ராமேஸ்வரம் தீவுக்குச் செல்லும் நெடுஞ்சாலையில், மண்டபத்தின் பாம்பன் கடற்பாலத்துக்குச் சற்று முன், அகதிகள் முகாம் உள்ளது. அது சாலையின் வலப் புறத்துக்கும் கடற்கரைக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரே மாதிரி கட்டப்பட்ட வரிசையான ஆயிரக்கணக்கான குடியிருப்புகளைக் கொண்டது.

முகாமின் முன் புற வாயிலில் காவல் துறை சோதனைச் சாவடி உள்ளது. அதன் அருகிலேயே அகதி மக்களுக்கான தாசில்தார் அலுவல கமும் இயங்கி வருகிறது. முகாமில் உள்ள லைன் வீடுகள் தள்ளி பொது கழிப்பறைக்கூடம், அதன் பின் இடைவெளி, பின் வீடுகள் என வரிசை கொண்டது. இதில் கடைசி வரிசையாக உள்ள வீட்டுப் பகுதியில் இருந்து பார்த்தால் கடலின் ஓசை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும். அவ்வீட்டு சன்னல்களில் இருந்தபடியே கடலையும் அதன் உப்பு வாடை பிசுபிசுப்பையும் உள்வாங்க முடியும். அந்த வீட்டு அறை பத்தடி சதுர அளவு கொண்டது. அங்கு மலர் படுத்திருந்தாள்.

வயது அறுபதுக்கும் மேலிருக்கும். தலையில் பாதிக்கு மேல் நரைத்துவிட் டது. முகத்தில் கன்னங்கள் ஒட்டிப் போயிருந்தன. வாயின் வலப் பக்கம் சற்று இழுத்திருந்தது. அதிலிருந்து எச்சில் வழிவதை அவளால் கட்டுப் படுத்த முடியவில்லை. அவள் படுத் திருக்கும் நைலான் நாடா போட்ட மடக்குக் கட்டிலுக்குக் கீழே மூத்திரத் தின் காய்ந்த உப்புப் படிவம் வெள்ளை பூத்திருந்தது. அவள் பக்கவாதத்தில் சில நாட்களாகப் படுக்கையில் கிடக் கிறாள். அவள் கண்கள் எந்நேரமும் அலையடிக்கும் கடலையே பார்த்துக் கொண்டு இருந்தன.

அந்த அறையின் கதவைத் திறந்து பிலோமினா எட்டிப் பார்த்தாள். அந்த அறையிலிருந்து வெளிப்பட்ட வாடை அவள் சேலை முந்தானையை எடுத்து மூக்கில் பிடித்துக்கொள்ள வைத்தது. அவள் கையில் ஒரு பிளாஸ்டிக் டப்பா இருந்தது. அதிலிருந்த பினாயில் கலந்த தண்ணீரை வீட்டுக்குள் தெளித்தாள். வாடை மட்டுப்பட்டு பினாயில் வாசம் அடித்தது. மலரின் கட்டிலுக்கு அருகில் இருந்த நாற்காலியில் வைக்கப்பட்டு இருந்த பாத்திரத்தில் இரண்டு நாட்க ளுக்கு முன் வைக்கப்பட்ட கஞ்சி கெட்டித்துப் போயிருந்தது.

“இப்படியே சாப்பிடாமப் படுத்து சீக்கிரம் செத்துடலாம்னு முடிவு செய்திட்டியா..? உம் மகன் திலகனை நீ பார்க்க வேண்டாமா? சாப்பிட்டா மலம் கழிக்கணும்... மத்தவங்களுக்கு சிரமம் எதுக்குன்னு நினைக்கிறயா..? ஏன் கஞ்சி குடிக்க மாட்டீங்கற..? உன்னை நான் மலங் கழிக்க வெளியே தூக்கிப் போகத் தயாராத்தானே இருக்கறேன்” என்று கூறிவிட்டுப் போனாள். அவள் போகும்வரை மல்லி அவள் முகத்தையே பார்த்திருந்தாள். பின், மீண்டும் சன்னல் வழியே கடலைப் பார்க்கத் துவங்கினாள்.

கடலில் மீன் பிடிக்கும் பாய்மரக் கலங்களும், ஒன்றி ரண்டு கட்டுமரங்களும் தென்பட்டன. கரையின் மணலில் இரண்டு நாய்கள் ஒன்றை ஒன்று கவ்விக் கொண்டு இருந்தன. அந்தக் கரையின் கடலுக்கு அப்பால் மறு கரையில் அவளின் ஊர் உள்ளது. அந்த அலைகளின் ஓசை ஓயாது அவளின் எண்ணங்களில்எழுந்து கொண்டே இருந்தது.

