அன்றைக்கும்
சூரியனிடம் இருந்தது
அதே சுறுசுறுப்பும்
காலந்தவறாமையும்

மாடிகளின்
திரைச்சீலை விலக்கி
மனிதர்களை எழுப்புதல்
சற்று சிரமமானதும் கூட
எப்போதும் போல்
குடிசைகளின்
சன்னல் தேடியது

அந்த பூனை
அடுப்பை விட்டு
சற்று தொலைவில்
இறந்திருந்தது.
பிதுங்கியிருந்த
அதன் கண்களில்
நிறைவேறாதப் பசி
ஒழுகிக் கொண்டிருந்தது

அலைகளின் குரலை
மீறியதாய்
அவர்களின் ஆர்ப்பரிப்பு
இருந்தது.

எல்லோரும்
எல்லோருக்குமாய்
அழுதார்கள்
ஆனால்
சூரியன் மட்டும் சுள்ளென்றுதான் அடித்தது.

இயல்பாகவே
அன்றும்
அழகாய்தான் விடிந்தது.
ஆனால்
அவர்கள் வாழ்க்கைதான்
இருட்டாகவே இருந்தது.

கதிர்மொழி
Pin It