சன்னலுக்கு வெளியே
சத்தமில்லாமல்
தோன்றி மறையும்
இரவு,பகல்கள்

முதலும் முடிவும்
இல்லாத காலவெளியின்
குழல் விளக்குப்பகலாக
அலுவல்களின் வரிசை

அவசரமென்ற சொல்லும்
அர்த்தமற்றுப் போகும்படி
ஓடி மூச்சிரைக்கும் பலபல
கடிகாரமற்ற தொழில்கள்

அடுத்த இருக்கையில்
மனித இயந்திரம்..உறவாட
கணினிகள் மட்டுமே என
கறைபட்ட சிந்தனைகள்

அதே இடம்,அதே செயல்..
சக தொழிலாளி சத்தமாய்
கேட்கிறான் வழக்கம் போல
இன்று என்ன தேதி ??

அபூர்வமான புன்முறுவலில்
எனது பதில்...நேற்றும்..
நாளையும் இருந்த அதே
தேதிதான் இன்றும் என

வழித்துணை ஒன்று
கிடைத்த திருப்தியில்
அரைத்த மாவை அவனும்
அரைக்கிறான்..திரும்ப,திரும்ப!!


பாலசுப்ரமணியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It