Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

Enter your email address:

Keetru RSS Feed

கடைசி பதிவேற்றம்:

  • வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017, 08:43:20.

நான் பிறந்ததிலிருந்தே சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும், சடங்குகளும் என் மீது திணிக்கப்பட்டன. அவைகள் இன்று வரை தொடர்கின்றன.

sivan 324ஒரு வயது முடிந்தவுடனே நான் கதற கதற எனக்கு மொட்டையடித்து காது குத்தப் பட்டது. மொட்டைத் தலையில் சந்தனம் அப்பப் பட்டது. இதை என் அம்மா சொல்லித் தெரிந்து கொண்டேன்.

விவரம் தெரிந்த நாளிலிருந்தே என் நெற்றியில் பட்டையாக விபூதி இருக்கும்; இருக்க வேண்டும். சில சமயங்களில் நான் விபூதி இட்டுக் கொள்ள மறந்து விட்டால் “நெத்தில… பீ இருந்தா எடுத்து இட்டுக்கறதுதானே” என்று என் அப்பா கத்துவார்.

ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் வீட்டிலுள்ள ஆண்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்கிற நிலை. அகம்பாவமும் திமிரும் ரொம்ப ஜாஸ்தி, அவர்கள் வைத்ததுதான் சட்டம். ஆனால் அவர்கள் செய்ததெல்லாம் முட்டாள்தனமும் அடாவடித்தனமும்தான். தன் குழந்தைகளை சுயமாக சிந்திக்கவோ கருத்து சொல்லவோ அனுமதிக்க மாட்டார்கள். அவ்வளவு தூரம் வீம்பும், வறட்டுக் கொளரவமும்.

என் அப்பாவும் அதற்கு விதி விலக்கல்ல. உதாரணத்திற்கு எனக்கு நான்கு வயது இருக்கும்போதே, என் பிறந்த தேதியை இரண்டு வருடங்கள் அதிகமாக தப்பாக மாற்றிக் கொடுத்து பள்ளியில் சேர்த்துவிட்ட அதி புத்திசாலி என் அப்பா. அதனால இப்ப கஷ்டப் படறது நான்தான். தற்போது பார்க்கும் வேலையிலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்னமேயே நான் ஓய்வு பெற வேண்டும். இதனால் எனக்கு மிகப் பெரிய பண நஷ்டமும், மனக் கஷ்டமும்.

நான் சற்று வளர்ந்தவுடன், நிறைய சுலோகங்கள் கற்றுக் கொள்ளவும், புராணங்களும், இதிகாசங்களும் தெரிந்து கொள்ளவும் அப்பாவால் நிர்பந்திக்கப் பட்டேன். நிறைய கோவில்களுக்கு அழைத்துச் செல்லப் பட்டேன். “உம்மாச்சி கண்ண குத்திடும்... உம்மாச்சி தண்டணை கொடுப்பார்” என்று கடவுள்களிடம் பயத்தை ஊட்டியே வளர்த்தார்களே தவிர, கடவுள் அன்பானவர் என்றெல்லாம் சொல்லி வளர்க்கவில்லை.

என் தாத்தா, பாட்டி திவச தினங்களில், வாத்தியார்கள் வந்து திவசம் முடித்து வைக்க ஒன்றரை மணியாகி விடும். அதன் பிறகு வாத்தியார்கள் அமர்ந்து சாப்பிட்டு முடிய இரண்டு மணியாகிவிடும். அதுவரை ஒன்றுமே சாப்பிடாது பகல் இரண்டரை மணி வரை நானும் என் இரண்டு தங்கைகளும் பசியில் தவித்துப் போய் காத்திருப்போம். சாப்பிட்டு முடித்தவுடன் வாத்தியார்கள் கூடத்தில் மலை மலையாக சாய்ந்து விடுவார்கள். சிரம பரிகாரம் பண்ணிக் கொள்கிறார்களாம்.... அதன் பிறகு ஏதாவது ஒரு வாத்தியார் ரொம்ப பெரிய மனசு பண்ணி, “குழந்தைகளை சாப்பிடச் சொல்லுங்கோ” என்று பரிந்துரை செய்த பிறகுதான் அப்பா எங்களை “எல்லாரும் சாப்பிடலாம் வாங்க” என்பார். ஏற்கனவே பரிமாறப் பட்டு, ஈ மொய்த்து காய்ந்துபோய் கிடக்கும் ‘விஷ்ணு இலையில்’ என்னை உட்காரச் சொல்வார். நாங்கள் அனைவரும் சாப்பிட்டு முடிய மூன்றரை மணியாகி விடும்.

