மூர்த்தி சாலையைக் கடந்து எதிர்முனைக்கு வந்து நின்றான். போக்குவரத்து நெரிசல் அதிகமிருந்தது. அவனுக்குப் பின்னால் புஷ்பா தியேட்டர் சுவர் நிறம் மங்கிக் கிடந்தது. பக்கத்து டீக்கடையில் சூடாக பஜ்ஜி போட்டுக் கொண்டிருந்தார்கள். அவனுக்குப் பசித்தது. தலை சற்று வலித்தது. ஒருபக்கம் கோபமாகக்கூட இருந்தது. டீ மட்டும் சொல்லி காத்திருந்தான்.

man poor 340இத்தனைக்கும் சண்முகம் சாரிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். மனிதர் கேட்கவேயில்லை.

"என்ன தம்பி. ஒங்க புஸ்தகம் பத்தி பேசத்தானே மீட்ட்டிங்கே. நீங்க வராம எப்புடி? வேனும்னா சவுரியமான நாள் சொல்லுங்க"

"அய்யோ அதெல்லாம் வேனாம் சார். எப்டி சொல்றது ஒங்களுக்கு. கம்பெனியில லீவு குடுக்கமாட்டாங்க சார்… அதான் பாக்குறேன்"

"என்னவாச்சும் செஞ்சு வந்துரப் பாருங்க தம்பி"... என வருத்தமாக பேசிவிட்டு துண்டித்த பிறகு இவனுக்கு வேறு வழியில்லாமல் போயிற்று. மூர்த்திக்கு ஏன் புஸ்தகம் வெளியிட சம்மதித்தோம் என்று தோன்றிவிட்டது. இத்தனைக்கும் அவன் பெரிய எழுத்தாளனெல்லாம் இல்லை. அவனை உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்க சாத்தியமில்லை.

அவன் எழுதி பிரசுரமானதெல்லாம் தீவிர இலக்கியப் பத்திரிக்கைகளில், ஒன்றிரண்டு இணைய இதழ்களில்தான். சிற்றிதழ் புழங்கும் வட்டாரங்களில் அவன் பெயர் கொஞ்சம் பிரசித்தம். இளைய தலைமுறையில் இலக்கியத்தரமாக எழுதக் கூடியவன் என்று பெயருண்டு அவனுக்கு. அப்படித்தான் சண்முகம் பழக்கமானார்.

சண்முகம் பெரிய படிப்பாளி. இலக்கிய இதழ்கள் ஒன்றுவிடாமல் வாசிப்பவர். தஸ்தயேவ்ஸ்கி, மக்ஸிம்கார்க்கி, சில்வியாபிளாத், மார்கி தே ஸாத் என்றெல்லாம் பிளந்துகட்டுவார். டால்ஸ்டாயின் போரும் வாளும் மனப்பாடமாக ஒப்பிப்பார். சிம்பிளாக சொன்னால் சங்க இலக்கியம் டூ சார்லஸ் பூக்கோவ்ஸ்கி என்பார்.

டீயும் சூடாக இருந்தது. நகரப் பேருந்து பெரும்புகையை கக்கி விட்டுச் சென்றது. மணி பார்த்தான். ஐந்தேமுக்கால். ஆறுமணிக்கு என்றுதான் சொல்லியிருந்தார்கள். காசு கொடுத்துவிட்டு மெல்ல விசாரித்தபடி நடக்கத் தொடங்கினான். ஒரு பங்களா வாட்ச்மேன் நாயிற்கு பிஸ்கட் ஊட்டிக் கொண்டிருந்தார். அவனும் வாட்ச்மேன்தான். செக்யூரிட்டி என்று கவுரவமாக சொல்லிக்கொண்டாலும் அவன் வேலை கம்பெனியின் கேட் திறந்துவிடுவதுதான்.

திருப்பூர் நன்றாக வளர்ந்துவிட்டது. ரொம்பகாலம் முன்பு இங்கு கொஞ்சநாள் பணிபுரிந்திருக்கிறான். ஒரு பட்டன் கம்பெனியில்.