மன்னார் கடற்கரையில் அவளின் ஓட்டு வீடு இருந்தது. அவள் கணவன் மரக்கலனை வைத்திருந்து, கடற் தொழில் புரிந்த கதிரேசன். அந்த மணலில்தான் அவள் மகன் திலகன் தன் பிஞ்சுக் கால் களைப் பதித்துத் தட்டுத் தடுமாறி நடை பழகினான். அவன் வளர்ந்தபோது, அம் மணலில் கந்தகத்தின் வாடையும் நெருப்பின் கரியும் படிந்தது. கதிரேசனின் மரக் கலன்கள் எரிக்கப்பட்டன. வெடி ஓசைக்கும் அலறலுக்கும் மத்தியில் பல குடும்பங்கள் வீடுகளை விட்டுவிட்டு கையில் ஒரு பையில் துணிகளையும் குழந்தைகளின் பள்ளி ஆவணங்களை யும் எடுத்துக்கொண்டு மறுகரைக்கு மோட்டார் படகு பிடித்து, உயிர் அச்சம் இன்றி வாழ ஓடினார்கள். சில சமயம் கடல் வழியே ராணுவம் ஊருக்கு வந்து இளைஞர்களைத் தேடியது. கிடைத்த இளை ஞர்களை இழுத்துப் போனது அடையாளம் தெரியாப் பிணங்கள் கடலில் மிதந்தன. கிராமத்தில் இளைஞர் களுக்குத் தற்காப்புப் பயிற்சி வழங்கப்பட் டது. ஒரு நாள் திலகன் மலரையும் கதிரேச னையும் விட்டுவிட்டுப் போனான். இயக்கத் தில் இணைந்தானா? கொல்லப்பட்டானா? எதுவும் தெரியாது.

குழந்தைகளின்வாழ்க் கையை அக்கடல் மண்ணில் பெற்றோர் தீர்மானிக்க எவ்வித உத்தர வாதமும் இல்லை. கதிரேசன், காமாலை நோய் கண்டு சில மாதம் படுக்கையில் கிடந்து மகனை இறுதியாக எதிர்பார்த்து ஏமாந்து மாண்டு போனான்.

மலர் வயிற்றுப்பாட்டுக்குக் கருவாடுகளைக் காயவைத்த நேரம் போக, மீதி நேரம் கடலைப் பார்த்தே உட்கார்ந்திருந்தாள். கடலின் சப்தம் அவளுக்குத் தன் குழந்தையின் நினைவை உயிர்ப்பித்துக்கொண்டே இருந்தது. அன்றொரு நாள் இரவில் கதவு தட்டப்பட்டதும் அவள் திறந்து பார்த்தபோது, அவள் மகன் திலகன் இருந்தான். துவக்கத்தில் அவள் அதனைக் கனவு என்றுதான் நம்பினாள். ஆனால், வேறு இருவர் அவனைத் தாங்கிப் பிடித்து அழைத்து வந்தபோது தான், உண்மை எனக் கண்டாள்.

திலகன் வளர்ந் திருந்தான். ஆனால், அவனின் முதுகுப் பகுதியும் வலது கைப்பகுதியும் குண்டுச் சிதறல்க ளால் தழும்பாகி இருந்தன. பல குண்டுச் சில்லுகள் இன் னமும் அவன் உடலில் உள்ளிருக்க, மேல் தோல் மூடியிருந்தது. அவனது நுரையீரல் பக்கம் சில காயங் கள் அவனை நிரந்தர நோயாளி யைப் போல மாற்றியிருந்தன. வலது கை செயலிழந்துகிடந்தது. ஒரு தொண்டு அமைப்பின் மருத் துவ உதவியால் அவன் உயிர் பிழைத்து நின்றான். இரண்டு ஆண்டுகள் அந்த அமைப்பில் இருந்துவிட்டு வீடு திரும்பினான். அவனைப் பராமரிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருந்தான்.

