மெல்லிய வெளிச்சத்தில் சிவப்பாய் தெரிந்தாள்...அவள்...

lady 265"பேர் என்ன..." சாளரத்தைத் திறந்து கொண்டே கேட்டான் அர்ஜுன்....

"இப்போ எதுக்கு ஜன்னல திறக்கற... பேர் எல்லாம் எதுக்கு.. வந்தமா வேலைய பார்த்தமான்னு இல்லாம.....?" என்றபடியே சிவப்பழகி கட்டிலில் அகல விரிந்த கால்களோடு கிடந்தாள்...

செவிக்குள் நுழைந்த அவளின் வார்த்தைகளில் கடும் விரக்தி இருப்பதை உள் வாங்கிக் கொண்டே பின்னால் திரும்பி அவளை அர்த்தத்தோடு பார்த்தான்...

"ம்ம்........ நீ கொஞ்ஞ்ஞ்ஞ்சம் அழகா இருக்க..."என்று சொல்லி கண்ணடித்து சிரித்தான் அர்ஜுன்...

"எல்லாரும் சொல்றதுதான்..." என்று முனங்கியபடியே முகம் திருப்பிக் கொண்டாள்...

"உறவுகள் தொடர்கதை..."பாடல் ஒலிக்க ஆரம்பித்ததுமே... சட்டென முகம் திருப்பி, படுத்தவாக்கிலேயே அவனைப் பார்த்தாள்... அவள்..

அவன், ஜன்னலில் இருந்து வந்த காற்றை ஆழமாய் உள்ளிழுத்து முகம் மலர்ந்து அனுபவித்தபடியே பாடலின் வரிகளின் அசைவுகளோடு அவளை நெருங்கினான்...

"உணர்வுகள் சிறுகதை.... ஒரு கதை என்றும் முடியலாம்.. முடிவிலும் ஒன்று தொடரலாம்... இனி எல்லாம் சுகமே..."

அவள் சற்று புரிந்தும் புரியாமல்... "இப்போ எதுக்கு பாட்டு எல்லாம்..... என்ன நீ எதும் கவிஞனா...?" என்ற அவள் கேள்வியில் கொஞ்சம் நக்கல் மிளிர்ந்தது..

"இனி எல்லாம் சுகமே...." என்ற வரி வரும் போது அவளை மெல்ல அணைத்து அவள் தலையை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு வருடிக் கொடுக்கத் தொடங்கினான்....அர்ஜுன்....

"எனக்கு இதெல்லாம் புடிக்காது... இப்போ இப்படி எல்லாம் பண்ணிட்டு அப்பறம் தொடந்து வந்து காதலிக்கிறேன்னு சொல்லறது... வேண்டாம்ப்பா.. ஒருத்தன் ஏற்கனவே இப்டி சொல்லித்தான் இங்க இருக்கேன்... இந்த ரொமாண்டிக்கெல்லாம் வேண்டாம்... காசு வாங்கி இருக்கன்... பண்றத பண்ணிட்டு போய்ட்டே இரு..."

அவள் பேச பேசவே அவளின் நெற்றியில் மெல்லமாக ஒரு முத்தம் பதித்தான்...அர்ஜுன்... அதற்கு மேல் அவள் பேசவில்லை...

"உன் நெஞ்சிலே பாரம்... உனக்காவே நானும்... சுமை தாங்கியாய் தாங்குவேன்...உன் கண்களில் ஓரம்... எதற்காகவோ ஈரம்.. கண்ணீரை நான் மாற்றுவேன்...வேதனை தீரலாம்..வெறும் பனி விலகலாம்.. வெண் மேகமே... புது அழகிலே நாளும் விளையலாம்..."

தலையைத் வருடிக் கொண்டே இருந்தான்... அது ஆறுதலின் படிகத்தோடு... பெரும் பனிகளின் மூட்டத்தை விலக்கியபடியே இருப்பது போல அவளும் கூட உணர்ந்தாள்...

"இதுவரை இப்டி யாருமே என் தலையை தொட்டதில்ல... நெத்தில எல்லாம் யாரும் முத்தம் தந்ததே இல்ல... எனக்கு இளையராஜா பாட்டு அவ்ளோ பிடிக்கும்.. இப்போ எல்லாம் கேக்கறதே இல்ல.. கேக்க தோன்றதே இல்ல... எங்க... தினம் ஒருத்தன்... வயித்து பொழப்பு... வேசிங்கற பட்டம்...அதும் உண்மை தான...ம்ம்ம்... வாழ்க்கை திசை மாறி எங்கயோ போய்டுச்சு..."-அவள் பேசிக் கொண்டே இருந்தாள்...

