போங்கடா முட்டாள்களா....

இனி என்னால் பொறுத்துக்க கொள்ள முடியாது. என்ன மாதிரி டிசைன் இந்த உலகம்.... என்ன மாதிரி பெண்கள் இவர்கள்.

உயிருனா மயிறுன்னா... பாக்க பாக்க கழுத்தறுத்துட்டு போயிட்டே இருக்கா.... கொஞ்சம் கூட நியாயமே இல்ல மீனலோட்சனி.... பேரு பாரு.. மீனலோச்சனி. கருமம் உங்கிட்ட பேச எனக்கு ஒண்ணுமில்ல.... உன்ன மாதிரி மனுஷங்க வாழற உலகத்துல நான் வாழ விரும்பல.... என்ன மாதிரி கேம் இது....உன் இஷ்டப்படி நான் இருக்கணும்னா.. என் பேரையும் மீனலோட்சனினு தான் மாத்திக்கணும்... பிராடு.....பிராடு....

இரவு என்னை நீட்டிக் கொண்டே சென்றது.

நான் அவசரப்பட்டு இந்த முடிவை எடுக்கவில்லை. ஆழ்ந்து யோசித்தபிறகு தான் இந்த முடிவுக்கு வந்தேன். எத்தனை பெரிய துரோகம் இது. நேற்று வரை நானே எல்லாம் என்றவள் இன்று அது பிடிக்கல.. இது பிடிக்கல.. நான் பெரிய இவ......பெரிய பருப்பு... நெருப்புனு வசனம் பேசிட்டு இருக்கா... நியாயமா பார்த்தா கொலை பண்ணனும்... லவ் பண்ணின பாவத்துக்கு தற்கொலை பண்ணிக்கறேன்.

எங்கள் ஊருக்கு தினம் ஒரு முறை... ஒரே முறை வரும் ரயிலுக்கு தான் காத்திருக்கிறேன். தூக்கு போட்டு சாகும் அளவுக்கு நான் வளரவில்லை.அந்த அளவு தைரியம் எனக்கு இல்லை. கழுத்திருக்கி.... கண்கள் வெளியே வந்து நா தள்ளி... மூச்சு திணறி.. அய்யயோ... கொடுமை. அத்தனை நேரம் என்னால் மூச்சடக்க முடியாது. அதனால்தான்... ரயில் முடிவு. பட்டென வரும் சட்டென மரணம்.

குளிர் காற்று சில்லென்று இருந்தது. ஏனோ அவளின் முத்தம் நினைவுக்கு வந்தது. எத்தனை பெரிய சோகம் இது. தாங்க முடியாத வலியை கொடுத்து விட்டு எப்படி இயல்பாக அவளால் இருக்க முடிகிறது. கடவுளே.... சீக்கிரம் ரயிலை அனுப்பு. என் அன்பு என்னவென்று கூற வேண்டும். இந்த உலகம் என் காதலில்... நீந்திக் கடக்க இன்னும் எத்தனை ஜென்மம் ஆகுமோ...?

நான் படுத்து படுத்து பார்த்தேன். நீட்டி படுத்தேன். குறுக்கி படுத்தேன். தலை மட்டும் சக்கரம் படும் இடத்தில் வைத்துப் பார்த்தேன். தூரத்தில் வர வேண்டிய ரயில் ஓசை.. குயிலோசை போல இனித்தது. கனவைத் தின்று செரித்து எதிரே திசைக்குள் நீண்டு விட்ட எவையும் அவையாகும் கணக்கில் நானொரு நீ என இருக்கத்தான் வேண்டும் இம்முறை எனது மரணம். எம்முறையும் உனக்கு நானே மரணம். உள்ளம் துடித்தது. உதடு கடித்தது.

