Wellஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்தது
அந்த பாழடைந்த கிணறு

இரண்டு தண்ணீர் பாம்புகள்
ஒரு பெரிய ஆமை,சிறிய புறாக் கூடு
கலங்கிய தண்ணீர் உடைந்த படிகள்
பக்கத்து மஞ்சநத்தியின் உதிர்ந்த பழங்கள்
இது தான் அக்கிணற்றின் அடையாளங்கள்

முதலில் அதன் இருள் பயம் தந்தாலும்
நாளடைவில் எங்கள் நண்பனாகியது
எப்படி குதித்தாலும் எங்களை மேலேற்றும்

முதன் முதலில் நீச்சல் பயின்ற இடம்
அதன் அடியில் தான் முதல் சிகரெட்
கிரிக்கெட் ஆடிவிட்டு இளைப்பாறல்
பக்கத்து வீட்டு அக்காவின் சிரிப்பு
போலீஸ் காரரின் புதுமனைவி
நண்பனின் தங்கையின் காதல்
என எங்கள் வயதுக்கே உரிய
விஷயங்களின் விவாதங்கள்

எங்கள் ரகசியங்கள் அனைத்தும் தெரியும்
இருந்தாலும் அமைதிக் காக்கும்
இது வரை யாரையும் காவு கொண்டதில்லை
இரவில் அதன் மடியில் நிலவு தெரியும் வரை
கதைத்திருப்போம் நாங்கள்

காலம் கடந்தது உலகம் அழைத்தது
எங்கள் திசைகள் மாறின
கடிதத் தொடர்பில் மறவாமல்
கேட்போம் அக்கிணற்றை பற்றி
அதனடியில் கழித்த காலங்கள்
எங்கள் வசந்த காலமென்றோம்

ஒரு நாள் நண்பனின் கடிதம்
அவள் தங்கையை காவு கொண்டது
அக்கிணறென தெரிந்த போது பதறினோம்

நாளடைவில் தொடர்பறுந்தது
இந்நேரம் இன்னொரு தலைமுறை
அதனடியில் காலம் கழிக்கும்
என நினைத்தவாறே
வெயில் தாழ்ந்த அந்த மாதத்தில்
ஊருக்கும் செல்கையில் விசாரித்தேன்

அச்சம்பவத்திற்கு பின் ஒருமுறை
கிணற்றுக்கு குளிக்கச் சென்ற
சிறுவனின் காலை பிடித்திளுத்திருக்கிறாள்
நண்பனின் தங்கை அதன் பிறகாரும்
செல்வதில்லையாம் அக்கிணற்றுக்கு

அருகில் சென்ற போது இன்னும்
சிதிலமடைந்திருந்தது கிணறு
புதர் மண்டி நிறம் மாறியத் தண்ணீருடன்
அமைதியாய் ஒன்றுமே
நடக்காது போலிருந்தது'
பேய்க் கிணறு.....

கார்த்திக் பிரபு இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It