எனக்கு பதினாறு வயது இருக்கும்போது கொலை பட்டினி கிடந்து நிறைவேற்றப் படும் இந்த மாதிரியான முட்டாள் தனமான சடங்குகள் மீது பயங்கர கோபமும் எதிர்ப்பு உணர்வும் அதிகமாயிற்று.

அடுத்த வருடத்திய தாத்தா திவசித்தின்போது, என் அப்பாவுக்குத் தெரியாமல் அருகிலுள்ள ஆரிய பவனுக்கு நான் என் இரண்டு தங்கைகளையும் காலை எட்டு மணிக்கு சைக்கிளில் அழைத்துக் கொண்டு போய் நன்றாக டிபன் சாப்பிடச் சொல்லி, நானும் சாப்பிட்டேன். அவர்களுக்கு ஒரே சந்தோஷமும், இன்ப அதிர்ச்சியும். “பட்டினி கிடந்து உடம்பை வருத்திக்கொள்ள எந்த சாஸ்திரங்களிலும் சொல்லப் படவில்லை” என்று அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன். அந்தச் சின்ன வயதில் நான் சொன்னது அவர்களுக்குப் புரியவில்லை.

உண்மை தெரிந்த என் அப்பா, என்னை ஓங்கி கன்னத்தில் அறைந்தார். “பித்ருக்கள் சாபம் சும்மா விடாதுடா.. தாத்தா திவசத்தை தீட்டு பண்ணிட்டே” என்று கத்தித் தீர்த்தார். அதைத் தொடர்ந்த திவசங்களில் நான் மட்டும் ரகசியமாக ஆரிய பவனுக்கு சென்று வந்தேன்.

இப்ப என்னோட அம்மா, அப்பா எல்லாரும் போய்ச் சேர்ந்தாச்சு. மூத்த பையனான நான் அவர்களுக்கு திவசம் கிவசம்னு ஒண்ணும் பண்றது இல்ல. அதில் நம்பிக்கையுமில்லை.

எப்பவாவது கோவிலுக்கு என் மனைவியுடன் சென்று வருவது உண்டு. இது ஒரு அனிச்சைச் செயலே தவிர, நான் பக்திமான் என்றெல்லாம் கிடையாது. அவ்வப்போது தீற்றலாக கடவுள்னு ஒருத்தர் இருக்காரா என்கிற சந்தேகம் அதிகம் வரும். இதை வெளியில் சொன்னால் நான் ‘நாத்திகன்னு’ சொல்லி முத்திரை குத்தி என்னை மொத்தமாக ஒதுக்கி விடுவார்கள் என்கிற பயம் ஜாஸ்தி. எனக்கு மனுஷா வேணும்.

சமீப காலமாக கடவுள்கள் அடிக்கடி என் கனவில் வருகின்றனர். மறு நாள் காலையில் மறக்காமல் அந்தக் கனவுகளை என் டைரியில் எழுதி வைப்பேன்.

அன்று கிருஷ்ண ஜெயந்தி. வீட்டில் என் மனைவி, வாசலிலிருந்து பூஜா ரூம் வரை கிருஷ்ணரின் சிறிய கால்களை மாக்கோலமிட்டாள். மணியடித்து நைவேத்தியம் பண்ணி தீபாராதனை காட்டி எங்களை ஒற்றிக் கொள்ளச் சொல்லி, செய்திருந்த நிறைய பட்சணங்களை சாப்பிடக் கொடுத்தாள்.

அன்றுதான் எனக்கு முதல் கனவு வந்தது.

