போர் முனையில்
நீங்கள்
பொழுது போக்கிக்கொண்டிருக்கிறது
உங்கள் பெயரைச் சொல்லி
எங்கள் ஊர் பேரணிகள்.

கூட்டம் கூட்டமாய்
நீங்கள்
குடிபெயர்ந்து கொண்டிருக்கிறீர்கள்
நாங்கள்
இந்தியக் குடியுரிமையின்
இறையாண்மை சத்தியமாய்
பாதுகாப்பான
பதவி விலகல் பம்மாத்துகளில்
எங்கள் தமிழுணர்வை
பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம்.


***




எங்கள் ஆதித்தாயே
-------------------
யுத்தப் பூமியில்
செத்து மடியும்
சிங்களத்தாயின்
கருவறையிலும்
எங்கள் சிசுக்களின்
உயிர்த்துடிப்பைக் கேட்கும்
ஆதித்தாயின்
கருவறை நாங்கள்

எங்கள் மரணப்படுக்கையில்
உங்களுக்காகவும்
சேர்த்தே வாசிக்கப்படுகிறது
பரிசுத்த வேதாகமத்தின்
வரிகள்:

"எங்கள் ஆதித்தாயே
எங்களை மட்டுமல்ல
அவர்களையும்
சேர்த்தே மன்னித்துவிடு..
ஆயுதம் தாங்கிய
எங்கள் போர்க்கள முடிவில்
புதல்வர்கள் மடிந்த மண்ணில்
வன்புணர்ச்சியில்
வதையுண்ட எங்கள் புதல்வியரின்
கருவறைகளை
உனக்கு காணிக்கையாக்குகிறோம்
யுத்தங்கள் இல்லாத
பூமியில் மட்டுமே
இனிமேல்
பூக்க வேண்டும்
எங்கள் புதல்வியரின்
பூ மடிகள்.



*****

பிரமிடுகளும் குடிசைகளும்
--------------------------


எது தீவிரவாதம்?
கேள்வி ஒன்று.
பதில்கள் கோடானக் கோடி.

ஆயுதம் தாங்கிய
பாதுகாவலன்
அன்னை இந்திராவை
கொன்றது தீவிரவாதமெனில்
அந்த நள்ளிரவில்
டில்லி வீதிகளில்
ரத்தம் சொட்ட சொட்ட
விரட்டி விரட்டி
உயிர்க்கொலைப் புரிந்ததை
.............?



அந்த சீக்கிய இனத்திலிருந்து
ஒரு தலைப்பாகை ம்னிதரை
தலைவராக்கும்
தன்னம்பிக்கை,
ஏன் பிறக்கவில்லை
தமிழ்ச்சாதியின்
பெயரால்?
ராஜிவ்
ஈழம்
தமிழர்
இந்த முக்கோணத்தில்
எத்தனைக் காலங்கள்
எங்களை
ஏமாற்ற முடியும்?

எந்தக் கொலைக்கும்
சொல்லப்படும்
காரணங்கள்
வாழ்க்கையின்
அர்த்தம் இழந்துப் போன
பிரமிடுகள்.

எங்கள் தேசத்தலைவர்களே...
பிரம்மாண்டமான
உங்கள் பிரமிடுகளின்
இடிபாடுகளுக்கு நடுவிலிருந்து
எட்டிப்பாருங்கள்
அப்போதுதான்
தெரியவரும்
புதைந்து போன
அரசாணைகளைவிட
மேன்மையானது
ஜீவனுள்ள
எங்கள் குடிசைகளின்
அணிவகுப்பு.

புதிய மாதவி, மும்பை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It