அது பற்றி ஒரு கதையை தன் தொகுப்பில் எழுதிருக்கிறான். மூர்த்தி முதலில் புத்தகமெல்லாம் வேண்டாமென்றுதான் சொன்னான். சண்முகம்தான் அவனுக்கு உற்சாகம் கொடுத்து புத்தகம் வெளிவர உறுதுணையாக இருந்தார். முண்ணனி எழுத்தாளர் ஒருவர் முன்னுரை எழுதிக் கொடுத்திருந்தார்.

வெளிவந்தபிறகுதான் அதை வாசிக்கவே வாய்ப்புக் கிடைத்தது அவனுக்கு. இவன் கதைகளுக்கும் அவர் முன்னுரைக்கும் சம்பந்தமேயின்றி சம்பிரதாயமாக வாழ்த்து தெரிவிப்பது போலத்தானிருந்தது. இத்தனைக்கும், புத்தகத் திருவிழா அவசரம் என்று பரபரத்தார்கள். அப்படியொன்றும் விற்றதா இல்லையா என்றே தெரியவில்லை.

ஆறுமாதமாயிற்று. இப்போது அந்த புத்தகத்தை முன்வைத்துத்தான் கலந்துரையாடல். தொகுப்பில் மொத்தம் பதிமூன்று கதைகள். ஒவ்வொன்றும் அவன் வாழ்வின் மிக முக்கியமான வலிமிகுந்த பதிவுகள். அவற்றில் அவன் அழுதிருக்கிறான் சிரித்திருக்கிறான் காதலித்திருக்கிறான் செத்திருக்கிறான். அவன் கதைகள் முழுக்க அவன் சிதறியிருக்கிறான்.

முகவரியை அடைந்தபோது முன்னால் யாருமில்லை. பக்கத்து பெட்டிக்கடையில் ஒரு சிகரெட் வாங்கி பற்ற வைத்துக் கொண்டான். அவனிடம் இருக்கும் ஒரே மோசமான ஆசுவாசம் அதுமட்டும்தான். சிகரெட்டை காலிலிட்டு மிதித்தபோது சண்முகம் சார் எக்ஸல் சூப்பரில் சர்ரென வந்து நின்றார்.

சிரித்தார். கைகுலுக்கினார். தாமதத்திற்கு காரணங்கள் சொன்னார். எல்லோரும் இப்போது வந்துவிடுவார்கள் என்று திரும்பத் திரும்ப சொன்னார். மூர்த்தியின் கைபேசி ஒலிக்க, எடுத்துப் பேசிவிட்டு வந்தான். உள்ளே ஹால் சிறியதாக பத்துபேர் உட்காரும்படி இருந்தது. பதினைந்து பேர் கைகள் உரச நிற்கலாம்.

மூர்த்திக்கு களைப்பு வாட்டியது. இரண்டுமுறை வெளியில் சென்று புகைபிடித்துவிட்டு வந்தான். மூத்திரம் போய்விட்டு வந்தான். சண்முகம்சார்தான் வண்டியில் பரபரப்பாக அலைந்து கொண்டிருந்தார். அடிக்கடி இவனிடம் மன்னிப்பு கேட்கும் பாவனையில் தலையசைத்தார். ஏழுமணிக்கு ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள்.

நல்லவேளையாக பத்து பதிமூன்றுபேர்கள்தான். அன்று முகூர்த்தமானபடியால் பலரால் வர முடியாது போயிற்று என்பதுபோல பேசிக் கொண்டார்கள். மூர்த்தி சண்முகத்திடம் எப்படியாவது அந்த சமாச்சாரம் பற்றி கேட்டுவிட எண்ணியிருந்தான். தனியாக வாய்த்த சமயத்தில் சொல்லக் காத்திருந்தான். ஏற்கனவே போனில் சொல்லிவிட்டுத்தான் கிளம்பினான். இருந்தும்...

