வெள்ளிவான் மேகங்களே! - பூவனத்தில்
birds வீழ் மகரந்தங்களே!
கள்ளிச் செடிகளெலாம் - மேய்ந்து வரும்
கானகக் காற்றுகளே!
நெல்லிடைச் சீர்வழங்கும் - நாஞ்சில் எங்கள்
நேசதேசம் நீவிர் போய்ச்
சொல்லிட வல்லீரோ? - தூது ஒன்று
சொல்லிட வல்லீரோ?

குன்றுடைக் காடுகளில் - வலம்வரும்
கொங்குதேர்த் தும்பிகளே!
பொன்துகள் மண்வெளியை - வைகறையில்
போர்த்தும் பனித் துகிலே!
என்துணையாள் வசிக்கும் - இல்லமதில்
என்றேனும் ஓர்முறை நீர்
சென்றிட வல்லீரோ? - தூதுமொழி
செப்பிட வல்லீரோ?

காளைப் பருவமுதல் - பாலைவனக்
காட்டுக்குள் வாழ்ந்ததுவும்
காலைப் பொழுதுமுதல் - கடமையின்
கட்டுக்குள் வீழ்ந்ததுவும்
வேளையெலாம் வேர்த்து - விரக்தியின்
விளிம்பில் நின்றதுவும்
சோலை மலர்ந்திடத்தான் - நாளையென்று
சொல்லிட வல்லீரோ?

கொண்ட கொடுமைகளும் - விதவிதக்
கோரக் கடன்சுமையும்
குண்டணிக் கூட்டணியும் - வாட்டிநின்ற
கோழைக் குழப்பங்களும்
ஒண்ட முடியாமலே - என்னைவிட்டு
ஓடி ஒளிந்ததென்று
பெண்டிர் தலைவியிடம் - தெளிவுறப்
பேசிட வல்லீரோ?

வாய்க்கும் வசதிகளும் - கைநிறைய
வாங்கிடும் சம்பளமும்
பார்க்கும் அலுவல்களும் - பழகிடும்
பன்மொழிக் கும்பல்களும்
ஏற்கும் பெருமைகளும் - இன்றெனக்(கு)
இருந்திடும் போதினிலும்
ஏக்கம் தணிந்திடுமோ? - இல்லையென்(று)
இயம்பிட வல்லீரோ?

பாலைத் தெருக்களிலே - தனியனாய்ப்
பைய நடக்கையிலும்
சாலை மருங்கினிலே - ஏளனங்கள்
சகித்துப் போகையிலும்
ஏழை மனத்தினுள்ளே - எழுந்திடும்
எண்ணிலாக் கட்டங்களின்
கோலங்கள் கொஞ்சநஞ்சம் - அல்லவென்று
கூறிட வல்லீரோ?

கொட்டும் பனிக்குளிரும் - பாலைமண்ணின்
கோடை அனல்வெயிலும்
நட்ட நடுநிசியில் - வெக்கையொடு
நாவறண்ட துயரும்
முட்ட முட்டப் பசியால் - கண்மயங்கி
மூச்சிறைத்த கணமும்
பட்டறிந்த எனது - பக்குவம்
பகர்ந்திட வல்லீரோ?

பாலையோர் பள்ளித்தலம் - வாழ்க்கையெனும்
பாடம் பயின்று தரும்....
ஆலையில்லா ஊர்களின் - இலுப்பைகள்
ஆரவாரம் புரியும்
ஓலைக் குடிசைகளும் - மாடிகளை
ஊக்கிடல் ஒக்குமென்று
சாலப் புரிந்துகொண்டேன் - செய்தி இது
சாற்றிட வல்லீரோ?

வந்து பணிபுரிந்த - இரு பத்து
வருட காலத்திலே,
கன்றுதனைப் பிரிந்த - கறவையின்
கவலை நெஞ்சினிலே!.
இந்த நிலை அகன்று - இன்பநிலை
என்று வரும்? என்று நான்
சொந்த நிலை மறந்தேன் - என்பதனைச்
சொல்லிட வல்லீரோ?

பெண்ணின் பெருந்தகைக்கு - என்னைமிகப்
பேணிடும் உத்தமிக்கு
எண்ணிறந்த தினங்கள் - ஈரமுடன்
என்னை நினைப்பவட்கு
“இன்னும் என்ன கவலை? - கலங்கிடேல்!”
என்றிட வல்லீரோ?
திண்ணமுறு தமிழால் - தூதுசொல்லித்
தேற்றிட வல்லீரோ?

தொ.சூசைமிக்கேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It