அவள் ஈர விழிகளைத் துடைத்து விட்டான்...காதோரம் கிடந்த முடிக் கற்றைகளை ஒதுக்கினான்... கன்னத்தைப் பிடித்து மெல்ல கிள்ளினான்...

இரவின் ஏகாந்தம்... மெல்லிய சிவப்பு வெளிச்சம்.. சாளரம் தாண்டி வந்த வெண்ணிலாவின் இரவு...என்று அந்த அறையே ஒரு வித வசந்த காலமாக மாறி விட்டதாக தோன்றியது... எழுந்து அவளை அழைத்துக் கொண்டு சாளரம் அருகே போனான்...

"என்ன என்னை லவ்வுகீர பண்றயா...!"-என்று கண்கள் மேல் எழ சந்தேகத்தோடு கேட்டாள்..

"ம்ஹும்..." என்று இல்லை என்பதை அழகாய் புன்னகைத்துக் கொண்டே முக மொழியோடு கூறிய அர்ஜுன், அவளை பின் பக்கமாக உடல் திருப்பி சாய்ந்துக் கொண்டு மெல்லமாக அனைத்துக் கொண்டான்...

"வாழ்வென்பதோ கீதம்... வளர்கின்றதோ நாதம்.. நாள் ஒன்றிலும் ஆனந்தம்...நீ கண்டதோர் துன்பம்.. இனி வாழ்வெல்லாம் இன்பம்... சுக ராகமே ஆரம்பம்...நதியிலே புதுப் புனல்.. கடலிலே கலந்தது... நம் சொந்தமோ.. இன்று இணைந்தது.. இன்பம் பிறந்தது...."

"லவ்வு கிவ்வெல்லாம் பண்ணிடாத... நான் அதுக்கெல்லாம் லாயிக்கில்ல... நான் வேற.. ஆமா... இன்னும் எவ்ளோ நேரம் இப்டியே ரசிச்சிட்டு இருப்ப.. வா... நேரம் ஆகுதுல்ல... காசு குடுத்திருக்கீல்ல.. மற்றது வேண்டாமா...?" என்று முகம் திருப்ப அர்ஜுனின் கழுத்தோரம் புதைத்து கிடந்த முகத்தை மெல்ல மேலே தூக்கிக் கேட்டாள்... அவளை சற்று உற்று நோக்கிய அர்ஜுன்.. சாளரத்தின் முகப்பினடுக்கில் இருந்த கண் மையை எடுத்து அவளின் கண்களில் அழகாய் தீட்டி விட்டான்...முதலில் முகத்தை சற்று விலக்கியவள்.. அவனின் ஆழ்ந்த பார்வைக்கு பின் முகத்தை இன்னும் கொஞ்சம் அருகே காட்டினாள்....

"என்ன என்னால ஏதும் உதவி ஆகணுமா... சொல்லு... பார்த்தா நல்லவன் மாதிரிதான் இருக்க.. ரெம்ப ரசனையா கண்ணியமா நடந்துக்கற.. சொல்லு... எதும் உதவி வேணும்னா பண்றேன்.. எதும் படத்துல கிடத்துல நடிக்கனுமா....ம்ம்ம்..."- அவள் பேசிக் கொண்டே இருக்க... இரு கன்னத்தையும் கையில் ஏந்திக் கொண்டு...விழியில் வழிந்த நீரை பெரு விரலால் தள்ளி விட்டான்...

"ம்ஹும்... அப்டி எல்லாம் ஏதும் இல்ல..."-என்றபடியே தன் செல் போனில் இருந்த இளையராஜா பாடல் அனைத்தையும் அவள் செல்லுக்கு அனுப்பினான்....

"நான் செய்த பாவம் என்னோடு போகும்.. நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்...வாய் பேசிடும்... புல்லாங்குழல்... நீதான் ஒரு பூவின் மடல்..."

பாடல் ஒலித்துக் கொண்டே இருந்தது...நகப் பூச்சை எடுத்து அவளின் ஒவ்வொரு நகத்துக்கும் மெல்ல மெல்ல பூசினான்... நகத்தில் பட்ட பூச்சின் குளுமை அவளை சில்லிட வைத்தது.. குழம்பிய முகத்தோடும் அகத்தோடும்.. விரல்களை காட்டிக் கொண்டிருந்தாள், கெண்டைக்கால் வரை ஏறி இருந்த புடவையை அன்னிச்சை செயலாக கீழே இழுத்து விட்டுக் கொண்டே...

