பட்டமரத் துலர்ந்த கிளையொன்றில்
வந்தமர்ந்த பறவையின் இசைத்தூவல்களில்
மெல்லத் துளிர்க்கிறது மரம்

காயம்பட்ட மனசுக்கு
மருந்திடும் உரையாடலில்
மறக்கிறது மனவலி

பரிவுறைந்த விரல்களின்
தீண்டலில் மறைகிறதென்
கண்ணீர்க்கோடுகள்

ஓசைகளே வாழ்வாகிக் கழியுமென்
பொழுதுகளில் ருசிக்கிறாய் சங்கீதமாய்
வறண்ட மனதில் மழைத்துளியாய்
வீழ்கிறதுன் புன்னகை

கவிழ்ந்த இருள் போர்த்தி
இருண்டிருக்கும் என்வானில்
ஒளி பொருத்துகிறாய்
நீ இசை
நீ ஒளி
நீ புதிர்
நீ புன்னகை

உனக்கு நானும்
எனக்கு நீயுமாக
ஊட்டிக்கொள்வோம்
வாழ்வின் ருசியை. 

அன்பாதவன், மும்பை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It