"தாத்தா இந்தக் குதிரைய எங்க வாங்கன" என்றதற்கு "எங்கியோ வாங்கினேன்" என்பதுதான் அவரின் பதிலாக இருந்தது. "எனக்குன்னுதான் வாங்கிட்டு வந்தியா" என்று சுடரி ஆசையாய்க் கேட்டாள். அதற்கு அவர், குட்டி பந்து போல் உப்பியிருந்த அவளின் கன்னத்தில் பொக்கைவாய் முத்தமொன்றைப் பதிலாகத் தந்தார்.

"பூவிழுந்து" எனும் கிராமத்தில் ஒரு பத்து ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரர் அவர். இரவு நேரங்களில் மாடுகளுக்குப் பாதுகாப்பாக கொட்டகையில் படுத்துக்கொள்வார். தன் மேனிமுழுக்க எப்போதும் மாடுகளின் வாசனை கமகமக்க நடமாடிக்கொண்டிருப்பார் தாத்தா. ஊரடங்கிய பிறகு வீட்டின் கதவைத் தட்டி சுடரியிடம் பொம்மையைக் கொடுத்துவிட்டு கும்மிருட்டில் இறங்கி குத்துமதிப்பாக நடக்கத் தொடங்கினார் . இருள் தாத்தாவை விழுங்கி, பார்க்க படு பயங்கரமாகக் காட்சியளித்தது. அவரின் கால்செருப்பு தரையுடன் உராய்ந்து எழுப்பிய "சரக் சரக்" ஓசைக்கு இணையாக காற்று பனைமரத்தோடு உரசி கானம் எழுப்பிக்கொண்டிருந்தது.

சுடரிக்கு 7 வயது. முழுநிலா போல் வட்டமான முகம் தேக்குப்பூவாய் மலர்ந்திருக்கும். கருவேப்பிலையின் அகலத்தில் கலை தவழும் விழிகள் அவளுக்கு. அடர்காட்டுப் புருவ நெற்றி. நாய்வால் போல் சுருண்டே கிடக்கும் கருஞ்சுருட்டைக் கூந்தல். பளிச்சென வாய் அகலம் தெரிய வெண்சிரிப்பு சிரிக்கும் எழில்மிகு கறுப்பி அவள்.

கிராமத்துப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயில்கிறாள். தாத்தா கொடுத்த குதிரை பொம்மையை இறுக்கிக் கட்டியவாறே உறங்கிப்போனாள் அன்றிரவு. அதிகாலை அரைத்தூக்கத்தில் பொம்மையைக் கட்டிக்கொண்டே தூங்கிவிட்டோமே உடைந்துபோயிருக்குமோ என சுருட்டி வாரிக்கொண்டு எழுந்ததில் அவளின் அம்மா சற்று பயந்தே போனாள். நல்லவேளை, பொம்மை உடையவில்லை என்ற திருப்தி அவளுக்கு.

தினமும் காலை பால் பாத்திரத்தில் அரையளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு, இடது தோள்பட்டைமேல் இருத்தியவாறு அதன் விளிம்பை இடக்கையால் கெட்டியாகப் பிடித்தவண்ணம் ஒற்றையடிப் பாதையில் தோட்டம் நோக்கி எட்டி நடை போடுவாள் சுடரி.

" தளுக் தளுக்" கென தண்ணீர் தளும்பும் சத்தம் மீன்கள் நீரில் சிலுப்பிக்கொண்டு போகும் ரிதம் போலவே இருக்கும். தோட்டத்தின் முன்புறம்தான் தாத்தாவின் மாட்டுக்கொட்டகையும் அதையொட்டி தொழுவமும் அமையப் பெற்றிருந்தது.

வீட்டிலிருந்து ஒரு 10 நிமிட நடைதூரம். அன்று தாத்தா பால் பீய்ச்சும் போது அளைந்து கொண்டிருந்த சுடரியின் பார்வை ஓரிடத்தில் சட்டென நிலைத்தது.