அவன் கால் நகம் பூச முயற்சிக்கையில்.. அவள் வேண்டாம் என்று மறுத்தாள்.. அவன் வேண்டும் என்று கெஞ்சுவது போல முகத்தை வைத்துக் கொண்டான்... அவனை சற்று பார்த்து விட்டு, மெல்லும் புன்னகையோடு மெல்லிய உடல் மொழியோடு...கால் விரல்களைக் காட்டினாள்...விரல்களின் வெட்கம் நெளிவுகளில் துளிர்ந்தது...

"வா நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா...தேன் நிலா எனும் நிலா என் தேவி இன்னிலா..நீ இலாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா....."

"என்னைப் பத்தி ஏதும் எழுத வந்திருக்கியா.." என்று அவன் கண்களைப் பார்த்து கூர்மையாக கேட்டாள்...

"ம்ஹும்... இல்ல..."- என்று இரண்டு கண்களையும் படக்கென மூடி குழந்தையிடம் முகம் விரிப்பது போல விரித்தான்.......

"இல்ல... காசு குடுத்து இங்க வந்து வந்த வேலைய பாக்காம.. எதோ காதலிகிட்ட பண்ற மாதிரி பண்ணிட்டு இருக்க....."-என்றவளின் முகத்தில் சற்று குழப்பமும்... புரியாத வெளிப்படுதலும்... நிழலாடியது...

"மானில்லாத ஊரிலே சாயல் கண்ணிலா...பூவில்லாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா..."

"ஏன் காதலிகிட்ட மட்டும்தான் இப்படி பண்ணனுமா...ம்ம்ம்.. நான் பண்றது உனக்கு பிடிக்கலனா சொல்லு... பண்ணல..." என்றான் பொய்க் கோபத்தோடு......

சட்டென முகம் உடல் நெளிய சற்று ஆசுவாசதொடு...." பிடிக்கலன்னு இல்ல..... ஆனா ஒன்னும் புரியல.."-என்றாள்... கண்களில் தேங்கும் நீரை மட்டும் மறைத்துக் கொண்டேயிருந்தாள்....

"எல்லாமே புரியணும்னு இருக்கா என்ன..."-அவளின் மூக்குத்தி நாசியை பிடித்து செல்லமாக ஆட்டியபடி கேட்டான்...

"தத்துவங்கள் பலமா இருக்கு..."-என்றவளின் உதடு ஒரு முறை சுழித்து விட்டு திரும்பியது...

கன்னம் பிடித்து திருகி விட்டு... ' ஏன் இருக்க கூடாதா " என்றான் மென் புன்னகையோடு...

"ம்ம்.. இருக்கலாமே..." என்றபடியே எழுந்து அறையில் இருந்த நாற்காலியில் போய் அமர்ந்தாள்...

"ம்ம்... இன்ட்ரஸ்ட்டா இருக்க.. இங்க வறவன் எல்லாம் வரும் போதே பேண்டை கழட்டிட்டுதான் வருவானுங்க.. நீ வேற மாதிரி இருக்க...'-மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு பேசினாள்.

"வேறன்னா....!...... என்ன..... ஒரு...... காதலன் மாதிரியா...?"வலது புருவம் மேலே தூக்கி மௌன மொழி பேசுவது போல கேட்டான்...அர்ஜுன்...

"ம்ம்ம்... அப்டியும் வெச்சுக்கலாம்... ஆனா... என்னால காதலிக்கவெல்லாம் முடியுமா... என்ன...?"-என்றவள் தலையை சற்று தாழ்த்திக் கொண்டாள்...

அவளின் அருகே சென்ற அர்ஜுன்... எதுவும் சொல்லாமல் ஓர் இருத்தலின் நகர்வோடு இணங்கி நின்றான்...

"ஆமா என்ன சென்ட் போடற... நல்ல வாசனை...." என்று அருகில் நின்றிருக்கும் அவன் சட்டையை மீண்டும் ஒரு முறை முகர்ந்தாள்... அவன் தன் பேக்கில் இருந்த செண்டை எடுத்து அவளுக்கு கொடுத்தான்... "வெச்சுக்கோ..." என்று கண் ஜாடையில் கூறியபடியே...