மரணத்தைப் பார்த்தும் கேட்டும் பழகிப்போன நிலையில், தந்தையின் மரணம் அவனுக்கு சில நாட்கள் கூடுதல் துயரத்தைத் தந்தது. அந்த நாட்களில் சமாதானம் பற்றிப் பேசப் பட்டது. காயம்பட்டவர்களுக்குத் தானே மருந்தின் அருமை தெரியும்! பலர் அக்கரையிலிருந்து அகதி அடையாளங்களைக் கடலில் வீசிவிட்டுக் கரை வந்து சேர்ந்தார்கள். இடிந்த வீடு களைக் கட்டினர். மிஞ்சிய சொந் தங்களைக் கண்டுபிடித்தனர். மீண்டும் பழைய வெகு நாட்கள் முற்பட்ட வாழ்க்கைக்குத் தங்க ளைத் தயார்செய்ய முயன்றனர். ஆனால், எல்லாம் சொற்ப நாட் களில் முடிந்துபோனது. பழைய கந்தக வாடையும், தீயின் கருகல் வாடையும் வீசத் துவங்கியது.

கடற்கரைப் பகுதியிலிருந்தகுடி யிருப்புக்குள் ராணுவம் புகுந்து தாய் தந்தையரையும், அவர்களின் நான்கு வயது மகனையும், நான்கு மாதக் கைக் குழந்தையையும் சுட்டுக் கொன்றது. உயிரைப் பிடித்துக்கொண்டு தேவாலயத்தில் தஞ்சம் புகுந்த பொது மக்கள் மீது குண்டு வீசப்பட்டது. கடல் மண்ணில் ரத்த வாடை வீசியது.பழைய இயக்கத்தினரைப் பற்றிய விசாரிப்புகளுடன் போலீஸார் வந்தார்கள்.

கடலை ஒட்டிய வனப் பகுதியில், கையில் ஒரு பையுடன் மலரும் திலகனும் போய்ச் சேர்ந்தார்கள். அவர் களின் பையில் மலர் தன் நான்கு பவுன் தங்க சங்கிலியை 15,000&க்கு விற்றுப் பணம் வைத்திருந்தாள். அங்கு சில குடும்பங்கள் படகுக் காகக் காத்திருந்தன. அவர்களில் பிலோமினா குடும்பமும் ஒன்று. பிலோமினா தன் இரு பெண் குழந்தைகளைக் காப்பாற்றவே கடலைக் கடக்க முடிவு செய்தி ருந்தாள். அவளின் மூத்த பெண் மரியம் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தாள். அடுத்தவளை ஒன்றாம் வகுப்பு சேர்க்கத் திட்டமிட்டி ருந்தாள். படகுக்காக இரண்டு நாட்கள் காத்திருந்தனர். அப்போது மலர், பிலோமினா வுடன் நன்றாகப் பழகிக் கொண்டாள்.

கடைசியில், ஒரு இரவில் படகு வந்தது. அதில் எல்லோரும் ஏறினார்கள். குழந்தை களைத் தவிர பெரியவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏழாயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு படகு புறப்பட்டது. படகில் எவ்விதமான சிறு வெளிச்சமும் இன்றி, இருளோடு இருளாகப் படகைச் செலுத்தினர். கறுத்த வானில் கடல் விளிம்புவரை தெரியும் நட்சத்திரங்கள் மட்டுமே வெளிச்சத்தைக் கொடுத்தன. கடலில் ஆங்காங்கே இருந்த மணல் திட்டுக்கள் ஓரமாகவே படகோட்டி படகைச் செலுத்தினான். ஆழமற்ற பகுதிகளில் கடற் படை படகு வராது என்ற நம்பிக்கையில்! கடலின் கிழக்குப் புற விளிம்பில் தென்பட்ட ஒரு கப்பலின்வெளிச்சத்தைப் பார்த்ததும், படகின் மோட்டார் சப்தம் ஆபத்தை உண்டாக்கி விடும் என மோட்டாரை நிறுத்தினான். படகில் இருந்தவர்கள் பீதியடைந்தனர். மலர் தன் மடியில் படுக்கவைத்திருந்த பிலோமினாவின் மூத்த மகளை, நன்றாக உறங்கியவளை அணைத்துக்கொண் டாள். தூரத்து வெளிச்சம் மறைந்ததும், மீண்டும் படகின் மோட்டார் இயக்கப் பட்டது. எல்லோரும் கடலின் எல்லா நீர் விளிம்புகளிலும் ஏதேனும் தென் படுகிறதா எனப் பார்த்து வந்தனர்.

