Mother and childஅப்போதெல்லாம்
கை காலில் அடிபட்டால்
உன் கன்னமுத்தம் மருந்தாகும்
அனைத்தும் சரியாகும்.
துயரம் உன்முகம் பார்த்தால்
தோளில் சாய்ந்து அமைதியாவாய்.
மெல்லச் சரிந்து
மடியில் படுப்பாய்.
தன்னிச்சையாய்
உன்முடி கோதுகின்ற
கைவிரல்கள் களைக்கும் என்று
அவற்றை அழுந்தப் பற்றி
உன் உதடுகளில்
உறங்க வைப்பாய்.
பின்னர் எழுவாய் முகந்துடைத்து
புதியதோர் விடிகாலைப் பூவாய்.
வசந்த அழகுகளில்
ஏக்கம் அப்பும்
ஒற்றைக் குருவி கண்டால்
அதன் இணையை
உன்விழிகள் அவசரமாய்த் தேடும்
தனிக்குருவிக்காய்
ததும்பும் பெண்மனம் தவிர்க்க.
மனதில் ரீங்காரிக்கின்ற
பாடலிசை முணுமுணுத்தால்
அதை மென்பாடலாய்
நீ இசைப்பாய்.
இப்போதும் கூட
எல்லாம் செய்கிறாய் மகனே
ஒதுக்க அறையில் தனித்த வெண்புறா
என்னுடன் அல்ல
அழகிய உன்னிளம் மனைவியோடு.

சாரங்கா தயாநந்தன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It