Kissமுத்தம்

தகனம் செய்ய எவருமற்ற
பிரேதம் போல் காற்றில் மிதந்து கொண்டிருக்கிறது
ஒரு
நிராகரிக்கப்பட்ட முத்தம்

மிதா...!
கொடுக்கப்படும் அதே அழுத்தத்துடன்
உணரப்படும் முத்தங்கள்
எல்லோருக்கும் வாய்ப்பதில்லை
முழுமையுறாத....
நிராகரிக்கப்பட்ட....
முத்தங்களை நுகர நேர்கிறது
வெளியெங்கும் குறுந் தகடுகளைப்போல...,
அறிந்தவரை
விடுபடும் கணத்தில் கண்களால்
பேசிக்கொள்ளும் முத்தங்கள்
தீர்ந்து போகாதவை ....!

-

இரண்டு பிரமிடுகள்...

யாரோ போல் பார்த்த பார்வை ...
எங்கேயோ தொலைந்த சிரிப்பு ..!
பிறை புன்னகையில் கிரகணம்;
கண்கள் பார்த்து பேசும் சொற்கள்
விளம்பர ஹோர்டிங்
பார்த்தபடி செல்போனில் பேசும் பாவனையில்

மிச்சமிருக்கிறதா
நெஞ்சில் என் நகத் தழும்பு ?

முயற்சித்து இருக்கிறாய்
உன் மனைவிக்கு நாம் தேர்ந்தெடுத்த
மோதிரத்தை அணிவிக்க
சுண்டு விரலிலும் சதை பிதுங்க....

நிகோடின் படிந்த உதடுகள்
கடை விழியில் உதிரக் கோடுகள்
நிறைய குடிக்கிறாய் போல...

உன்னையும் சேர்த்து
புதைத்திருக்கிறேன்
மார்பிரண்டும் பிரமிடுகளாக

அச்சம் யாதெனில்
சுரக்கும் பாலில் செத்த காதல் கலந்து
என்னையும்
பூதனை ஆக்கி விடுமோ என்பதே.....

இனியேனும் உன் மனைவியை
புணர்கையில் என்னை நினைக்காதே
உன் மகளுக்கு எப்படியோ விழுந்திருக்கிறது
எனது
சாயல்...! 

நேசமித்ரன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It