வானின் உச்சியில் பூத்திருந்த நட்சத்தி ரங்கள் அடிவானத்தில் கனிந்த சமயம், கடலின் அலைகளும் பறவைகளின் சப்த மும் கேட்டது. இருளில் மணல் திட்டுக்கள் தென்பட்டன. வெகு தூரத்தில் ஒரு சிவப்பு விளக்கு தென்பட்டது. ராமேஸ் வரம் தொலைக்காட்சி கோபுர விளக்கு என்றான் படகோட்டி. மணல் திட்டுக் களில் ஆட்களை இறக்க ஆயத்தமாகும் போது, “யாரும் இல்லை... கரையிலேயே விட்டுவிடலாம்” என மற்றொரு பட கோட்டி கூறியதால், அரை மணி நேரம் படகு பயணித்து வந்து கரையை அடைந்தது. படகில் இருந்தவர்கள் அவசரம் அவசரமாகக் கரை இறக்கப்பட்டனர். “சீக்கிரம் வாங்க, கடல் படையோ, போலீஸோ பார்த்தால் எங்களைத் தூக்கிச் சிறையிலே போட்டுடுவாங்க” என்று படகில் இருந்தவர்களை இறக்க உதவி செய்துவிட்டு, படகு கிளம்பி கடலின் இருள்வெளியில் மறைந்தது.

கரை மணலில் நின்றவர்கள் தங்கள் குடும்பத்தினர் எல்லோரும் தரை இறங்கி விட்டனரா எனப் பார்த்துக்கொண் டார்கள். மெல்ல விடியத் துவங்கியது. அப்பகுதியைச் சுற்றிலும் கடல் இருந்தது. மெல்லிய கோடு போட்டது போல கூர் முனை போன்று நிலப் பகுதி இருந்தது. அந்தப் பகுதி அரிச்சல் முனை கடற் பகுதியாகும். அங்கிருந்து ஏழு மைல்களுக்கு அப்பால் முத்துராயச் சத்திரம் கடல் பகுதி போக வேண்டும்.

தனுஷ்கோடி கடல் கொந்தளிப்பில் தாக்கப்பட்ட பின் முழுவதும் மணல் பரப்பாகி நிற்கும் பகுதி. இங்கு மணலில் பயணிக்கும் பிரத்யேகமான டயர்கள் உள்ள பெரிய வாகனங்களே வர முடியும். கடலோரக் காவல் படை அதிகாரிகள் வந்தார்கள். வந்தவர்களின் விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அங்கு வந்து நின்ற ஒரு லாரியில் ஏற்றி முகுந்தராய சத்திரத்துக்கு அனுப்பிவைத்தனர். ஒரு மணி நேரத்துக்குப் பின், அந்த லாரி முகுந்தராய சத்திரம் வந்தது. அந்த இடத்தில் சில மீனவக் குடியிருப்புகளும், சில கட்டடங்களும் இருந்தன. பழைய கருங்கல் கட்டடம் ஒன்றில் காவல் துறையின்சிறப்புச் சோதனைச் சாவடி இருந்தது. சீருடை அணியாத போலீஸ்காரர்கள் அங்கு இருந்தார்கள். சிலர் கையில் வாக்கி&டாக்கி தொலைதொடர்புக் கருவி இருந்தது. அவர்கள் பல வகைப் புலனாய்வு பிரிவுகளைச் சார்ந்த போலீஸ்காரர்கள்.

வந்திருந்தவர்களின் கைகளைச் சோதனை செய்து பார்த்தனர். பின் அவர்களின் விவரங்களைக் குறித்துக்கொண்டனர். மலர், தான் கொண்டுவந்திருந்த பையை, தன் தோளிலேயே சுமந்து வரிசையில் நின்றிருந்தாள். அவள் பெயரை எழுதிக்கொண்ட பின்பு, அவள் பையைச் சுமந்தபடியே நிற்பதைப் பார்த்து திலகனைக் காட்டி “பையை இவர்கிட்டே தர வேண்டியதுதானே... வயசான காலத்திலே சுமக்கிறியே” என்றார் போலீஸ்காரர்.

மலர் அமைதியாக நின்றாள். பிலோமினா, “அவருக்கு உடம்பு சரியில்லை. பையைத் தூக்க முடியாது” என்றாள்.

“என்ன உடம்புக்கு?”

“விபத்துலே பாதிப்பு” என்றான் திலகன்.

“சரி, உங்க சட்டையைக் கழற்றிக் காட்டுங்க, பார்க்கலாம்” என்றபடியே எழுதுவதை நிறுத்தி, நிமிர்ந்தார் அந்த போலீஸ்காரர்.

