வாசுகியாய் வாழச் சொல்கிறாய், சரி.
Woman faceஅசல் திருவள்ளுவன் தேடித்தா என,
அந்த நாலுபேருடன் மல்லுக்கு நின்றவள்.
புலம்பவோ, வெறுமனே ஆணியம்
வெறுப்பதுபோல் நடிக்கவோ,
அடுத்த-சக-அலுவலக-விழாக்களின்போது
பெண்கள்/ஆண்களை இழுத்து
வம்புபேசவோ, வரவே வராது.
என்வழி செல்வேன்.
இடையீடு தவிர்ப்பேன்.
வந்தால் தகர்ப்பேன்.
சராசரிப்பெண் சமூகவார்ப்படம்;
வரலாற்றில் வாழும் ஆதிக்க ஆண்மையின்
ஆதிக்கம் வரைவுசெய்த
'வெப்டிசைன்'; அல்லவா?
வலைகள், வேலிகளை விட மோசம்.
அதனால்தான் நான் வெறுத்ததில்லை
பெண்-ஆண் எவரையும்
நிகழுலக யதார்த்தத்தில்
பின்னால் விரும்ப வேண்டி வந்துவிடுமோ என்று......
பொருட்படுத்தியதும் இல்லை,
பிறர்க்கு உதவாதவர்களை - அவர்கள்
எத்தனைப் பெரிய கொம்பர் ஆனாலும்...
பொய்யில்லை; வாழ்கிறேன்.
வாய்ந்த துணைவரின் குருதி அழுத்தம்,
பணப்பை சுகாதாரம்,
நிகழ்கணம் தொடரும் நிம்மதி -
எல்லாம் பெண்விரல் நுனிகளில்.
ஆணவம் அல்ல தோழீ!
வாழ்ந்துபார் தெரியும். கானல்நீரோ,
மாயமான் வேட்டையோ-
விளம்பரம் தேடி, அங்காடி நாய்போல்
அலையும் தேட்டையோ
ஜீவனுள்ள வாழ்க்கை அல்ல;
தொடரும் மரணம்.
'ரப்ச்சர்'- 'ஜகடா-'க்வ்வாரல்சம்-'
இருத்தல்-நீடித்தல்-மூச்சுவிடல்-
தின்னல்-தூங்கல்-மறதியில் அரைகுறை-
பெற்றுப்போடல்-வளர்த்தல்......
கர்ணன் துடையில் குடைந்த வண்டாய்
கணந்தொறும் உள்மனம் ஒப்பிட்டு
ஒப்பிட்டுக் குமையும் வாழ்வும் ஒரு வாழ்வா?
கொங்கண முனிகளும் துருவாசர்களும்
'தன்'னை அறிந்த பெண்முன் நில்லார்.
இப்படி எல்லாம் சொல்லும் தகுதி
உனக்கு உண்டா என்றுகேள்.
நானொன்றும் 'ஸ்பெஷல் பிறவி' அல்ல;
உன்னுடன் நானுமொரு
சகமனுஷி.

- கலா பசுபதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)