இன்னும் கொஞ்சக் காலம்
இப்படியே செல்கிறது காலம்
world
அடைதலும் பின் சடைதலுமாய் வாழ்க்கை
தெருப்படுதலும் பின் உருப்படுதலும்
இப்படியே உச்சிக்கும் உள்ளங்காலுக்குமாய்
ஏற்றி இறக்கி
இறக்கி ஏற்றி
சந்தியோடு சேர்த்து காலமும் சிரித்தலைகிறது
பட்டதும் பற்றுந் தீயாய்
உரைத்ததும் பெருகுந் தீதாய்
உணர்வில் கலந்த உரிமைகளாய்
உருவில் கலந்த உயிர்களாய்
வாரியணைத்துப் பின் வாரும் விரோதிகளாய்
காய்த்து மறத்துதிர்ந்த மறதிகளாய்
இதைத் தாண்டியும் வேடப்படும் அது
உருண்டு திரண்ட உருளைக் கண்களும்
அகன்று வரிந்த மடை திறந்த வாயுமதன் வசம்
என்றாலும் காதுகளில்லை அதற்கு
பாவப்பட்ட மழுங்கிய கூப்பாடுகள்
படுப்பதில்லை அதன் பக்கமும்
நிரம்பிய குளம் சாடிச் செல்லும்
முங்கியெழ திராணியற்றவனாய்
நின்று துணிய சாமானியத்தனமின்றி
நாலு பேராய் நாமும் சொல்லியலைகிறோம்
காலம் பொல்லாததென்று
ஓங்கி நீண்டு செல்லும் அதன் கடிவாளம் பற்றி
சுண்டியபடியிருக்குமொருவனை மறந்து.

- எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It