அவன் தயங்கியபடியே சட்டையை கழற்றினான். மலர் அதற்கு உதவினாள். சுற்றிலும் நின்றிருந்த போலீஸ்காரர்கள் திலகனை உற்றுப் பார்த்தார்கள். போலீஸ்காரர் திலகனின் நெஞ்சைத் தடவிப் பார்த்தார். திலகனின் இடக் கையை நீட்டச் சொன்னார்கள். செயலற்று தொங்கிக்கொண்டு இருந்த வலக் கையின் பெருவிரல் மற்றும் ஆள் காட்டி விரல்கள் மரத்துப் போய் காப்புக் காய்த்திருந்தன.

“நெஞ்சிலே காப்பு, கையிலே காப்பு, உடம்புல குண்டுக் காயம்... நீ விடுதலைப் புலியா?” என்றார் போலீஸ்காரர்.

“நீ விடுதலைப் புலியா?” என்று அந்த போலீஸ்காரர் கேட்–டதும், திலகன் அதிர்ந்து போனான். பின்பு, “பொதுமக்கள் மேலேயும் ராணுவம் குண்டு வீசியிருக்குதுங்க ஐயா!” என்றான்.

“அப்படின்னா கையில், நெஞ்சில் காப்பு எப்படி?”

“தற்காப்புப் பயிற்சின்னு 40 நாள் பயிற்சியை ஈழத்தில் எல்லா இளைஞர்களும் எடுத்துக்கிட்டோம். அப்போ ஆனது” என திலகன் முடிக்கும் முன்னேயே, ‘ஆயுதப்பயிற்சி எடுத்தவர்’ எனக் கூறியபடி, திலகனின் பெயர் முன்னால் பதிவேட்டில் ஒரு வட்டம் போட்டு வைத்தார்.

மலர், திலகனின் கையைப் பிடித்து பின்னுக்கு இழுத்துவிட்டு, போலீஸ்கார ரிடம், “ஐயா, இந்த மண் எங்க தாயார் மண்ணுங்க. உயிரைக் காப்பாத்திக்க ஓடி வர்றோம். எங்களைப் போயி...” என்று சொல்ல, அதற்கு மற்ற போலீஸ் காரர், “கேட்க நல்லா இருக்கு... சரி, மற்றவங்க பெயர் எழுதணுமில்லே? உங்களுக்கு ஏதாவது சொல்றதா இருந்தா, தனுஷ்கோடி ஸ்டேஷன்லே அதிகாரி இருப்பாங்க. அங்கே சொல் லுங்க” என்றார். திலகன், மலரின் தோளைப் பிடித்து “பயப்படாதேம்மா! நாம உண்மையைச் சொல்வோம். ஆண்டவனை நம்பு!” என்றான்.

அந்நேரம் ஒரு பேருந்து வந்து நின்றது. சில பயணிகள் இறங்கி மீனவர் குடியிருப்புப் பக்கம் போனார்கள். பேருந்து திரும்பி நிறுத்தப்பட்டது. அங்கிருந்தவர்கள் பெயர் பதிவு முடிந் ததால், எல்லோரையும் பேருந்தில் ஏறச் சொன்னார்கள் போலீஸ்காரர்கள்.

அனைவரும் ஏறினதும், ஓட்டுநரிடம், ‘தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷன்’ என்றார் போலீஸ்காரர். பேருந்து புறப்பட்டது. சாலையின் இருபுறமும் மணல் மண்டிக்கிடந்தது. பேருந்து இரண்டு மைல் தூரம் போன பின்பு, சாலையில் நின்றுகொண்டு இருந்த ஒரு காவல் துறை ஜீப் அருகில் நிறுத்தப்பட்டது. அதிலிருந்து மூன்று போலீஸ்காரர்கள் பேருந்தில் ஏறினர். ஒருவர் பேருந்தின் பின் பக்கக் கதவு ஓரமாகவும், மற்றவர் முன் கதவு அருகிலும் நின்றனர்.

“திலகன் யாருப்பா?”

“என் மகன்தான்” என்றாள் மலர். அந்த போலீஸ்காரர் அவள் அருகில் வந்தார். திலகனைப் பார்த்துக் கையை நீட்டச் சொன்னார். இடக் கையை நீட்டினான். பின் வலக் கையை நீட்டச் சொன்னார். “செயல்படாது” என்றான் திலகன்.

“குண்டு பட்டதா?”

திலகன் தலையசைத்தான்.