நீண்ட வில்லுடன் பகவான் ராமர் என்னிடம் வந்தார். “நீ கிருஷ்ணரை நம்பி மோசம் போகாத. அவர் சரியான ஸ்த்ரி லோலர். மரியாதை என்ன வேண்டி கிடக்கு... ஸ்த்ரி லோலன். பெண்கள் சகவாசம் ரொம்ப ஜாஸ்தி. அவனது லீலைகள் தெரிந்துமா அவனை வணங்குகிறாய் !? கேவலம் வெண்ணையை திருடித் தின்னவன்... எச்சரிக்கையாய் இருந்து கொள்.” மறைந்து விட்டார்.

மறு நாள் என் கனவில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் வந்தார். அவருடன் சர்வ லட்சணங்களும் பெருந்திய நான்கு பெண்கள். நான் சொக்கிப் போனேன். “நேத்து ராமன் வந்திருப்பானே ! உன் கனவில் மட்டுமல்ல பலரது கனவில் வந்து நேற்று என் ஜெயந்தி என்கிற பண்பாடு கூட தெரியாமல் என்னைப் பற்றி வம்பு பேசினான்... அவன் என்ன யோக்கியமா? பொண்டாட்டிய சந்தோஷமா வச்சிக்கத் தெரியாம பதினான்கு வருடங்கள் அவள காட்டில் அலைய விட்டவன். தன் பொண்டாட்டி என்கிற பொசஸிவ்னஸ் கூட இல்லாம ராவணனை தள்ளிக்கிட்டு போக விட்டவன். அப்புறமா அவள் கற்பின் மீது சந்தேகம் கொண்டு நெருப்பில் நடக்கச் செய்தவன். ‘அவசரப் பட்டு தன் பெண்ணை பாழுங் காட்டில் தள்ளி விட்டோமே’ என்று ஜனகர் ரத்தக் கண்ணீர் வடிக்காத நாள் கிடையாது. அனுமார் என்கிற ஒரு அடியாள வச்சிகிட்டு வானரப் படையை உருவாக்கி அடாவடித்தனம் பண்ணவன். லங்காவை எரித்தவன். வாலியை மறைந்து நின்று கொன்ற துரோகி. இவன் ஏக பத்தினி விரதனாம்... உத்தம புருஷனாம் ! பயங்கர தமாஷ்.” மறைந்து விட்டார். அவர் மறைந்தது கூட பரவாயில்லை. கூட வந்த நான்கு அழகிய பெண்களும் அவருடன் மறைந்ததுதான் மிகப் பெரிய சோகம்.

ராமரும் வேண்டாம், கிருஷ்ணரும் வேண்டாம் என்று சிவன் கோவிலுக்குச் சென்றேன். கோவிலின் வறுமையும் எளிமையும் என்னை சிந்திக்க வைத்தன. தஞ்சைப் பெரிய கோவில் பிருகதீஸ்வரரும் சரி, வைத்தீஸ்வரன் கோவில் வைத்தீஸ்வரனும் சரி பஞ்சத்தில் அடிபட்ட மாதிரி ஏழ்மையில் அழுது வடிவது ஏன்? என்று எண்ணிக் கொண்டேன்.

அன்று இரவில் விஷ்ணு என் கனவில் வந்தார். “போறும், போறும் சிவன நம்பினேன்னா உனக்கு வறுமைதான் மிஞ்சும். அவரு குடும்பமே ஒரு காமெடி. அந்தாளுக்கும் ரொம்ப ஈகோ ஜாஸ்தி. கட்டினவளையே அவ அப்பா யட்சன் நடத்திய யாகத்துக்கு போகக் கூடாதுன்னு சண்ட போட்டு ஊரெல்லாம் சிரிப்பா சிரிச்சுது. அவர் மூத்த மகன் என்னடான்னா உலகத்த சுத்தி வரச்சொன்னா சிவன்-பார்வதியை சுற்றி வந்துட்டு திருட்டுத் தனமா மாம்பழம் வாங்கின ஆளு. இந்த லட்சணத்துல ‘முழு முதற் கடவுள்’னு சுய தம்பட்டம் வேற. ரெண்டாவது பையனுக்கு வள்ளி, தெய்வானைன்னு ரெண்டு பொண்டாட்டி. மொத்தத்துல ஒண்ணும் சொல்லிகிறாப்ல இல்ல.”

