அது நீலமோ,சாம்பலோ
தெரியவில்லை
இரண்டும் கலந்தவோர்
அடர்நிறம் போர்த்திய விடிகாலை!

ஒரு பொழுதின் ஏக்கமும் ,
ஒரு பொழுதின் வசந்தங்களும்
பனியில் குழைக்கப்பட்டு
அந்நிறம் உருவாகியிருக்கக்கூடும்!

ஓர் அடர்ந்த வனாந்தரத்துள்
மெல்லிய துயரத்தோடு
தனித்தாடும் ஆண்மயிலின்
இறகுகளின் முனையில்
நீங்கள் அந்நிறத்தைக் காணலாம்!

அன்றியும்,
மாலைவெயிலை
எதிர்கொண்டு நடக்கையில்
சட்டெனத் திரும்பிப்பார்ப்பீர்களாயின்
நிழலில் ஒரு கணம் - அந்
நிறம் தோன்றக்கூடும்!

வனம் கலைத்துச் செல்லும் பறவை
வான்வெளியில் - தன்
சிறகுதிர்த்துச் செல்வது போல
உங்கள் மனப்பரப்பில்
அந்நிறம் இப்பொழுது தன்
கிளைபரப்பத் தொடங்கியிருக்கும்!

தொலைதூரப் பெருங்கடல்
தொடுவானுடன் சங்கமிக்கும்
புள்ளியொன்றில் தோன்றுமே...
அதே நிறம்தான்!

சரி விடுங்கள் - உங்களுக்கு
ஆயிரம் வேலைகளிருக்கும்!
அன்றைய விடிகாலையில்
அவன் இறுதிமூச்சு விட்ட காற்றோடு
ஆயுதங்களால் விதிக்கப்பட்ட
அநீதியைப்பார்த்த சாட்சியாய்
அந்நிறம் மட்டுமேயிருந்தது!


எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It