யாருக்கும் தெரியாமல் நடக்கும் திருமணம்.

எவர் பார்த்தாலும்... கழுத்து நெறிக்கும் பெருமூச்சை தவிர்க்க முடியவில்லை. மருதமலை காற்றசைத்த பச்சையை மெல்ல பூக்கும் அதிகாலை நேரம்.

மெல்லிசை மனமெங்கும் கனத்து நின்றாள். வீட்டை தாண்டி செய்து கொள்ளும் திருமணம் ஆணுக்கு எப்படியோ ஒரு பெண்ணுக்கு அடிவானம் பெயர்தெடுப்பது போல தான். அழுகை முட்டிக் கொண்டு வந்தது. ஆகாயம் திறந்திருக்கும் அளவுக்கு அகம் திறந்திருக்கவில்லை.

ஆதவனை அழுத்தமாக பார்த்தாள். ஆறுதல் அவன் கண்களில் சிணுங்கியது.

ஆதவனின் நண்பர்கள் இருவர். மெல்லிசையின் நண்பர்கள் மூவர். மொத்தம் ஐந்து பேர் கொண்ட குழுவால் இத்திருமணம் நடைபெற்றது.

மாதவனும் மெல்லிசையும் மெல்லிய கோட்டின் நிறத்தில் கணவனும் மனைவியுமாக சேர்த்து நிற்கும் புகைப்படத்தை வாட்சப் திறந்து காட்டியது.

கண்கள் சிமிட்ட காலத்துக்கு மறந்து போயிருக்கலாம்.

மெல்லிசையின் அம்மா மாயாதேவி கண்கள் மருள.... காற்றடைத்த அறைக்குள் வேர்த்து புழுங்கினாள். என்ன நடக்கிறது ஒன்றும் புரியவில்லை. ஒரே பெண் என்று கொடுத்த செல்லமெல்லாம்...திருட்டு கல்யாணத்தில் வந்து நிற்பதை ஒப்புக் கொள்ளவே முடியவில்லை. ஆத்திரம் கதவை உதைத்தது. கணவனுக்கு அலைபேசியில் அழைத்துக் கொண்டே இருந்தாள். பத்து முறைக்கு மேலே அழைத்தும் கணவன் எடுக்கவில்லை என்றால் என்ன நடந்திருக்கும். கோபக்கார மனிதன். மானக்கார மனிதன். சுருக்கென்று சொல் தைத்தாலும் சாகிறேன் என்று சொல்லி கதைவடைத்து, அரங்கேற்றும் முன்னால் நாடக கலைஞன். தெரிந்து தான் போயிருக்கும். பிள்ளையின் லட்சணம்.

“அயோ என்ன தான் செய்வது. ஊர் உறவுக்கு முன்னால் தலை நிமிர்ந்து எப்படி இனி நடப்பது….?”

துக்கம் பீறிட்டது. பயம் தாழிட்டது. படக்கென்று புடவை சுற்றி தூக்கில் தொங்கி விட்டாள்.

ஊர் பரவிய விஷயம் மெல்லிசைக்கும் கசிய... அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டில் உறவுகள் சூழ... அம்மா படுத்திருக்க பிணம் போல அப்பா அமர்ந்திருந்தார்.

மெல்லிசையை சொந்த பந்தங்கள் எல்லாம் கடுஞ்சொல் கொண்டு பந்தாட.... “அயோ... எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா…” என்று அழுகையினூடாக..... கத்தி கவனம் திருப்பினாள் மெல்லிசை.
அத்தனை கண்களும் அவளை நோக்க அவள் தன் அப்பாவைப் பார்த்து பேசினாள்.

“இது நிஜக் கல்யாணம் இல்ல. நாங்க எடுத்த குறும்படத்தின் ஒரு காட்சி. இது எங்க டீம்” என்று 7 பேரும் நிற்க வீடு ஸ்தம்பித்தது.

“சாரிப்பா.... உங்களுக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு தெரியும். அதனாலதான் யாருக்கும் தெரியாம இந்த சூட் நடந்துச்சு. ஆனா எப்பிடியோ எங்கையோ தப்பா ஆகி அம்மா இப்டி அவசரப்பட்டுட்டாங்க... நான் என்ன பண்ணுவேன்....” ஓவென அழுது அரற்றினாள்.

இரவு..... நீண்டு கிடந்தது.

நண்பர்கள் ஐவரும் ஒவ்வருவராக கிளம்ப... ஆதவன் மெல்லிசையின் கைகளை பற்றிக் கொண்டு சோகம் படர நின்றான்.

“எனக்கு பயமா இருக்குடா” என்று கிசுகிசுத்தாள். அவள் கண்கள் சுற்றும் முற்றம் சுழன்றன.

“மெல்லிசை.... எல்லாமே திட்டப்படிதான் நடந்துச்சு. குறும்படங்கற பேர்ல நாம பண்ணினது நிஜ கல்யாணம்தான்... ஆனா நீ தான் அவசரப்பட்டு நாம எடுத்த கல்யாண போட்டோவை உங்கம்மாவுக்கு வாட்சப் பண்ணிட்ட.....” என்றான் எங்கோ வெறித்தபடி. அது குற்றம் சாட்டும் மெல்லினமாக இருந்தது.

