பக்கத்து வீட்டு சோதி அக்காவிடமிருந்து சற்றே பருத்த நெல்மணி போன்றதான கனகாம்பர விதைகள் ஐந்தாறு வாங்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் வீட்டிற்குள் நுழைந்தேன். தன் மேனி முழுதும் இளஞ்சிவப்பும் வெண்மையும் கலந்து போர்த்தியிருந்த அந்தப் பிச்சிப்பூ செடிக்கருகில் ஊஞ்ச மரக்கோலால் கீறி, ஆங்காங்கே ஓரிரு விதைகளிட்டு மண்மூடினேன். முன் வீட்டு வாசலின் சுவரை ஒட்டி, செடி வளர்க்கவென செம்மண் கொட்டி, கருங்கற்களை வேலியாக அமைத்திருந்தோம். அடுப்பெரிக்கும் சாம்பலை அங்குதான் கொட்டி வைப்பாள் அம்மா. ஆகையால் அந்த மண்ணிற்கு " சாம்பல் மண்" என்று பெயரிட்டிருந்தேன்.

kanakambaramதினமும் பள்ளிக்குப் புறப்படுமுன் எல்லாச் செடிகளுக்கும் தண்ணீர் விடுவதும், விதையிட்ட மண்பரப்பிற்குத் தண்ணீர் தெளிப்பதும் வழக்கம். ஓரிரு வாரங்களில் நாற்று அரும்பியது. அந் நாற்றைக் கண்டதும் திருவிழாத்தேர் பார்த்தது போலொரு மகிழ்வு. ஓடிப்போய் விறகடுப்பில் சோறாக்கிக் கொண்டிருந்த சோதி அக்காவின் கரத்தை உடும்புப் பிடியாய்ப் பிடித்திழுத்து வந்து முளைவிட்டிருந்த அரும்பைக் காட்டினேன். மகிழ்ந்துபோய்க் கன்னத்தில் முத்தமிட்டாள். எனக்கு பூ பூத்தது போலிருந்தது. அதன்பின் அரும்பின் முதல் மொட்டுக்காய்க் காத்திருந்த என் நாட்கள் தவமாய்க் கழிந்தன.

எப்போதும் காலைநேரத் தூக்கம் கலைந்து நானாக எழும்வரை காத்திருக்கும் அம்மா விடிந்தும் விடியாததுமாய் எழுப்பினாள் அன்று.

ஆம். என் பிஞ்சுவிரல் ஊன்றிய விதை ஒரு மலரைப் பூத்திருந்தது. மகிழ்வைக் கொண்டாட வேண்டிய தருணம் அது.

வீட்டிற்கு வெளியில் ஓடி வாசற்படியில் நின்றதும் என் பார்வைக்கு முதலில் சிக்கியவள் "பாப்பாத்தி அக்கா". அவளுக்குத்தான் அந்த முதல் பூவைக் காண்பித்தேன். " அடிப்பாவி இதுக்குத்தானா இத்தனை சந்தோசம்? சாயுங்காலம் வீட்டுக்கு வா. என்கிட்ட கொடிக்கனகாம்பர விதைகள் இருக்கு. பெருசு பெருசா பூக்கும்.தாரேன்" என்றாள். நான் மனத்தில் குறித்துவைத்துக் கொண்டு பள்ளி முடிந்ததும் நேரே அந்த அக்காவின் வீட்டிற்குச் சென்று விதைகளை வாங்கிவந்து, ஒரு தீப்பெட்டியினுள் வைத்து, வீட்டின் தாழ்வாரக்கூரையில் நேர்த்தியாய் அடுக்கிக் கட்டியிருந்த அந்தத் தென்னங்கீற்றினுள் பத்திரமாகச் செருகி வைத்தேன். ஒரு மழைநாளில் ஊன்றலாமென என் மனதிற்குச் சொல்லி வைத்திருந்தாள் அம்மா.

அதுமட்டுமன்றி அம்மா "இத்தனை பிரியங்களா இந்த வாசமில்லா மலர்மீது " என்றும் விளித்திருக்கிறாள்.

பூவோடு சேர்ந்த நார் மணக்கும் போது
பூவோடு சேர்ந்த பூ மணக்காதா என்ன?

பக்கத்திலிருந்த பிச்சிப்பூ தன் வாசனையை எப்போதும் கனகாம்பரத்திற்கு நிறைவாய்க் கொடுத்துக்கொண்டிருந்தது.