நேரம் ஓடிக் கொண்டே இருக்க....பாடல் ஒலித்துக் கொண்டே இருக்க..வெண்ணிற இரவு தன்னிறம் மாறும் தருணத்தில் விடியல் மிக அழகான ஆடை பூண்டு கொண்டு வெளி வரத் துவங்கியிருக்க... கை கோர்த்த அவளின் ஸ்பரிசங்களிலிருந்து மெல்ல தன்னை விளக்கிக் கொண்டான்.. அத்தனை நேரம் மார்பில் தலை சாய்த்துக் கொண்டு விரல்களோடு விரல்கள் கோர்த்து தூங்கி போன அவள் மெல்ல கண்கள் விழித்தாள்...

மெல்ல எழுந்து, எதுவுமே பண்ணாமல் வெறுமனே தூங்கிப் போனதை ஒரு முறை நினைவு படுத்திக் கொண்டே அவனைப் பார்க்க, அவன் கிளம்ப யத்தனித்துக் கொண்டிருந்தான்...

வெறும் பார்வைக்குள் வேர் வரை ஊடுருவும் உணர்வுக் கதம்பம் கொந்தளிக்க....." நீ யார்.. எதுக்கு வந்த.. இத்தனை அன்பை ஆதரவ.. அணைத்தல நான் அனுபவிச்சதே இல்ல.. போதும்.... ஒரே ராத்திரியில மொத்த வாழ்க்கையும் வாழ்ந்திட்ட மாதிரி இருக்கு....." என்றபடியே நேற்று அவன் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்தாள்....

பணத்தையும் நடுங்கும் அவள் கையையும் பார்த்த அவன்.... "நீயே வெச்சுக்கோ.. புடவை எடுத்துக்கோ.. சரியா.." என்றபடியே அவளை இன்னும் ஆழமாக பார்த்தான்..." நீ சந்தோசமா இருந்திருப்பேன்னு நம்பறேன்,,," என்றான்...ரகசியக் குரலில்...

"இன்னைக்கு நான்"-என்றவள் சற்று யோசித்து விட்டு- "ம்ஹும்... இன்னைக்குதான் நான் சந்தோசமா இருந்திருக்கேன்..."என்றபடியே சற்று முகம் தாழ்த்தி விட்டு மேல் எழும்பிய கலங்கிய விழிகளுடன்... "என் பேர்...' என்று அவள் சொல்ல வாயெடுக்கும் முன்னமே உள்ளங்கை கொண்டு வாய் மூடினான்... "ம்ஹும்.."என்று வேண்டாம் என்பது போல.. நெற்றியில் ஆழமாய் ஒரு முத்தம் பதித்து விட்டு வெளியேறினான்......

அப்போதுதான் ஞாபகம் வந்தது போல...."அயோ... உன் பேர்..............." என்று கேட்கும் முன்னே அர்ஜுன் வீட்டை விட்டே வெளியே போயிருந்தான்.....

"தோள்களில் நீ அணைக்க, வண்ண தாமரை நான் சிரிக்க.. ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்..."-
பாடல் ஒலிப்பதாக அவளின் மனம் புன்னகைத்தது.....

அடுத்த வாரம்
-----------------------------

கதவைத் திறந்த நொடியில் கண்களில் மிரட்சியோடு ஒரு கணம் பின் வாங்கினான் அர்ஜுன்......

கதவைத் திறந்து விட்டவளோ அது வழக்கம்தான் என்பது போல ...புன்னகைத்துக் கொண்டே ...."வாங்க.." என்றபடி உள்ளே போனாள்... மனதுக்குள் புன்னகைத்த அர்ஜுனின் கண்களில் கல கலவென பட்டாம் பூச்சிகள் பறந்திருக்க கூடும்.....

"என்ன இது....!?.." என்று ஒரு வித புது மாதிரி பார்வையுடன்... அவனுக்கே கேட்காத குரலில் வினவினான்..

"இப்போதான் ஒருத்தன் போனான்.. அதுக்குள்ளே எதுக்கு மறுபடியும் ட்ரெஸ் போட்டுக்கிட்டு அப்பறம் அவுத்துகிட்டு...... டைம் வேஸ்ட் தானே?..." என்றவள் ஹ ஹ ஹா.... என்று கல கலவென சிரித்தாள்...

மௌனத்தோடு கூட புன்னகையில் அவளையும் சேர்த்து வீட்டையும் நோட்டமிட்டான் அர்ஜுன்...

