பூடகமாகத்தான் இருக்கிறது வாழ்க்கை
புரியாத புதிர்தான்
இறுக்கமான அமைதியில்
sadவிரும்பி நிலைக்கும் தனிமையில்
அலைபாயும் எண்ண ஓட்டங்கள்
குவியும் வெற்றிடப் புள்ளியில்
சுற்றிலும் புலப்படாத உருவமற்ற வெளி
உணர முற்பட்டு
உணர்ந்ததாக பாவித்து
உயிர்ப்பித்துக் கொள்ளும் தன் முனைப்பு
புள்ளியே புதிராய்த் தோன்ற
புரிய நிற்பது எது?

தேடுதல்தான் வாழ்க்கை
தேடித் தேடிச் சலிப்பதும்
மீண்டும் மீண்டும் தேடுவதும்!
கைப்பிடியில் இழுபடும்
லகானின் மறுமுனையில்
காலக் குதிரை
கட்டறுத்துக் கொள்ளத்
துடிக்கிறது!
ஒவ்வொருவருக்கும் ஒன்றொன்றென்ற
புள்ளியை நோக்கிய
பயண இடுகையில்
விரட்டி இழுக்கிறது
வீணாகும் பொழுதுகள்
எவ்வளவுதான் பயணித்தாலும்
எத்தனைதான் தேடி நின்றாலும்
எல்லாமும் அடங்குவது
எங்கென்று சொல்ல?
பிரமையும் பிரேமையும்
பிய்த்தெறியும் வாழ்க்கை!!

- ஸ்ருதி ரமணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It