இனிமேல் ஐஸ்வர்யம் மிக்க பெருமாள் கோவிலுக்குத்தான் செல்வதென்று முடிவு செய்தேன்.

அன்று இரவு சிவன் என் கனவில் வந்தார். “நீ என்னைத்தான் கும்பிடணும். நான்தான் உன் குல தெய்வம். உனக்கு வைத்தீஸ்வரன் கோவில்லதான் மொட்டையடித்து காது குத்தினார்கள். நீ என்னோட ஏரியா ஆளு. பெருமாள் கிருமாள்னு அலையாத... நீ பட்டை. அவரு நாமம். உனக்கு பட்டை நாமம் போட்டுருவாரு...அவரு பெரிய பணக்காரரு. கொள்ள காசு. திருப்பதில அவரு கட்டின கல்லாவ யாரும் தாண்ட முடியல. அலங்காரப் பிரியர். சொகுசுப் பேர்வழி. அங்க போயி அவமானப் படாத.”

அதையும் மீறி மறு நாள் பெருமாள் கோவிலுக்குச் சென்றேன். ஐஸ்வர்யமும் தேஜஸும் காணப் பட்டது. சுகந்தமான ஒரு வாசனையடித்தது. பெருமாள் ஆஜானுபாகுவாக அலங்காரத்தில் ஜொலித்தார். கோவிலுக்கு வந்திருந்த மாமிகள் ஸிந்திப் பசுமாதிரி லட்சணமாக இருந்தார்கள். தீபாராதனை காட்டப் பட்டது. சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் வாங்கிக் கொண்டு அனைவரும் கிளம்பிச் சென்றார்கள். நான் மட்டும் பெருமாள் அருகில் சென்று அவர் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்து அன்புடன் சிரிப்பதைப் போல் இருந்தது. நான் அவரையே கண் கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தேன்.

திடீரென்று பெருமாள் என்னைப் பார்த்து முறைத்தார். கண்களை உருட்டினார். கோபத்துடன், “என்னைப் பாதாதி கேசம் சேவிக்கணும்னு கூட உனக்குத் தெரியல...என் முகத்தையே உத்து உத்துப் பார்த்துகிட்டு இருக்க... நீ வடகலையும் இல்ல, தென்கலையும் இல்ல... சர்க்கரைப் பொங்கல் வாங்கிக்கொண்டு போய்ச் சேரு, அதுக்குத்தான வந்த” என்றார். சிவன்மேல் காட்ட வேண்டிய கோபத்த என்னிடத்தில் காட்டிட்டாரு. நான் குழம்பிப் போய் வெளியே ஓடி வந்தேன்.

நேற்று இரவு என் கனவில் வெள்ளைக் குவியலாக ஒரு உருவம் வந்து நின்றது. நான் பயந்து போய். “யார் நீ?” என்றேன்.

“பயப்படாத என் பெயர் உண்மை... சமீப காலங்களாகவே நீ மிகவும் குழப்பத்துடன் இருக்கிறாய்... அதைப் போக்கவே வந்தேன்.”

“அப்படியா...? எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.”

“என்ன தெரியணும், சொல்லு?”

“கடவுள் இருக்காரா இல்லியா?”

“இருக்காரு ஆனா இல்ல..”

“ப்ளீஸ்... என்ன குழப்பாத.”

“நம்ம சமுதாயத்துல போலீஸ், கோர்ட், கேஸு இருக்கா இல்லையா?

அது மாதிரிதான் கடவுளும் இருக்காரு... புரிய மாதிரி சொல்றேன்...

நம்மில் பெரும்பாலோர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனதில்லை... ஏன் போலீஸ் பற்றி நினைத்ததுகூட இல்லை. ஏனென்றால் நாம் சட்டத்தை மதித்து வாழும் பிரஜைகள். நேர் கோட்டில் வாழ்பவர்கள். ஆனால், திருடர்களும், பொய்யர்களும், ஏமாற்றுப் பேர்வழிகளும் போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோர்ட்டுக்கும் அலைகிறார்கள். “

“.....................”