செத்து தான் போனேனோ என்னவோ. எல்லாம் மறந்து விட்டிருந்தது. ஆனால் நிம்மதியாக இருந்தது. காதலும் இல்லை. கத்தரிக்காயும் இல்லை. போர்த்திக் கொண்ட சால், குறுக்கிக் கொண்ட கால்கள்... கண்களை சுற்றிய ஏக்கம்.. எல்லாம் சேர்ந்து விட்டது போல... நீண்ட மரணமோ இது. நாய் ஒன்று காதோரம் கத்தி போக விழிப்பு வந்து விட்டது. எழுந்து அமர்ந்தேன். ரயில் தண்டவாளத்தில் சாகப் படுத்தவன் தூங்கி விட்டிருக்கிறேன். மணி பார்த்தேன்.. மணி இரவு 11 10. என்ன நடக்குது... நான் எட்டு மணிக்கு வந்து படுத்தவன்... நியாயப்படி பார்த்தால் 8.30க்கு ரயில் வந்திருக்க வேண்டும். ஏன் வரவில்லை. இந்த வழியாக ரயில் வருமா.... எனக்குள் மரணக் கேள்விகள் உயிரை வாங்கின.

"சாகற மூடே போச்சு "... முணங்கிக் கொண்டே திரும்பினேன். ஒருவன் வேக வேகமாக நடந்து கொண்டிருந்தான். என் அருகே வந்தவன் என்னை உற்று நோக்கி விட்டு அவனாகவே பேச ஆரம்பித்தான்.

"சாகவா....? இன்னைக்கு முடியாது......!" என்றான்.

ஏன் என்பது போல பார்த்தேன்.

"இந்த வழியா வர்றதே ஒரு ரயில்.. அதுல எத்தனை பேர்டா சாக முடியும்...?"

.................................................!

"ஊதா ஸ்டேஷன் பக்கம்..... ஒருத்தன்... ஜல்லிக்கட்டுக்காக சாக படுத்துருக்கான்..."

"நீல ஸ்டேஷன் பக்கம்..... ஒருத்தன்... நீட்- காக சாக படுத்துருக்கான்..."

வெள்ளை ஸ்டேஷன் பக்கம்...... ஒருத்தன்... காவிரிக்காக சாக படுத்துருக்கான்..."

மஞ்சள் ஸ்டேஷன் பக்கம்...... ஒருத்தன்... விவசாயிகளுக்காக சாக படுத்துருக்கான்..."

பச்சை ஸ்டேஷன் பக்கம்...... ஒருத்தன்... மீனவர்களுக்காக சாக படுத்துருக்கான்..."

ஆரஞ்சு ஸ்டேஷன் பக்கம்...... ஒருத்தன்... தூக்கு தண்டனை கூடாதுனு சாக படுத்துருக்கான்..."

கருப்பு ஸ்டேஷன் பக்கம்...... ஒருத்தன்... ஆணவ கொலைக்கு எதிரா சாக படுத்துருக்கான்..."

இங்க நீ சிவப்பு ஸ்டேஷன் பக்கம் காதலுக்காக சாக படுத்திருக்க .........

"இதெல்லாம் செத்து தீர்ற பிரச்னையா.... உயிரோட நின்னு போராடி ஜெயிக்க வேண்டிய பிரச்னை... வாழ்க்கை வாழறக்கு... செத்துட்டா சரி ஆகிடுமா.... போ தம்பி... போய் கேளு... கேள்வி கேளு... சம்பந்தப்பட்டவங்களுக்கு கேக்கற வரைக்கும் கேளு... அத விட்டுட்டு சாகப்படுத்துட்டானுங்க...." அவன் போய்க்கொண்டே இருந்தான்..

என் தலைக்குள் ஒரு மாதிரி பூச்சிகள் பறந்தன.... ஏதோ சரி என்று பட்டது..

"சார் நீங்க......." என்று கேட்க கேட்கவே...

"நான் தான் இந்த ரயில் லேட்டாகறக்கு காரணம்... என்ன புரியலையா...? ஓடற ரயில்ல இருந்து தவறி விழுந்து செத்தவன்டா...நான். லூசுங்களா.. உயிரோட மதிப்பு என்னனு தெரியாம...சாக வந்துட்டானுங்க. ஏதாவது வேணுன்னா.....மாத்தணும்னா... போராடுங்கடா...... சண்டை போடுங்க... கேள்வி கேளுங்க.. அத விட்டுட்டு...."

அவன் குரல் காற்றோடு கரைந்து கொண்டிருந்தது....அவனும் தான்.

நான் எழுந்து விட்டேன்.

- கவிஜி

Pin It