தூக்கி போட்டது. சற்று நேரத்தில் மூச்சடைத்து செத்தே போனாள். உயிர் போகும் நிமிடத்தில்... கைகள்  பரபரவென அசைக்க அது இன்னொரு கிளைக் குழிக்குள் சிக்கி ஒடிந்து விட்டது. தலைகீழாக  கிடந்த உடம்பில் மிடி கீழ் நோக்கிய ஈர்ப்பில் விழுந்து விட குழியின் தலை வட்டதுக்கு சற்று மேலே பூப்போட்ட உள்ளாடையில் நனைந்திருந்தது...... மூத்திரம். அது சாவின் பாத்திரமிட்ட நிரம்பல். 
 
கூம்பு வடிவ மரணம் என்று கூட அதன் நேர்த்தி நோக்க கிடைத்தது.
 
*
 
அடுத்த நாள் தலை தலையாய் அடித்துக் கொண்டான் மயூரன். 
 
"எப்பவும் பிளான் பண்ணி தான பண்ணுவோம். நேத்து ஏன்டா சட்டுனு அப்டி பண்ணின....!? "  நண்பனின் கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டே கேட்டேன் மயூரன். 
 
நண்பன் அழுது புலம்பினான். அழுகையையும் தாண்டி பேசினான்.
 
"மச்சான் சில நேரத்துல... பண்ற தப்புக்கும் அத திட்டமிடற நேரத்துக்கும் இடைவெளியே இல்லன்னா மாட்டிக்கவே மாட்டோம்ன்றது தப்பித்தலோட விதிடா..... அதான் ட்ரை பண்ணேன். அந்த முக்கு தாண்டி இருட்டு வீதிக்குள்ள வந்ததும் கழுத்துல மினுமினுக்கற செயினோட அவ போயிட்டு இருந்தாடா. ஒரே செகண்டு தான். திட்டம் மைண்ட்ல ஓடிடுச்சு. பட்டுனு பண்ணிட்டேன். ஆனா அவ உன் ஆளுன்னு எனக்கு எப்படிடா தெரியும்.... ஒரு நாள் கூட அவளை நீ என்கிட்டே காட்டினதே இல்லையே.... அயோ... தப்பு பண்ணிட்டேனே"  அவனும் அழுதான். 
 
அழுது கொண்டே  "நீயாவது சொல்லி இருக்கலாம்லடா...."  அரைகுறை சத்தத்தில் கேட்டான்.
 
"அயோ....மச்சி..... எனக்கு இருட்டுல ஒண்ணுமே தெரியலடா...... எதோ ஒரு உருவம் போற மாதிரி தான இருந்துச்சு....ஹெல்மெட் கண்ணாடி கருப்புடா... அதும் அதுல ஏகப்பட்ட கீறல் வேற... பட்டு பட்டுனு நீ பண்ணினதுல என்ன ஏதுன்னு சுதாரிக்கவே டைம் ஆகிடுச்சுடா......." மயூரன் தன்னையே அறைந்து கொண்டான். ஆயுள் நெரிக்கும் சத்தமாக இருந்தது அது.
 
 
*****
 
உங்கள மாதிரி செயின் திருடனுங்களுக்கு இதுதான்டா தண்டனை. என் மயூரன் அவன் காதலியை இழந்துட்டு என்ன பாடு படறான் தெரியுமா...? உங்கள மாதிரி திருடங்கனால தான்டா அந்த புள்ள அநியாயமா செத்து போச்சு... அவனுக்கு இந்தக் கைகளை பரிசா குடுக்க போறேன். அப்பறம் ரோஸ் நிறத்துல என்னை பூவாக்கி என் காதலை சொல்லுவன்டா.... அவனுக்கு பிடிக்கும்... அவனுக்கு பிடிக்கும் ...... அவனுக்கு பிடிக்கும் ........" என்று சொல்லி கொண்டே ரோஸ் நடக்கத் தொடங்கினாள்.
 
விதி மயங்கி சரிந்திருந்தவனின் ஹெல்மெட்டுக்குள் இருந்த மயூரனின் கண்களில் இப்பொழுது ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
 
*****
 
இக்கதையின் முதல் பத்தி இப்படியாக இருந்தால் கதை சுபம்.
 
 
"இப்டியே இருந்தா எல்லாம் சரியாய்டுமா... ..? தப்பு தான்டா....நான் என்ன வேணுன்னா செஞ்சேன்........ மழை.... இருட்டு....!" உடல் நடுங்க வார்த்தைகளை பற்களுக்கிடையே நசுக்கினான் நண்பன். 
 
கனத்த மௌனம் அங்கே தலையற்று தலைகீழாய் தொங்கி கொண்டே சுற்றியது. அவர்களை சுற்றி ஈக்கள் மொய்ப்பது போன்ற பாவனை காற்றுக்கும் இருந்தது.
 
"சாரி மட்சான்.... வேலைக்கு போனா தான்... எல்லாம் சரி ஆகும்.......வா....உன்ன பாக்கவே சகிக்கலடா.... பிளீஸ்.... புரிஞ்சுக்கோ...." என்று காலில் விழ அதற்குள் அவன் தடுத்து விட்டு அவனை அணைத்துக் கொண்டு விம்மினான் மயூரன்.
 
"இன்னைக்கு நான் வண்டி ஓட்றேன்....நீ பின்னால உக்காரு"  என்றான் நண்பன். 
- கவிஜி 
Pin It