“இப்போ நீ இயக்கத்திலே உளவுப் பிரிவிலே இருக்கிறியா?”

“நான் போராளி இல்லைங்க. சிவிலியன். உயிரைக் காப்பாத்திக்க அம்மாவும் நானும் வந்திருக்கோம்” அவன் அதனைச் சொல்லி முடிக்கும் முன், அவன் கண்கள் கலங்கின. தன்னைக் குற்றவாளியாக சித்திரிப்பதால் அவமரியாதை உணர்வையும் எதிர்கொண் டான். “மன்னார்லேயே செத்துப் போயிருந்தா சரியாயிருக்கும். உயிர் பிழைக்க ஓடி வர்றது எவ்வளவு பெரிய தப்புன்னு தெரிஞ்சுக்கிட்டோம் ஐயா!” என்றாள் மலர். அவள் கண்களில் நீர் பொங்கியது.

போலீஸ்காரர் அவளிடமிருந்து நகர்ந்து, மற்றவர்களைக் கைகளை காட்டச் சொல்லி விசாரிக்கத் தொடங்கினார். தனுஷ்கோடி காவல் நிலையத்தில் பேருந்து நின்றது. எல்லோரையும் இறங்கச் சொன்னார்கள் போலீஸ்காரர்கள்.

காவல் நிலையத்தில் மீண்டும் பெயர் பதிவு செய்யப்பட்டது. கூடவே ஒவ்வொருவரின் இரு கை ரேகைகள் கறுப்பு மைப் பெட்டியில் ஒற்றி, மூன்று பேப்பர் களில் பதியப்பட்டன. பின்பு ஒவ்வொருவரையும் புகைப்படம் எடுத்தார்கள். குழந்தைகள் தகப்பனுடன் சேர்த்து புகைப்படம் எடுக்கப்பட்டன. அதன் பின்பு காவல் நிலையத்தில் இருந்த அதிகாரியும் பிற போலீஸ் காரர்கள் கேட்பது போலவே, “எந்தச் சமரில் உங்களுக்குக் காயம் ஆனது? உங்களுக்கு இயக்கத்தில் என்ன பதவி?” என்று கேட்டார்.

மதிய வேளையில், தொண்டு நிறுவன ஆட்கள் பொட்டலம் கட்–டப்பட்ட சாதம் கொண்டுவந்து கொடுத்தார்கள். மலர் அதனைச் சாப்பிடாமல் வைத்திருந்தாள். திலகன் அவளைச் சாப்பிடச் சொன்னான். மதியத்துக்கு மேல் அவர்களை ஒரு வேனில் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பிவைத்தனர். அந்தப் பகுதியில் ஏற்கெனவே இருந்த பலர், புதிதாக வந்திருந்தவர்களில் தங்களுக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என விசாரித்துத் தெரிந்து கொண்டார்கள். அங்கும் எல்லோரின் கைரேகையும் பதியப்பட்டன.

இரவு ஆகிவிட்டதால், ஃப்ளாஷ் லைட் பளிச்சிட்டு, கண்களைக் கூசச் செய்தது. தான் கண்களை மூடிவிட்டிருந்ததாகவே திலகன் உணர்ந்தான். தாசில்தார் அலுவல கத்திலிருந்து ஒவ்வொருவருக்கும் ஒரு கோரைப் பாயும் போர்வையும் கொடுத்து, ஆண்களையும் பெண்களையும் தனித்தனியே நிற்கச் செய்தார்கள்.

ஆண்கள் மண்டபம் முகாமில், முன்பு கலையரங்கமாக இருந்த மடக்கு கம்பிகளைக் கொண்ட கதவு இருந்த மேடைக்கு அழைத்துச் சென்றார் ஒரு அதிகாரி. அந்த மேடை தற்போது ‘குவாரண்டைன்’ என்னும் விசாரணைப் பகுதியாகும். அந்த அறையில் நடப்பது மடக்குக் கம்பி வழியே வெளியே தெரியாமல் இருக்க தட்டிகளை வைத்து ரேப்பு செய்திருந்தார்கள். ஏற்கெனவே அங்கு 30&க்கும் மேற்பட்டோர் இருந்தார்கள். எல்லோரும் அகதியாக வந்தவர்கள்தான்.