"பபியன் சொன்னான்... ரேட்.. 500க்கு குறைஞ்சா, நான் இல்லப்பா... இந்த வாரமே.. பெருசா அமௌன்ட் ஒன்னும் கிடைக்கல..." என்று பேசிக் கொண்டே சென்று கட்டிலில் படுத்தவளை நின்று ஒரு கணம்.... உற்று நோக்கினான் அர்ஜுன்...

1000 ரூபாயை எடுத்து அருகில் இருந்த டேபிள் மீது வைத்தான்... போதுமா என்பது போல ஒரு பார்வையோடு.....

'டபுள் ஓகே' என்பது போல முகம் மலர்ந்தவள்.. 'வா' என்பது போல...கண்ணடித்தாள்......

அவன் கையைப் பிடித்து இழுத்து அவள் தயாரானாள்....... அவனோ அவளின் கையைப் பிடித்து மெல்ல இழுத்து எழச் செய்தான்... அவளும் எழுந்தாள்... உடல் மொழியால் பேசும் தருணங்கள் மிக அழகாக கடந்து செல்பவைகள்... அவளும் எழுந்து அவன் அழைத்து செல்வதைப் போலவே பின்னால் நடந்தாள்...

"ஓ... சுத்தமா இருக்கணும்னு நினைக்கறியா.. நான் ஏற்கனவே குளிச்சாச்சுப்பா.. ஒன்னும் பயப்படாத"- என்றவளை எதுவும் பேசக் கூடாது என்பது போல கண்களாலே ஜாடை செய்தான்.. பின் அவளை குளியலறைக்குள் கூட்டிச் சென்று குளித்து விடத் தொடங்கினான்...

அவனின் இந்த செய்கை அவளை சற்றே குழப்பியது....

"என்ன இது... ஹே.. என்ன பண்ற... 'அந்த மாதிரி' படத்துல வர்ற மாதிரி டார்ச்சர் ஏதும் பண்ணப் போறியா.. யப்பா.. ஏதும் வம்பு பண்ணி விட்றாத.. உடம்ப வெச்சுதான் பொழப்பு ஓடுது... புண்ணியமா போகட்டும்.. வந்த வேலைய முடிச்சிட்டு போயிட்டே இரு.. ப்ளீஸ்ஸ்...." என்று அவள் கூறுவதை கண்டு கொள்ளாத அவன்.. சோப்பு போட்டு குழந்தையைக் குளிப்பாட்டுவது போல குளிக்க வைத்துக் கொண்டிருந்தான்....

அவளின் யோசனைகளை பலவாறு.. யோசித்தாலும்.... 'எவ்ளவோ பார்த்திட்டோம்... இதப் பாக்கா மாட்டோமா' என்பது போல ஒரு நம்பிக்கைக்குள் தன்னை அடக்கிக் கொண்டு அவனை ஆழமாக கவனித்தாள்....

"என்ன இது..... பின்னால இவ்ளோ புண்ணு.... " என்று கேட்டுக் கொண்டே நீர் கொண்டு மெல்லமாக அழுந்த கழுவினான்....

" ஏய்.... அதெல்லாம் தொடாத... ஐயோ..... ஏன் இப்டியெல்லாம் பண்ற..." என்று சங்கோஜப் பட்டுக் கொண்டே ஒரு கையால் அவன் கையை தள்ளி விட்டுக் கொண்டிருந்தாள்.....

"ஆமா.. ஒரு நாளைக்கு பத்து பேர் வந்தா புண்ணு வராம என்ன வரும்...." என்று முணங்கவும் செய்தாள்.......

சட்டென உடைந்து அழவும் தொடங்கினாள்.... கண்ணீரின் வெளிப்பாடு மட்டும் எந்த நேரமும் முணுக்கென்று வந்து விடும் தூரத்தில்தான் இருக்கிறது... அத்தனை அழுத்தம் நிறைந்த வாழ்க்கைதான் ஒவ்வொருவருக்கும்.. அவளுக்கும்.....

"நீ பண்றத பார்க்கும் போது சின்ன வயசுல எங்கம்மா என்ன குளிக்க வெச்சது ஞாபகம் வருதுப்பா.. ஆமா ஏன் இப்டியெல்லாம் பண்ற..... ஏதும் உதவி வேணுமா.. என்ன வைச்சு ஏதும் ஆகணுமா.....!!!???" என்று அவள் பார்த்துக் கொண்டே பேச பேச அதைப் பொருட்படுத்தாமல்...

"நீ வருவாய் என நான் இருந்தேன்... ஏன் மறந்தாய் என நான் அறியேன்.... கண்கள் உறங்கவில்லை...இமைகள் தழுவவில்லை... கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை... அமைதி இழந்த மனம் எதையும் நினைக்கவில்லை... வாராயோ...."

