Pothikaisitharஅன்றந்தப் புரவி வந்துபோனது
அதுவொன்றும் சாதாரணப் புரவியில்லை.
அடிவானுக்கு அப்பாலும் கொடிபறக்கும்
பரதகண்ட சாம்ராஜ்யத்தின்
அசுவமேதயாக வெள்ளோட்டத் திக்விஜயம்.

சப்தநாடிகளும் உள்ளொடுங்கச்
சகலமரியாதை செலுத்திக்
குற்றேவல் புரிந்தே
குறுகி நின்றனர் குறுநில மன்னர்.

நேற்றிந்தக் கப்பல் வந்துபோனது
இதுவும் ஒன்றும் சாதாரணக் கப்பலில்லை
உலகெலாம் ஒருகுடைக்கீழ் ஆளவே
உன்மத்தம் கொண்டலையும்
ஸாமுமாமா சாம்ராஜ்யப்
பெண்டகன் கழுகின்
செட்டைகள் விரிக்கும் திக்விஜயம்.

பரிபூர்ண சரணாகதியாய்ச்
சிவப்புக் கம்பளம் விரித்தன
மைய மாநில அரசுகள்.

அன்றந்தச் சோழசாம்ராஜ்ய
ராஜராசேச்சுரத்துச்
சிவதாசியர் முலைக்குவட்டில்
பொறிக்கப் பட்டிருந்தோ சூலக்குறி.

திருக்கோயில் தலமெங்கும்
உழவாரம் ஏந்தியே
பணிசெய்து கிடந்தார் அப்பரும்.

நேற்றிந்தத் தமிழ்மண்ணில் தரையிறங்கித்
துப்புரவுப்பணி துலக்கிக் கலமீண்டதும்
கப்பல்வீரர் இந்திரியசுத்தி இளைப்பாற
உடன்போந்த
அயலகத் தாசியர் முலைக்குவட்டில்
பொறிக்கப் பட்டிருந்ததோ கழுகுக்குறி.

அன்றந்தப் புரவிமீண்ட புழுதிப்படலம்
ஓய்ந்ததும் எழுந்தது புகைப்படலம்
ஆயிரமாயிரம் தீநாக்கெழ
அசுவமேதயாக ஆகுதியில்
அவிர்ப்பலி ஆனதெல்லாம்
குறுநில மண்ணின் இறையாண்மையே!

இன்றிந்தக் கப்பல்மீண்ட
விவாதப்படலம் ஓய்ந்ததும்
1--2--3 ஒப்பந்தம்
நிபந்தனையாய்க்
காவுகேட்டு நிற்பதெல்லாமும்
இந்திய இறையாண்மையே.

- பொதிகைச்சித்தர்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It