மென்னீலத்தில் மட்டுமே
இருக்கச்சலித்த வானம்
அந்தியில் உன் வெட்கத்தை
அள்ளிப் பூசிக்கொண்டு சிவக்கிறது
பகல்முழுதும் ஒளிருமுன் தூய பார்வைகளின் வீர்யம்
தாங்கமுடியாச் சூரியன் கடலுக்குள் ஒளிகிறான்
ஏது நடக்கிறதெனப் பார்க்க வருகிற
நிலவின், தாரகைகளின் முன்னாலுன்
நீண்ட கருங்கூந்தலை அவிழ்த்து
அலையவிடுகிறாய் நீ
பூமி இருள்கிறது

பிரகாசிக்குமுன் வதனம் பார்த்துத்
தன்னிலையெண்ணிக் கூசுகின்றன
வசந்த மண்டபங்களில்
ஒளி காவி நிற்கும் அகல்விளக்குகள்
அவற்றின் அசைதலில் உருவாகும் தென்றல்
கரும்புகை அள்ளிவந்து
உன்னிமைகளில் விழி விளிம்புகளில் மையள்ளிப் பூசிட
இன்னிசையில் பாடல்கள் கோர்த்து
காற்றுவெளியில் திசைக்கொன்றாயுகுத்து
தேவதைப் பெண்ணே உன்னிறகும் ஒளிரும்
வாழிடம் நோக்கி வருகிறேன்
ஏதுமறியாதவளுன் விரல்கள் பற்றி
வண்ணத்துப்பூச்சிகளாகும் கற்பனையில் மிதக்கின்றன
நீயுதிர்க்கும் பென்சில் சீவல்கள்

எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It