நான் செடியையும், செடி என்னையும் பார்த்துப் பார்த்தே வளர்ந்தோம். அடுத்தவாரம் ஊர்த்திருவிழா. அதற்குள் நிறைய பூக்களைப் பூத்துவிட வேண்டுமெனச் சொல்லிச் சொல்லி செடிகளுக்கு நீரூற்றினேன். எவரையும் ஒரு பூ பறிக்க அனுமதிக்கவில்லை நான். திருவிழாவன்று அதிகாலையிலேயே எழுப்பி, தலைமுழுகி குடும்பமாகக் கோவிலுக்குக் கிளம்பியாயிற்று. நண்பகல் நெருங்கும் வேளை வீட்டிற்குள் நுழைந்ததும் மலர்ந்திருந்த அத்தனைக் கனகாம்பரங்களும் என்னைப் பார்த்து அவ்வளவு அழகாய்ச் சிரித்தன. ஒரு பூவைக்கூட சூடமுடியாதபடிக்கு என் தலையை மழுங்க மொட்டையடித்திருந்தார் நாவிதர். எனக்கு முட்டிக்கொண்டு வந்த அழுகையில் அத்தனை வார்த்தைகளும் செத்துப்போய்க் கிடந்தன.

சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பள்ளிக்கு விடுமுறை. அந்நாளொன்றின் ஓய்வுப் பொழுதில்தான் காணக் கிடைத்தது அந்த அழகான காட்சி. கருப்பும் சிவப்புமாய் வர்ணங்களைத் தன் உடலில் அழகாய் அப்பியவாறு சிறகசைத்துப் பறந்துவந்த அந்த "ராஜா பட்டாம்பூச்சி" கனகாம்பரத்தை மொய்ப்பதும் , பறப்பதுமாகப் போக்குக் காட்டியபடி இருந்தது. பார்வைக்கு உலகின் அத்தனை அழகும் ஒருசேரக் காட்சியளிப்பதைப் போலிருந்தது. செடி முழுதும் இலைகளை மறைத்துப் பூத்துக் குலுங்கும் செம்பருத்தி போல என் குருதியெங்கும் செம்மலராய்ப் பூத்திருந்தது. அத்தருணம் வாய்க்கும்போதெல்லாம் ஒரே நேரத்தில் நான் செடியாகவும், மலராகவும் , பட்டாம்பூச்சியாகவும் மாறிவிடுவேன். அந்த வண்ணத்தி அவ்விடம் நீங்கிப் பறக்கும் வரை காத்திருந்து பின்னர் அம்மலரின் காம்பை மெதுவாக மேல்நோக்கி இழுத்துப் பறித்து, சிறுகுடம் போலிருக்கும் வெண்காம்பின் நுனித்தேனை உறிஞ்சுவேன்.

சிறகசைக்காத பட்டாம்பூச்சியென மெதுவாக நகரும் என் விரல்கள் சமயத்தில் சிறகடித்துப் பறக்கும் அந்த ராஜா பட்டாம்பூச்சியை லாவகமாகப் பிடித்துவிடும். பிடித்தல் நிமித்தம் விரல்களில் ஒட்டிக்கொண்ட வர்ணங்களை கனகாம்பர இதழ்களுக்குப் பூசி அழகுபார்க்கும். கனகாம்பரம் எந்த நிறத்தில் இருந்தாலும் பிச்சிப்பூவின் மணம் அதில் ததும்பியிருக்கும்.

சனி மற்றும் ஞாயிறுகளின் இப்படியான மகிழ்வைக் கடந்து, என் முடி கொஞ்சம் வளரத் துவங்குகையில், அனைத்துச் செடிகளையும் வேரோடு பிடுங்கி மணல்மேட்டை நிரவி, வாசலுக்குத் தளம் மொழுகிவிட்டார் அப்பா ஒரு நாளில். கடைசிவரை நான் வளர்த்த கனகாம்பரம் என் தலையை அலங்கரிக்கவே இல்லை.

அன்றுமுதல், எவர் அறிவிற்கும் எட்டாமல், என் வீட்டின் நடமாடும் கனகாம்பரமாய் நான் வேரூன்றி கிளைத்துப் படர்ந்திருந்தேன். பிச்சிப்பூ வாசம் என் மனம் முழுக்க ரம்மியமாய் வீசிக்கொண்டிருந்தது. முன்னொரு நாளில் நான் தீப்பெட்டியினுள் சேகரித்து தாழ்வாரக் கூரையில் பத்திரப்படுத்தின அக் கனகாம்பர விதைகள், விருட்சமாய் விரிந்து பொழிந்த என் பெருநிழலில் முளைத்தெழும்ப இடம்தேடிக் கொண்டிருந்தன.

- வான்மதி செந்தில்வாணன்

Pin It