கயிறுகளின் முனை
எங்கிருந்து இறங்குகின்றன
எனத் தெரியவில்லை
நீல ஆழத்துக்குள் பார்வை
அடைய முடியாத் தூரம்
பலகையில் அமர்ந்து ஆடுகிறேன்
முன்னும் பின்னும் மேலும் கீழும்
ஊஞ்சலின் வேகம் ஓய்ந்தபோது
என் தலைமேல் கொஞ்சம் மேகம்
தொத்திக்கொண்டிருப்பது தெரிந்தது
மீண்டும் உந்திய வேகத்தில்
மேற்கில் இறங்கிக்கொண்டிருக்கும்
பரிதியைக் கால்விரல் முனைகள்
தொட்டு மீண்டன
கொஞ்சம்போல இருட்டத் தொடங்க
கயிறுகளின் வழியே இறங்கிய நிலா
என் உடம்பெல்லாம் வழிந்தது
குளிரில் வெடவெடக்கும் உடம்பில்
முத்து முத்தாக நட்சத்திரங்கள் பூத்துக்குலுங்க
ஊஞ்சலின் வேகம்
முன்னும் பின்னும் மேலும் கீழும்
வெளியெல்லாம் எனது விசை 

மாலதி மைத்ரி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.