கொஞ்சம் வார்த்தை சேகரித்த
மௌனம்.
சிக்கனமான புன்னகை
கொஞ்சம் சலனம்
அதிகமான ஆரவாரம்
சேர்த்து வைத்து சொத்துக்கள்
நம் நேச கஜானாக்களில்

தனித்திருந்து உனை பேச எத்தனிக்கையில்
வார்த்தைகள் வாள் கொண்டு
பின்
தூரிகையாகி ஞாபகம்
சித்திரங்களை
என் அறைதனில் கீறும்.

விடியல்களற்ற இரவுகளின்
சுகமோகிக்கும் தொடுகையின்
சிலிர்ப்புக்கள்
வெறுமையின் சாளரங்களை
வந்து வந்து
முட்டும்!

புத்தக அடுக்குகளில் தட்டுப்படும்
பரிசளிக்கப்பட்ட
‘மார்க்சிய நூல்கள்’
விடுதலை உணர்வை பற்றியே
மகாநாடு கூட்டும்.

உன் பிரியங்களை வருட இயலாத
அனேக சுமைகள் மனப்பாறைகளை
வேதனை சம்மட்டிகளால்
பிளக்கும்.
அதில் கசிந்துருகி வழியும்
உன் பிரியங்கள்.
விரகதாபங்கள்.!

காற்றை அறுத்து துளைக்கும்
தோட்டாக்களின்
பிரியா விடைகள்
அவலங்களுக்கு
புதைகுழி தோண்டும்.!!!

அறிவுரைகளை மட்டும்
அவிழ்த்துவிட்டு கௌரவங்களின்
தாழ்வாரத்தில் (உன்)
குடியிருப்பை வைத்திருக்கிறாய்.

இந்த சமூக கோணங்களில்
சூனியமாகி போவேனா?
சிறகுகள் வாங்கி
சூரியனின் எல்லைகளில்
புதுமை செதுக்குவேன்.

சுள்ளிகளை பொறுக்கி வாழ்வை
காப்பாற்றும் ஏழையின் கனவெல்லாம்
எரியும் அடுப்பு
உலகமே!!!

உள் ஆன்மா காப்;பாற்றப்படுவதற்கு
பொருளென்ன..?
பணமென்ன..?

எஸ்தர் லோகநாதன், பேராதனை பல்கலைக்கழகம், இலங்கை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It