பாடிக் கொண்டே அவளை ஈரம் சொட்ட அழைத்துக் கொண்டு படுக்கை அறைக்கு மெல்லக் கூட்டிக் கொண்டு போனான்... அவளின் முகம் பளிச்சென இருந்தது.... கண்கள் மட்டும் சிவந்து கிடக்க..

" அடி தேவி உந்தன் தோழி ஒரு தூதானாள் இன்று .. அடி தேவி உந்தன் தோழி ஒரு தூதானாள் என்று....
இரவெங்கே.. உறவெங்கே.. உன்னை காண்பேனோ என்றும்..."

"என்னமோ அக்னி பிரவேஷம் கதை நாயகி மாதிரி என் பாவமெல்லாம் போய்ட்ட மாதிரி இருக்கு நீ என் மேல ஊத்தின தண்ணில......"-என்று குரல் கலங்க கூறியவள்... சற்று நிதானித்துக் கொண்டு..."ஆமா... உன் பேர் என்ன.. எதுக்கு இப்டியெல்லாம் பண்ற... என்ன வேணும்.... பாட்டு சூப்பரா பாடற..." என்று மனம் சுழன்று கொண்டு கேள்விகளால் மிதந்து கொண்டே இருக்க.....

"அமுத நதியில் என்னை தினமும் நினைய விட்டு இதழை மறைத்துக் கொண்ட இளமை அழகு சிட்டு...தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு வாராயோ...."

விரலில் தேங்காய் எண்ணை தொட்டு அவளின் புண்களுக்கு மேல் மெல்ல தடவை விட்டான்.... அவள் தடுக்க ஒரு கை கொண்டு பின்னுக்கு திரும்ப மறு கை கொண்டு திரும்பவும் அவன் தடுத்தான்... அவள் புதிர் கொண்ட பதிலாய் அவனைப் பார்த்துக் கொண்டே செய்வதறியாமல் நின்றாள்.....

பீரோவைத் திறந்து ஒவ்வொரு ஆடையாக பார்த்து நீல நிற சுடியை எடுத்து அதற்கு தகுந்தாற் போல உள்ளாடைகள் எடுத்து ஒவ்வொன்றாக அவளுக்கு அணிவித்தான்...அவள் தயங்கிக் கொண்டே இசைந்தாள்... மெல்ல புன்னகைக்கைவும் செய்தாள்...

பாடல் மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது....

தலை வாரி விட்டான்....பவுடர் பூசப் போன நேரத்தில் அவள் வேண்டாம் என்றாள்...

"இன்றாவது முகப் பூச்சு இல்லாமல் நானாக இருக்கிறேனே" என்று அவள் மொழியில் முணங்கிக் கொண்டு கலங்கிய கண்களுடன் அவனை மெல்ல அனைத்துக் கொண்டாள்...... அணைத்தபடி மெல்ல படுக்கையில் சாய்ந்தவள்... அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டு விம்மினாள்...

"என் பேர் பல்லவி.... நான் வேணும்னு... இந்த தொழில்ல...."-

அவளை அதற்கு மேல் பேச விடாமல் உள்ளங்கை கொண்டு வாய் பொத்தினான்... தலை வருடி மீண்டும் நெஞ்சோடு அனைத்துக் கொண்டான்....

"என்ன... ஏது.... எதற்கு....."- என்று கேள்விகளோடு தூங்கிப் போனாள்....

"சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி... பின்னல் விழுந்தது போல எதையோ பேசவும் தோணுதடி..." என்று அவன் பாடிக் கொண்டேயிருக்க பல்லவி தூங்கிப் போனாள்..

பெரும் நிம்மதியின் மூச்சுக் காற்றின் சப்தம்... ஒரு தாய் மாடியின் பாதுகாப்போடு அவளை சுற்றி தூக்கமாய் பரவிக் கொண்டிருக்க...மெல்ல எழுந்து இன்னும் 1000 ரூபாயை எடுத்து அவள் அருகே வைத்து விட்டு வீட்டை விட்டு கிளம்பினான் அர்ஜுன்...

அந்த அறையில் எம் எஸ் வியின் அல்லது இளையராஜாவின் ஏதோ ஒரு பாடல் இன்னமும் ஒலித்துக் கொண்டிருப்பது போல... இருந்தது...

அடுத்த வாரத்துக்கு ஒரு நாள் முன்.....