சிறிது நேரத்துக்குப் பிறகு, பின்புறப் பிளவு வைத்த சஃபாரி சட்டை அணிந்த மூன்று பேர் வந்து, எல்லோரையும் சட்டையைக் கழற்றச் சொல்லி, உடலில் உள்ள தழும்புகளை ஆராய்ந்தார்கள். அவர்கள் இந்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் என்றான் திலகனுக்கு அருகில் இருந்தவன். அவன் கிளிநொச்சி பகுதியைச் சார்ந்தவன். அவன் உடலில் குண்டு காயத் தழும்பு பார்த்துச் சந்தேகப்பட்டு, கடந்த இரண்டு வாரமாக இங்கேயே அடைக்கப்பட்டுள்ளான்.

அன்று இரவு விசாரணை முடிய வெகுநேரம் ஆனது. அந்த அறையில் இரண்டு கழிப்பறை கள் இருந்தன. 40&க்கும் மேற்பட்டவர்கள் அத னைப் பயன்படுத் தியதால் கழிப் பறையின் வாடை யும் ஈரமான தரையும் அச்சூழலைக் கடுமையாக்கியது.

அன்றிரவு அங்கு படுத்திருந்த திலகனுக்கு உறக்கம் வரவில்லை. ‘நான் இம் மண்ணுக்கு என்ன தவறு செய் தேன்? எதற்கு இந்தத் தண்டனை?’ எனக் கேட்டுக்கொண்டான். தாயை நினைத்தும், அவன் கண்கள் கலங்கின.

விடிந்தபோது ஒரு போலீஸ்காரர் அரங்க மேடையின் கம்பிக்கு வெளியே நின்று, பெயர்களைச் சொல்லி அழைத்தார். பெயர் படிக்கப்பட்டவர்கள் வெளியே வந்தார்கள். திலகனுடன் வந்த ஆண்களில் எல்லார் பெயரும் படிக்கப்பட்டன. திலகன் பெயர் படிக்கப்படவில்லை. திலகன் கம்பிக்கு வெளியே இடுக்கில் பார்வையைச் செலுத்தினான். அவர்களைப் போலவே விசாரணைக்கு உட் படுத்தப்பட்ட பெண்கள், முகாமின் ரேஷன் கடை அருகில் நின்று கொண்டு இருந்தார்கள். அவர்களில் பையை வைத்துக்கொண்டு மலரும் நின்றிருந்தாள். ‘குவாரண்டைன்’ அரங்கத்திலிருந்து வரும் ஆண்களில் தன் மகனைக் காணாது பதற்ற மடைந்து, அந்தக் கலையரங்க மேடையை நோக்கிச் சென் றாள். ஒருபோலீஸ் காரர் அவளைத் தடுத்தார். “என் மகனைப் பார்க்கணும்” என்றாள்.

“ஒரு மாதம் வைத்து விசாரிக்க அரசாங்க அனுமதியிருக்கு. விசாரித்து விட்டுவிடுவோம், போம்மா!” என அவளைத் தடுத்து அனுப்பினார் அவர். அவளின் கண்கள் இருண்டு, கால்கள் தடுமாறி மண்ணில் முட்டியிட்டு அமர்ந்தாள். பிலோமினா ஓடி வந்து அவளைத் தாங்கிப் பிடித்தாள்.

மலருக்கு கடற்கரை ஓரம் இருந்த லைன் வீட்டின் கடைசி வீட்டை ஒதுக்கியிருந்தார்கள். அங்கிருந்து கடல் நன்றாகத் தெரிந்தது. அவள் படுத்துக் கிடந்தாள். எந்நேரமும் தன் மகன் திலகனை நினைத்து உருகினாள். பல சமயம், இரவுகளில் அவளின் அழுகைச் சத்தம் மெல்லியதாக கடல் இரைச்சலுடன் கேட்டது.