தாத்தா முன்தின இரவில் அவளுக்குக் கையளித்த பொம்மை போலவே ஆளுயர குதிரை பொம்மையொன்று தோட்ட நடுவே கம்பீரமாய் நின்றிருந்தது. அவ்விடத்தில் தரை சிறிது மேடாக்கப்பட்டு செவ்வக வடிவில் சிமெண்ட் தளமிட்டு குதிரையின் கால்கள் அதில் அழுந்தப் பதிந்தவாறு பூசப்பட்டிருந்தது.

அக்குதிரை செம்மண் நிறத்தில் இருந்தது. அதன் கண்களில் உயிர் ததும்பியது. பற்கள் இலேசாகத் தெரியுமளவு அதன் வாய் சற்றே திறந்திருந்தது. வயிறு , அளவான பானையின் அடிப்பாகம்போல் பருத்திருந்தது. பிடரிமயிர் காற்றில் அசைவது மாதிரி அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தது. கழுத்தில் மணிகள் கோர்த்ததுபோல் மண் உருண்டைகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. தன்னைச் சுற்றி எழும் நுணுக்கமான ஒலிகளை உன்னிப்பாகக் கேட்பது போன்று வடிவமைக்கப்பட்ட கூர்திறன் செவிகள் விறைத்து நின்றன. பின்னலிடாது கட்டித் தொங்கவிட்ட நீள்கூந்தலாய்க் கிடந்தது குதிரையின் வால். அதன் முழுத்தோற்றமும் ஓடுவதற்கு ஆயத்த நிலையில் இருப்பதாகப் பட்டது. பார்க்கையில் ஒரு பயம் கலந்த அமைதி நிலவுவதைப் போலிருந்தது சுடரிக்கு. வேலைப்பாடு ஒன்றும் பிரமாதமாக இல்லாவிட்டாலும் அதன் பிரம்மாண்டம் வெகுவாக அவளைக் கவர்ந்தது.

சுடரி , "இதென்ன தாத்தா இவ்ளோ பெரிய குதிரை" என்று அனிச்சையாய் உதிர்க்க, அதற்கு தாத்தா "இதான் கல்குதிர. மண்ணுல செஞ்சது. நம்ம நெலத்த காக்கற சாமி. காத்துக்கும் மழைக்கும் வெயிலுக்கும் ஈடு குடுத்து கல்லு மாதிரி வலுவா நெலச்சி நிக்கும்" னு சொன்னார்.

தாத்தா இந்தக் குதிரையில் சவாரி செஞ்சா எப்பிடி இருக்கும்? "அப்பா கூட வண்டியில உட்கார்ந்துட்டு சவாரி செய்யற மாதிரி இருக்குமா? இல்ல பள்ளிக்கூடத்துக்கு பஸ்ல போற மாதிரி இருக்குமா? அதுவும் இல்லாங்காட்டி ஏரோப்பிளேன்ல போற மாதிரி இருக்குமா?" என்று கேட்டாள். அதற்கு தாத்தா "காத்து......காத்தோட காத்தா பறக்கற மாதிரி இருக்கும்" என்று பதில் தந்தார். சுடரியைத் தூக்கிக் குதிரை மேல் உட்கார்த்தி இரு கைகளையும் தலைக்குமேல் உயர்த்தி உள்ளங்கையைக் குவித்து "என் குல சாமி" என்று கண்களில் நீரொழுகக் கும்பிட்டார். அத்தருணத்தில் கல்குதிரை மீது சாமிக்கு ஏற்றப்பட்ட தீபமென மிளிர்ந்தாள் சுடரி.

திடுமென நினைவு வரப்பெற்றவராய் பள்ளிக்கூடத்துக்கு நேரமாகிறதென சுடரியின் கையில் கரந்த பாலைக் கொடுத்து வீட்டிற்கு அனுப்பினார் தாத்தா.

