# 1
பால்வீதியின் பரந்த வெளியில் மிதந்து
நட்சத்திரங்களின் இடைவெளியில் புகுந்து
திசைகளின் ஒளி படாத பிரதேசங்களுக்கெல்லாம்
பிரவேசிக்க கனாக்கண்ட பறவையொன்று அமர்ந்திருக்கிறது
சிறகுகள் வெட்டியெறியப்பட்டு
காறி உமிழ்ந்தேன்
கால்களைப் பிணைத்த கனத்த சங்கிலியின் மேல்
சப்தப் பட்சியின் நெற்றியில் முத்தமிட்டு.
# 2
ஞாபகங்கொள்ளவியலா மாநகரின் சராசரிகளுக்குள்
வித்யாசமானதாய் அழைத்ததொரு
கருத்த மிருகம்
அகண்ட மார்பும் வலிய புஜங்களும்
மிருக பலம் சொல்பவை
கண்களுக்குள் கனவுகள் பலதயும் அடைகாத்ததின்
உரையாடல்களில் ததும்பும் நகைச்சுவை
'இயல்பே இதுதானோ...?'
"எனக்குமுண்டு எனக்கேயெனக்கான தனீச்சோகங்கள்"
-கம்மியக்குரலில் மெல்லியப் புன்னகை மிளிர
காலாற நடக்கவிரும்பிய
வலிய மிருகம் கட்டப்பட்டிருந்தது
பல்வேறு முளையடித்த கயிறுகளில் நகரவுமியலாமல்
நம்பிக்கையோடு உரையாடுகிறது மிருகம்
கண்களில் கனவுகள் மின்ன.
# 3
தனித்திருந்தவன் உடலைப்
பிணைத்திருக்கிறது நாகமொன்று
தீண்டத் தீண்ட பரவுகிறது
இன்பவிஷம்
ஒவ்வொருக் கொத்தலும் வெவ்வேறு வகையாக
குருதி வெளியேற்றி
குடியேறியது ஆலகாலம்
அயர்ச்சியாய் இருக்கிறது மீண்டுத் திரும்புதல்
என சலித்த நாகத்தை
அயாய் தரித்தேன் சிவனாய்
- அன்பாதவன், மும்பை
மூன்று கவிதைகள்...
More articles by அன்பாதவன்
- சமூக அரசியல் வரலாற்றின் கடந்து நிலைக்கும் காலம் (15 ஜூன் 2026)
- என் வானத்தில் பறவைகள் இல்லை (09 மார் 2026)
- கொலைச்சிந்து (15 டிச 2025)
- மாய, யதார்த்தக் கரைகளூடே பயணிக்கும் வரலாற்று நதி (25 ஜூன் 2025)
- அ நேர்க்கோட்டில் சொல்லப்பட்ட அபாரமான புதினம் (09 ஜூன் 2025)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.