அழுந்தப் படிய வாரிய தலை
கோட்டு மீசை
பெரிய காலர் வைத்த சட்டை
பெருவிரல் மறைக்கும் பெல்பாட்டம் ஃபேண்ட்
என பார்ப்பதற்கு
கதாநாயகனைப் போல் தெரிந்தார்
அந்த கருப்பு வெள்ளை புகைப்படத்தில் என் தாத்தா
ஏதோ ஒரு பொங்கலில்
ஏதோ ஒரு ஜல்லிக்கட்டில்
ஏதோ ஒரு காளையை அடக்கிய
பெருமிதம் கண்களில் தெறிக்க
வெற்றிக் கோப்பையோடு
இன்னொரு புகைப்படத்தில் என் தாத்தா
பக்கத்தில் புதுமனைவி இருக்கும்
சந்தோசம்
முகத்தில் ததும்ப பாட்டியோடு
திருமணக் கோலத்தில்
ஒரு புகைப்படத்தில் தாத்தா
ஒரு குழந்தை பிறந்த அடையாளம் குறிக்கும்
வகையில்
குடும்பத்தோடு
மற்றொரு புகைப்படத்தில் தாத்தா
என்
அப்பாவின் திருமண ஆல்பத்தில்
கடமை முடித்த திருப்தியில்
தாத்தா
இதை பார்க்கும் பொழுதெல்லாம்
தோன்றுகிறது
தாத்தா
திண்ணையில் வாழ்வதற்கு பதிலாய்
புகைப்படத்திலேயே வாழ்ந்திருக்கலாமோ! என்று

பாலகிருஷ்ணன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It