Father
ஒரு ரயில் நிறுத்தம்
கண்டிப்பாக ஐந்து நிமிடம்
நின்று கிளம்பி விடும்
நூறு ரூபாய் கொடுத்து
நான்கு சமோசாவும் இரண்டு டீயும்
ஒரு கை கேட்கிறது
கேட்டதை கொடுத்து மீதி சில்லரையும்
கொடுக்கிறார் மறக்காமல்
இட்லி பொட்டலமும் சாம்பார் பாக்கெட்டும்
கொஞ்சம் கெட்டி சட்னியும் கூட
கேட்ட இன்னொரு கைக்கு கொடுக்கிறார்
அடுத்த ஸ்டேஷனில் நிற்காது
தீர விசாரித்து ஒரு கை
பத்து ரூபாயும் அறுபது காசுகளும்
எண்ணிப்பார்த்து கொடுத்து
வாங்கிக் கொள்கிறது
சில கைகள் ஏதோ வாங்கிக்
கொண்டு பதிலுக்கு கிழிந்த நோட்டுக்கள்
உடைந்த நாணயங்கள்
தயிர் சாதத்திற்கு பதிலாக லெமன் ரைஸ்
மாற்றிக்கொள்கிறது ஒரு கை
அந்த கைக்கு கூட்டி கழித்து
கூட குறைய இல்லாமல்
கொடுக்கிறார் துல்லியமான சில்லரை
இதை அந்த குப்பைத் தொட்டியில் போடு
என்று சொன்ன - ஒரு
சிறுமி கைக்குப் பணிகிறார்
ஊசிப்போச்சு என்று பாதி
சாப்பிட்டுவிட்டு மீதியை நீட்டுகிறது
முகத்தில் பருக்கைகளுடன் ஒரு கை
வண்டியின் கூடவே ஒடி
உள்ளே போய் அந்த கையைப் பார்த்து
கொடுத்து விட்டு பிளாட்பாரத்தின்
கடைசி சிமெண்ட் சதுர நுனியில்
உயிர்பிடித்து இறங்கும் அவர்
சட்டக் கல்லூரி வாசலில்
ஆயுதம் தாங்கிய் கைகளின்
ஏதோவொன்றின் அப்பாவாக
இருக்கலாம்.

கே.ரவிசங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)அ
Pin It