தூக்கி வாரிப்போட்டது.

“நானா.... நான் என்ன லூசா....கல்யாண போட்டோவை அனுப்ப …”-குழம்பினாள் மெல்லிசை.

“என்ன நீ அனுப்பலையா .... அப்புறம் எப்படி உன் மொபைல்ல இருந்து அந்த போட்டோ உங்கம்மா செல்லுக்கு போயிருக்கு…”.

இருவரும் ஒருவரையொருவர் நடுக்கத்தோடு பார்த்துக் கொண்டே யோசித்தார்கள் . மூளை முழுக்க இன்று காலையில் இருந்து நடந்த அத்தனையும்...நொடி நொடியாய் வேகமாய் அவிழ்ந்து கொண்டிருந்தது . எங்கெல்லாமோ சுற்றிய சந்தேகங்கள்... தங்கள் நண்பர்கள் ஐவரில் ஒருவர்தான் என்று வந்து நின்றார்கள்...

“யாராக இருக்கும்….?”

ஒவ்வொருவரின் பாத்திரங்களும் அலசப் பட்டன. கண்டு பிடிக்க முடியவில்லை. நீடித்த சந்தேகங்கள்.... நீடித்துக் கொண்டேயிருக்க......

நீலம் பூத்த இரவில்... சாம்பல் பூத்துக் கொண்டிருந்த நிலவு..... முன்பொரு காலத்து நிலவாகி இருந்தது.

அந்த சிறுவன்... அவன் அம்மாவிடம் அழுது புரண்டு அடம் பிடித்துக் கொண்டிருந்தான்.

பக்கத்துக்கு வீட்டு கல்யாணத்தில் போட்டோவில் நிற்க வேண்டும் என்பதுதான் அவனின் ஆழ்ந்த அழுகையின் கோரிக்கை.

“அயோ கண்ணா ..... அது அவுங்க வீட்டு கல்யாணன்டா…..நாம போய் போட்டோல எல்லாம் நிக்க முடியாது.... அதுவும் அவுங்க நம்மள மதிக்கவே மாட்டாங்கடா..... சொன்னா கேளு…”

எவ்ளோ கெஞ்சியும் அவனுக்கு புரியவில்லை. ஒரு வழியாக சிபாரிசு செய்யப்பட்டு... கெஞ்சி கூத்தாடி .. அடுத்தடுத்து எடுத்த எல்லா போட்டோவிலும் அவன் ஜம்மென்று அழுது வடிந்த முகத்தோடு…..கம்பீரமாய் தலையை சிலுப்பிக் கொண்டு... இருந்த மூன்று செட் பேண்ட் சட்டைகளை மாற்றி மாற்றி போட்டுக் கொண்டு சிரித்தான். முறைத்தான். புருவம் தூக்கினான். அழுவது போல நடித்தான். பாவனைகளில் அவனுக்கு விடுமுறை நாள் ஞாபகம்…எடுத்த அத்தனை போட்டோக்களும்...

கிளிக் கிளிக் கிளிக்....ஏகப்பட்ட கிளிக்.

ஆல்பம் வந்த நாளில் திருவிழா போல அந்த வீடே அலங்காரமானது. தோழியின் உரிமையில் அவனும் ஒரு ஓரத்தில் நின்று ஆல்பம் பார்க்க, கடைசி போட்டோ வரை ஒன்றில் கூட தான் இல்லை என்பது புரிந்தது…“போட்டோ எடுத்தாங்க.... எல்லாரும் இருக்காங்க.. ஆனா நான் மட்டும் இல்ல…..எப்படி…?!” அவனுக்கு அது மட்டும் புரியவில்லை. தலை தொங்கிய சோக முகத்தில் மெல்ல அந்த வீட்டை விட்டு நகர்ந்தான். அதிலிருந்து நேற்று வரை அந்த வீட்டுக்குள் அவன் செல்லவேயில்லை.....

கல்யாணம் முடிந்த கையோடு... மெல்லிசை சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க.... போன் பேசுவது போல சற்று தள்ளி வந்து மெல்லிசையின் செல்போனில் இருந்து மெல்லிசையின் கல்யாண போட்டோவை, சிறுவயதில்…..எல்லா போட்டோவிலும் ஓரத்தில் நிற்க வைத்து பின் வெட்டி வீசிய மெல்லிசையின் அம்மாவுக்கு அனுப்பி விட்டவன் வேறு யாருமில்லை... ஆதவன்தான்..

மெல்லிசையின் காதல் கணவன் ஆதவனேதான்.

அவன் யோசனை பால்யத்தில் இருந்து மீண்டு கொண்டிருந்தது.

அவன் வழியெங்கும் நீலம் பூத்த வெண்ணிலா…...புகைப்படம் எடுத்துக் கொண்டேயிருந்தது.

- கவிஜி

Pin It