கம்பிக் கூரை
களைப்புத் தீர
தேநீர்க் கடை
street painterசாவகாசமாய் அமர
தொடர் நாற்காலிகள்
நிமிடத்திற் கொருமுறை
வருக என அழைக்கும்
ஒலிப்பெருக்கி மகளிர்
அப்புறம்
அதிவேகத் தொடர் வண்டியும்
அதனுடையக் கூக்குரலுமாய்
அவன் வீடு.

அவனைப் பொறுத்த வரையில்
இது அவனுடைய வீடுதான் !
நாம்தான் அதற்கு
எச்சிலாலும் காலணிகளாலும்
வண்ணம் பூசுகிறோம்.

இடம் பெயர்தல்
அவனுக்கு மிகவும் எளிதானது
ஆதிவாசியைப் போல்!
அவனுக்கென்று
ஒருவானமும்
நிறைய நட்சத்திரங்களும் இருந்தன.

இயல்பாக
அறிந்ததையெல்லாம்
அவனால் வரைய முடிந்தது
அதனாலேயே
அவன் ஓவியங்களில்
சில்லறைகளுக்கு
முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது

அவனுக்கென்று
ஒரு ஏசுவும்
ஒரு திருமாலும்
ஒரு அனுமாரும் இருந்தார்கள்
அவர்கள்
தூணிலோ துரும்பிலோ இருக்கவில்லை
தரையில் கிடந்தார்கள்

சமூகம் தண்டவாளத்தைப் போலவே
அவனை விட்டு
தள்ளியிருந்தது.
அவனை
எதுவும் பாதித்தாய் தெரியவில்லை !
குஜராத் பூகம்பம்
சுனாமி
ஈழப்போராட்டம்
அதிரடி விலையேற்றம்
எதுவும்
அவனைப் பாதித்தாய் தெரியவில்லை

ஏசுவைக் குறித்தான்
ஓவியத்தில்
முள் முடியைத் தவிர்த்ததாய்
நினைவு இல்லை.
சிரமப்பட்டுதான்
அவனால்
ஓவியங்களை வரைய முடிந்தது
நாம் தான்
எளிதில் அழிக்க
காலணிகளுக்கு கற்றுக் கொடுத்தோம்

அன்று
முழுதாய் வரையப்படாத
ஏசுவின் ஓவியத்தில்
முள்முடியைக் காணவில்லை
கும்பலினூடேக் கிடக்கும்
அவன் தலையை
நசுக்கிச் சென்ற ரயிலுக்கு ஈரமில்லை

முள்முடி
அவன் தலையிலிருப்பதாய்
சுட்டது.

மூன்றாம் நாள்
வந்துப் பார்த்தேன்
அவன்
உயிர்த்தெழுந்ததாய் தெரியவில்லை
சிதறிக் கிடக்கும்
எஞ்சிய மூளையில்
புழுக்கள் நெளிந்துக் கொண்டிருந்தன.
கதிர்மொழி
Pin It