"யாருக்கும் நான் இந்த தொழில் பண்றேன்னு தெரியாது.... அதுமில்லாம எல்லாருக்கும் போறது இல்ல... வேற வழி இல்லாமத்தான்... மாசம் ரெண்டு மூணு தடவை மட்டும்.... அதும் தெரிஞ்சவுங்க கூட மட்டும்... என்ன பண்ண, என் தலை எழுத்து.... என் புருஷன் குடிச்சே செத்துப் போய்ட்டான் தம்பி... எனக்கு ரெண்டு பொண்ணுங்க....ஒருத்தி காலேஜ் போறா... ஒருத்தி ஸ்கூலுக்கு போறா... என்ன செய்ய... கரை ஏத்தனுமே....... இப்போ செய்யற வேலைல காசு பத்தல தம்பி... வெறும் 4000 ரூபாயை வெச்சுகிட்டு... எப்டி படிக்க வெச்சு... வேணுங்கறத வாங்கிக் குடுத்து.... முடியல...... இன்னும் ஒரு ரெண்டு வருஷம் கஷ்ட பட்டுடா மூத்தவ படிப்பு முடிச்சிட்டு வேலைக்கு போய்டுவா....... அப்பறம் இந்த கருமம் புடிச்ச தொழில பண்ண மாட்டேன்.... புருஷன் செத்து பத்தாவது நாள்ல நல்லா தெரிஞ்சவங்கதான்.... காசும் குடுத்து கட்டிலுக்கும் கூப்ட்டாங்க... வேற வழியே தெரில... சொந்த பந்தம்னு சொல்லிக்க யாரும் இல்ல... காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஊரை விட்டே ஓடி வந்தவங்க நாங்க... என்ன விட போதை தான் முக்கியம்னு குடிச்ச புருஷன் செத்து போவான்னு தெரியும்... ஆனா இத்தன சீக்கிரம்னு சாவான்னு தெரியல.....செத்து போக மனசு வரல....எப்படியாவது புள்ளைங்கள தொடர்ந்து படிக்க வெச்சிடணும்னு நினைச்சேன்... பிச்சை எடுக்க துணிச்சல் இல்ல... இருக்கற ஒரே மூலதனம் என் உடம்பு மட்டும் தான்.... சரி என்ன மாதிரி இருக்கறவங்க எல்லாரும் இப்படித்தான்னு சொல்ல வரல.. எனக்கு இது சுலபமா தெரிஞ்சுது.... யாருக்கும் தெரியாமத்தான் பண்றேன்...என் பொண்ணுங்களுக்கு என்ன பத்தி ஏதும் தெரியாது....தெரியவும் கூடாது....நீங்க பபியனுக்கு தெரிஞ்சவங்கங்கறனாலதான் இவ்வளவையும் சொல்றேன்... நீங்க எழுதற கதைல என் கதைய எழுதுங்க... ஆனா... பேர் முகவரி மட்டும் போட்றாதீங்க...." என்று கைகூப்பிய அஞ்சலிதேவிக்கு 500 ரூபாய் கொடுத்து விட்டு "ரெம்ப நன்றிங்க... இந்த கட்டுரை கண்டிப்பா எனக்கு பேர் வாங்கித் தரும்...." என்று சொல்லி வெளியே வந்தான்...அர்ஜுன்.....

"என்னடா.... கட்டுரை ஓகேயா....." என்ற பபியனிடம்... மெல்ல சிரித்தான் அர்ஜுன்....

"அண்ணே... இப்போல்லாம் பேஸ்புக்குல கூட நாலு வரிக்கு மேல எழுதினா எவனும் படிக்க மாட்டான்... இதுல கட்டுரை கதைன்னு எழுதி கிட்டு இருந்தா....என்னாகறது..."-என்ற அர்ஜுன் முகத்தில் ஒரு வகை தீர்க்கம் மின்னியது...

'அதுக்கு....!"என்று கேட்ட பபியன் முகத்தில் கலவரம் துளிர் விடத் தொடங்கியது....

"இதப் பாருண்ணே....." என்றபடியே வெகு இயல்பாக லேப்டாப்பை காட்டினான்....

அதில் அஞ்சலி தேவி பேசிய அனைத்தும்.... அதனோடு ஓர் ஆவணப் படத்துக்கு பேச வேண்டிய, செய்ய வேண்டிய அணைத்து எடிட்டிங் வேலைகளும், பின்னணி இசைக் கோர்ப்பு வேலைகளும் என்று ஒரு அரை மணி நேர ஆவணப் படமாக ஆக்கி இருந்தான்....