அன்றிரவுதான் சுடரியின் கனவில் முதன்முதலாய்க் காட்சி தந்தது கல்குதிரை. காலையில் தாத்தாவிடம் சொன்னதற்கு "சாயுங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வரும்போது இப்பிடியே வந்திட்டுப் போ" என்றார். மாலையில் மாட்டுக்கொட்டகைக்குப் போன சுடரியின் கையை இறுகப் பற்றியபடி தாத்தா கல்குதிரையை நோக்கிப் போனார்.

குதிரைக்கு முன்புறத்தில் சீப்பு வாழைப்பழத்தில் செருகின ஊதுவத்தி, ஒரு உடைபடாத தேங்காய், முக்கால்வாசி நீர் நிரப்பிய சொம்பு, சந்தனம், குங்குமம், விபூதி, வெற்றிலைப் பாக்கு, சுருட்டு, பீடிக்கட்டு, ஒரு பாட்டில் சாராயம் எல்லாம் படையலுக்கென தரையில் பரப்பி வைத்திருந்தார். "நம்ம சாமி ஐயனாரப்பன் உன் கனவில் வந்திருக்கு. நல்லா படிப்பு வரனும்னு சாமிய கும்பிட்டுக்க" என்று தேங்காயை உடைத்து சொம்பை நிரப்பி கற்பூரம் காட்டினார். வேண்டுதல் முடித்த பிறகு "இந்த சுருட்டு, பீடி, சாராயம்லாம் எதுக்கு தாத்தா" என்று கேட்டவளிடம் "ராவெல்லாம் கண்ணு முழிச்சி நம்ம நெலத்த காக்கற ஐயனாரப்பனுக்கு தூக்கம் வராம இருக்கறதுக்கு" என்றார் தாத்தா.

காட்டுக்கு சாமி இந்தக் கல்குதிர. நம்ம வீட்டுக்கு யார் சாமி என்றதற்கு "உன் பாட்டி மாரிமுத்துதான்" என்று சொன்னார் தாத்தா. வீட்டிற்குள் நுழைந்தவள் நாள் முழுக்க நிலத்தில் உழுது சோர்ந்துபோய் படுக்கையில் கிடந்த பாட்டியின் கால்களைத் தொட்டும் தொடாமலும் வணங்கினாள்.

பாட்டியின் இரு முன்பற்களும் எப்போதும் உதடுகளுக்கு வெளியே கூடுதலாய் நீண்டு சற்றே வளைந்திருக்கும். அன்று பாட்டியின் முன்னம்பற்கள் குதிரையின் இரு கால்களைப் போலவே தோற்றமளித்தது சுடரிக்கு. இதனிடையே , கனவில் குலதெய்வம் வந்துவிட்டதென சுடரி விளையாடிக்கொண்டிருந்த குட்டிக் குதிரை பொம்மையை எடுத்துக்கொண்டுபோய்க் கோவில் வாசலில் வைத்து வந்துவிட்டாள் பாட்டி. சுடரிக்கு அதெல்லாம் ஒரு பொருட்டல்ல. அவளின் மனமோ சிறகின்றி பறக்க எத்தனிக்கும் தோட்டத்துக் கல்குதிரை முன்நின்று ஆரத்தி எடுத்துக்கொண்டிருந்தது.

அதற்குப் பிறகு பல இரவுகளில் சுடரியின் கனவில் கல்குதிரை வந்துள்ளது. பீடி சுருட்டெல்லாம் சுடரிக்குப் பிடிக்காது. தாத்தாவிற்கும்தான். ஆனால் தாத்தாவிற்கு புகையிலைப் பழக்கம் இருந்தது. ஆகையால் அதன்பின் தாத்தாவிடம் கனவு சொல்வதைத் தவிர்த்துவிட்டாள்.