செங்கல்பட்டில் இருந்த அகதிகளுக் கான சிறப்பு முகாம் ஈழப் போராளி களை அடைத்து வைக்கும் இடம்.சுற்றி லும் மதில் சுவர்கள், பாதுகாப்பு என சிறைக்கு உண்டான எல்லாம் அங்கு இருந்தன. அங்கே அடைக்கப்பட் டவர் வெளியே செல்ல முடியாது. வேண்டுமானால், கொழும்பில் கொண்டுபோய் ஒப்படைக்க அரசு முயற்சிக்கும். இம்முகாமில் இரவு தூங்கினால், விடிந்ததும் எழும் உத்தரவாதம் உண்டு. கொழும்பில் அது இல்லாததால், இம்முகாமிலேயே பலர் தங்கள் நாட்களைக் கழித்து வருகின்றனர். அவர்களில் திலகனும் ஒருவன். அவன் அம்மாவைத் தனியே மண்டபம் அகதி முகாமில் விட்டு வரவேண்டிய நிலையில், அவளைப் பற்றியே நினைத்து வந்தான். பல சமயம் கடலைக் கடந்திருக்கக் கூடாது என நினைத் தான். சில முறை அதைத் தவிர வேறு வழியில்லை என ஆறுதல் கூறிக்கொண்டான். அவன் கடந்த ஒரு வாரமாகவே தூக்கமின்றிப் புலம்பிக்கிடந்தான். அதற்குக் காரணம், மண்டபம் முகாமிலிருந்து பிலோமினா எழுதியிருந்த கடிதம்தான். அக் கடிதத்தில்... மலர் பக்கவாதம் தாக்கிப் படுக்கையில் கிடக்கிறாள்; இரண்டு மாதமாகவே அவள் படுக்கையிலேயே சிறுநீரும் மலமும் கழிக்கிறாள்; கடந்த இரண்டு வாரமாக அவள் கஞ்சி குடிப் பதை நிறுத்திவிட்டாள்; கஞ்சி குடித் தால் மலம் கழிக்க வேண்டி வரும், வெளியே காட்டுக்குத் தூக்கிப் போக வேண்டும். எனவே, பிறருக்குப் பாரமாக இருக்கக் கூடாது என்றே அவள் சாப்பிட மறுப்பதாகவும், அவளைத் தயவுசெய்து கஞ்சி குடிக்க ஒப்புக் கொள்ளச் சொல்லிக் கடிதம் எழுது மாறும் கேட்டிருந்தாள்.

அன்று மண்டபம் முகாமில், பிலோமினா, மலரின் வீட்டுக் கதவை வேகமாகத் திறந்து கோபமாக, “உன் மகன் ஒரு பைத்தியக்காரன். உலகத்தில் உன் மகனைப் போல முட்டாளை நான் பார்த்ததில்லை. அவன் ஒரு கொடுமைக்காரன். அவன் இலங்கையிலே செத்துப் போயிருந்தால்கூட உனக்கு நஷ்டமில்லை” எனக் கூறிவிட்டுப் பக்கத்தில் கிடந்த தடியை எடுத்து அருகில் நின்ற தன் மகள் மரியத்தின் பின்புறத்தில் அடித்தாள். அச்சிறுமி முகாம் முழுதும் அழுது கொண்டே ஓடினாள்.

“பாவி மகளே... நான் ரேஷன் கடைக்குப் போய் வர்றதுக்கு முன்னே உன்னை யாரு மலருக்கு வந்த கடிதத்தைப் பிரிச்சுப் படிச்சுக் காட்டச் சொன்னது!” என அவளைத் துரத்தி ஓடியபோது பிலோமினாவின் நடையில் ஒடுக்கமும், குரலில் பெரும் தடுமாற்றமும் இருந்தது.

செங்கல்பட்டு சிறப்பு முகாமிலிருந்து திலகன் தன் தாயார் மலருக்கு எழுதியிருந்த கடிதத்தின் சாராம்சம் இதுதான்...

“அம்மா! இலங்கையில் இருக்கும் போதும் நான் உனக்கு உதவியாக இல்லை. இங்கேயும் அப்படித்தான். எனக்காக நீ நாள்தோறும் வேதனை யிலும் குற்ற உணர்விலும் வாடுகிறாய். நானும் நீயும் செய்யாத தவறுக்காக தண்டனை பெறுகிறோம். உனக்காக நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்... என் பாசமிக்க அம்மாவே, நீ சீக்கிரம் செத்துப்போக வேண்டும் என்று! நீயும் எனக்காக அப்படியே வேண்டிக் கொள்!”

அன்றிரவு மலரின் கண்களுக்கு உறக்கம் வந்தது. கடலலையின் குளிர் காற்றினூடே அவள் கனவு கண்டாள். கடற்கரை மணலில் குழந்தை திலகன் தன் பிஞ்சுப் பாதங்கள் பதிய நடந்து வருகிறான். அம்மணலில் தங்கத் துகள்களும் ரத்தினக் கற்களும் சிதறிக்கிடக்கின்றன. வானம் முழுவதும் வானவில் கோடுகள். மலர் இளமையாக இருந்தாள். அவள் தன் குழந்தையை வாரி எடுத்து, நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

(நன்றி: விகடன்)

Pin It