இந்த சிறிய ஹாலுக்கு எதற்காக மைக் எல்லாம் என்று கேட்கத் தோன்றியது. கேட்கவில்லை. சண்முகம் மூர்த்தியின் அருகிலேயே உட்கார்ந்து கொண்டு ஒவ்வொருவரும் பேசும்போது அவர்களைப் பற்றி விவரம் சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது பேசிக் கொண்டிருந்தவர் உள்ளூர் பிரமுகர். கட்சியில் செல்வாக்குள்ளவர் என்றார்.. எந்தக் கட்சியென்று அவரும் சொல்லவில்லை. இவனும் கேட்கவுமில்லை.

பிரமுகர் அந்தப் புத்தகத்தை சத்தியமாக வாசித்திருக்க மாட்டார் என்று அவன் மனம் அதீதமாக நம்பியது ஏனென்று தெரியவில்லை. பேசும்போது அவர் பிரேஸ்லெட் ஆடியது அழகாக இருந்தது. திடீரென்று பாரதியார் பாடல் ஒன்றினைப் பாடி, கைதட்டல் வாங்கினார். நடுநடுவே இடைவெளிகள் விட்டு கவிதைபோல பேசினார். கடைசியாக சண்முகத்தை நெருக்கமாக அழைத்து இவன் பெயர் விசாரித்துத் தெரிந்துகொண்டு வாழ்த்திவிட்டுச் சென்றுவிட்டார்.

அடுத்தவர் மைக் பிடித்தபோது பின்னாலிருந்து சண்முகம் சாரின் மகன் பிஸ்கட்டும் டீ கப்புகளுமாக தட்டிலெடுத்து வந்தான். அவர் ஓய்வுபெற்ற பேராசிரியர் என்றார் சண்முகம். பிஸ்கட்டை கடித்தபடி அவரை கவனித்தான் மூர்த்தி.

பேராசிரியர் இவன் புத்தகத்தின் தலைப்பை பற்றியே பத்துநிமிடங்கள் பேசினார். மைக் பிடித்திருந்த அவர் கைகள் சற்று நடுங்கியபடி இருந்தது. இடையிடையே தண்ணீர் குடித்துக்கொண்டார். கடைசியாக இவனுக்கு ஒரு சால்வை அணிவித்து போட்டோக்களுக்கு சிரித்துவிட்டு கிளம்பிவிட்டார்.

நடுவில் மின்சாரம் நின்றுபோய் எல்லோரும் கொஞ்சம் அவதிப்பட்டார்கள். மறுபடி வந்ததும் ஒருவரையொருவர் பார்த்து சம்பந்தமின்றி சிரித்துக் கொண்டார்கள். ஒருவர் இவன் கதைகளை மிக ஆழமாக பகுப்பாய்ந்து பேசினார். இவன் எழுதாத அர்த்தங்களை எல்லாம் கண்டுபிடித்து கூறினார்.

மூர்த்தி மீட்டிங் சீக்கிரம் முடிந்தால் பரவாயில்லை என்பதுபோல உட்கார்ந்திருந்தான். கடைசியாக சண்முகம் இவனை பேச அழைத்தபோது இவனுக்கு பழக்கமில்லாத மைக்கை வைத்துக்கொண்டு திண்டாடி எதையோ பேசிவைத்தான்.

ஒன்பது மணியாயிற்று எல்லாம் முடிய. சண்முகம் பஸ்டாண்டில் கொண்டுவந்து இறக்கி விட்டபோது மூர்த்தி வாய்விட்டே கேட்டுவிட்டான்.

"கோவிச்சுக்காதீங்க சண்முகம் சார். இன்னும் சம்பளம் போடல. இல்லன்னா கேக்க மாட்டேன்"

"அட என்ன தம்பி நீங்க".. என்ற படி கசங்கிய சில நூறு ரூபாய் நோட்டுக்களை இவன் கையில் திணித்தார்.

- ஶ்ரீரங்கம் மாதவன்

Pin It