சுடரி, கல்குதிரையை சாமியென்று நம்பினாள். அவ்வருடம் நிலக்கடலை விளைச்சல் அமோகமாய் இருந்ததாகத் தாத்தா சுடரியிடம் கூறினார். அப்போது தாத்தாவின் மொத்த மண்டையும் அறுவடை செய்த நிலம்போல பளிச்சென்றிருந்தது.

சுரைக்காய், கத்தரிக்காய், அவரைக்காய், கொத்தவரை பொரியல் செய்கையில் தங்கள் நிலத்து நிலக்கடலை தூவி இறக்கி வைப்பாள் அம்மா. அதை ருசிக்கையில் "குதிர சோறு" என்பாள் சுடரி. அம்மா பேசாமல் சாப்பிட சொல்லி அதட்டுவாள். கல்குதிரை மெதுமெதுவாக அச் சின்னவளின் மனதில் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருந்தது.

காற்று சுடரியைத் தீண்டும்போதெல்லாம் அவள் கல்குதிரையை நினைத்துக்கொள்வாள். கல்குதிரை மீதேறி காற்றைக் கிழித்துக்கொண்டு பறப்பதைப் போல ஒரு உணர்வில் கிடந்து திளைப்பாள். விடுமுறை நாட்களில் வெயிலைப் பாராமல் அதன் மீதேறி காற்றோடும், கல்குதிரையோடும் ஓயாது பேசிக்கொண்டிருப்பாள் அவள். போகிறவர்கள் வருகிறவர்களெல்லாம் ஒரு மாதிரி பார்ப்பதை அசட்டை செய்து இராட்சத இறக்கையைக் கற்பனையில் கட்டிக்கொண்டு வானத்தை நோக்கி, உட்கார்ந்தவாறே எம்பிக்கொண்டிருப்பாள்.

80 வயதை நெருங்கிய தாத்தாவின் உழைத்துத் தேய்ந்த உடம்பு படுக்கையில் விழுந்துவிட்டது. சுடரியைப் பக்கத்தில் அழைத்து உச்சந்தலையைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தார். காய்ப்புக் காய்ச்சிய தாத்தாவின் கை குதிரைக் குளம்பிற்கு அடிக்கப்படும் லாடம் போன்று வலிமையாக இருந்தது. அன்று மாலைதான் சுடரி கடைக்குப் போய் தான் சிறுகச் சிறுக சேர்த்த சில்லறையில் ஒரு பீடிக்கட்டு வாங்கிக் கல்குதிரைக்கு முன் வைத்து "என் தாத்தாவ எப்படியாவது காப்பாத்திடு சாமி" என்று மன்றாடினாள் . மறுநாள் காலை சுடரி, தாத்தாவின் வாயில் இரண்டு சொட்டு பால் விட்டதும் "மூச்சு நின்னுட்டுது" என்றார்கள்.

தாத்தாவைக் கல்குதிரைக்கு அருகில்தான் புதைத்திருந்தார்கள். "இனி நீ அங்கு போக வேண்டாம். தாத்தா உன்னைப் பிடித்துக்கொள்வார்" என்றார்கள் எல்லோரும் . அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தாத்தாவின் புதைமேட்டைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு கடிவாளமற்ற கல்குதிரையின் மேலேறி அமர்ந்ததும் அவளுக்கென வேகமாக வீசத்தொடங்கியது காற்று. பயமின்றி அமர்ந்திருந்தாள் சுடரி. அவள் பக்கத்தில் சண்டமாருதமாய் தாத்தாவும் மூச்சிறைக்க அமர்ந்திருந்தார். இப்படியான உள்ளுணர்வு வாய்க்கப் பெற்றதிலிருந்து தன் கையில் காசு சேரும்போதெல்லாம் இரண்டு பீடிக்கட்டுகள் வாங்கி கல்குதிரையின் முன் நம்பிக்கையுடன் வைத்து வணங்க ஆரம்பித்திருந்தாள் சுடரி..

- வான்மதி செந்தில்வாணன்

Pin It