Valluvarஇவ்வூரில் இவ்விடத்தில் இன்னார் மகவாய்
எனவிரும்பி பிறக்கத்தான் யாரால் ஏலும்?
எவ்வூரும் எமதூரே என்றான் தமிழன்
யாவரையும் கேளிர்தான் என்று கொண்டான்
அவ்வாறே அறிந்திருந்தும் ஆசை இழுக்க
அரசியலின் அவலத்தில் வீழும் மாந்தர்
வெவ்வேறு காரணத்தை கற்பிக் கின்றார்
வேறுபாட்டில் ஆதாயம் தேடு கின்றார்.

ஒன்றலவோ குலமென்றான் ஓதி வைத்தான்
ஒருவன்தான் தேவனென்ற உண்மை சொன்னான்
நன்றிதனை கொள்கின்ற நெஞ்சம் தன்னில்
நன்னலமே அனைவருக்காய் நாட்டங் கொள்ளும்.
தென்றலென வாழ்வாகும் உலகம் பூக்கும்
தீந்தமிழும் இன்பந்தான் தீண்டத் தீண்ட!
என்றுவரும் பொற்காலம் இனியும் மீண்டும்?
எங்குலமும் உங்குலமும் ஒன்றிப் போமோ?

மொழியென்ன மதமென்ன மனிதம் பார்க்க
முன்வந்(து) உதவுகின்ற மனமே வேண்டும்.
விழிநீரை பிறருக்காய் வடிக்கும் போதில்
உள்ளத்தின் அழுக்குகளும் உதிர்ந்து போகும்
இழிவென்று மற்றவரை எண்ண வேண்டா
இல்லாத நற்குணத்தை கற்கப் பார்ப்போம்
வழியெங்கும் பாடங்கள்; வாழ்க்கைப் பள்ளி
வகைவகையாய் ஆசிரியர் வானின் கீழே!

நிழல்போலும் மனிதருண்டே;இரவில் மறைவார்
நிறம்மாறும் பச்சோந்தி; நச்சுப் பாம்பு
பழிகாணும் குணமிருப்பின் பாசம் எங்கே?
பண்பாட்டைப் புதைக்கின்றார் பாத கத்தார்.
விழல்போல சிலரிருப்பார் விரயம் நீரே
விலங்குகளை ஒத்திருப்பார் மனிதர் தானா?
சுழலொன்றில் சிக்கிவிட்ட சிலரும் உண்டு.
சிந்தையிலே மண்மூடி சிதைகின் றாரே!

தன்னுயர்வை கொள்ளத்தான் பிறரை ஏய்க்கும்
தரங்கெட்ட போக்குகளில் தனியன் அன்றி
மன்னுயிரைக் கொல்கின்ற மதத்தின் வாதம்
மானத்தைக் குலைக்கின்ற மூர்க்கர் தம்மில்
என்னினமே பெரிதென்னும் இழிந்த உள்ளம்
இவர்க்கிங்கே சளைக்காமல் இன்னோர் பக்கம்
தன்னினமே அழிந்தாலும் தயக்கம் இன்றி
தன்னலனை; பதவியினைத் தாங்கும் போக்கு!

கண்பார்க்க முடியலையே கொடுமை கொடுமை
காதுக்கும் சேதிவர கதறும் உள்ளம்
மண்மீதில் எளியவரை வதைக்கும் வலியோர்
மனதுக்குள் எழுதட்டும் இறையின் நீதி
கண்ணீரும் புரட்டிவிடும் காலக் கோளை
கீழதுவும் மேல்வருமே கறங்கின் சுற்றில்.
விண்ணுக்கும் எட்டிவிடும் வேதனை மூச்சும்
ஒருநாளில் புயலாகும்; உலகை மாற்றும்.

உழவுக்கும் அழிவுக்கும் உங்கள் கரமே
உள்ளபடி பிறர்தரவோ தீதும் நன்றும்?
மழையாகும் அன்பாலே மனதை நனைக்க
மனிதத்தின் பயிர்வளரும் மணமும் வீசும்
அழகான உலகத்தில் வாழ வேண்டின்
அதற்கேனும் மனிதத்தை பேண வேண்டும்
தொழும்நேரம் இறைவனையே கேட்டு நிற்போம்
தொலையாமல் மனிதத்தை காக்க வேண்டும்.

இப்னு ஹம்துன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Pin It