Treeசலனமற்றுக் கிடக்கும் குட்டை நீர்களில்
காற்றிடறிய வட்ட குமிழ்களுக்கிடையே
கரைந்தோடுகின்றன அந்த நாட்கள்
இலையுதிர் காலங்கழிந்து மரங்களீன்ற
பச்சிளம் பசுமிலைகளாய்
நிறை வயிறில் நின்று நிதானித்து எட்டிடும்
மழைக் காலத்து மாலை மேகங்களாய்
பல காலன் நீரை பதுசாய் அள்ளியேந்தி
கரை தேடி கொட்டிச் செல்லும்
ஊர் தூங்கிய இரவு நேரத்தலைகளாய்
ரம்மியமும் சுவையுங் கூடியதது
ஆடியடங்கியொடுங்கத் தேடும் ஊத இரவுகளில்
மெல்லிய படர் பனிகளினூடே
கம்மாயும் கட்டபொம்மன் கதையுமாய்
களைத்துத் தீர்த்த கனிய காலமது
எச்சிலூறும் எள்ளு ரொட்டிக்கும்
எகிறிச் செல்லும் வண்ணாத்திக்கும்
உயிர் தொலைத்த உன்னத மாலையது
பெருகிக் கிடக்கும் சோளங்காடுகளில்
கீறிக் கிழிக்கும் கருவேலந்தோப்புகளில்
அறிவியலும் கணக்கும் மறந்து
விவசாயமும் விலங்கியலுமறிந்த
விடுமுறை காலப் படலமது
சட்டியில் கொதிக்கும் அயிரைக்கும்
வட்டியில் ஓய்ந்த வள்ளியப்பனுக்கும்
பாவப்பட்ட பத்தாம்பசலிப் பருவமது
கலங்கிய குட்டை தெளிந்து தேர்கையில்
தெள்ளிய மனமிருக்கும் கலங்கியபடி!
உருண்டு திரண்ட ஊளைச் சதையும்
கிறுக்கியலைந்த சில கவிதைகளுமன்றி
பெரிதாய் மிஞ்சியதெதுவென்று
மெனக்கெட்டமர்ந்து யோசித்தபடி.
-எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

-எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It