“நாம் ஒரு நல்ல கணவனாக, தந்தையாக, மகனாக, பிரஜையாக ..... சிறந்த வாழ்வியல் ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் நமக்கு எதற்கு கடவுள்? அவருக்காக எதற்கு நம் நேரத்தையும், பணத்தையும் செலவழித்து அலைய வேண்டும்? எல்லா கோவில்களிலும் பணம்தான பிரதானம். காரை பார்க் பண்ண ஐம்பது ரூபாயில் ஆரம்பித்து, சாதா தரிசனம், சிறப்பு தரிசனம், அந்த பூஜை இந்த அபிஷேகம் என்று நம்மிடம் பணம் புடுங்கும் இடம்தானே கோவில்?”

“அப்ப கடவுள் இல்லையா?”

“இந்த வேகமான உலகிற்கு அவர் தேவையில்லை. அவர் இருந்தாலும், அவருக்காக நம் நேரத்தை செலவிடத் தேவையில்லை. ஏனெனில் அவர் நம்மை கோபித்துக் கொள்ளப் போவதில்லை. அன்பே உருவானவர். சாந்த சொரூபி. அவரை நாம் வணங்காததால் அவருக்கு நம் மேல் பிரத்தியேக அன்புதான் உண்டாகும்... அவரைத் தொந்திரவு செய்யாததால்.”

“அப்ப எப்படி இவ்வளவு கோவில்கள்.. பூஜைகள், புனஸ்காரங்கள்.. நம்பிக்கைகள்?”

“பெரும்பாலான கோவில்கள் அந்தக் காலத்தில் அரசர்களால் கட்டப் பட்டவை. அப்போதெல்லாம் இண்டஸ்ட்ரீஸ் கிடையாது... ஐ.டி கிடையாது.

திறமையான தகவல் தொழில் நுட்பமோ, போக்குவரத்தோ கிடையாது...

சோம்பேறித் தனமான மக்கள் ஐந்து நாட்கள் கல்யாணம் நடத்திய காலம்.

திண்ணையில் அமர்ந்து ஊர் வம்பு பேசி அரட்டையடித்த வீணர்கள்தான் அதிகம். கட்டிடக் கலை வளர்ந்தபோது, வேலை வாய்ப்பை உருவாக்க மன்னர்களுக்கு ஏற்பட்ட எண்ணம்தான் கோவில்கள். அதைக் கட்ட ஆரம்பித்தபோது அவர்களுக்கு மக்களிடையே நல்ல பெயர் கிடைத்தது. பெரிய பெரிய பிரகாரங்களைச் சுற்றி வந்தால் அக் காலத்தில் அது ஒரு நல்ல நடைப் பயிற்சி. கோவில்கள்தான் மக்கள் சந்திக்கும் இடம். அங்குதான் கல்யாண சம்பந்தங்கள் பேசப் பட்டன.

“காலம் மாறிவிட்டது. தகவல் தொழில் நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து விட்டது. உலகத்தின் எந்த மூலைக்கும் உடனே பறந்து சென்று விடலாம். நடைப் பயிற்சி வீட்டினுள்ளேயே ட்ரெட் மில்லில் செய்யலாம். இன்டர்நெட்டில் பெண்கள் தேடலாம். ஸ்கைப்பில் திருமணத்தை முடித்துவிட்டு பிறகு நேரில் பார்க்கும்போது தாச்சுக்கலாம். கடல் கடந்து போகக் கூடாது...தெற்க சூலம், வடக்க சூலம், ஒன்பதாவது நாள் பயணிக்க கூடாது என்று நம்மை ஒரு காலத்தில் பயமுறுத்திய சாஸ்திரிகளின் பேரக் குழந்தைகள் இன்னிக்கி கனடாவுலயும், ஜெர்மனியிலயும், அமெரிக்காவுலயும் சக்கை போடு போடறதுகள்.”

