‘தாழ்த்தப்பட் டவன்’ என்றோர் சொல்லைக் கொண்டு
தமிழினத்தைத் தமிழர்களே கூறு செய்யும்
கீழ்த்தரத்தின் அவலமிகு கேடு பற்றிக்
கேட்பார்கள் இல்லாத கேடு என்னே!

யாவருமே கேளிர்,மற்(று) யாதும் ஊர்,என்(று)
யாங்கெணுமே அறைகூவல் விடுத்த வம்சம்
கேவலத்தின் முழுவடிவாய்ச் சாதிக் கூண்டில்
கிடக்கின்ற பேரிழிவுக் காட்சி என்னே!

இட்டார்,மற்(று) இடாதார்என்(று) இரண்டே சாதி
என்றதமிழ்க் குலத்திற்கேன் எங்கும் சாதி?
தொட்டாலே தீட்டென்ற துயரம் தானா
தூயதமிழ்த் திருக்கூட்டம் கொணர்ந்த நீதி?

சமன்செய்து வாழ்ந்த தமிழ்ச் சரித்திரத்தே
சாதிவந்து கால்பதித்த(து) எந்த தேதி?
‘நமனை அஞ்சோம்!’ என்றிருந்த தமிழருக்(கு) ஏன்
நாலு ‘வர்ணம்’ எனப்படும் ஓர் நச்சுச் செய்தி?

‘உயர்ந்தவர்’காள்! உமைவிடவும் எண்ணிக்கையில்
உயர்ந்திருக்கும் ‘தாழ்ந்தோர்’கள், உமக்(கு) இருக்கும்
பெயர்மாற்றித் ‘தாழ்ந்தோர்’கள் என்(று) அழைத்துப்
பிழைசெய்தற்(கு) எத்தனைநாள் பிடிக்கும்? சொல்வீர்!

உச்சிமுதல் உள்ளங்கால் வரையில் உள்ள
உறுப்புகளில் ஒன்றேனும் குறை வைக்காமல்
மெச்சும்வகை உம்மைஅவர் நிகர்த்த போதும்
மேலென்றும் கீழென்றும் பிரி(வு) ஏன் கண்டீர்?

பேரளவில் உள்ளபலர் ‘தாழ்ந்தோர்’ என்றும்
பெயரளவே உள்ளசிலர் ‘உயர்ந்தோர்’ என்றும்
ஊரளவில் இருப்பதற்கோர் விதி செய்தாரை
உலகளவில் துடைத்தெறியும் ஒருநாள் எந்நாள்?

‘பிறப்பொக்கும்’ எனச்சொன்ன பொய்யா நூலைப்
பிழையாமல் ஓதுகின்ற பெரியோர் கூடப்
‘பிறப்பு’என்ன? எனக்கேட்டே பிரியம் வைக்கும்
பேதைமைக்கு முடிவுவரும் பெருநாள் எந்நாள்?

மனுவென்ற மடையோனே! மானுடம் மேல்
மாசுமிகு தூசுதனைப் படர விட்டுத்
தனித்தமிழச் சாதிதனைப் பிளந்த நீதான்
‘தாழ்த்தப்பட் டவன்’என்னும் தகுதி பெற்றாய்!

‘உள்ளுவரோ மனுவாதி’ என்று கேட்ட
உத்தமனார் மனோன்மணீயச் சுந்தரன் போல்
தெள்ளுதமிழ்க் குலமே, நீ திரண்டு நிற்பாய்!
திராவிடனா ‘தாழ்ந்தவன்?’என்(று) உலகைக் கேட்பாய்!..

தொ.சூசைமிக்கேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It