Old manஅறுந்த வார் செருப்புடனேயே
அவசர அவசரமாய்
அலுவலகம் செல்வார்
எங்கள் ஐவருக்கும்
அப்பாவே தாயுமானவர்.
அழுத்தும் குடும்பச்சுமைகளிலும்
அகலாத புன்னகை.
எளியவர்; நல்லவர்; நாணயமானவர்.
அதனாலேயே கிடைத்த பட்டம்
பிழைக்கத்தெரியாதவர்.

வார இறுதி நாட்களில்
சைக்கிள்பெடல் அழுத்தி
மைல்கணக்கில் பாதைகடந்து
சில்லரைவியாபரம் செய்து
பைக்குள் சிறுபணம்
கொண்டுவருவார்.

அக்காவின் கல்யாணக்கடனை
அல்லல்பட்டு அடைத்து முடித்தவருக்கு
அறுபதுக்குள் வந்தது மாரடைப்பு.

அப்பா போனதும்
அதற்காகவே காத்திருந்ததுபோல்
அண்ணன்
அரசியல்வாதி ஆனான்.

சைக்கிள் போய் வீட்டில்
கார் வந்தது
ஓடு வீடு, மச்சு வீடானது.

ஒவ்வொரு நாளும்
புதுப்புது மனிதர்களின் வரவு.

ஆனால்
அப்பாபோல் எவருமே
இன்னும் வரவில்லை.

ஷைலஜா இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It