“கோவில்களும், கடவுள்களும் நாம் சோம்பேறியாக இருந்த அந்தக் காலத்துத் தேவைகள்.. தற்போது கடவுள்கள் காலாவதியாகி விட்டனர். இப்ப நமக்கு நேரமேயில்லை...குடும்பத்தில் அனைவரும் ஓடி ஓடி சம்பாதிக்கிறோம். ஒரு சிறிய இடம் நமக்கு சொந்தமாக வேண்டும் என்றால் கோடிக் கணக்கில் நமக்கு பணம் வேண்டும். ரியல் எஸ்டேட் பெரிய பிஸ்னஸ். பணம்தான் எங்கும் எதிலும் பிரதானம்.”

“இப்போதுள்ள போட்டியில் நிறைய பணம் சேர்க்க நம் நேரத்தை நாம் எப்படி திறமையுடன் செலவழிக்கிறோம் என்பதில்தான் நம் வெற்றி தோல்விகள் அடங்கியிருக்கின்றன... கொஞ்சம் பணம் சேர்த்த பிறகு நம்மைச் சுற்றியுள்ளவர்கள் முன்னேற ஏதாவது உதவி செய்தால் அது நமக்கு ஒரு ஆத்ம திருப்தியை உண்டாக்கும்.”

“எந்த மாதிரி உதவி?”

“நம்மைச் சுற்றி உள்ள ஏழைக் குழந்தைகளை படிக்க வைத்தாலே போதும்.. நம் வீட்டிலிருந்தே அதை ஆரம்பிக்கலாம். நம் டிரைவரின், வேலைக்காரியின், செக்யூரிட்டியின் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்தலாம்...யூனிபார்ம், ஷூ எடுத்துக் கொடுக்கலாம். நன்கு படிக்க குழந்தைகளை ஊக்கப் படுத்தலாம். அவர்கள் நன்கு படித்து முன்னுக்கு வந்தால் அது நமக்கு எவ்வளவு சந்தோஷம்? அவ்வப்போது அநாதை இல்லங்களுக்குச் சென்று அவர்களின் பசியாற உணவளித்து, நாமும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிடலாம்.”

“புரிகிறது.”

“உதவி மட்டுமல்ல... பரஸ்பர அன்பு, மரியாதை, பிறரை குத்திப் பேசாத கவனம், அடுத்தவர்களிடம் குற்றம் குறையை கண்டுபிடிக்காத குணம், எரிந்து விழாமல் நிதானமாகப் பேசும் பண்பு என்று நம் சுற்றுப் புற மனிதர்களிடம் மனித நேயத்துடன் நம் நாட்களை நகர்த்தினால் அதுதான் அடிப்படை ஏகாந்தம்... “

“இப்போது நன்றாகப் புரிகிறது.”

“போ..போ...சீக்கிரம் போ, புரியாத ஒன்றைத் தேடி அலைவதை விட உன்னைச் சுற்றி இருபவர்களுக்கு எந்த மாதிரி உதவி செய்ய முடியும் என்று யோசி..”

அந்த வெள்ளைக் குவியல் மெதுவாக மறைந்தது...

எனக்குள் ஒரு நிம்மதியான தெளிவு பிறந்தது.

அன்று சனிக்கிழமை. விடுமுறை தினமாதலால் காலையில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தேன், என் மனைவி “போய் குளிச்சுட்டு வாங்க, பெருமாள் கோவிலுக்கு போகணும்” என்றாள்.

நான் விறைப்பாக, “போதும் போதும் இத்தனை வருடங்களாக என் நேரத்தையும், பணத்தையும் இழந்து, கோவில் கோவிலாக அலைந்ததெல்லாம் போதும்” என்றேன். 

- எஸ்.கண்ணன்

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 venkat 2016-04-18 15:40
MIGA MIGA ARUMAI..........

NAN THELIVU ADINTHUVITTEN....

NANDRIGAL....AL THE BEST .....
Report to administrator
0 #2 Kannan 2016-06-04 13:09
Excellent Story S.Kannan

Police station example is aweful.


Keep your good work continuing
Report to administrator

Add comment


Security code
Refresh