ஒவ்வொரு நேற்றையும்

சலவைக்கிட்டுத்தான்

இன்றாக உடுத்த வேண்டியிருக்கிறது..

 

ஒவ்வொரு நாளையும்

சலவை செய்ய

அதிக நேரம் பிடிப்பதில்லை..

 

சில நாட்களை சலவை

செய்யவே முடிவதில்லை..

அவ்வளவு கறைகள்

அப்பிக் கொண்டிருக்கிறது..

அதனை தூக்கிப்போடவோ

பழையனவற்றோடு ஒதுக்கவோ

கூடுவதில்லை..

 

சில நாட்களை சலவை

செய்ய மனம் வருவதில்லை

அவ்வளவு தூய்மையாக

மணத்துடன் இருக்கிறது..

ஆன போதும்

சலவைக்கு வந்து விடுகிறது..

 

முந்தைய நேற்றுகளிலுள்ள

பெருங்கோபமும்

சிறுசஞ்சலமுமான

அழுக்குகள் நீக்கப்பட்டு

மகிழ்வும், தெளிவுமான

புதிய வாசனை வீசுகிறது

இன்றைய நாளாடைகளில்..

 

எல்லா நாட்களும்

ஒன்று போல்

சலவை செய்யப்படுவதில்லை..

 

பரபரப்பும்

பதற்றமுமான

வாழ்க்கைச் சூழலில்

வாரத்தில் உடுத்திய

ஆறு நாட்களையும்

ஞாயிற்றில்தான்

சலவை செய்ய முடிகிறது....

 

ஞாயிற்றை எப்போது

சலவைக்கிடுவது?

 

==============

 

நீ

மறந்துவிட்டுச் சென்ற

மதிய உணவை

காற்றிடம் கொடுத்தனுப்ப முனைந்தேன்

நகரக் காற்றுக்கு மாசுகளால்

தன்னடை தளர்ந்திருப்பதால்

உன்னைச் சேர தாமதமாகும்..

 

மேகத்திடம் கொடுத்தனுப்பலாமெனில்

வெயிலுக்கு பயந்து

மலைப்பிரதேசங்களை விட்டு

வெளியே வருவதில்லை மேகம்..

 

வேறெதுவும் யோசிக்காமல்

சட்டென்று நானே புறப்பட்டு வருகிறேன்

உன்னை உடனே சேர

என்னையின்றி

யாருக்கு அக்கறையிருக்கப் போகிறது?

- இசை பிரியா ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.