எத்தனை படைவரினும்...

Face
பிணத்தை விட
மோசமாக வீசுகிறது
உங்கள் சாதியம்.
மரங்களில்
வனங்களில்
வசித்த மூதாதைகளின்
அடையாளம் மறக்காத
உங்களின் மலையேற்றங்கள்
இன்னும்
சொல்லிக்கொடுக்கின்றன
மனிதன் பிறந்த கதையை.
கழுவேற்றிக் கொன்ற
சமணர்களின் ரத்தத்தில்
ஏற்கனவே
பூத்துக்கிடக்கிறது மதுரை.
உங்களின் அதிகாரங்களின்
மட்டங்கள்
வைகையை விட
மேலெழும்பி செல்கிறது.
முல்லைக்குத் தேர்
மயிலுக்கு போர்வை
காப்பியங்களில் கதைக்கலாம்.
இதையும் சேர்க்க வேண்டும்
மனிதரைப் பிரிக்க சுவர்.
ஆளும்வர்க்கத்தின்
ஏவலாளிகள்
எட்டி உதைப்பது
எங்களுக்குப்புதிதல்ல...
கொடியன்குளம்
நாலுமூலைக்கிணறு
சங்கரலிங்காபுரம்
தாமிரபரணி
ரெட்டணை
என்றதன் தொடர்ச்சியாக
உத்தப்புரம்.
வறுமையைத் தவிர வேறெதும்
குடியேறாத எங்கள் குடிசைக்குள்
மிச்சமிருந்த
எங்களது வாழ்க்கையின் மீதும்
உங்களது தாண்டவத்தின்
தடங்களை விட்டுச்சென்றுள்ளீர்.
பசிக்கழும் குழந்தையின்
துணையான
பொம்மைகள் மீதும்
நடத்தப்பட்டுள்ளது
உங்களது திமிர்த்தனம்.
நந்தனை எரித்து
ஜோதியில் கரைத்த
மூதாதைகளின் வாரிசுகளே...
எத்தனை படைவரினும்
எத்தனை முறையெனினும்
மறுபடி
மறுபடி பிறப்பெடுப்போம்
மனுவைக்கொல்லும் வரை...

(தீக்கதிர் தீபாவளி மலரில் வெளியான கவிதை)


வாழ்க்கை கிடக்குது ரோட்டோரமாய்

மழை, வெள்ளத்தால்
வீடிழந்து
சத்துணவுக்கூடத்தில் அகதியாய் வசித்த
அனுபவம் வாய்த்ததுண்டா உங்களுக்கு?
சோற்றுப்பொட்டலம் வாங்க
வரிசையில் நின்று
கிடைக்காமல் ஏமாந்ததுண்டா?
வெள்ளத்தால்
அடித்துச்செல்லப்பட்ட
அனைத்துப்பொருட்களையும்
இழந்து கையறு நிலையில்
இருந்த போது
அரிசியும், மண்ணெண்ணெய்யும்
தருகிறோம்
ரேசன் அட்டை எங்கே
என்ற கேள்விக்குடைச்சலால்
பொங்கி வந்த
கோபத்தை மௌனமாய் தின்றதுண்டா?
சொந்த தேசத்து அகதிகளாய்
வீடுகளிழந்து
வீதிகளில் வசிப்பவர்களின்
காலை உணவு குறித்து
நீங்கள் கனவிலாவது நினைத்ததுண்டா?
பரந்தவெளியை கூரையாய் வேய்ந்த
எங்களின் வசிப்பிடங்கள்
கழிப்பறைகளை விட மோசமானது
என்பதையறிவீர்களா?
மார்ட்டின்மேட்டும்
குட்நைட் காயிலும்
இல்லாமல் உறங்க முடியாத
உங்களுக்கு ... ...
எப்படி புலரும் எங்கள் விடியல்
என்று அறிந்திருக்க வாய்ப்பில்லை.
எப்போதும் போல மழையில் நனைகிறோம்
எப்போதும் போல வெயிலில் காய்கிறோம்
ஐந்தாண்டு திட்டங்கள் பல பார்த்தும்... .
இருக்கும் இடத்திற்கு தகுந்தவாறு
பெயர்சூட்டப்படும்
கல் பிள்ளையாருக்குக்கூட
வாய்த்த வாழ்க்கை
எங்களுக்கு வாய்க்கவில்லை.

ப.கவிதா குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It