"என்னடா இது.... எப்டி தெரியாம படமெல்லாம் எடுத்த.... என்ன பண்ண போற...."-முகம் விரிந்து.. மனம் சுருங்க.. பட படத்தான் பபியன்....

"அண்ணே.... நானும் எவ்ளோவோ பண்ணிப் பார்த்துட்டேன்... என்னால பெருசா பளிச்சுன்னு வெளிய வர முடியல.... இது ஒரு நல்ல வாய்ப்பு..இப்போ அவனவன் மதுக்கு எதிராதான் பிரசாரம் பண்றான். அதுதான் டிரெண்டாவும் ஆகிப் போச்சு.... சோ... நானும் அதே ரூட் புடிகறேன்... இந்த உண்மைக் கதைல ஒரு பெண் தன் கணவன் குடிச்சே செத்துப் போனதில என்ன செய்யறதுன்னே தெரியாம விபசாரத்துக்கே போய்ட்டாங்கற தீமோடு இந்தப் படம் வெளிய வந்தா.... லைக்ஸ் பிச்சுக்கும்... விவாதம் பட்டைய கிளப்பும்... ஆட்டோமேடிக்கா என் பேர் வெளிய வரும்... அப்புறம் பாருண்ணே நம்ம லெவெல்லே வேற..." என்றவன்... அண்ணே.. நீ கண்டுக்காம ஒதுங்கிக்கோ....என்றபடியே 1000 ரூபாயை எடுத்து நீட்டினான்....

பபியன்... ஏதோ சொல்ல வந்து வாய் அடைத்துப் போயே விட்டான்....

நான்கு நாட்களுக்குப் பின்....

ஓடி வந்த பபியன்.... அர்ஜுனின் முகத்தில் பளார் பளார் என்று அறைந்தான்.......

"போச்சு.. எல்லாமே நாசமா போச்சு.... உன் புகழ் மோகத்துக்கு ஒரு குடும்பத்தயே காவு வாங்கிட்டியேடா...... துரோகி.."- என்று கத்தினான்....

.................................

"அஞ்சலி தேவி... மேட்டர் ஊரு முழுக்க தெரிஞ்சுடுச்சுடா..... அம்மா புள்ளைங்க மூணு பேருமே தூக்கு மாட்டி செத்துடுச்சுங்க.... நானும் இதுக்கு உடந்தையா இருந்துட்டேனே..... இந்த பாவத்த எங்க போய் கழுவ...." கத்திக் கொண்டே புரண்டு அழுதான் பபியன்....

நினைவுகளின் மீட்சியில் இருந்து... திக் என்று விழித்து எழுந்தான்... அர்ஜுன்.. அவன் விழியோரம்... நீர்க்கசிவுகள்... ரத்தத்தைப் போல பிசுபிசுத்தது...

அவன் உடல் நடுங்கிக் கொண்டே இருந்தது... எல்லாம் நடந்து இரண்டு வருடங்கள் ஆன பின்னும்.. நேற்றுதான்.. இதழோரம் அறியாமை புன்னகையைத் தேக்கிக் கொண்ட அஞ்சலிதேவி பேச பேச தெரியாமல் பேனாவில் மறைத்து வைத்த கேமராவில் படம் பிடித்தது போல இருந்தது... இரண்டு வருடங்கள் ஓடிய பின்னும் ஆறவே முடியாத தழும்புகளின் தேக்கமென மனதுக்குள் அழுந்திக் கொண்டிருக்கும்... மிக நீண்ட... தொடர் வெட்டுக்களின் நடுவே ஒரு குழந்தையைப் போல வீரிட்டுக் கொண்டிருக்கும் அவன் மூளை எங்கும்... பாலியல் தொழிலாளிகளின் சுவாசம் நிறைந்து கொண்டே இருந்தது....

ஆயிரம் காரணம்.. ஆயிரம் பேருக்கும் மாறுபடும்... மாறுபடாத ஒன்று கைப்பிடி சோறு... அரைசாண் வயிறு.... மௌனம் ஸ்தம்பிக்க குலுங்கி அழுதவனைக் கலைத்தது அலைபேசி...

எதிர்முனையில் பபியன்.. நாளை அர்ஜுன் போக வேண்டிய பாலியல் தொழிலாளியின் வீட்டு முகவரியைக் கூறிக் கொண்டிருந்தான் ....... ஒரு முடிவற்ற சிறுகதையைப் போல....

- கவிஜி

Pin It